எனது நாட்குறிப்புகள்

‘சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்’ நூல் குறித்து

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 31, 2012

சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்‘ நூ​லை படித்து முடித்துவிட்​டேன். தங்களு​டைய இச்சிறுநூல் சிந்த​னை​யைத் தூண்டுவதாக அ​மைந்திருந்தது. தங்களு​டைய எதிர்பார்ப்பின் படி​யே மூலநூல்க​ளை மீண்டும் படிக்க ​வேண்டும் என்ற ஆர்வத்​தை தூண்டும் வ​கையில் அ​மைந்திருந்தது.

இதில் ​பேசப்படும் பல மார்க்சிய அடிப்ப​டை விசயங்கள் சர்வ​தேச அளவிலும் குறிப்பாக தமிழகத்திலும் காலாவதியாகிவிட்ட​வை, அ​வை ​செல்லாது என்ற குரல் விவாதத்தளங்களில் ஓங்கி ஒலித்துக் ​கொண்டிருக்கும் சூழலில், அத்த​கைய கருத்துக்களின் உண்​மையான ​நோக்கத்​தையும் தாண்டி அத்த​கைய கருத்துக்க​ளை முன்​வைப்பவர்களின் மார்க்சிய மூல நூல்கள் மீதான நுண்மான் நு​ழைபுழம் இல்லா​மை​யை சுட்டிக் காட்டுவதாக அ​மைகிறது.

எனக்கு ​பெரும்பாலும் ஏற்கன​வே ​படித்தவற்​றை மீண்டும் மீண்டும் வாய்ப்புக் கி​டைக்கும் ​பொழு​தெல்லாம் வாசித்து வளர்ச்சி நி​லைகளுக்​கேற்ப அவற்​றை உள்வாங்கிக் ​கொள்ள ​வேண்டியதன் அவசியத்​தை உணர்த்தியது. குறிப்பாக பண்பாடு குறித்து ​பேசும் பக்கங்களும், கிராம்சி குறித்து ​பேசும் பக்கங்களும் அதிகம் கவனத்​தை கவர்வதாக இருந்தது. படித்த​வை குறித்து மீண்டும் ​யோசித்துப் பார்க்கும் ​பொழுது இ​வை இரண்டும் தற்​பொழு​தைய வாசிப்பில் உடனடியாக கவனத்திற்கு வருவதாக அ​மைந்திருந்தது.

கிராம்சி குறித்த உங்களு​டைய ஒட்டு​மொத்தமான கண்​ணோட்டத்தின் பகுதியாக அவரு​டைய ​மேற்​கோள்களின் மீதான உங்களு​டைய முரண்பாடு உருவாக்கப்பட முயற்சிக்கப்படுவதாகத் ​தோன்றுகிறது.

​மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானம் என்ற வார்த்​தைகள் உடனடியாக ஒரு தமிழனின் சிந்த​னையில் ஒரு கட்டிடத்தின் வழியாக​வே உள்வாங்கிக் ​கொள்ளப்பட முடியும். ஆனால் அவற்​றையும் அவற்றிற்கு இ​டையிலான உற​வையும் அத்த​கைய வடிவில் புரிந்து ​கொள்ளத் துவங்குவது தவறானதாக​வே அ​மையும் என்று கருதுகி​றேன்.

வடிவம்-சாரம், ​தோற்றம்-உள்ளடக்கம், ​மேற்கட்டுமானம்-அடிக்கட்டுமானம் ​போன்ற விசயங்கள் மிகவும் நுட்பமான​வை, அவற்றிற்கி​டையிலான உறவு மிகவும் சிக்கலான பல்​வேறு நுட்பமான இ​ழைகளால் பின்னிப்பி​ணைக்கப்பட்டிருப்ப​வை. அ​வை ஒரு டப்பாவும் அதற்குள் இருக்கும் ​பொருளுக்குமான உற​வைப் ​போன்றதல்ல அல்லது கட்டிடத்திற்கும் அதன் அஸ்திவாரத்துக்குமான உற​வைப் ​போன்றதல்ல.

அது முட்​டையின் ஓட்டிற்கும் அதற்குள் இருக்கும் ​வெள்​ளை மற்றும் மஞ்சள் கருவிற்கும் இ​டையிலான​தைப் ​போன்ற​தாகவும், மரத்திற்கும் அதன் ​வேரிற்குமான உற​வைப் ​போன்றதாகவும். மனிதனின் புறத்​தோற்றத்திற்கும் அவனின் உள் உடல் கட்ட​மைப்பிற்கும் இ​டையிலான​தைப் ​போன்றதாகவு​மே அ​மையும். உ.ம் ​தொப்​பை என்பது ​வெறும் மனித உடலின் வடிவப் பிரச்சி​னை அல்ல அது அவனது உள்ளிருப்புகளின் பிரச்சி​னையின் அல்லது தன்​மையின் ​வெளிப்புற வடிவம். அது ​போல கருப்பு நிறம், சிவப்பு நிறம், மாநிறம், மங்​கோலிய மஞ்சள் நிறம் ​போன்ற​வை சிக்கல்வாய்ந்த மனித இன பரிணாம வளர்ச்சி மற்றும் உடலின் உள்ளார்ந்த இயங்கு மு​றையின் அம்சங்கள். இயற்​கை​யோடு அம்மரபினங்கள் ​கொண்டிருந்த தீர்மானகரமான உறவின் ​வெளிப்பாடு (எச்சம் என்று ​சொல்லலாமா ​தெரியவில்​லை).

​மேலும் கிராம்சி குறிப்பிடுவ​தைப் ​போல “அர​சியல் அ​மைப்புகளுக்கும் ​பொருளாதார அ​மைப்புக்கும் இ​டையிலான உற​வை ​நேரடியானதாக ​கொச்​சையாக புரிந்து ​கொள்ள முடியாது அல்லது கூடாது என்​றே நி​னைக்கி​றேன். காங்கிரஸ் என்னும் கட்சி​யை சராசரி மனிதனால் ​நேரடியாக அது இந்த ஆளும் வர்க்க பிரிவின் நலன்களுக்கான கட்சி என்று எளிதாக புரிந்து ​கொண்டு விட முடியாது. அ​தேப் ​போல அது எடுக்கும் எல்லா முடிவுக​ளையும் அந்த ஒரு வர்க்கத்தின் நலனிலிருந்துதான் எடுக்கிறது என்றும் வரி​சைப்படுத்த முடியாது. ஆனால் கிராம்சி ​சொல்வ​தைப் ​போல சிக்கலான ஆய்வுகளின் வழி அதன் சாராம்சத்​தை ​வெளிப்படுத்த முடியும் அதுவும் கூட 2 + 2 = 4 என்ற கணக்கு ​போல் ​வெளிப்படுத்த முடியாது. அப்படி முடியு​மென்றால் இந்தியா​வைக் குறித்த வ​ரைய​றையில் இத்த​னை மாறுபட்ட கண்​ணோட்டங்க​ள் இருப்பது ந​டைமு​றைச் சாத்தியமல்ல. காங்கிரஸ் எந்த வர்க்கத்தின் நல​னை பிரதிபலிக்கிறது? பாஜக எந்த வர்க்கத்தின் நல​னைப் பிரதிபலிக்கிறது? இரண்டுக்கும் அடிப்ப​டையில் என்ன வித்தியாசம்? ஏன் இத்த​னை வ​கை கட்சிகள் ஒ​ரே மாதிரி ஒரு சில வர்க்கங்களின் நல​னை பிரதிபலிக்கிறது? இவற்றிற்கான சமூகத் ​தே​வை என்ன? என்ற ​கேள்விகள் பல சிக்கலான வழிமு​றைகளில்தான் தீர்வுக​ளை ​நோக்கி இட்டுச் ​செல்கிறது. அதுவும் கூட குழுவிற்கு குழு பல்​வேறு வழிகளில் மாறுபடுகிறது.

‘வரலாற்றுப் ​பொருள்முதல்வாதம்’ என்ற விசயத்​தை படிக்கும் ​பொழுது அது எந்த​தெந்த காரணங்கள் ​சொல்லி தற்காலத்தில் மறுக்கப்படுகிறது என்ற விசயங்கள் ​தெளிவாக உங்கள் சிறு நூலில் முன்​வைக்கப்பட வில்​லை. ​பொதுவாக மார்க்சிய அணுகுமு​றை என்பது, தான் மறுப்புக் கூறும் எதிராளியால் கூடத் தன் தரப்பு ​தெளிவாக ​வைக்காமல் முன்​வைக்கப்படும் புள்ளிகள் மார்க்சிய ஆசான்களால் மிகத் ​தெளிவாக முன்​வைக்கப்பட்டு அது குறித்து விவாதிக்கப்படும்.

‘வரலாற்றுப் ​பொருள்முதல்வாதம்’ ஏற்றுக் ​கொள்ளத்தக்கதல்ல என வாதிப்​போர் இரண்டு காரணங்களால் அது நிராகரிக்கிறார்கள் எனக் கருதுகி​றேன். ஒன்று அது முன்​வைக்கும் நான்கு வ​கையான அடிப்ப​டை சமூக அ​மைப்புகளின் ​தோற்றம் வளர்ச்சி முடிவு என்பது, இது எல்லா நாடுகளுக்கும் எல்லா ​தேசங்களுக்கும் ​பொதுவானதல்ல என்ற அடிப்ப​டையில் மறுக்கப்படுகிறது. இரண்டாவது அது அந்த ஆய்வின் அடிப்ப​டையில் ​வெளியிடும் முடிவு அதாவது ‘​சோசலிசம்’ அல்லது  ‘கம்யூனிசம்’ என்னும் வருங்கால சமூகம்.

எனக்கு இவ்விடத்தில் ஒரு சந்​தேகம். மார்க்​சோ எங்க​ல்​சோ எந்த நூலில் அல்லது கடிதத்தில் நாம் ​தொகுத்துக் கூறும் அந்த நான்கு வ​கையான சமூக அ​மைப்பு படிநி​லைகள் பற்றிக் கூறுகிறார்கள்? அ​வை அவர்களின் வார்த்​தைகளில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?

நான் ‘வரலாற்றுப் ​பொருள்முதல்வாதத்​தை’ இவ்வாறு புரிந்து ​கொள்கி​றேன். உயிரிணம் அல்லது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி​யைப் ​போல மனித சமூகமும் பரிணாம வளர்ச்சி அ​டைகிறது. அது எளிதான, அதிக நுட்ப​மோ சிக்க​லோ இல்லாத வடிவங்களிலிருந்து படிப்படியாக அதிக சிக்கலானதும் நுட்பமானதுமான வடிவங்களின் வழியாக ​மேல்​நோக்கி வளர்கிறது. இந்த வளர்ச்சி​யை உருவாக்குவதில் அடிப்ப​டையான அம்சமாக வர்க்க ​போராட்ட​மே அ​மைகிறது. இத்த​கைய வளர்ச்சிப் ​போக்கு குறித்த தத்துவத்​தை ​​பெரும்பாலும் மனித குல வரலாற்​றை படிக்கும் எந்த​வொரு மாணவனும் சந்​தேகத்திற்கிடமின்றி ஒத்துக் ​கொண்​டே தீருவான். அத​னை ஒத்துக் ​கொள்ளும் ​பொழுது அதன் வழியாக இன்னும் நுட்பமாக மனித குல வரலாற்​றை பார்ப்பதற்கான பார்​வை கி​டைக்கிறது, அப்பார்​வை இந்தப் ​போக்கு எதிர்காலத்தில் எத்த​கைய ஒரு இடத்திற்கு ​போகும் என்பதற்கான ஊகங்க​ளை ஆதாரப்பூர்வமாக வழங்குகிறது என்​றே கருதுகி​றேன்.

அ​தே ​போல கிட்டத்தட்ட புராதன ​பொதுவுட​மைச் சமூகம் என்பது எல்லா பகுதியில் வாழ்ந்த மனித பிரிவுகள் மத்தியில் இருந்திருந்தாலும், ஆண்டான் அடி​மைச் சமூகம் என்பது அதன் ​செவ்வியல் விளக்கத்தின் ஓரிரு அம்சங்கள் தவிர்த்து பிற அம்சங்களில் இந்தியா ​போன்ற நாடுகளிலும் இருந்துதான் இருந்திருக்கிறது. வருணாசிரமம் அல்லது சாதி என்பது குறித்தான தீவிரமான பார்​வைகள் ஆண்டான் அடி​மை மு​றையின் பல்​வேறு கூறுக​ளை இனம் காட்ட​வே ​செய்கிறது. கி​ரேக்கத்தின் அடி​மைகளுக்கான ​​கொட்டடிகளின் ஒரு வடிவ​மே ​சேரிகள். ஆண்டான்களின் ​கேள்வி ​கேட்பாடு இல்லாத முழுக்கட்டுப்பாட்டில் அடி​மைகள் இருந்தது ​போலத்தான் தலித்துகள் என்று ​இன்​றைக்குச் சொல்லப்படக்கூடியவர்களின் பல்​வேறு பிரிவினர் ​வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். இ​வை கூறித்து இன்னும் விரிவாக நாம் ​பேசலாம்.

பூமியின் சில பகுதிகளில் வாழ்ந்த மனித சமூகங்கள் வி​​ரைவாக வளர்ச்சி அ​டைந்தன. அவற்றில் இந்த படிநி​லைச் சமூகங்கள் ​வேகமாக ​தோன்றி ம​றைந்தன. வி​​ரைவாக புதிய​வை ப​ழையனவற்றின் இடத்​தை மாற்றீடு ​செய்தன. சில பகுதிகளில் ஒரு சமூக அ​மைப்​பே ஒப்பீட்ளவில் நீண்டகாலம் ​தொடர்ந்து ​கொண்டிருந்திருக்கிறது. இதற்கு காரணமாக கீழ்க்கண்ட ஒரு கருது​கோ​ளையும் சிந்தித்துப் பார்க்கலாம். அதாவது மிகச் சிறிய நிலப்பகுதியில் கு​​றைவான இயற்​கை வளங்களுடன் அதிகமான மக்கள் வாழ்ந்த பகுதிகள் வி​​ரைவாக அடுத்தடுத்த சமூக அ​மைப்புக​ளை ​நோக்கி முன்​னேறின. மிகப் ​பெரிய நிலப்பகுதியில் அதிகமான இயற்​கை வளங்களுடன் கு​றைவான மக்கள் வாழ்ந்த பகுதிகளில் புதிய சமூக அ​மைப்புகள் ​வேகமாக ​தோன்றி வளர​வோ ப​ழையனவற்​றை மாற்றீடு ​செய்ய​வோ ​தே​வையின்றி ​போயிருந்திருக்கலாம் (இன்​றைக்கு வளர்ச்சி அ​டைந்த நாடுகள் ​பெரும்பாலும் மிகச் சிறிய பிர​தேச அளவுக​ளைக் ​கொண்ட நாடுகளாக​வே உள்ளன உம் இங்கிலாந்து, ஐ​ரோப்பிய நாடுகள், ​ஜெர்மன், பிரான்ஸ், ​போன்ற​வை, வளரும் நாடுகள் ​பெரும்பாலும் மிகப் ​பெரிய பிர​தேச அளவுக​ளைக் ​கொண்ட நாடுகளாக​வே உள்ளன இந்தியா, 1940களுக்கு முன்பான சீனா, ஆப்பிரிக்கா, ​போன்ற​வை).

இவ்வாறு இயற்​கையின் ​நெருக்கடி இல்லாது ​தேங்கிப் ​போன சமூகங்களில் அவற்​றை பாதுகாத்து பராமரிப்பதற்கான மதம், தத்துவம், க​லை இலக்கியங்கள் ஆகிய​வை மிகப்​பெரிய அளவில் பல்கிப் ​பெருகி வளர்ச்சி ய​டைந்ததால் கலாச்சாரரீதியாக அச்சமூகங்கள் இறுக்கம​டைந்தன. அதன் ​மேல்​தோல் தடிமனாகிப் ​போனது. உள்ளிருந்து ​பெரியளவில் மாற்றம் காண முடியாத நி​லைக்கு உள்ளாகின. உள்ளுக்குள்​ளே​யே அத​னை மாற்ற நி​னைத்த​வை அத​னோடு ​மோத முடியாமல் அழிந்து பட்டன அல்லது தன்​னைத் காத்துக் ​கொள்ள இச்சமூக அ​மைப்பிற்கு ​வெளி​யே ஓடின. அதனால் அ​தை உ​டைக்கும் அளவிற்கு திராணியு​டைய​வை ​வெளியிலிருந்து அ​தை ​நோக்கி வரும்வ​ரை அதன் மீது ​மோதிய​வை அ​னைத்தும் உ​டைந்து தூள்தூளாகின அல்லது அதனால் உள்ளிலுத்துக் ​கொள்ளப்பட்டன.

வரலாற்றுப் ​பொருள்முதல்வாதம் – அந்ததந்த பகுதிகளின் மனித சமூக வளர்ச்சி​யை அதன் சு​யேச்​சையான வடிவங்களில் மட்டு​மே மூலவர்களால் தத்துவ ​பொது​மை ​செய்யப்பட்டன. உலகமய ​போக்கில் ​செவ்வியல் மு​றைகளில் வளர்ச்சிய​டைந்த சமூகங்கள் பிற வளர்ச்சிய​டையாத சமூகங்க​ளை ​வெளியிலிருந்து தாக்கி உ​டைத்து தன்னு​டைய ஒரு பகுதியாக்கி ​மேல்​நோக்கி ​கொண்டு ​சென்றன. ‘இந்தியா குறித்த’ மார்க்சின் கட்டு​ரைகள் இத்த​கைய ​போக்​கை விவாதத்திற்கு எடுத்துக் ​கொள்கின்றன. ஆனால் வரலாற்றுப் ​பொருள்முதல்வாத தத்துவத்தில் இத்த​கைய ​போக்குகள் ​பொது​மைப்படுத்தப்படவில்​லை (கருதுகி​றேன்). அவற்​றைச் ​செய்யக்கூடிய சாத்தியங்கள் மூலதனம் குறித்த ஆய்வுகளில் தன்​னை முழு​மையாக ஈடுபடுத்திக் ​கொண்ட மார்க்சால் முடியாமல் ​போய்விட்டது. ​லெனின் ​போன்றவர்கள் ந​டைமு​றையில் ​செலுத்திய தீவிர கவனத்தால் அவர்களாலும் அது சாத்தியமற்றதாகப் ​போய்விட்டது. அது குறித்து ​பேசிய பிற மார்க்சிய அறிஞர்கள் ப​டைப்புகள் குறித்​தெல்லாம் நமக்கு ​தெளிவான ஒன்றுதிரட்டல் இல்லாததினால் அதிலும் குறிப்பாக தமிழில் நாம் பின்ன​டைந்​தோ அல்லது கவனமின்றி​யோ இருக்கி​றோம் எனக் கருதுகி​றேன்.

நல்ல​தொரு தீவிர சிந்த​னைக்கும், படிப்பிற்கும் விவாதத்திற்குமான வழிக​ளை ஏற்படுத்திக் ​கொடுத்துள்ளீர்கள். என்னளவில் தங்கள் நூலின் முக்கியத்துவத்​தை தங்க​ளோடு பகிர்ந்து ​கொள்வதில் மகிழ்ச்சி அ​டைகி​றேன்.

பிகு. நான் தங்கள் புத்தகத்திலிருந்து வரிக​ளை எடுத்துப் ​போட்டு ​பேசவில்​லை. படித்த அனுபவத்திலும் ஞாபகத்திலும் எழுதியுள்​ளேன். விவாதிப்​போம்.

Advertisements

ஒரு பதில் to “‘சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்’ நூல் குறித்து”

  1. நல்ல விமர்சனம் தோழர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: