எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன் 27th, 2012

​கேப்பிடலிஸம் என்றால் என்ன?

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 27, 2012

நேற்று http://www.shobasakthi.com வலைப்பக்கத்தில் திரு. ராஜன் குறை அவர்களுடைய கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கட்டுரை “முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்” இந்தக் கட்டுரை April 29th, 2008ல் எழுதப்பட்டதாக அப்பக்கத்தில் குறிப்பு உள்ளது. முன்பே கேப்பிடலிஸம் என்ற சொல்லிற்கு ராஜன் குறை அவர்கள் “முதலீட்டியம்” என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்துகிறார் என்பது தெரியும். அது குறித்த அவருடைய பதிவை இக்கட்டுரையின் முதல்பத்தியில்தான் படிக்கக் கிடைத்தது.

அதில் தான் பயன்படுத்தும் சொல்லிற்கான காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்:

“‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. ‘மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால் அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் கூட.”

இப்புதிய சொல் – அவரைத் தவிர வேறு யாருமே இதுவரை இச்சொல்லை பயன்படுத்துவதாக அறியக் கிடைக்கவில்லை, அவருடன் இணையத்திலோ சிறுபத்திரிகைகளிலோ உரையாடும் சிலர் அவரோடு பேசும் பொழுதுமட்டும் இச்சொல்லை பயன்படுத்துவதாகத் தெரிகிறது – அவருடைய உருவாக்கமா அல்லது ஏற்கனவே உள்ள சொல்லை அதன் சரியான அர்த்தத்தில் அவர் கையாளுகிறாரா என்று தெரியவில்லை.

மேலும் இது குறித்து சுவையான ஆராய்ச்சிகளுக்கான தேவைகளும் மனதில் தோன்றியது. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு “முதலாளித்துவம்” என்று மொழிபெயர்ப்பு செய்த முதல் மனிதர் யாராக இருக்கும்? சோவியத் யூனியனிடம் ஊழியராக வேலைபார்த்து தொழில்ரீதியாக மொழிபெயர்த்தவர்களா? அல்லது சுய விருப்பத்தின் அடிப்படையில் மொழிபெயர்த்த யாரேனுமா?

பல மார்க்சிய நூல்கள் தமிழகத்திற்கு இணையாக இலங்கையிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்கள் பல கலைச் சொற்களுக்கும் பெயர்ச் சொற்களுக்கும் அவர்களுக்கே உரித்தான வகையில் சொற்களை உருவாக்கியுள்ளனர் (உ.ம். Mao Tse Tung என்பது தமிழகத்தில் மாசேதுங் அல்லது மாவோ; இலங்கையில் மாஓ). அது போல முலாளித்துவத்தை அவர்களும் முதலாளித்துவம் என்றே மொழிபெயர்த்தார்களா அல்லது வேறு சொற்களை பயன்படுத்தியிருப்பார்களா?

ஆனால் நிச்சயமாக இந்த கவனப்படுத்தல் தமிழில் புழங்கும் பல மார்க்சிய -பொதுவாக தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம்- சம்பந்தபட்ட கலைச் சொற்களுக்கான சரியான மொழிபெயர்ப்புகள் தான் பயன்படுத்தப்படுகிறதா அவை எவ்வாறு அர்த்தப்பிழைகளை ஏற்படுத்துகின்றன, சரியான கோணத்தில் விசயங்களை புரிந்து கொள்வதற்கு ஊறு செய்கின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன.

இதனை வைத்துக் கொண்டு தீவிரமாக சிந்தித்த வேளையில் ஏற்பட்ட மனப்பதிவுகளை பதிவு செய்து கொள்ள நினைத்ததே இப்பதிவு.

“Capitalism = முதலாளித்துவம்” என்ற மொழிபெயர்ப்பு தவறு என்று பொருளிலக்கண அடிப்படையில் ஏற்றுக் கொள்ளகூடியதே. “முதலீட்டியம்” என்ற சொல் அதன் எல்லா கோணங்களிலும் அதற்கான சரியான மொழிபெயர்ப்பு சொல்லாக அமைந்திருக்கிறதா என தலையை எல்லாக் கோணங்களிலும் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கேற்பட்ட சந்தேகங்கள் கீழே:

முதலீட்டியம் என்ற சொல் முதலை அதாவது மூலதனத்தை ஈட்டுவதற்கான முறைகளை பற்றிப் பேசும் ஒரு வணிகவியல் சார்ந்த உபதுறையாக இருக்குமோ என்ற மயக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. அதற்கு பதிலாக “captial =  மூலதனம்” என்ற ஏற்றுக்கொள்ளத்தக்க மூலச்சொல் மொழிபெயர்ப்பிலிருந்து capitalism க்கான சொல்லை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இசம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இலக்கண காரணங்களோடு தமிழில் இருவிதமாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. ஒன்று “துவம்” இன்னொன்று “இயம்” .இவை இரண்டையும் “மூலதனத்தோடு” ஒட்டுப் போட்டு பார்த்தால் என்ன “capitalism = மூலதனத்துவம்” அல்லது “capitalism = மூலதனவியம்” (இவையும் யாராலேனும் ஏற்கனவே முயற்சித்து பார்க்கப்பட்டிருக்குமா தெரியவில்லை). capitalism என்றால் முதலாளித்துவம் என்ற சொல்லே நம் பாடமுறையாக மார்க்சியத்தை கற்கத்துவங்கிய நாள் முதல் கேட்டு படித்து பேசி பழகிவிட்டதால், எந்தச் சொல்லும் நம் மனம் ஏற்கும் ஒரு சொல்லாக அமையாமல் போவதைக் காண முடிகிறது.

ஆனால் தொடர்ச்சியாக புழங்கத் துவங்கிவிட்டால் மனங்கள் பழகிவிடும் என்பதே “முதலாளித்துவம்” என்ற சொல்லின் வரலாறிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. “னை” என்ற எழுத்தை இன்றும் ன தலையில் தும்பிக்கையுடன் எழுதும் நம்முடைய நேற்றைய தலைமுறையினருக்கு மத்தியில், நாம் திருத்தப்பட்ட வழியில் “னை” என்று எழுதுவதைப் போல, சரியான மொழிபெயர்ப்பு கலைச்சொற்களை மாற்றி அமைத்தால் நாம் இல்லாவிட்டாலும் நாளை நம் சந்ததிகள் பிழையில்லாமலும் குழப்பமில்லாமலும் படிப்பார்கள் என்றே நம்பிக்கை ஏற்படுகிறது.

சொற்களைத் தவறாக மொழிபெயர்ப்பதால் வரும் அர்த்தப்பிழை எவ்வாறு நம் ஒட்டுமொத்த சிந்தனையையே பாதிக்கிறது என்ற பிரச்சினையைத் தொடர்ந்து இந்த மொழிபெயர்ப்புச் சிக்கல்களை பற்றி யோசனை தீவிரமடைந்ததின் விளைவு:

கல்லூரி நாட்களில் முறைப்படி மார்க்சியத்தை கற்றுத் தேற வேண்டும் என்ற ஆர்வத்தில் பள்ளி கல்லூரி நண்பர்கள் பலர் சேர்ந்து ஒரு படிப்பு வட்டத்தை உருவாக்கினோம். அதில் எங்களுக்கு வழிகாட்டியாக ஒரு மூத்த தோழரும் இருந்தார். நாங்கள் தடாலடியாக மார்க்சியத்தை மூலநூல்களின் வழி கற்பதே சிறந்தது என்று “இயற்கையின் இயக்க இயல்”, “தத்துவத்தின் வறுமை”, “டூரிங்கிற்கு மறுப்பு” போன்றவற்றை “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்”, “அரசு”, “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” போன்ற பல சிறு கட்டுரைகளின் தொடர்ச்சியாக படிக்கத் துவங்கினோம்.

இவற்றைப் படிப்பதற்கு எங்களிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தும் சோவியத் யூனியன் வெளியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகங்களே. நாங்கள் ஆங்கில புத்தகங்களை reference ஆக மட்டுமே பயன்படுத்தினோம். “தத்துவத்தின் வறுமை”, “டூரிங்கிற்கு மறுப்பு” போன்ற புத்தகங்களை சோவியத் யூனியனின் மொழிபெயர்ப்பில் படிப்பது எவ்வளவு கடினம் என்பதை படித்து அனுபவித்தவர்களுக்கே தெரியும். அதன் மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்களுக்கு வாசகர்கள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது, மொழிபெயர்க்கும் புத்தகங்களின் சமூக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்தோ, அப்புத்தகங்களில் பேசப்படும் கருத்துக்களின் தீவிரம் ஆழம் குறித்தோ எந்த பெரிய கவனமும் இருக்கவில்லை என்பதுதான் அதனை படிக்கும் பொழுது ஏற்பட்ட எண்ணங்களாக இருந்திருக்கிறது. அவை குறித்து அந்த மூத்த தோழரின் கருத்து என்பது “திரிபுவாதிகள் கூலிக்காக மாறடித்திருக்கிறார்கள், நமக்கும் இவற்றைவிட்டால் வேறு வழியில்லை” என்பதுதான்.

ஒவ்வொரு வரியையும் படித்து பொருள் புரிந்து கொள்வது ஏறக்குறைய அக்காலங்களில் ஏட்டுச்சுவடிகளையும், கல்வெட்டுக்களையும் படித்து பொருள் புரிந்து கொள்பவர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு சமமாகக் கருதலாம் என்றே தோன்றுகிறது. பெரும்பாலும் உரக்க படிப்பவன் நானாகத்தான் இருப்பேன். சமயங்களில் இரண்டு பக்கங்களை சேர்த்து புரட்டிவிட்டாலும் ஒன்றும் பெரிதாக என்னால் வித்தியாசம் உணர முடியாது. ஒரே பக்கத்திலேயே புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும் பொழுது இருபக்கத்தை தாவிடும் பொழுது மட்டும் எப்படி வித்தியாசம் தெரியும். அந்தத் தோழர் தான் ஒவ்வொரு வரியையும் நிறுத்தச் சொல்லி பொருள் விளக்கம் கொடுப்பார். சில குழப்பமான இடங்களில் ஆங்கில நூலை அருகிலேயே வைத்துக் கொண்டு, அந்த இடங்களை எளிதாக புரிந்து கொள்வோம். ஒரு கட்டத்தில் ஆங்கிலத்திலேயே எளிதாக படித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அன்றைக்கு அந்தத் தோழரின் உதவி மட்டுமில்லையென்றால் மார்க்சிய மூலப்புத்தகங்களை கண்டால் காததூரம் ஓடுபவனாகவே நான் இருந்திருப்பேன்.

சமீபத்தில் உயிர் எழுத்தில் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின்” திருத்தப்பட்ட புதிய பதிப்பொன்றின் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனத்தைப் படித்தேன். ஆங்கிலத்தில் ஆயுதப் போராட்டம், வன்முறை என்ற பொருள்படும் இடங்கள் எல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பில் மென்மையான சொற்களால் விளக்கப்பட்டுள்ளன என்பதாக ஒரு குறிப்பு இருந்தது. நாங்கள் படிக்கும் பொழுது அந்த மூத்த தோழர் எங்களுக்கு கொடுத்த எச்சரிக்கைதான் ஞாபகத்திற்கு வந்தது. “திரிபுவாதிகள் இன்றைய சோவியத் யூனியனின் அரசியல நிலைப்பாடுகளுக்கு சாதகமாகவும் உதவும் வகையிலும் பல மூல நூல்களின் மொழிபெயர்ப்புகளிலும், முன்னுரைகளிலும், விளக்க உரைகளிலும் திருத்தங்கள் செய்திருப்பார்கள், கவனமாக கருத்தூன்றி படிக்க வேண்டும்”

ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு படிக்கும் பொழுது, பல இடங்களில் இந்த வாக்கியத்தை இன்னும் எளிமையாக ஆங்கிலத்திற்கு நிகராக படித்தவுடன் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் செய்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றும். பல இடங்களை பல சந்தர்ப்பங்களில் எழுதிப் பார்த்துமிருக்கிறேன். நூலின் தடிமன் கண்டு அஞ்சி அத்திட்டங்களை அத்தோடு நிறுத்தியுமிருக்கிறேன். அதைப் போல எளிய பல வாக்கியங்களுக்கு வாசகர்களுக்கு புரியாது என்ற நோக்கில் நீண்ட குழப்பமான வாக்கியங்களை உருவாக்கி இருப்பதையும் கண்டிருக்கிறேன்.

நான் பல சிறு கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட அனுபவம் என்னவென்றால், மொழிபெயர்ப்பு என்பதே ஒரு நிலையில் அபத்தமான ஒரு செயலோ என்று எண்ணம் தோன்றியிருக்கிறது. உ.ம். ரிச்சர்ட் ஸ்டால்மென்னின் (பார்க்க: மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கைத்தொலைபேசி பயன்படுத்தாதீர்) ஒரு பிரசித்தமான விளக்கம் “Thus, “free software” is a matter of liberty, not price. To understand the concept, you should think of “free” as in “free speech,” not as in “free beer”. “

இதனை தமிழில் அப்படியே மொழிபெயர்க்க நினைத்தால் வாசகனுக்கு குழப்பம் ஏற்படாது? ஆங்கிலத்தில் “free” என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு “இலவசம்” மற்றும் “சுதந்திரம்”. ஆனால் தமிழில் இரண்டும் வேறு வேறு சொற்கள். தமிழில் இவ்விடத்தில் அர்த்தக் குழப்பம் ஏற்படும் வகையில் ஒரே சொல் இல்லை. தமிழில் இதனை “சுதந்திரம் என்பதை ‘பேச்சு சுதந்திரத்தில்’ வரும் அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள் ‘இலவச பீரில்’ வரும் அர்த்தத்தில் அல்ல” என்றோ “‘சுதந்திர பீரில்’ வரும் அர்த்த்தில் அல்ல”  என்றோ மொழிபெயர்த்தால் வாசகனுக்கு தெளிவான தனித்தனி சொற்கள் இருக்கும் இடத்தில் இவன் ஏன் போட்டுக் குழப்புகிறான் என்று நினைக்கத் தோன்றாது? இதன் மூலமாக ரிச்சர்ட் ஸ்டால்மென் ஒரு இலக்கியச்சுவையோடு வாதிடும் ஒரு இடம், தமிழில் எந்தச் சுவையும் அற்றுப் போகிறது. மொழிகளின் தனித்தன்மையும் சிறப்புத் தன்மையையும் புரிந்து மொழிபெயர்க்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் எந்த இனத்தின் மொழியில் மொழிபெயர்க்கிறோமோ அந்த இனத்தின் வரலாறு கலாச்சாரம் வளர்ச்சி நிலை ஆகியவற்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே ஆத்மார்த்தமான ஈடுபாடு வேண்டும்.

இன்னும் இதுகுறித்து அனுபவங்களையும் சிந்தனைகளையும் எதிர்பார்ப்புகளையும் பேசிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்வதே போதுமென்று தோன்றுகிறது.

Posted in கட்டு​ரை | 2 Comments »