எனது நாட்குறிப்புகள்

Archive for மார்ச் 23rd, 2012

கலகக்காரன் மரணம​டைவ​தேயில்​லை

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 23, 2012

ஒரு முறை என் வீட்டின் கதவைத் தட்டினான்
இந்த வேளையில் யாரது என திடுக்கிட்டு கதவைத் திறந்தேன்
நேற்றிரவு தான் கொல்லப்பட்டதாகவும்
அந்த உண்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட
ஒரு நீதி விசாரணை வேண்டுமென
கோரிக்கை வைக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டான்
நம்பமுடியாமல் அதனை மறந்துவிட்டேன்

சில நாட்கள் கழித்து
மீண்டுமொருமுறை ஒரு அகால நேரத்தில்
என்னை பார்க்க வந்தான்
விடிய விடிய எங்கள் பேச்சு நீண்டது
இரு மனிதர்கள் இந்த உலகில் பேசச் சாத்தியமான
எல்லா விசயங்கள் குறித்தும் பேசித் தீரவில்லை

அதிகாலையில் கிளம்பும் பொழுது
இருவரும் தெருமுனையில் உள்ள டீக்கடையில்
தேனீர் பருகிவிட்டு பிரியும் சமயம்
திடீரென ஞாபகம் வந்தவன் போல்
சொல்லிவிட்டுக் கிளம்பினான்

தன்மீதான சட்டவிரோத படுகொலைக்கு
எதிராக நீதி விசாரனை நடத்த வேண்டிய நெருக்கடியை
தானே ஏற்படுத்திவிட்டதாக

சில மாதங்கள் கழித்து
காலை தினசரியை புரட்டிய பொழுது
காவலர்களுடன் நடந்த மோதலில் நேற்று அவன் கொல்லப்பட்டதாகவும்
இடது தோளிலும் இடுப்புப் பகுதியிலும் காயம்பட்ட இரு காவலர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்
செய்தியை வாசித்து திடுக்கிட்டேன்

ஒரு வேளை இம்முறை அவன் உண்மையாகவே கொல்லப்பட்டிருப்பானோ
எனக்கு அந்த உறுத்தல் குறைய சில மணி நேரங்கள் ஆனது

எதிர்பார்த்தது போலவே அதற்குச் சில நாட்கள் கழித்து
ஒரு அகால வேளையில் என் வீட்டு அழைப்புமணி அடித்தது.
ஒரு வேளை இது அவனாக இருக்கக்கூடும்

Advertisements

Posted in கவிதைகள் | Leave a Comment »