எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன் 8th, 2012

க. அயோத்திதாசர் ஆய்வுகள் நூல் குறித்து . . .

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 8, 2012

ராஜ் கெளதமன் அவர்களால் எழுதப்பட்ட “க. அயோத்திதாசர் ஆய்வுகள்” நூலை சமீபத்தில் படித்தேன். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு துவக்கம் வரை வாழ்ந்த தலித் ஆய்வாளரும், தமிழகத்தில் பெளத்தமார்க்கத்தை அக்காலகட்டத்தில் பரப்பியவரும், பத்திரிகையாளரும், அறிஞருமான அயோத்திதாச பண்டிதரின் படைப்புகளின் வழியாக அவருடைய சிந்தனைகளையும் அவர் முன்வைத்த கருத்துக்களையும் அறிமுகப்படுத்தும் விதத்திலும், மெல்லிய இழையில் அது குறித்த தன்னுடைய பார்வைகளை ஆங்காங்கே குறித்துச் செல்லும் விதத்திலும் இந்நூலை இயற்றியுள்ளார்.

இந்திய தமிழக வரலாற்றை பொதுநீரோட்ட பாடத்திட்டத்தின் கீழ் படித்து வளர்ந்தவர்களுக்கு பல ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும், கோபத்தையும், காழ்ப்புணர்வுகளையும் ஏற்படுத்தக் கூடிய மாறுபட்ட கலகக் குரல் நிறைந்த ஒரு பார்வையை வெளிப்படுத்தக்கூடியதாக அயோத்திதாசரின் எழுத்துக்கள் இருக்கின்றன.

சுதந்திரப் போராட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை. வெள்ளையர்களை அவர் ஆதரித்தார். இந்து மதத்தையும் அதனை ஆதரிப்போரையும் கடுமையாக விமர்சித்தார். தலித் என்ற இன்றைய சொல்லின் அர்த்தத்தில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அணுகவில்லை. ஒட்டுமொத்த இந்திய மத, ஆன்மீக, தத்துவ, கலாச்சார வரலாற்றுக்கும் துவக்கப்புள்ளியாக அவர் பெளத்தத்தையும், புத்தரையுமே முன்வைத்தார். போன்ற ஆச்சரியமான விசயங்களை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அயோத்திதாசர் இந்திய வரலாறு துவங்கி தமிழக வரலாறு, இலக்கியம், மதம், கலாச்சாரம், சடங்கு, ஆச்சாரங்கள் வரை அனைத்து குறித்தும் நாம் இதுகாறும் நம்பி வந்த அனைத்து நம்பிக்கைகளையும், ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்ட அனைத்து விசயங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறார்.

இவை குறித்துச் சொல்லும் பொழுது ராஜ் கெளதமன் அவர்கள், இவை ஒடுக்கப்பட்ட மக்கள், தங்களுக்கென்று தனியடையாளம் வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றையும் பிற அனைத்தையும் மறுவாசிப்பு, மறுஆய்வு செய்யும் முறை என்கிறார். இவருடைய பெரும்பான்மையான கருத்துக்கள் வரலாறு குறித்த தகவல்கள் கற்பிதமே என்கிறார். அதற்கு ஆதாரமாக அவருடைய வரலாற்றுத் தகவல்களில் உள்ள ஆண்டுக் குழப்பங்களையும், வரிசைக்கிரம மாறுபாடுகளையும், சொல்லாராய்ச்சிகளில் உள்ள இலக்கணத் தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

அயோத்திதாசரின் எழுத்துக்களை ஒரு பின்நவீனத்துவ படைப்பு போல கொள்ள வேண்டும் என்பதான ஒரு பார்வை ராஜ் கெளதமனின் எழுத்துக்களில் தெரிகிறது. வரலாறு என்பதே அவரவர் வசதிக்கான ஒரு புனைவுதான் அந்த அடிப்படையில் பறையர் கண்ணோட்டத்தில் அவர் வரலாற்றை மறுவாசிப்புச் செய்துள்ளார். விளையாட்டாக கிண்டலாக பல சொற்களை சொல்லாராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். வரலாற்றின் முன்பின் ஆகியவற்றை மாற்றிப் போடுகிறார். சமணமும் பெளத்தமும் ஒன்றென்கிறார், கிறிஸ்துவமும் பெளத்தத்தின் ஒரு பிரிவே என்கிறார், என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஏடறிந்த வரலாற்றின் பல அடிப்படைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், நவீன ஆய்வு முறைக்கான ஆதாரங்கள் அவற்றில் இல்லை என்பதும் பிரதான விமர்சனங்களாகின்றன.

ராஜ் கெளதமன் அவர்களே சில இடங்களில் குறிப்பிடுவது போல பெளத்த சமண வரலாறுகளும், இலக்கியங்களும் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் திட்டமிட்டே அழித்தொழிக்கப்பட்டுள்ளன. பெளத்த சமண அறிஞர்களுக்கும் இந்து, சைவ, வைணவ அறிஞர்களுக்கும் இடையிலான வாதப்போர்கள் குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளனவே தவிர அவை குறித்த விரிவான தகவல்கள் நம்மிடையே இல்லை. பெளத்த சமண மதங்களை தழுவியவர்களும் அதன் அறிஞர்களும், மடாதிபதிகளும், துறவிகளும் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெளத்த சமண அடையாளங்கள் மிகப்பெரும்பான்மையானவை பல நூற்றாண்டுகளில் துடைத்தழிக்கப்பட்டுள்ளது, இத்தகைய சூழலில் அவை குறித்த தகவல்கள் வாய்மொழி வரலாறுகளின் வழிதான் ஓரளவேனும் கிடைக்கக்கூடும்.

பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் ஆகிய காலகட்டங்கள் முழுவதுமே அது வரை பாரம்பரிய முறைகளில் சேர்த்துவைக்கப்பட்டிருந்த வரலாறு, இலக்கியம், மற்றும் அனைத்து அறிவுத் துறைகளும் படிப்படியாக நவீன வடிவங்களுக்கு கைமாற்றி அளிக்கப்பட்ட காலகட்டம்.

இத்தகைய நவீன வடிவத்திற்கு அனைத்து பழைய அறிவுத்துறைகளும் கைமாற்றி அளிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. அன்றைய தேவைகள், ஆதிக்க சக்திகளின் விருப்பத் தேர்வுகள், சாத்தியப்பாடு, வரலாற்று புரிதல், நவீனத்துவ சிந்தனை வளர்ச்சி, ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவை நடந்தேறியிருக்க முடியும்.

வாய்மொழி வரலாறு என்பது பெரும்பாலும் நவீன வரலாறு எழுதும் முறைக்கான அடிப்படைகளை கொண்டிருக்க முடியாது. அவை மனித மூளையின் ஞாபகம் சார்ந்த முறையிலேயே பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் காலவரிசை, தகவல் துல்லியம் ஆகியவற்றை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. ஆனால் அவற்றில் நவீன ஆய்வுகளுக்கு தேவையான விபரங்களும், குறிப்புகளும் ஏராளமாக கிடைக்கும்.

அயோத்திதாசரிடம் காணக்கிடைப்பது இத்தகைய பிரம்மாண்டமான பாரம்பரிய வாய்மொழி வரலாற்றை நவீன வடிவத்திற்கு கொண்டு செலுத்தும் முயற்சியே என முதல் பார்வையில் தோன்றுகிறது. இவற்றை பின்நவீனத்துவ முறை, கற்பிதம், கற்பனை, வரலாற்று ஆதாரம் அற்றவை, வரலாறு அற்றவர்கள் வரலாறு புணையும் முறை என்ற சொற்களை பயன்படுத்தி முக்கியத்துவமிழக்கச் செய்யாமல், கவனமாக எடுத்து ஆய்வு செய்தால் விடை தெரியாத வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியதாகவும் அதன் வழி ஒரு சரியான வரலாற்றை கண்டுகொள்வதாகவும் அமையும் என்றே தோன்றுகிறது.

Posted in விமர்சனம் | Leave a Comment »