எனது நாட்குறிப்புகள்

காலவரி​சையில் பாரதி பாடல்கள்

Posted by ம​கேஷ் மேல் மே 13, 2012

கடந்த மாத காலச்சுவடில் “காலவரிசையில் பாரதி பாடல்கள்” நூலுக்கான முன்வெளியீட்டுத்திட்ட விளம்பரம் வெளிவந்திருந்தது. பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் பனிரெண்டு தொகுதிகளாக கடந்த 50 வருட கடும் உழைப்பில் தனி ஒரு மனிதராக பதிப்பித்த பெரியவர் சீனி. விசுவுநாதன் அவர்களின் பதிப்பு மற்றும் வெளீயீடாக இது வெளிவந்துள்ளது.

முன்பு என்சிபிஎச் பாரதி பாடல்களை வெளிவந்த தேதி விவரத்தோடு ஒரு பதிப்பு கொண்டு வந்தது. ஆனால் அது முதல் பதிப்போடு நின்று போனது. காரணம் தெரியவில்லை. நீண்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது பாரதி நூல் பதிப்பாளரும் பாரதி ஆய்வாளருமான திரு. சீனி விசுவநாதன் அவர்களின் முயற்சியில் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள், பல ஆய்வுத் தகவல்களுடன் நல்ல பதிப்பாக வெளிவந்துள்ளது.

இப்பதிப்பில் வெளிவந்த தேதி மட்டுமல்லாமல், பதிப்பாளர் குறிப்பாக மேலதிகமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அச்சில் உள்ளதற்கும் கையெழுத்து பிரதியில் உள்ளதற்குமான பாடபேதங்கள், முதல் பதிப்புகளுக்கும் பிற பதிப்புகளுக்குமான பாட பேதங்கள், வெளிவந்த பத்திரிகையின் அட்டைப் படங்கள், பல பாடல்களுக்கு பாரதியின் கையெழுத்து ஒளிப்படம், போன்ற எண்ணற்ற வரலாற்றுக் குறிப்புகளுடனும், திட்டவட்டமாகத் தேதி தெரிந்த பாடல்கள் முதல் பகுதியாகவும், தேதி தெரியாதவை இரண்டாம் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு, இப்பதிப்பு 1344 பக்கங்களில் மிக விரிவாக செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சீனி. விசுவநாதன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததிலும், அவருடைய பாரதி படைப்புகள் கடைசித் தொகுதியான பனிரெண்டாம் தொகுப்பின் பின்னுரையில்,  பாரதி படைப்புகள் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்ட அனுபவங்களை விவரித்திருப்பதிலுமிருந்து தெரியவரும் விசயங்கள், நம் தமிழ்ச்சூழலில் வரலாற்றுக் அனுகுமுறையில் உள்ள தவறான கண்ணோட்டங்கள் வருத்தமூட்டக்கூடியதாக உள்ளது.

அவர் குறிப்பிடுகிறார்

1. தமிழக அரசாங்கம் 1953 1954 களில் பாரதி பாடல்கள் மற்றும் உரைநடைகளை பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது

2. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் 1981-82 பாரதி நுாற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி பதிப்புக் குழு அமைத்து பாரதி படைப்புகளை நுால்களாக வெளியிட்டது.

ஆனால் இந்த இரு அரசு முயற்சிகளுமே ஏற்கனவே பல தனிநபர்களும் தனி நிறுவனங்களும் பதிப்பித்தவைகளையே அரசின் பதிப்பாக கொண்டு வர முயற்சித்ததற்கு மேலதிகமாக ஒரு புதிய முயற்சியும் செய்யவில்லை.

மேலும் பாரதியாரின் மொழி இன்றைய சந்ததியினருக்கு புரியாது என்ற முடிவுடன் வரலாற்று அறிவோ, படைப்புகளை அனுகும் அறிவோ துளியுமின்றி பல எழுத்துக்களையும் சொற்களையும் தற்கால வடிவத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்.

பல பாடல்களுக்கு பாரதி கொடுத்த தலைப்புகளை மாற்றி இவர்களாக வேறு தலைப்புகளை கொடுத்துள்ளனர்.

தமிழ் பல்கலைக் கழக பதிப்பில் இருந்த ஒரே ஒரு சிறப்பு அம்சமான காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்களுக்கும் சீனி. விசுவநாதன் அவர்களே காரணம் என்பதையும், அதை செய்து தரும் வரை அவரை பயன்படுத்திக் கொண்டு அதன் பிறகு அதை பதிப்புக்கும் பணிகளின் போது அவரை விலக்கி புறக்கணித்து விட்டது என்பதை இப்புதிய பதிப்பின் நீண்ட “என்னுரை”யில் பதிவு செய்துள்ளார்.

பாரதியார் படைப்புகளை காலவரிசையில் வெளிக் கொணர்ந்த முக்கியத்துவம் மட்டும் அவருடையதல்ல. மாறாக கண்டுபிடிக்கப்படாத பல படைப்புகளை அவர் தமிழகம் துவங்கி தில்லி ஆவணக் காப்பகங்கள் வரை அலைந்து தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்துள்ளார் என்பதும், பல்வேறு பிரதிகளுக்கிடையே உள்ள பாட பேதங்களை இப்பதிப்புகளில் பதிவு செய்துள்ளார் என்பதும், இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போன பல இதழ்களின் தேதிப் பட்டியல்களையும், பாரதியார் எழுதியதாக வேறு இடங்களில் குறிப்புகள் உள்ள பல படைப்புகள் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் குறித்தும் வருங்கால ஆய்வாளர்களுக்கு குறிப்புதவிகள் தந்திருக்கிறார் என்பதும் அவருடைய பின்னுரையிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

வரலாற்றை ஆய்வு செய்வதற்கோ, வரலாற்று நிகழ்ச்சிகளை, தனிமனிதர்களை ஆய்வு செய்வதற்கோ, அவை அல்லது அவர்கள் குறித்த வரலாற்றுப் பாத்திரத்தின் சாதக பாதகங்களை நிர்ணயிப்பதற்கோ முதலில் பக்கச் சாய்வற்ற தேதி வாரியான தகவல் சேகரிப்பு ஆய்வுகள் மிக முக்கியமானவை. வரலாற்றை படிப்பதற்கான அடிப்படைகளை நிறுவும் இத்தகைய ஆய்வு முயற்சி மிக கடினமானதும், அதிக உழைப்பைக் கோருவதும், மிகுந்த சோர்வு ஏற்படுத்தக் கூடியதுமான பணியாகும். பாரதி படைப்புகள் பனிரெண்டாம் தொகுதியின் பின்னுரையை படிப்பவர்கள் நன்கு உணரமுடியும். ஆனால் ஒரு சமூகம் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்கும், தன் காலத்தின் போக்கை உணர்ந்து கொள்வதற்கும், வருங்காலத்திற்கான திட்டங்களை வரைந்து கொள்வதற்கும் இத்தகைய ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

குறிப்பாக பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் படைப்பாற்றலின் அடிப்படைகளையும் வளர்ச்சியையும் புரிந்து கொள்வதற்கும் புதிய தலைமுறை அவற்றை செரித்து உள்வாங்கி மேலெழுந்து வருவதற்கும் இத்தகைய ஆய்வு அடிப்படையிலான வெளியீடுகள் மிகுந்த அவசியப்படுகின்றன. இடையில் தொடர்ச்சியற்றுப் போன ஒரு பாரம்பரியமிக்க சமூகம், தன் வரலாற்றுத் தொடர்ச்சியை கண்டுகொள்வதென்பது தன் அடுத்தகட்டங்களுக்கு செயலூக்கத்துடனும் படைப்பாற்றலுடனும் இயங்கும் புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும்.

இவை வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசாங்கத்தாலும் பெரிய கல்வி நிறுவனங்களாலும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. அவை எத்தகைய குறுகிய அரசியல் நலன்கள் கருதியோ, பொருளாதார நலன்கள் கருதியோ அல்லாமல் விஞ்ஞானப்பூர்வ வழிமுறைகள் வகுத்துக் கொண்டு  திட்டமிட்டுச் செயல்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெறும் வாய்ச்சவடால்களைத் தாண்டி இத்தகைய அறிவுப்பூர்வமான வேலைகளைச் செய்ய அரசாங்கங்களோ கல்வி நிலையங்களோ தயாரில்லை. இவர்களைப் போல சில தனி மனிதர்களால் அவர்களின் சாத்தியப்பாடுகளுக்கு உட்பட்டே இத்தகைய மிகப்பெரும் ஆய்வு வேலைகள் செய்யப்படுகின்றன. உவேசா துவங்கி சீனி விசுவநாதன் வரை இத்தகைய தனிநபர்களை நம்பித்தான் ஒரு சிறப்பு வாய்ந்த இனத்தின் வரலாறு வெளிக்கொணரப்படுகிறது என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதிதாசனின் படைப்புகளுக்காகவும் இன்னும் பிற தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளின் காலவரிசைபடுத்தப்பட்ட முழுமையான படைப்புகளை ஆய்வு செய்து வெளிக்கொணர்வதற்காக பிறக்கப்போகும் தேவதூதர்களை எதிர்பார்த்து வானத்து நட்சத்திரங்களில் அதிசயம் நடைபெறுகிறதா என அண்ணாந்து வாய்பிளந்து பார்த்திருப்பதைத் தவிர தமிழ்ச் சமூகத்திற்கு வேறொன்றும் வழியில்லை போலும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: