எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன் 21st, 2012

இ​ணைய விவாதங்களும் இடதுசாரி அரசியலும்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 21, 2012

இணையத்தில் தற்பொழுது நடைபெறும் ஒரு விவாதம், “வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையை தீர்மானிப்பதில்லை” என்கிற கருத்தைச் சுற்றியே நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. பொதுவாக மேற்கண்ட மேற்கோளை வறட்டுத்தனமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை விடப்படுவதுண்டு. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை விளங்கிக் கொள்வதற்கும், நம்மை நாம் சுயபரீசிலனை செய்து கொள்வதற்கும், நம்முடைய வாழ்நிலையை நாம் ஏற்றுக்கொண்ட வாழ்வின் குறிக்கோள்களுக்கு தக்க மாற்றிக் கொள்வதற்கும் மேற்ச்சொன்ன மேற்கோள் மிகச் சிறந்த கருவியாகப் பயன்படும் என்பது உறுதி.

காரல் மார்க்ஸ் `தத்துவம்` செயலுக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார். சமூகத்தை மாற்றி அமைப்பதே தத்துவவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். இதற்கான நடைமுறையில் ஈடுபடாமல், முழுமையாக நிலவுகின்ற சமூக அமைப்பை தூக்கி எறிவதற்கான செயல்திட்டத்தோடு தன் வேலைமுறைகளையும், வாழ்வையும் அமைத்துக் கொள்ளாமல், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என சுக போக வாழ்க்கைக்கும் புரட்சிகர சிந்தனைகளுக்கும் இடையே ஊசலாடுபவர்கள் எல்லோருக்கும் ஏற்படும் சரிவுகள்தான் இவை.

மார்க்சியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்களிலிருந்து, அதில் பல இடைச்செருகல்களோடும், விட்டுக் கொடுப்புகள், நீக்குப் போக்குகளோடு ஏற்றுக் கொள்பவர்கள் வரை யாரானாலும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வாழ்வில் இருக்கும் மெல்லிய விரிசல்களில் துவங்கி மிகப்பெரிய இடைவெளிகள் வரை அது அதற்குத் தக்க அவர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்கான புதிய கருதுகோள்களை உருவாக்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.

நமது சிந்தனைகளுக்கும் நமது செயல்களுக்கும் இடையே நியாயப்படுத்திக் கொள்வதற்கான நெருக்கடி எழும் வேளைகளில் மனிதர்கள் சமாளிப்புகளிலோ, ஆத்திரப்படுவதிலோ, எதிராளிகளிடம் குறை கண்டுபிடிப்பதிலோ ஈடுபடுவது தவிர்க்க முடியாதவையே.

உண்மையில் தன்னை மார்க்சிஸ்ட் அல்லது இடதுசாரி எனச் சொல்லிக் கொள்பவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைந்து செயல்பட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்கள் பிரிவினர் மத்தியில் இயக்கப் பணி செய்வதை தன்னுடைய முழுநேரக் கடமையாகக் கொள்ள வேண்டும். அந்த இயக்கப் பணிகளுக்குத் தேவையான கலை இலக்கிய வேலைகளில் ஈடுபட வேண்டும். அந்த வேலைகளுக்குத் தடையாக இருக்கும் கருத்துக்களையும், அத்தகைய கருத்துக்களை, அரசியலை பரப்புபவர்களை எதிர்த்து போரிட வேண்டும். சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கான வேலைகளைச் செய்வதே அவர்களுடைய முழுநேரக் கடமையாக இருக்க வேண்டும். இந்த வழியில் செயல்படுபவர்களை மட்டுமே இடதுசாரிகள் என அழைக்க வேண்டும்.

