எனது நாட்குறிப்புகள்

​பெட்​ரோல் வி​லை உயர்வு – எதிர்ப்பதற்கு எதிர்கட்சிகளுக்கு தகுதியுண்டா

Posted by ம​கேஷ் மேல் மே 25, 2012

வரும் 31ம் தேதி பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது பிஜேபி. நேற்று நாடு முழுவதும் சிபிஐ(எம்) பெட்ரோல் உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதல்வருமான ஜெ.ஜெயலலிதா, “மத்தியில் ஒரு அரசு இருக்கிறதா, ஆட்சி நடக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான மு. கருணாநிதி, பெட்ரோல் விலையேற்றத்தை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கூட, “இது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மிகப்பெரிய விலையேற்றம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விலையேற்றத்திற்கான தயாரிப்புகளை சில மாதங்களாகவே மத்திய அரசின் அமைச்சர்கள் செய்து கொண்டுதான் இருந்தனர். மத்திய அமைச்சர்கள் “கண்டிப்பாக விலை உயர்த்தித்தான் ஆகவேண்டும், எண்ணெய் நிறுவனங்கள் இச்சுமையை தாங்காது” என அறிக்கை விட்டுக் கொண்டுதான் இருந்தனர். அதே போல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதும் அவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. சமாளிக்கும் யுக்திகளும் அவர்களிடம் இல்லாமல் இல்லை. ஒரு வேளை அவர்களின் திட்டப்படி ரூ. 7.54 என்பதே குறைப்பதற்கான விலையையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும் என்பது யாருக்கும் புரியாததல்ல.

ஆனால் தற்பொழுது எழும் எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு, “இந்த விலை உயர்விற்கு எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம், விலை நிர்ணயிக்கும் உரிமை அவர்களிடம்தான் உள்ளது” என மிகச் சாமர்த்தியமாக பதில் சொல்கின்றன.

நாடோடி மன்னன் படத்தில் வரும் வசனம் தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது.

அரசர்: நீங்கள் யாருக்கு எதிராக கலகம் செய்கிறீர்கள்?
கலகக்காரன்: நாங்கள் மன்னருக்கு எதிராக கலகம் செய்கிறோம்!
அரசர்: நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டால்?
கலகக்காரன்: அப்படியானால் நாங்கள் யாருக்கு எதிராகப் போராடுவது?!?!

இன்றைய இந்திய ஆளும் வர்க்கங்கள், தங்களின் எதிரி யார், யாருக்கு எதிராக ஒரு விசயத்தில் போராடுவது, என்பன போன்ற விசயங்களில் மக்களை மிகச் சாமர்த்தியமாக ஏமாற்ற முடியும் என தப்புக் கணக்கு போடுகின்றன. மட்டமான அல்பமான வழிமுறைகளை உருவாக்கி மக்களை குழப்பியடிக்க முயற்சிக்கின்றன. இதன் மூலமாக மக்களின் போராட்டம் சட்டப்பூர்வமான வழிமுறைகளில் இல்லை. இவ்விசயத்தில் உண்மையான அதிகாரம் உடையவர்கள் யார் என்று கூடத் தெரியாமல் போராடுகிறார்கள் என்று கூறி தாக்குதல்களையும் அடக்குமுறையையும் ஏவுவதற்கான வழிமுறைகளை தங்களுக்குச் சாதகமாக ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

மத்திய அரசு வசம் விலையேற்றுவதற்கான உண்மையான அதிகாரம் இல்லை என்பது உண்மையானால். விலையேற்றத்தின் தவிர்க்கமுடியாமை குறித்தும் நியாயம் குறித்தும் முன்னதாகவே மத்திய அமைச்சர்கள் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை என்ன? சட்டமன்ற தேர்தல்கள் முடியும் வரை விலை உயர்வைத் தள்ளிப் போட முடிவது எப்படி? பாராளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை தள்ளிப் போட வேண்டியது எதனால்? உண்மையில் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே கொடுத்திருப்பதாகக் கூறுவது ஒரு வித ஏமாற்று வேலைதான், எதிர்ப்பை சமாளிப்பதற்கான, போராட்டங்களை குழப்புவற்கான ஒரு யுக்தியே. உண்மையில் இப்பிரச்சினை தனியார் எண்ணெய் நிறுவனங்களை அனுமதித்ததன் பின்னணயில் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. விலை நிர்ணயிப்பதில் தனியார் எண்ணெய் நிறுவனங்களும், அரசு எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் கூடிச் சதி செய்கின்றன.

பிஜேபி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்டதுதான் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயித்துக் கொள்வதற்கான முடிவு என்று காங்கிரஸ் அரசு பிஜேபியை நோக்கி, “இவனும் ஒன்றும் யோக்கியனில்லை, புரிந்து கொள்ளுங்கள்” என்ற தொணியில் பேசுகிறது. பிஜேபி ஆட்சியிலும் பெட்ரோல் விலை பல முறை இதே போன்று உயர்த்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. இப்பொழுது மட்டும் பிஜேபிக்கு இவ்விலை உயர்வை கண்டிக்கும் தகுதி எப்படி வந்தது?

ஒரே ஒரு காரணம் தான் சொல்லமுடியும், அது அவர்களும் இன்றைக்கு எதிர்க்கட்சி என்பதுதான்.

உண்மையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து சுத்திகரித்து பெட்ரோல் பிரிக்க ஆகும் அடக்கச் செலவு ரூ. 25க்கும் குறைவுதான் என்கிறார்கள் பல நிபுணர்கள். இன்றைய தேதிக்கு ரூ. 52க்கும் மேல் கூடுதலாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதாவது அதன் உற்பத்திச் செலவைவிட மூன்று மடங்கு விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவில் விற்கப்படுகிறது. கடந்த ஆறுமாதமாக ஒரு வருடமாக கடும் நட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள் இயங்குகின்றன என்பது போன்ற அறிக்கைகள் விடப்படுகின்றன. ஆனால் கடந்த கால எந்த எண்ணெய் நிறுவனங்களின் ஆண்டறிக்கையும் நட்டக்கணக்கு காட்டவே இல்லை. இதை இணையத்தில் தேடுபவர்கள் கூட கண்டடைந்து கொள்ள முடிகிறது, ஒவ்வொரு ஆண்டும் 10.000 கோடி என்ற கணக்கில் லாபம் காட்டப்படுகிறது. தொடர்ந்து பல மாதங்களாக சர்வதேச சந்தை விலையைவிட நட்டத்தில் விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் எப்படி ஆண்டறிக்கையில் மட்டும் பல கோடியில் லாபக் கணக்கு காட்ட முடியும்? யாரை ஏமாற்றுகிறது இந்த அறிக்கைகள்?

மத்திய அரசு மானியம் கொடுக்கிறது பெட்ரோலுக்கு என்று சொல்லும் கூற்றைவிட கேலிக்குரியது வேறொன்றுமில்லை. மத்திய மாநில அரசுகள் வரியாகவே ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையை விட அதிகமாக மக்களிடமிருந்து கொள்ளையடிக்கின்றன. 200 சதவீதத்திற்குமேல் லாபம் வைத்து விற்கப்படும் ஒரு பொருளில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தை கழிவு என விட்டுக் கொடுப்பதற்கு பெயர் மானியமா? இதைவிட அபத்தமான வாதம் வேறொன்று இருக்க முடியுமா?

எண்ணெய் நிறுவனங்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி அளித்ததும், எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளும், கணக்கு வழக்குகளும் வெளிப்படைத்தன்மையின்றி இருப்பதும், ஒரு பொருளின் உற்பத்தி மதிப்பில் எத்தனை சதவீதத்திற்குள் அதன் மீதான லாபம், வரி, இடைத்தரகர்கள் கூலி போன்றவை இருக்கலாம் என்பற்கான வரைமுறைகளும் இல்லாததுதான் இப்பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணம்.

பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவை மிக அடிப்படையான பொருட்கள் இவற்றின் மீதான விலையேற்றம் ஒட்டுமொத்த விலைவாசி உயர்விற்கும் செலவினங்களின் உயர்விற்கும் இட்டுச்செல்லக்கூடியவை. இவற்றின் கொள்முதல், தயாரிப்பு, விற்பனை, வரி, லாபம் போன்ற விசயங்களிலேயே குறைந்தபட்ச நேர்மையை கடைபிடிக்க முடியாத அரசுகள் எப்படி சமூகத்தின் பிற அனைத்து விசயங்களிலும் நேர்மையுடனும், சமூக அக்கறையுடனும் நடந்து கொள்ள முடியும் என்பதான மிகமிக முக்கியமானதும் பயமுறுத்தக்கூடியதுமான கேள்விகளுக்கு நாம் முகம் கொடுத்தே ஆகவேண்டும்.

இவ்விலை உயர்விற்கு எதிராக போராடக்கூடியவர்கள் சிபிஎம், பிஜேபி யாராக இருந்தாலும் சரி, அவர்கள்

1. தனியார் எண்ணெய் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வதற்காக போராடுவோம்
2. எண்ணெய் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மைக்காக போராடுவோம்
3. பொருளின் உற்பத்திச் செலவில் இத்தனை சதவீதத்திற்கு மேல் விலை உயர்த்துவதை அனுமதிக்க மாட்டோம்

போன்ற கோரிக்கைகளுக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்.

தற்பொழுதைய எண்ணெய் நிறுவனங்களின் அமைப்பு வடிவம், செயல்பாடு, விநியோக முறை ஆகியவை எப்படி தற்பொழுதைய பிரச்சினைகளுக்கு காரணம், அவற்றை தீர்ப்பதற்கான தங்களிடம் உள்ள மாற்றுத் திட்டம் என்ன? என்பவற்றை வெளியீடுகளாகக் கொண்டு வந்து அதை மாற்றி அமைப்போம் என மக்கள் மத்தியில் உறுதி ஏற்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவர்கள் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் ரூ. 7.50லிருந்து ஐம்பது பைசாவோ ஒரு ரூபாயோ குறைக்கும் அரசின் மோசடித்தனத்தில் தங்களுக்கான பங்கைக் கோரி மக்களை ஏமாற்றுவதற்குத்தானே தவிர வேறல்ல. அது அடுத்த தேர்தலை குறிவைத்துத்தானே தவிர பிரச்சினைக்கான உண்மையான முழுமையான தீர்விற்காக அல்ல.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: