எனது நாட்குறிப்புகள்

“கைதிகள்” – ஜெயமோகன்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 4, 2013

முன்பு ஜெயமோகனின் சிறுகதைகளை அவருடைய பக்கத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சில சிறுகதைகளைப் பற்றி விமர்சனமும் என்னுடைய வலைப்பூவில் எழுதினேன். அவருடைய எழுத்தாற்றலைவிட விஞ்சியிருக்கும் அவருடைய அரசியல் மற்றும் கருத்தியல் அபிலாஷைகள் என்னை மிகவும் சோர்வடைய வைத்தன. அவற்றை பற்றி எழுதுவதால் பெரிய பயனொன்றும் விளையப்போவதில்லை என படிப்பதை விட்டுவிட்டேன். தற்பொழுது கைதிகள் சிறுகதையை தோழர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க படித்தேன்.

தோழர் கதையை பரிந்துரைக்கும் பொழுதே, “எல். அப்பு படுகொலை பற்றி கைதிகள் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார், படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்” என கூறிவிட்டதால், நக்சல்பாரிகள், மாவோயிஸ்ட்கள் போன்றவர்கள் மீது கண்மூடித்தனமான கசப்பு நிறைந்த எதிர்நிலை கொண்டவரின் எழுத்தை வாசிக்கிறோம் என்ற அதீத கவனத்துடன் வாசித்தேன்.

கதை கொலையாளிகளின் பார்வையிலிருந்து ஒரு போலி தாக்குதல் படுகொலை நிகழ்வு விவரிக்கப்படுகிறது. நேரடியாகவே இது வரலாற்று நிகழ்வு ஒன்றைப் பற்றி பேசுவதால், சில உண்மைத் தகவல்களை பயன்படுத்தியுள்ளார். அப்பு கொலையை அரசோ காவல்துறையோ அது ஒரு திட்டமிட்ட போலி படுகொலைதான் என பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதா தெரியவில்லை. இது ஒரு புனைவுதானே என்கிற சாதகத்தை எழுத்தாளர் தனக்கான பாதுகாப்பாக புணைந்து கொள்கிறார் போலும்.

அப்பு கொலை விவகாரத்தில் சிறுகதை வெளிப்படுத்தும் வரலாற்றுத் தகவல்கள்
1. நகை திருட்டு வழக்கொன்றின் அடிப்படையில் அப்புவை காவல்துறை தேடிவந்தது.
2. அப்பு வேலை செய்த பகுதி மக்களை சித்திரவதை செய்ததன் மூலமாக அப்புவை சரணடைய வைத்தது.
3. வேறெங்கோ காவல்நிலையத்தில் சரணடைந்தவரை தர்மபுரி காட்டிற்குள் வைத்து காவல்துறை சுட்டுக் கொன்று உடலை புதைத்தது.
4. அப்புவின் உருவம் இளம் கல்லூரி மாணவனின் உருவத்தைப் போலிருந்தது. அரும்பு மீசையும், ஒல்லியான கருத்த தேகமுமாக இருந்தார்.

இது போன்ற வரலாற்றுத் தகவல்கள் துல்லியமானவையா அல்லது கதைக்காக சற்று மாற்றம் செய்யப்பட்டதா தெரியவில்லை. நான் கேள்விப்பட்ட வரை எல். அப்பு சிபிஎம்மிலிருந்து சிபிஐ எம்எல்லிற்கு வந்தவர். சிமிஎம்மில் இருக்கும் பொழுது கோவை ஈஸ்வரன் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து தீக்கதிர் பத்திரிகையை துவங்கியவர்களுள் ஒருவர். சிபிஐ-எம்எல்லின் தமிழ் மாநில செயலாளர். கோவையில் லாரி ஓட்டுனராக இருந்தவர். அவருக்கு துனைவியார் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். ஆனால் சிறுகதையில் அவர் கல்லூரி மாணவனின் உருவத்தோடு, அரும்பு மீசை உள்ளவராக சித்தரிக்கப்படுகிறார். ஒரு வேளை புனைவாக்கும் முயற்சியாக இருக்கலாம். கதை உண்மையைப் போல இருக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும், “அப்பு” என்ற பெயர் பயன்படுத்தல் இதையெல்லாம் யோசிக்கவே தூண்டுகிறது.

தருமபுரி காட்டையும், அதன் தன்மையையும் தனக்கேயுரிய பாணியில் வருணிக்கிறார். 80களின் காலகட்டத்தை கதைக்குத் தருவதற்காக அன்றைய புழக்கத்தில் இருந்த பொருட்களை குறிப்பிடுகிறார். இவற்றின் மூலமாகவெல்லாம் ஒரு படைப்பிற்குரிய தன்மையை ஒரு வரலாற்றுச் சம்பவத்தை, கருத்தியலை முன்வைக்கும் முயற்சிக்கு வழங்குகிறார்.

நடுக்காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தை வேவுபார்ப்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு சிறு காவல்துறை குழு ஒன்றின் பார்வையிலிருந்து கதை ஒட்டுமொத்த காவல்துறை, அரசு, சமூகம் மற்றும் போராளிகளைப் பற்றி பேசுகிறது.

கதை அடிப்படையில் காவலர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் வாழ்க்கை உண்டு, நட்பு உண்டு, பாசம் உண்டு, ஈவு இரக்கம் உண்டு, நன்மை தீமை பற்றிய தேடல் உண்டு, சரி தவறுகள் குறித்த விசாரனைகள் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது.

மேலிருந்து வரும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கைக்காக அவர்கள் வேலைசெய்கிறார்கள் என்பதை நிருவுவதன் வாயிலாக மேலேயுள்ளவர்கள் என்ற ஒன்றை அருவமானதாக ஆக்கி, நிகழ்விடத்தின் அராஜகங்களில் அவர்களுக்கு உரிய பங்கை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிடுகிறது.

போராளிகளின் போராட்டத்திற்கான எல்லா நியாயங்களையும் கதை தன்னளவில் ஏற்றுக் கொண்டாலும், கதை கூர்மையான விவாதம் ஒன்றை முன்னெடுக்கிறது. அது ஒரு மனிதனின் உண்மையான வெற்றி எது? என்கிற கேள்வியை மையமாக வைத்து வாசகனின் சிந்தனையை திருப்புகிறது. இதன் வழியாக ஒட்டுமொத்த போராட்ட முறையையும் வேறு ஒரு வழியில் நிராகரித்தும் விடுகிறது.

அரசின் வர்க்க குணாம்சத்தை தீர்மானிப்பது அதில் உள்ள மனிதர்களின் மனசாட்சியோ, குணநலன்களோ, அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதோ அல்ல என்கிற அடிப்படையான விசயங்களையெல்லாம் கதை தான் போகிற போக்கில் மறுத்தொதுக்குகிறது.

அக்குழுவில் உள்ள ஒரே ஒரு காவலன் மட்டும் போராளிகள் மீது தீவிரமான வன்மம் கொண்டவனாக இருக்கிறான். அதாவது அவன் தன்னையே அரசின் ஒரு பகுதியாகக் காண்பவனாக இருக்கிறான். மற்றவர்கள் நடைமுறையில் அரசின் அங்கமாக இருந்த பொழுதிலும் அவர்களுடைய மனசாட்சி சரி தவறுகளை பிரித்தாராய எப்பொழுதும் முனைந்து கொண்டேயிருக்கிறது. முதலாமவனுக்கு எந்த கேள்விகளும் சந்தேகங்களும் இல்லை. ஆனால் நடைமுறையில், சாராம்சத்தில் அவர்களுக்குள் எந்த மாறுபாடும் இல்லை. இதை கதை தெளிவாகவே கூறிவிடுகிறது.

இருந்தும் கொலை செய்வதற்கு முன்பு அப்பு பெருமாளிடம் கேட்கும் ஒரு கேள்வி அவன் மன நிலையையின் சமநிலையை குலைத்துவிடுகிறது. அதாவது பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சால் மட்டுமே எதிரியின் மனங்களை மாற்ற முடியும். ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது எதிரியின் மனதை மாற்றுவதே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: