எனது நாட்குறிப்புகள்

வாக்குவாதங்கள்

Posted by ம​கேஷ் மேல் மே 29, 2010


ஒவ்வொரு சண்டையின்
முடிவிலும்
நியாயங்கள்
என் பக்கம்
இருப்பதற்கான
போதிய ஆதாரங்களை
திரட்டிக் கொள்வதிலேயே
அன்றைய இரவு முழுவதையும்
கழிக்கிறேன்

ஆனால் மறுநாள்
அதே கோபத்துடன் நானும்
நெஞ்சை கலங்க வைக்கும்
அழுகையுடன் நீயும்
முதல் நாள் சண்டையை
மீளாய்வு செய்கிறோம்

அன்பற்ற பாலைவனங்களில்
நீ பரிதவித்துக் கிடப்பதையும்

கருணையற்ற கோயில் பிரகாரங்களில்
சுற்றி அலைவதையும்

உன் சிறு குறைகளையும்
பகிர்ந்து கொள்ள
யாருமற்ற
திக்கற்ற காடுகளில்
திரிவதையும்

ஒவ்வொரு செயலுக்கும்
நாதியற்ற குற்றவாளியைப் போல
கூண்டிலேற்றி விசாரிக்கப்படுவதையும்

நீ நேசிக்கும்
ஒரே ஆணின்
அருகிலேயே
அவமானங்களுடன்
வாழ்வதாய்

அதிர்ந்து அதிர்ந்து
வெடிக்கும்
உன் இதயத்திலிருந்து
கிளம்பி
வெப்பம் நிறைந்த
உன் கண்ணீரில்
நணைந்து
வெளியே தெறித்து
வந்து விழும்
உன் வார்த்தைகளை

மௌனமாய் தலைகவிழ்ந்தபடி
கலங்கலாய் தெரியும்
தரையில் தேடித்தேடி
பொறுக்குகிறேன்

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: