எனது நாட்குறிப்புகள்

Archive for மார்ச், 2010

திப்புவின் பீரங்கிகள்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 16, 2010


அருங்காட்சியகத்திற்கு
வெளியே
திப்புவின் பீரங்கிகள்
என்னிடம் கூறின
நாங்கள்
காலத்திற்கு முன்பே
காட்சியாக்கப்பட்டு விட்டோம்
எங்கள் கடமைகள்
மீதமிருக்கின்றன

Posted in கவிதைகள் | Leave a Comment »

யார் படமெடுப்பீர்கள்!

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 15, 2010

பிரிட்டிஷ் கொடி
எரிக்கப்பட்டது குறித்து
படமெடுத்ததெல்லாம் சரி
இப்பொழுது
எதிர்க்கப்பட வேண்டிய
நாடு வேறு
எரிக்கப்பட வேண்டிய
கொடி வேறு
யார் படமெடுப்பீர்கள்!

Posted in கவிதைகள் | Leave a Comment »

புதிய சட்டசபை கட்டிடம்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 14, 2010

ஜனநாயகத்தின் மீது ஒரு புதிய சமாதி

பிரம்மாண்டமாய், நவீனமாய், மிரட்டலாய்

ரத்த வெறிபிடித்த வௌவால்களுக்கு

பிடித்த நிறத்தில், பிடித்த வடிவத்தில்

வேட்டைக்கான அனுமதிக்காய்

இனி அவை இங்கே தொங்கும்

Posted in கவிதைகள் | Leave a Comment »

கதவைத் திற காற்று வரட்டும்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 12, 2010

எத்தனை அழகாய்
முடித்துக் கொண்டாய்
அந்தத் தொடரை
ஒரு பக்க அறிக்கையில்
முறித்துக் கொண்டாய்
ஒரு வியாபார உடன்படிக்கையை

துப்பறியும் இதழியலிலும்
சர்வதேச அரசியலிலும்
வித்தகனே
எத்தனை அப்பாவியாய்
சிட்பண்டில் ஏமாந்த
பாமரனைப் போல்
சொல்கிறாய்
நீ ஏமாந்த கதையை

நித்யானந்தத்தால்
எழுதப்பட்ட கட்டுரையா?
நித்யானந்த்தின் பெயரால்
எழுதப்பட்ட கட்டுரையா?
அல்பம்
எவ்வளவு பணத்திற்கு
தமிழர் பலர் நம்பிக்கை
பேரம் பேசப்பட்டது?

உன் போர்த்தந்திரங்களும்
செயல்யுத்திகளும்
வியாபார யுத்தத்தில்
வெற்றிகரமான சமண்பாடுகள்

கொள்கையற்ற வியாபாரி
நம்பிக்கைகளை வளர்த்தும்
சம்பாதிப்பான்.
நம்பிக்கைகளை சிதைத்தும்
சம்பாதிப்பான்.
நம்பிக்கைகளை வளர்க்க
“கதவைத் திற காற்று வரட்டும்”
நம்பிக்கைகளை சிதைக்க
“கதவைச் சாத்து காதல் வரட்டும்”
மொத்தத்தில்
குமட்டிக் கொண்டு வருகிறது
அழுகிநாறும்
உன் வியாபாரத் தந்திரம்

Posted in கவிதைகள் | Leave a Comment »