மற்றபடி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்காகவோ, வெறும் கலை இலக்கிய தேவைகளுக்காகவோ, சமூக ஆய்வு வெளியீட்டுகளுக்காகவோ, இதர தன் சொந்த தேவைகளுக்காக மார்க்சிய கோட்பாடுகளை பயன்படுத்துபவர்களை இடதுசாரிகள் என வரையறுத்துக் கொண்டு அவர்களோடு சண்டையிட்டுக் கொள்வது எவ்விதத்திலும் சரியான அணுகுமுறை ஆகாது. இப்பொழுது நடைபெறும் விவாதத்தில் பெரும்பான்மையோரும், சமூக கெளரவத்துக்காகவும், தன் சொந்த பெருமைக்காகவும், படைப்பு மற்றும் தொழில்சார்ந்த தேவைகளுக்காகவும் இடதுசாரி கண்ணோட்டங்களை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மார்க்சிய மூலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டதைப் போல, மார்க்சியவாதிகள் தங்கள் லட்சியங்களை அடைவதற்கு எந்தக் குறுக்குவழிகளும் கிடையாது. முதலாளிகளுக்கு சேவகம் செய்து கூலி வாங்கி புரட்சி நடத்து முடியுமென எங்கும் கூறவுமில்லை, சாத்தியமுமில்லை.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், தங்களின் சொந்த தேவைகளுக்காக தாங்கள் நம்புவதாக இதுகாறும் கூறிவந்த கருத்துக்களுக்கு விரோதமாக வெளியுலகிற்கு தெரியாமல் ரகசியமாக தொழிலில் ஈடுபட்டவர்கள், மார்க்சியவாதிகளும் ஆணாதிக்கவாதிகளே, மார்க்சும் ஆணாதிக்கவாதியே என்று மிகவும் கீழ்த்தரமான சொற்றொடர்களில் கவிதைகள் புணைந்தார்கள் என்பதுதான்.

இதில் இன்னொரு புத்திசாலி கூறுகிறார், மார்க்ஸ் கூட எங்கெல்ஸ் என்னும் முதலாளியின் பணத்தைப் பெறாமல் மூலதனம் எழுதியிருக்க முடியாது என்று, இதைவிட படுமுட்டாள்தனமான புரிந்து கொள்ளல் உலகில் யாருக்கேனும் இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. மார்க்சிற்கும் எங்கெல்சிற்குமான உறவு ஒரு முதலாளிக்கும் அறிவுஜீவிக்குமான உறவா? எங்கெல்ஸ் ஒரு முதலாளிய சிந்தனையாளரா? மார்க்சைப் பற்றியும், எங்கெல்சைப் பற்றியும், மார்க்சியத்தை பற்றியும் எந்தவொரு நூலையும் சுயமாக வாசித்தறியாமல், வீட்டில் அப்பா தாத்தாவோ அலுவலகத்தில் முதலாளியோ மேலதிகாரியோ சொன்னதைக் கேட்டு புத்திசாலித்தனமாக சரியான இடத்தில் பயன்படுத்துகிறார் போலும்.

மார்க்சியம் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்திக் கருவிகளின் தனியுடமைக்கும் இடையிலான முரணின் அடிப்படையாக சமூகப் பிரச்சினைகளைப் பார்க்கிறது. டாடா தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியோ அல்லது தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவரோ செலுத்தும் உழைப்பானது சமூகத்திற்கானதே. அதனை உற்பத்திக் கருவிகளின் மீதான தன்னுடைய உரிமையின் காரணமாக முதலாளி தனியுடமை ஆக்கிக் கொள்வதைத்தான் மார்க்சியம் எதிர்க்கிறது. இதன் அர்த்தம் என்பது அந்தத் தொழிலாளிகள் தொழிற்சாலையை புறக்கணித்து அதிலிருந்து வெளியேற வேண்டும் எனபதல்ல மார்க்சியம். மாறாக உற்பத்திக் கருவிகளின் மீதான முதலாளிகளின் உரிமையை ரத்து செய்யப் போராடுவதும், தனியுடமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமூக அமைப்பை உருவாக்குவதை லட்சியமாகக் கொள்வதுமே மார்க்சியம். அச்செயலே அத்தொழிலாளர்களின் படைப்பாற்றலையும், ஆளுமைத்திறணையும் வளர்ப்பதற்கான அடிப்படையாகும். அதுவே அனைத்து வகையான சமூக முரண்களையும் இறுதியாக ஒழிப்பதற்கான அடிப்படையாகும்.

மார்க்சியத்தை சமூக மாற்றத்திற்காக ஒரு இடதுசாரி கட்சியில் இணைந்து கொண்டு செயல்படுத்தாமல், வேறு வழிகளில் அதனை முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தவிர்க்க முடியாமல் கருத்துக்களை திரித்துக் கூறுவும், சூழலுக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசவுமே செய்வார்கள். இப்பிரச்சினையை அதன் அடிப்படையான மேற்சொன்ன விசயங்களை விளக்கி அதன் வழி புரியவைக்காமல் வெறும் சம்பவ விளக்கங்களிலும், வாதப் பிரதி வாதங்களிலும், தர்க்கத்திலும் ஈடுபடுவது வெறும் புரணி பேசுவதாகத்தான் அமையும்.

Posted in கட்டு​ரை | 1 Comment »