எனது நாட்குறிப்புகள்

உன் இல்லாமையில் ஏங்குகிறேன்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 22, 2010

எல்லோரும் நம்புவது போல்
நீ மட்டும் உண்மையில் இருப்பாயானால்
வாழ்க்கை எத்தனை சுலபமானதாய் இருந்திருக்கும்!

நீ இருப்பதாய்
உளமார ஒரு முறை நினைத்துவிட்டு
இல்லாததை உணரவரும் பொழுது
வாழத் தகுதியற்றவனாய்
வாழ்க்கை என்னை வாட்டி வதைக்கிறது!

“நல்ல புத்தியைக் கொடு”
உன்னை நோக்கிய ஒரு பிரார்த்தனை போதுமே
ஒழுக்கத்தை ஓம்புதல்
இந்த உலகில் எத்தனை சுலபமாகிவிடும்!

“நல்ல ஆரோக்கியத்தைக் கொடு”
உன்னை நோக்கி இறைஞ்சும்
ஒரு வாக்கியம்
என்னுடைய
கடும் பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும்
அவசியமற்றதாக்கி இருக்குமே!

“நல்ல படிப்பைக் கொடு”
உன்னை நோக்கிய
ஒரு விண்ணப்பம்
கணினியில் இட்ட வட்டில்
கோப்புகளை பதிவு செய்வது போல்
என் மூளையை நிரப்பியிருப்பாயே நீ
படிப்பறிவுக்கும் பட்டறிவுக்குமாய்
வாழ்க்கை முழுவதுமான ஒரு போராட்டம்
புறங்கையால் தள்ளப்பட்டிருக்குமே!

“எல்லோரையும் நல்லபடியாய் வை”
எத்தனை சுலபமான வார்த்தைகள்
காணச் சகிக்காத பெரும் புரட்சிகளை
கண்டு வெல்லாமலேயே
உலகம் உய்த்துவிடுமே!

நீ இல்லாததில்
எனக்கு எந்த சந்தோசமுமில்லை
உன் இல்லாமையில் ஏங்குகிறேன்

January 27, 2000

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: