எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன் 12th, 2012

தலித் மாணவர்க​ளை பள்ளியில் ​சேர்ப்பதற்கு எதிர்ப்பு ​தெரிவித்த சாதி இந்து ​பெற்​றோர்களும்; அதிகாரிகள் த​லையீடும்.

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 12, 2012

திருவண்ணாமலை அருகிலுள்ள அடையூர் கிராமத்தில் இரண்டு தலித் மாணவர்களை உள்ளுர் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சேர்த்ததைக் கண்டித்து சாதி இந்துக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி வி.பூபதி தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு சாதி இந்து மாணவர்கள் மதியத்திற்கு மேல் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்பொழுது, தலித்துகள் தங்கள் பிள்ளைகளை அக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளிக்குத்தான் அனுப்புவது வழக்கம். முதன்முறையாக இப்பொழுதுதான் குமார் என்ற வேறுஊரிலிருந்து இங்கு வந்த தலித் தொழலாளியின் பிள்ளைகள் முத்துராஜ் மற்றும் சதிஸ் ஆகியோர் ஒன்று மற்றும் நான்காம் வகுப்பில் ஜூன் 6ம் தேதி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி இந்து பெற்றோர்கள் திங்கள் காலை பள்ளி முன்பு கூடி தலித் மாணவர்களை வெளியேற்ற தலைமையாசிரியர் முகமது யுஸ்மானிடம் சண்டையிட்டுள்ளனர். அவர் மறுத்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரி வி.பூபதி, தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் பூஞ்சோலை ஆகியோர் விரைந்து வந்து இரு வகுப்பு பிரதிநிதிகளுடனும் கூட்டம் நடத்தியுள்ளனர். திரு. பூபதி அக்கூட்டத்தில் பெற்றோர் தான் தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யவேண்டும் மற்றவர்கள் அல்ல எனக் கூறியுள்ளார்.

“யாரேனும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக அரசு பள்ளிகளுக்கு வருவார்களேயானால், நாங்கள் அதனை சாதியைக் காரணம் காட்டி தடுக்க முடியாது. நமது சட்டங்கள் பள்ளி சேர்ப்பில் இதுபோன்ற பாகுபாடுகளை அனுமதிப்பதில்லை. நானுாறுக்கும் குறைவான மாணவர்களுக்காக இரண்டு நடுநிலைப்பள்ளிகளை ஒரு கிராமத்தில் நடத்தத் தேவையில்லை. இது போல நடந்து கொண்டிருந்தால் நாங்கள் இரு பள்ளிகளையும் இணைப்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.

சில சாதி இந்துப் பெண்கள் தங்கள் பெண் பிள்ளைகளை தலித் மாணவர்கள் தொந்தரவு செய்கிறார்கள் என வாதிட்டதற்கு, இது இப்பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத வேறொரு பிரச்சினை, அது குறித்து குறிப்பான குற்றச்சாட்டுகள் கொடுத்தால் அவை குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சாதி இந்துக்களின் பிரதிநிதியாக வந்த தேமுதிகவைச் சேர்ந்த எம். சீனிவாசன் என்பவர், “இது வரை எந்த தலித் மாணவரும் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சேர்க்கபட்டதில்லை, அவர்கள் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தான் சேர்ந்துள்ளனர். இதுதான் கடந்த 50 வருடங்களாக நடைமுறையில் உள்ளது, அப்படியிருக்க இப்பொழுது மட்டும் இங்கு வருவானேன்?” என்றார்.

அதற்கு திரு. பூபதி “நம் நாடு 300 ஆண்டுகளாக அடிமைப்பட்டுத்தானே இருந்தது, ஏன் நாம் சுதந்திரம் கேட்டோம்?” என பதிலளித்தார்.

பஞ்சாயத்து தலைவரும், சாதி இந்துவுமாகிய ஆர். ராமமூர்த்தி தலித் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்பதற்கு எதிராக வாதிட்டார். இப்பகுதியில் பிற அனைத்து கிராமங்களிலும் தலித் மற்றும் சாதி இந்து மாணவர்கள் சேர்ந்துதான் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விசயத்தை குறிப்பிட்டார்.

மேலும் “இந்த கிராமத்து பிள்ளைகளும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து தலித்துக்களோடு சேர்ந்துதான் பள்ளிக்குப் போகவேண்டும்” எனக் கூறி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி பெற்றோர்களை வலியுறுத்தினார். சாதி இந்து பெற்றோர் கோபம் தணிந்து சென்றனர்.

இன்றைய “The Hindu” பக். 9 “Caste Hindus raise objection to admission of dalit boys in school
Officials intervene and restore amity”

மேற்கண்ட செய்தியைப் படிக்கும் பொழுது ஹிந்துவில் வரும் “வரலாறு அன்று” பகுதியை படிக்கிறோமா அல்லது நடப்புச் செய்தியைத்தான் படிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. சமீபகாலமாக தொடர்ச்சியாக அயோத்திதாசர் பற்றியும் தமிழக வரலாறு பற்றியும் படித்துக் கொண்டிருப்பதால் நடப்புச் செய்திகள் நாம் வரலாற்றின் அக்காலகட்டத்தை விட்டு இன்னும் வெளியேறவில்லை என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள், நிர்வாகிகள், தலைவர்கள் எல்லோரின் பேச்சும் சதிகள் நிறைந்ததாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்குமோ என்ற அவநம்பிக்கை மனதில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. நம்ப பெரும் தயக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

எது எப்படியோ இரு குழந்தைகளின் மனதில் நம்மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். முன்னூறு குழந்தைகளின் மனதில் விஷத்தைக் கலந்துவிட்டோம்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »