எனது நாட்குறிப்புகள்

Archive for மார்ச் 24th, 2012

கூடங்குளம் ​போராட்டமும் ஆளும் வர்க்க அரசியலும்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 24, 2012

ஒரிசாவின் வனப்பகுதியில் பழங்குடிப் பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பதை படம் எடுத்துக் கொண்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த இருவரை மாவோயிஸ்ட்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை விடுவிப்பதற்கு நிபந்தனையாக அரசிற்கு பதின்மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளனர். இது குறித்து பேசும் போது அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “மாவோயிஸ்ட்கள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும், எந்த பிரச்சினைக்கும் பேச்சு வார்த்தை தான் தீர்வு, வன்முறை மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது, இப்பிரச்சினையின் போதே சமீப நாட்களில் அவர்கள் சில காவலர்களை பல இடங்களில் மோதலில் கொன்றுள்ளனர், போன உயிர்கள் திரும்பி வருமா? அவர்களை இனி பார்க்க முடியுமா?” என உருக்கமாகக் கேட்டுள்ளார்,

மற்றொருபுறம் இங்கே தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார், தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கிறார் “நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, எங்களை இந்த அரசு தீவிரவாதிகளைப் போல கையாளுகிறது, நாங்கள் அமைதி வழியில் போராடுகிறோம். எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. எங்களை கைது செய்துகொள்ளச் சொல்கிறோம், அதனையும் செய்ய மறுக்கிறது. எங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஆயுதந்தாங்கிய காவல் படைகளையும் துணைராணுவப்படைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. எங்கள் பகுதிகளுக்கான அனைத்து வாயில்களையும் அடைத்து, ஏறக்குறைய முள்ளிவாய்க்கால் சம்பவம் போன்ற ஒரு நிலமையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கான மின்சாரம், பால், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளையும் நிறுத்திவிட்டது”

இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏறக்குறைய நம் காலகட்டத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்குமான தீர்வுகளும் விடைகளும் இதில் அடங்கியுள்ளன என்று உறுதியாகக் கூறலாம்.

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி கூடங்குளம் பிரச்சினை குறித்து ஒரு கலந்துரையாடலை நடத்தியது. அதில் கலந்து கொண்டு தன் கருத்துக்களை பேசிய முன்னாள் உள்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம் IASயிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் இவ்விதமாக இருந்தது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நன்மைக்காக ஒரு திட்டத்தை கொண்டுவந்தால் அவற்றைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். போராடுபவர்கள் தாங்கள் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது, அப்பொழுது அரசு அப்போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை பயன்படுத்தத்தான் செய்யும். பிரச்சினைகளை கையாள எவ்வளவு படைகளை எவ்வளவு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என்பது காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரியும்”.

மத்திய மாநில அரசுகள் – கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடுபவர்களோடும் அவர்களின் பிரதிநிதிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசின் அமைச்சர்கள் குழுவையோ அல்லது மாநில அரசின் அமைச்சர்கள் குழுவையோ இதுவரை நியமித்ததா? விஞ்ஞானிகள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை அரசு சொன்ன விசயங்களையே மீண்டும் மீண்டும் கூறின. போராட்டக் குழுக்கள் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. அவை எங்கள் வேலையல்ல என்பது போன்ற தொணியில் பதிலளித்துவிட்டுச் சொன்றன. சரி, இக்குழுக்கள் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில் அரசியல் மற்றும் சமூகரீதியான எந்தப் பேச்சுவார்த்தையும் அவர்களுடன் நடத்தப்படவில்லை.

ஆயுதப் போராட்டமே தீர்வு என்பவர்களை எதிர்கொள்ள ஒரு தந்திரோபாய வாதமுறையையும், அமைதி வழியில் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை நடத்துபவர்களை எதிர்கொள்ள ஒரு வகையான தந்திரோபாய வாதமுறையையும் இன்றைய அரசுகள் கையாளுகின்றன. இதன் சாராம்சம் என்பது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகளோ, அயலுறவுக் கொள்கைகளோ, தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் சுரண்டல்களுக்கு நாட்டை முழுமையாகத் திறந்துவிடுவதிலோ எந்த மாற்றமும் கிடையாது. அதற்கு இடைஞ்சலாக இருக்கும் சக்திகளை அவற்றின் தன்மை மற்றும் நிலைகளுக்கு ஏற்ப கையாளுவது என்பதுதான்.

கூடங்குளம் போராட்டம் இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான படிப்பினைகளை இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு அரசு குறித்தும், அரசாங்கம் குறித்தும், ஆளும் வர்க்கங்கள் குறித்தும், வாதப்பிரதிவாதங்களில் கடைபிடிக்கப்படும் முறைகள் குறித்தும், இன்னும் எண்ணிறைந்த விசயங்களில் மிகப் பெரிய தெளிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, மத்திய மாநில அரசுகள் மக்களுடனான ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டது. மக்கள் அதனை நோக்கி தவிர்க்க முடியாமல் இந்திய ஆளும் வர்கக்ங்களாலும், இந்திய அரசாலும், இந்திய ஆட்சியாளர்களாலும் உந்தித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

Posted in கட்டு​ரை | Leave a Comment »