எனது நாட்குறிப்புகள்

புற்றுநோய் மரணங்களும் – தடுப்பூசித் தத்துவங்களும்

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 21, 2010

இன்று (21.10.2010) காலை எழுந்தவுடன் ஒரு துக்க செய்தி. நாங்கள் முன்பு குடியிருந்த பிளாட்டில் ஒரு சிறுவன் – வயது 10 முதல் 12 க்குள் இருக்கும் – புற்றுநோயால் இறந்துவிட்டான்.
சில வருடங்களுக்கு முன்பு இடது தொடையில் ஏற்பட்ட கட்டியை ஆரம்பத்திலேயே இனம் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு அவனு​டைய மரணம். முற்றிய, செய்வதற்கு வழியொன்றும் இல்லாதநிலையிலும், கடந்த ஒரு வருடமாக, அந்த கீழ் நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியின் மனந்தளராத போராட்டத்தால் சாத்தியமான எல்லா இடங்களிலும் கடன் வாங்கி மருத்துவர்களின் வழிகாட்டுதலின்(!) கீழ் எல்லா பரிசோதனைகளும், மருத்துவமும் செய்தும் பயனில்லாமல், அவனும் அவன் குடும்பத்தாரும்பட்ட சொல்லனா துயரங்களுக்கான ஒரு முடிவாய் அந்தச் சிறுவன் இந்த பூவுலகை விட்டு புண்ணியம் சேர்ந்தான்.
தினம்தினம் அவன் படும் துயரங்களை அருகிலிருந்து கேட்டவனாய் மனம் தீராத துயரத்தில் நாள் முழுவதும் தவித்தது. அவன் தாயும் தாய்வழி பாட்டியும் அழும் கோரத்தை அதே இருவரால் வளர்க்கப்பட்ட என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, என் மனைவி அவனைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் அழுபவள் இன்று காலையிலிருந்து அழுத வண்ணமாய் இருக்கிறாள்.
அவள் அழுகைக்கு சொந்த காரணமும் உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பிளாட்டில் நாங்கள் வசித்த பொழுதுதான், அவளுடைய அம்மா மார்பக புற்றுநோயால் ஒன்றரை வருடமாக கடும் சித்திரவதைப்பட்டு இறந்தார். அணுதினமும் அவர் பட்ட துயரங்களையும், ஒவ்வொன்றாக அவருடைய உறுப்புகள் மீட்கமுடியாது செயலிழந்து இறுதியில் இறந்த கதையையும் கேட்டால் கேட்பவர் நெஞ்சமே வெடித்துவிடும். அவருடைய கதையிலும் மார்பில் தோன்றிய கட்டியை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியாமல் போய்விட்டது, கடைசியில் மருத்துவர்கள் அதனை அடையாளம் கண்டு சொன்ன பொழுது நான்காம் நிலையை கடந்துவிட்டார் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினர். ஆனாலும ஆபரேஷன், ஹுமோதெரபி, ரேடியோதெரபி மாத்திரை அதுஇது என்று ​நான்கு லட்சத்திற்கு மேல் செலவு ​செய்து எல்லோரும் கடன்காரராய் ஆனது தான் பாக்கி.
