எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன் 23rd, 2012

சதிகளால் சூழப்பட்ட​தே உலகம்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 23, 2012

தன்னை தனித்துக் காட்டிக் கொள்ள
எப்படி எல்லாம் கவிதை எழுத வேண்டுமென
அவளுக்குத் தெரிந்திருக்கிறது

தன்னை சாதி ​சொல்லித் திட்டியவர்களை
எப்பொழுது பழிவாங்க வேண்டுமென
அவனுக்குத் தெரிந்திருக்கிறது

அவளின் படுக்கையறைகளுக்குள்ளும்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம்
அவனின் கேமராக்கள்

அவனின் உள்ளாடைகளுக்குள்ளும்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம்
அவளின் கையடக்க மைக்குகள்

இருவருக்கும் தெரிந்திருக்கிறது
இன்னொருவரின் அன்றாட ஷெட்யூல்
தங்கள் கைத்தொலைபேசிகளில்
ரிமைன்டர் வைத்துக் கொள்ளும்போதே
தன் இனிய எதிரிகளுக்கும்
சேர்த்தே வைத்துக் கொடுப்பார்கள் போலும்

எல்லோருக்கும் தெரியும்
நம்மைத் தெரிந்து கொள்வதைவிட
நம் எதிரியைத் தெரிந்து கொள்வதே பலமென்று

எந்தெந்த பிரச்சினைகளில்
எந்தெந்த எதிரிகளை
எந்தெந்த எதிரிகளிடம் சிக்கவைக்க வேண்டும்
என்ற சூத்திரம் கற்றுக்கொண்டால்
வாய்ப்பிருந்தால் நல்ல அரசியல்வாதியாகலாம்
விருப்பமிருந்தால் நல்ல இலக்கியவாதியாகலாம்

வேட்டைக் களத்தில்
நரியைப் போல காத்திருப்பதில்
வல்லவர் சிலர்

அசந்த நேரத்தில் நரிகள்
இரையை வலுவாக சூழ்ந்த பிறகு
வேட்டையாடியவை
புலியேயானாலும், சிங்கமேயானாலும்
பறிகொடுத்த வெறியோடு
பதுங்கி ஓடவேண்டியதுதான்.

“நரிகள் வலிமையானவையல்ல” அதன் அர்த்தம்
அவை ஆபத்தானவையல்ல என்பதல்ல.

நிலத்தில் ஆடும் மிருகங்களை
நீருக்கு அழைப்பதிலும்
நீரில் ஆடும் மிருகங்களை
நிலத்திற்கு இழுப்பதிலும்
வெற்றிகரமான சமண்பாடுகளை
கண்டு கொண்டுவிட்டால்
நீங்களும் ஆடலாம்
இந்த சதிகளால் சூழப்பட்ட உலகில்
ஒரு சதுரங்க ஆட்டத்தை வெற்றிகரமாக

Posted in கவிதைகள் | 2 Comments »