எனது நாட்குறிப்புகள்

Archive for ஏப்ரல், 2010

நம்பிக்கை

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 2, 2010

சத்தியத்திற்கு கட்டுப்பட்டே
இந்த உலகம் இயங்குவதாய்
போதிக்கப்பட்டு வளர்ந்தவன்
எதற்காகவும்
என் நம்பிக்கைகளை
இழக்க தயாரில்லை

என் நம்பிக்கைகளை
இழந்துவிட்டால்
ஓர் இரவும்
என் மனைவி குழந்தைகளோடு
நிம்மதியாய் உறங்கி எழமுடியாது

நேற்று காலாவதி தேதியை
பார்த்து வாங்க
எனக்கு பயிற்சி கொடுத்தீர்கள்
இன்று என்ன சொல்லி
தரப்போகிறீர்கள்

உங்களுக்கு புரியவில்லை
இந்த பயிற்சிகள்
சக மனிதர்கள் மீதான
நம்பிக்கைகளை சிதைப்பவை

இந்நிலைமை உணர்த்தவில்லை
நாம்
வாழ்வென்னும் ராஜபாட்டையிலிருந்து
வழி மாறிச்செல்கிறோமென்பதை

என்னால் எல்லாவற்றையும்
எப்பொழுதும் சந்தேகப்பட்டுக்கொண்டே
இருக்க முடியாது
ஒரு நாள்
மூளை வெடித்து செத்துவிடமட்டோம்?

பாதுகாப்புக்கருதி
பூட்டுக்கு மேல் பூட்டாக
பூட்டிக்கொண்டே போனால்
ஒரு நாள்
எந்த பூட்டை முதலில்
திறப்பது என்று தெரியாமல்
புழங்க முடியாததாகப்
போய்விடாது நம் வீடு?

நம்பிக்கை மரங்களை
வெட்டிச்சாய்த்த
கட்டாந்தரைகளில்
எத்தனை காலம் வாழமுடியும்?

“ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள
கஞ்சா பிடிபட்டது”
“ஐந்து கோடி ரூபாய்
கேராயின் பறிமுதல்”
“பல லட்சம் மதிப்புள்ள
போலி மாத்திரைகள் சிக்கின”
எனக்கு ஒரே குழப்பமாக
இருக்கிறது
யார் இவர்கள்
அந்த கும்பல்களின்
கூட்டாளிகளா?
மனிதர்கள் வாழும்
மனிதர்கள் வாழ வேண்டிய
சமூகத்தில்
நாசகாரப் பொருள்களுக்கு
பணமதிப்பு எங்கிருந்து வருகிறது?

அழித்த
நம்பிக்கை மரங்களை
மீண்டும் விதைப்போம்
இழந்த காடுகளை
மீண்டும் வளர்ப்போம்

எங்கும் முடியப்போவதில்லை
வாழ்வு
மீண்டும் மீண்டும்
புதிய கோணங்களில்
வாழ்வைத் தேடுவோம்

நம் குழந்தைகளின் பெயரால்
நம் வாழ்வை அர்ப்பணிப்போம்

Posted in கவிதைகள் | Leave a Comment »