அது முடிந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்னுடன் வேலை செய்பவரின் தந்தை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதியிலேயே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் தன் வாழ்நாள் முழுவதும் தபால்துறையில் வேலை செய்து தனக்காகவும் தன் குழந்தைகளின் திருமணம் மற்றும் எதிர்காலத்திற்காகவும் சேர்த்து வைத்திருந்த எல்லா பணத்தையும் செலவு செய்தும் மீளாத இடத்திற்கு போய்ச் சேர்ந்தார்.
இன்னும் இது போல சமீப காலமாய் எல்லா திசைகளிலிருந்து புற்றுநோய் மரணங்கள் குறித்த செய்தி தினம்தினம் வந்து கொண்டேயிருக்கிறது. இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நான் மேலே குறிப்பிட்ட யாரும் வெற்றிலை பாக்கு கூட போடாதவர்கள். என் மாமியார் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து தன் தாயிடம் (என் மனைவியின் தாய்வழி பாட்டி) அழுத அழுகையும் அந்த நாள் கதறிய கதறலும் இந்த உலகமே பதில் சொல்ல முடியாத சோகமும் கோபமும் நிறைந்தது அந்த நாள் என் மனக்கண்ணிலிருந்து இன்றும் அகலவில்லை.
மருத்துவம் – தனியார்மயமானதன் பிறகு லாபம் ஒன்றே குறிக்கோளாய் இயங்குகிறது. மருத்துவர்கள் வெறும் பரிசோதனை முடிவுகளை மட்டுமே வைத்து விளையாடுகிறார்கள். பல தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஒரு நாள் கூட பார்க்காமல் பரிசோதனை முடிவுகளை மட்டுமே பார்த்துக்கொண்டு செவிலியர்களுக்கு கட்டளைகள் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை கையாள்கிறார்கள். மரணம் நிச்சயம் என்று தெரிந்த பின்னும் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டத் துடிப்பது போல்தான் உள்ளது அவர்கள் நடவடிக்கை.
தொடர்ச்சியான இந்த துயரங்களுக்குப் பிறகு எங்களை போன்ற குடும்பங்களின் பிற உறுப்பினர்களுக்கு சாதாரண காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி என்றா​​லே புற்று​நோ​யோ என்று பயப்படும் சூழல் வந்துவிட்டது.
அரசு – பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா ​போன்றவற்றிற்கு தடுப்பூசி உள்ளது ​போட்டுக்​கொள்ளுங்கள் என்கிறது, ஏன் எய்ட்ஸ்ற்கு கூட தடுப்பு மு​றைக​ளை ​சொல்கிறது. ஆனால் புற்று​நோய் வருவதற்கான தனிமனித காரணங்களாக அரசு சொன்ன எதுவு​மே இல்லாதவர்கள் பலரும் நம்​மைச் சுற்றி புற்று​நோய் வந்து இறப்ப​தை தினம் தினம் பார்த்துக் ​கொண்டிருக்கி​றோம்.
புற்றுநோய் பிற ​நோய்க​ளைப் ​போல அல்ல அது தனிமனித காரணங்களால் வருவதில்​லை, காற்றாலும் நீராலும் பரவும் பல ​நோய்க​ளைப் ​போல அது சமுகத்திலிருந்​தே பரவுகிறது. காற்றாலும் நீராலும் பரவும் பிற ​நோய்க​ளையும் கூட சில விசயங்களில் ஜாக்கிர​தையாக இருந்தால் சுத்தத்​தை முழு​மையாக க​டைபிடித்தால் ​நோய் வராமல் தடுக்கலாம் அல்லது தடுப்பூசி ​போட்டுக்​ கொள்ளலாம். அ​னைத்​தையும் மீறி வந்துவிட்டால் அ​தைவிட வீரியமான Anti Biotics எடுத்துக்​கொண்டு ​நோயிலிருந்து தப்பலாம். ஆனால் புற்று ​நோ​யைப் ​பொறுத்தமட்டில் ​நோயாளி மரணத்​தை ​நேர்​கொண்டு அ​ழைப்ப​தைத் தவிர ​வேறு வழியில்​லை.
தட்டம்​மை, இளம்பிள்​ளைவாதம், அம்​மை​நோய், ம​லேரியா ​போல் இத​னை அரசா​லோ இன்​றைய மருத்துவத்தா​லோ முழு​மையாக சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டமுடியாது. இந்​நோய் இதுவ​ரை மனிதன் எதிர்​கொண்ட ​நோய்களி​லே​யே வித்தியாசமானது. இது கிருமிகளால் பரவவில்​லை, மாறாக இயல்பான மனித உடல்களில் உள்ள ​செல்களில் ஏற்படும் மிகத்தீங்கான மாற்றத்தினால் ஏற்படுகிறது. இத​னை தற்​பொழுது நாம் நம்பிக் ​கொண்டிருக்கும் Allopathy மருத்துவ மு​றைக்​கேயான சவாலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
எல்லா ​நோய்களுக்கும் அடிப்ப​டை அந்த ​நோய் தாக்கிய மனிதன் வாழும் புறச்சூழல்தான் என்றாலும், அச்சூழ​லை மாற்றாமல் அம்மனித​னை மட்டும் மீட்​டெடுக்க முடிந்தது. ஆனால் புற்று​நோ​யைப் ​பொறுத்தவ​ரை புறச்சூழ​லை – சமூக அ​மைப்​பை, வாழ்க்​கை மு​றை​யை அடிப்ப​டையிலிருந்து – மாற்றாமல் மனித​னை காப்பாற்ற முடியாது என்ற முடிவிற்​கே நாம் வர​வேண்டியுள்ளது.
நாம் வாழும் இயற்​கை சூழல் இன்று முன்​னெப்​போதும் இல்லாத வ​கையில் மாச​டைந்துள்ளது. ​தொழிற்சா​லைகள், ​போக்குவரத்து, ​உணவுதாணிய உற்பத்தி, மருத்துவம் மற்றும் அன்றாட வாழ்க்​கை ​தே​வைகளுக்கான ​பொருட்கள் அ​னைத்திலும் மிக ஆபத்தான ​வேதிப்​பொருட்கள் பயன்படுத்துகி​றோம். அதிலும் குறிப்பாக தனியார்மயம், உலகமயமாக்கல் என்ற விசயங்கள் இந்தியாவில் ந​டைமு​றைக்கு வந்த கடந்த பத்து பதி​னைந்து வருடஙகளில், சுற்றுப்புற சூழல் சீர்​கே​டென்பது கடந்த ஐம்பது ​அல்லது நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக ​மோசமாக நடந்து ​கொண்டிருக்கிறது. ஆக​வே மிகத்தீவிரமாக இ​வைய​னைத்தும் மறுபரிசீல​னை ​செய்யப்படாமல் மாற்றுத்திட்டங்கள் அதி​வேகமாக ந​டைமு​றைப்படுத்தாமல் நம்​மை மட்டுமல்ல நம் வருங்கால சந்ததியின​ரையும் நாம் காக்க முடியாமல் ​போய்விடும். மனித இனம் மட்டுமல்ல இப்பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் மிக ​மோசமான வழியில் அழிந்துபடும்.
ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்களும் இந்த சமூக அ​மைப்பிற்குள்​ளே​யே ஒவ்​வொரு பிரச்சி​னைக்கும் ஏ​தேனும் தீர்விருந்தால் அதுவும் அதற்கு சாத்தியமான மு​றைகளிலிருந்தால் அத​னைச் ​செய்யவும் தயக்கத்துடன் முன்வருகிறது. இல்லாவிட்டால் ஒட்டு​மொத்த உயிரனமும் அழிந்தாலும் அதற்காக ஒரு துரும்​பை நகர்த்தவும் தயாரில்​லை.

Advertisements

2 பதில்கள் to “புற்றுநோய் மரணங்களும் – தடுப்பூசித் தத்துவங்களும்”

 1. Kumari said

  Well written. While reading we can also feel the pain.

 2. Vijayakumar said

  நமக்கு நெருங்கிய உறவினர்கள் யாராவது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதன் விபரீதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  நமக்கெல்லாம் புற்று நோய் வர வாய்ப்பே இல்லை என்று நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம். இதோ எங்கள் கதை:

  என் தந்தைக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. தொடர்ச்சியான இருமல். நுரையீரல் வெளியில் வந்து விழுந்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு இருமல். உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்து கேட்டபொழுது “கேன்சர் மாதிரி தெரிகிறது. உடனே அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சேருங்கள்” என்று சொன்னார். எங்களுக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்றோம். அவர் என் தந்தைக்கு புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் உண்டா என்று கேட்டார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, தண்ணீரைக் கூட கொதிக்க வைத்துதான் குடிப்பார் என்று சொன்னோம். அப்படியென்றால் இது கேன்சராக இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டார். அங்கேதான் என் தந்தையின் அழிவு ஆரம்பம் ஆனது.

  தொடர்ந்து உடல்நிலை மோசமாகிக்கொண்டே போக, மதுரையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு என்ன சிகிச்சை செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒரு கட்டத்தில் என் தந்தை அடிக்கடி சுயநினைவிழந்து கீழே விழுந்தார். என் உறவினர்கள் ஆலோசனைப்படி என் தந்தையை சென்னைக்கு அழைத்து வந்து வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. இறுதியில் இது கேன்சர்தான் என்று உறுதி செய்தார்கள். அது ஒரு கொள்ளைக்கார மருத்துவமனை என்பது ஒரு வாரம் என் தந்தையை அவர்கள் நடத்திய விதத்தில் தெரிந்து விட்டது. ஒருவழியாக அங்கிருந்து என் தந்தையை அப்புறப்படுத்தி சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு பிரபல கேன்சர் மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்னர் என் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்து விட்டார். இதற்குள் கிட்டத்தட்ட 8 லட்சம் செலவாகி விட்டது. அதன் பின்னர் ஒரு வருடம் எந்த பிரச்சினையும் இன்றி ஓடியது.

  ஒரு நாள் திடீரென்று பார்வை மங்கியது. கண் டாக்டரிடம் சென்று காண்பித்தோம். ஆனால் பார்வையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கண் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தவர் ஒருநாள் மயங்கி விழுந்தார். உள்ளூர் மருத்துவர் ஒருவர் ஊசி போட்டதில் மயக்கம் தெளிந்தது. ஆனால் பேச்சு வரவில்லை. நிலைமை ரொம்ப மோசமாகி இருந்தது. சென்னை வரை கொண்டுவர அவகாசம் இல்லை. அதனால் மதுரை அப்பல்லோவில் சேர்த்தோம். கேன்சர் மூளைக்கு பரவியதுதான் காரணம்.

  அந்த கடைசி இரண்டு நாட்களில் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டே வந்தது. செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்று அப்பா என்று சொல்லி அவர் கையை பிடித்தேன். அவருடைய கை என் கையை இருகப்பற்றிக்கொண்டது. அவர் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. மூடியிருந்த அவர் விழிகளின் ஓரம் கண்ணீர். அந்தத் தருணம், இதுவரை நான் அனுபவித்திராத சோகம்.

  எல்லாம் முடிந்துவிட்டது. என் தந்தையின் வாழ்நாள் சேமிப்பு, சேர்த்துவைத்த சொத்து எல்லாம் கரைந்தும் உயிர் மிஞ்சவில்லை. நாங்கள் செய்த ஒரு தவறு என்னவென்றால், உள்ளூர் மருத்துவர் ஆரம்பத்திலேயே கேன்சராக இருக்கும் என்று சொன்னதும் உஷார் ஆகி இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் என் தந்தை வாழ்ந்திருக்க கூடும்.

  கேன்சர் என்பது உயிரை குடிக்கும் நோய் மட்டுமல்ல. அது ஒரு சித்ரவதை. உடலை பரிசோதனை செய்யும்போதும், சிகிச்சையின் போதும் அனுவவிக்கும் வேதனையானது ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைப்பதற்கு சமம்.

  நானோ ஓரிரு மாதங்களில் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன். என் தந்தை அனுபவித்த துன்பங்களை அருகிலேயே இருந்து பார்த்த என் தாயும் அவரை எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டோமா என்று துடியாய் துடித்த என் தங்கையும் இன்று வரை மீளவே இல்லை.

  கேன்சருக்கென்று ஒரு தடுப்பூசி இல்லாத காரணத்தால் அது பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்காவது பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: