எனது நாட்குறிப்புகள்

Archive for மே, 2015

எது முதல் பொருளா, கருத்தா?

Posted by ம​கேஷ் மேல் மே 9, 2015

marcoesநவீன விஞ்ஞானம் சில இடங்களில் பொருள்முதல்வாத தத்துவத்தை மறுப்பதாக சிலர் கருதுகிறார்கள். அது தத்துவத்தை நாம் புரிந்து கொள்வதில் உள்ள தவறோ அல்லது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளை நாம் உள்வாங்கிக் கொள்வதில் உள்ள தவறாகவோ தான் என் வாசிப்புகள் எனக்கு அடையாளம் காட்டுகின்றன.

அந்த வகையில் “துணைத் தளபதி மார்கோஸ்” அவர்களின் பதிவு ஒன்றில் மே 4, 2015 (https://www.facebook.com/permalink.php?story_fbid=1385190938476895&id=100009580054564&comment_id=1385319171797405&notif_t=like, https://www.facebook.com/permalink.php?story_fbid=1385324815130174&id=100009580054564&comment_id=1385431358452853&notif_t=like)“பொருள் முதல் வாதமும் அடி வாங்குகிறது. பொருள் முதலில் அது குறித்த கருத்து இரண்டாவது என்பது அதன் அடிப்படை. ஆனால் இங்கு கற்பனை அல்லது கருத்து முதலாவதாகவும் பொருள் அல்லது பொருள் போன்ற ஏதோ ஒன்று இரண்டாவதாகவும் வருகிறது. [அதற்காக பொருள் முதல் வாதம் தவறென்று சொல்லக் கூடாது. இங்கு model dependent என்ற கருத்தாக்கம் உள்ளே நுழையும்.“ எனக்குறிப்பிட்டார். மேல்கண்ட பத்தியில் உள்ள தத்துவார்த்த குறைபாட்டை சுட்டவே நான் அவரோடு சிறு உரையாடலை நிகழ்த்தினேன். நண்பர்கள் பலர் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுடைய வசதிக்காக இங்கே முழு பதிவையும் உரையாடல் முறையில் தொகுத்துள்ளேன். தொடர்ச்சியான உரையாடல்களுக்கும் புரிதல்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

துணைத் தளபதி மார்கோஸ்:-
=======================
அறிவியல் புதுமைகள்…

மதம் மனிதனின் மரியாதைக்கு அவமானம். மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்லவர்கள் நல்லது செய்வார்கள், கெட்டவர்கள் கெட்டது செய்வார்கள். ஆனால் நல்லவர்களையும் கெட்டது செய்ய வைப்பது மதமே.

—Steven Weinberg, Nobel Prize winning physicist

“Religion is an insult to human dignity. With or without it you would have good people doing good things and evil people doing evil things. But for good people to do evil things, that takes religion.”

—Steven Weinberg, Nobel Prize winning physicist

Steven Weinberg குறித்து…….

குவாண்டம் தியரியில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டியது இவருடைய புத்தகங்களே. அதில் ஆழமான அறிவுடைய அறிஞர். அணுத் துகள்கள் பற்றியும் குவாண்டம் தியரி பற்றியும் அவர் விளக்கும் பாங்கு அலாதியானது. குவாண்டம் தியரியில் கரை கண்டவர். துகள் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர். யாராவது குவாண்டம் தியரி தனக்குப் புரிந்தது என்று சொன்னால் கோபித்துக் கொள்வார். எனக்கே புரியவில்லை உனக்கெப்படிப் புரிந்தது என்று கேட்பார்.

நாம் கற்பனையில் சற்றும் காண முடியாத கருதுகோள்கள் உடையது குவாண்டம் தியரி. அனைத்தும் கணித ரீதியான முடிவுகள். கணித ரீதியாக சிந்திப்பதால் மட்டுமே நெருங்க முடியும்.

இதை ஒரு சிறிய உதாரணம் கொண்டு விளக்கலாம். ஒரு உலகம். அங்கு சில உயிரினங்கள். அவற்றிற்கு உருவங்கள் முப்பரிமாணமாக தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களும் இரண்டு பரிமாணங்களில் மட்டுமே தெரியும். அதாவது நிழல் போல தட்டையாக மட்டுமே தெரியும். ஒரு பந்து முப்பரிமாண வடிவம். ஆனால் அதன் நிழல் இரு பரிமாண வடிவம். அந்த உலகில் உள்ளவர்கள் இரு பரிமாணத்தில் தெரியும் பந்தின் நிழலை வைத்து என்றுமே தங்கள் வாழ்வில் கற்பனை கூட செய்திராத முப்பரிமாண பந்தை கற்பனை செய்ய வேண்டும். பல லட்சம் வருடங்களாக பொருள்களை தட்டையாகவே பார்த்துப் பழகியவர்களால் உருண்டை பந்தை எப்படி கற்பனை செய்ய முடியும். அவர்களுக்கு துணையாக கணிதம். இப்படியொரு சிக்கலைத்தான் குவாண்டம் தியரி சந்திக்கிறது. இந்த உதாரணம் ரிச்சார்ட் டாகின்ஸ் சொன்னது.

இதில் பொருள் முதல் வாதமும் அடி வாங்குகிறது. பொருள் முதலில் அது குறித்த கருத்து இரண்டாவது என்பது அதன் அடிப்படை. ஆனால் இங்கு கற்பனை அல்லது கருத்து முதலாவதாகவும் பொருள் அல்லது பொருள் போன்ற ஏதோ ஒன்று இரண்டாவதாகவும் வருகிறது. [அதற்காக பொருள் முதல் வாதம் தவறென்று சொல்லக் கூடாது. இங்கு model dependent என்ற கருத்தாக்கம் உள்ளே நுழையும். அது குறித்து பின்னர் விவரிக்கிறேன் ]

தினமணியில் குவாண்டம் தியரி குறித்து அரைகுறையாக எழுதப் பட்ட கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு பார்ப்பனிய மூளை பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் உள்ளே நுழைதிருந்தது.

Magesh Ramanathan :-
===================
உங்களோடு உரையாட வேண்டும். பொருள்முதல்வாதம் எங்கு அடி வாங்குகிறது புரியவில்லை

துணைத் தளபதி மார்கோஸ்:-
======================:-
Magesh Ramanathan அவர்களுக்கு model dependent குறித்து…

பொருள் முதல்வாதம் எங்கு அடி வாங்குகிறது என்று கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு பதிலாகவும் மற்றவர்கள் புரிந்து கொள்ளவும் இதை எழுதுகிறேன்.

பொருளின் இரட்டைத் தன்மை குறித்து குவாண்டம் தியரி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? ஒரு வீட்டிலிருந்து நீங்கள் வெளியேற முன் வாசல் உண்டு. பின் வாசல் உண்டு. ஏதோ ஒரு வாசல் வழி நீங்கள் வெளியேறலாம். அதற்க்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நீங்கள் இரண்டு வாசல் வழியாகவும் ஒரே நேரத்தில் வெளியேறுவதைப் பற்றி குவாண்டம் இயற்பியல் பேசுகிறது.

கருந்துளையின் விளிம்பாக கருதப்படும் event horizon இல் இருந்து நீங்கள் அதன் மையத்தை நோக்கி விழத் துவங்கும் போது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் எதிர் காலத்தையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

நீங்கள் உயிரோடு உள்ளீர்களா அல்லது இறந்து விட்டீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை என்றால் என்னைப் பொறுத்த வரை நீங்கள் ஒரே நேரத்தில் உயிரோடும் உள்ளீர்கள், இறந்தும் உள்ளீர்கள்.

இது போன்று நிறைய சொல்லலாம். வெளி [ space ] பற்றிய ஒரு கருத்து உங்களிடம் இருக்கும். அது நீங்கள் வெளியைப் பார்த்த பின்பு உருவான கருத்து. எனவே வெளி எனும் பொருள் முதலானது. அது குறித்த கருத்து இரண்டாவது. ஆனால் குவாண்டம் தியரியில் வெளியில் சுருண்டிருக்கும் பல வெளிகளைப் பற்றி ஸ்ட்ரிங் தியரி அடிப்படையில் விளக்குகிறார்கள். இங்கு இப்போது சுருண்ட வெளிகள் என்ற கற்பனை கூட செய்ய முடியாத கருத்து முதலில் தோன்றிவிட்டது. கணிதம் அதை சாத்தியமாக்கியது.

கருத்தானது ஒரு பொருளில் இருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஒரு பொருளில் இருந்து வந்த ஒரு கருத்திலிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் இதில் பேசப் படும் விஷயங்கள் எந்தப் பொருளில் இருந்தும் வந்ததல்ல. எந்தப் பொருள் குறித்த கருத்தில் இருந்தும் வந்ததல்ல.

ஆனால் இதெல்லாம் அணுத் துகள் உலகில் மட்டுமே பொருந்தும். நியூட்டோனியன் உலகில் இது பொருந்தாது. இங்கு தான் பார்ப்பனியம் உள்ளே நுழையும். அணுத் துகள் உலகில் உள்ள விதிகளை வெளி உலகிற்கு பொருத்தி , பார்த்தாயா இதெல்லாம் உபநிடதத்தில் ஏற்க்கனவே சொல்லப் பட்டது தான் என்று விளக்க முற்படும்.

அணுத் துகள்கள் உலகு என்பது ஒரு குறிப்பிட்ட மாதிரி [ model ]. புவி போன்ற பெரிய பொருள்கள் கொண்டது வேறொரு மாதிரி [ model ]. ஒரு மாதிரியில் இருக்கும் விதிகளை இன்னொரு மாதிரிக்கு பொருத்திப் பார்க்கக் கூடாது. இதைத்தான் நான் model dependent என்று சொன்னேன்.

நாம் இருக்கும் இந்த நியூட்டோனியன் உலகில் அதை பயன்படுத்தும் சமூகத்தில் பொருள் முதல் வாதம் என்ற விதி உண்மையாக உள்ளது. அதாவது இந்த மாடலுக்கு பொருள் முதல் வாதம் சரியாகவே உள்ளது.

அணுத் துகள் மாடலில் உள்ள ஒரு விதியை, அங்கு உண்மையாக இருக்கும் விதியை, இங்கு பொருத்திப் பார்க்கக் கூடாது.

இது முழு முதல் உண்மை இல்லை என்பதையும், உண்மை சார்புத் தன்மை உடையது என்பதையும் வலியுறுத்துகிறது. அரசியலில் உண்மையின் சார்புத் தன்மை குறித்து மார்க்சியம் ஏற்க்கனவே பேசியுள்ளது.

என்றும் மாறாத எல்லா மாடல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மாபெரும் சக்தியைப் பற்றி பேசுவது மதமே.

Magesh Ramanathan :-
===================

துணைத் தளபதி மார்கோஸ்ற்கு,

எனக்கு இயற்கை விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. என்னால் வாசித்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ள வெகுஜனங்களுக்காக எழுதப்படும் விஞ்ஞானக் கட்டுரைகளை படிப்பதில் ஆர்வம் உள்ளவன். கிடைக்ககூடியவற்றை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நீங்கள் குறிப்பிடும் விசயங்கள் ஓரளவிற்கு எனக்கு புரியக்கூடியவையாகவே இருக்கின்றன. ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை வந்த பிறகு நீயுட்டனின் புவியீர்ப்புக் கொள்கையின் இடம் தெளிவாக்கப்பட்டதே தவிர அது முற்றிலும் தவறு என்று கூறவில்லை. நீங்கள் குறிப்பிடும் “ஒரு மாதிரியில் இருக்கும் விதிகளை இன்னொரு மாதிரிக்கு பொருத்திப் பார்க்கக் கூடாது.” என்பனவற்றை புரிந்து கொள்வதில் எந்தத் தடையும் இல்லை.

அண்டவெளி குறித்தும் அணுத்துகள்கள் குறித்தும் ஏராளமான மாறுபட்ட தியரிக்கள் விஞ்ஞான உலகத்தில் உள்ளன என்பதும். விஞ்ஞானிகளுக்குள்ளேயே இவை குறித்த முரண்பட்ட கருத்துக்களும், வாதப்பிரதி வாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பனவற்றை எனது வாசிப்புகளின் வழி அறிகிறேன். தத்துவத்தை தத்துவத்தின் அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்வதில் இவை எத்தகைய புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதும் என் வாசிப்பின் ஒரு பகுதி தேடலாகவே இருந்து வருகிறது.

பொருள் என்றால் என்ன என்பது குறித்த லெனினின் ஒரு கருத்தே எனக்கு அடிப்படையாக இருக்கிறது. “மனித சிந்தனைக்கு வெளியே மனித சிந்தனையைச் சாராமல் சுயேச்சையாக இருக்கக்கூடிய அனைத்தும் பொருள்வகைத் தன்மையதே” என அவர் குறிப்பிடுவார். இந்தத் தத்துவார்த்த வரையறைகளை குவாண்டம் தியரியோ, கருந்துளை தியரியோ எங்ஙனம் மறுக்கிறது என எனக்குப் புரியவில்லை.

இயற்கை மனிதனுக்கு வெளியே சுயேச்சையாக இருக்கிறது. அதில் அவனுடைய நேரடிப் புலன்களால் அறியக்கூடியவை சில, கருவிகளின் துணையோடு அறியக் கூடியவை சில. இன்றைய மனித அறிவால் வளர்ச்சியால் அறிய முடியாதவை, அறியப்பட வேண்டியவை பல. அறிந்துள்ளவற்றிலும் முழுமையாக அறிய முடியாதவை பல. மனிதனின் புற உலகை அறியும் ஆற்றல் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது, புற உலகை அறிவதற்கான முறைகளும், கருவிகளும் நாளும் எங்கெல்ஸ் குறிப்பிடுவதைப் போல பெருக்கல் முறையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. கணிதம் மனித அறிதலின் சாத்தியங்களையும் துல்லியத்தையும் பல ஆயிரம் மடங்கு உயர்த்துகிறது.

நீங்கள் குறிப்பிடுவதைப் போல “நீங்கள் வெளியைப் பார்த்த பின்பு உருவான கருத்து. எனவே வெளி எனும் பொருள் முதலானது. அது குறித்த கருத்து இரண்டாவது. ஆனால் குவாண்டம் தியரியில் வெளியில் சுருண்டிருக்கும் பல வெளிகளைப் பற்றி ஸ்ட்ரிங் தியரி அடிப்படையில் விளக்குகிறார்கள். இங்கு இப்போது சுருண்ட வெளிகள் என்ற கற்பனை கூட செய்ய முடியாத கருத்து முதலில் தோன்றிவிட்டது. கணிதம் அதை சாத்தியமாக்கியது.” புலனுறுப்புகளால் நேரடியாக தெரிந்துகொள்ள முடிகிற பொருட்களும் உள்ளன. கருவிகளின் உதவியோடு மட்டுமே பார்க்க தெரிந்துகொள்ள முடிகிற பொருட்களும் உள்ளன. இதுவரை தெரிந்து கொண்டிராத பொருட்களை கணிதத்தின் உதவியோடு துல்லியமாக அனுமானிக்கவும் முடிகிறது.

ஆனால் “வெளியில் சுருண்டிருக்கும் பல வெளிகளைப்“ போன்ற இவை எதுவும் கருத்து முதலா அல்லது பொருள் முதலா என்கிற வினாவை மீண்டும் துவங்கி வைக்கவில்லை. மனிதன் அறிந்து கொள்ள முயற்சிப்பதற்கு முன்பிருந்தே மனித அறிவிற்கு அப்பாற்பட்டு இருந்து கொண்டிருக்கும் பொருட்களை பற்றிய பிரச்சினைதான் இவை. இந்தப் பிரச்சினை மனிதனின் அறிதல் பற்றிய பிரச்சினை சம்பந்தபட்டதாகவே இருக்கிறது. எது எப்படியாகினும் இந்தக் கருத்துக்கள் எதுவும் அந்தப் பொருளை தோற்றுவிக்கவில்லை. மாறாக இந்தக் கருத்துக்கள் அந்தப் பொருட்களை புரிந்து கொள்வதற்கான போராட்டமாகவே இருக்கிறது.

துணைத் தளபதி மார்கோஸ்:-
=======================
//இந்தக் கருத்துக்கள் எதுவும் அந்தப் பொருளை தோற்றுவிக்கவில்லை// குவாண்டம் உலகில் இது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. அலையாகவும், நிறையாகவும் இருக்கும் பொருளின் இரட்டைத் தன்மை இங்கு குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது. பொருளை நிறையாக கருதி நீங்கள் அளவிடும் போது அது தன்னை நிறையாக மட்டுமே வெளிப் படுத்துகிறது. பொருளை அலையாகக் கருதி அளவிடும் போது அது அலையாக மட்டுமே தன்னை வெளிப் படுத்துகிறது. நீங்கள் நினைப்பதற்கு ஏற்ப்பவே பொருள் வெளிப்படுகிறது. அலையாகக் கருதி அதன் திசை வேகத்தை அளவிடும் போது அதன் நிறையை நீங்கள் அளவிட முடியாது. அதை துகளாகக் கருதி அதன் நிறையை அளவிடும் போது அதன் திசை வேகத்தை அளவிட முடியாது. அலையாகவும், நிறையாகவும் இருக்கும் பொருளின் இந்த இரட்டைத் தன்மைகளுக்கு இடையிலான இடைவெளி அணு உலக அளவீடுகளில் வைத்துப் பார்க்கும் போது மிகப் பெரிது. அதாவது பொருளுக்கு இரட்டைத் தன்மை இருந்தாலும் அது ஒரே பொருள் தானே என்று சொல்லிவிட முடியாது. அந்த இரட்டைத் தன்மைகளுக்கான இடைவெளி பெரிது என்று சொன்னேன். நாம் பார்க்கும் செயலானது பொருளை மாற்றுகிறது என்பது இதன் அடிப்படை. அடிப்படையில் நமது மூளைக்கான திறன் என்பது நிதர்சனமாக உள்ள பொருள் குறித்த எண்ணங்களை மட்டுமே சாத்தியப்படும் எல்லையைக் கொண்டது. முன் கதவு வழியாகவும் பின் கதவு வழியாகவும் ஒரே நேரத்தில் ஒரு துகள் வெளியேற முடியும் என்பது நமது கற்பனைத் திறனுக்கு அப்பார்ப் பட்டது. அது கணித ரீதியான கற்பனைக்கு மட்டுமே சாத்தியமானது. நமது வாழ்விலும் புவியிலும் மிகச் சரியாக உள்ள பொருள் முதல் வாதத்தை அது எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. குவாண்டம் உலக அதிசயங்கள் குவாண்டம் உலகோடு நின்று விடும். வரலாறு குறித்தும் இங்கு குழப்பம் வரும். பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற கேள்வி. பெரு வெடியில் ஒற்றைத் தன்மையில் இருந்து வெடித்துக் கிளம்பியது என்று பாட புத்தகங்களில் எளிதாக சொல்லியிருப்பார்கள். அந்த பெரு வெடியில் பொருள் மட்டும் வெளி வரவில்லை. காலமும் வெளியும் கூட அதிலிருந்து தான் வெளி வந்தன. இப்போது உலகு தோன்றிய முதல் வினாடிக்கு காலக் கோட்டில் பின்நோக்கி பயணிக்கலாம். அப்படிப் பயணிக்கும் போது உலகு தோன்றியதற்கான பலவித வாய்ப்புகள், கருத்துக்கள் முன் வைக்கப் படும். அதில் ஏதோ ஒன்று சரியானதாக நம் பொது புத்தி ஏற்றுக் கொள்ளும். ஆனால் இங்கு அதிசயம், குவாண்டம் சொல்கிறது அனைத்துக் கருதுகோள்களின் அடிப்படையிலும் உலகு ஒரே நேரத்தில் தோன்றியது. சரியாகச் சொன்னால் உலகு தோன்றியதற்கான பல வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அது சொல்கிறது ” sum total of all possibilities ” . வரலாற்றை மீண்டும் கட்டமைக்கும் போதும் எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம் , அவை அனைத்தும் உண்மை என்பதே இதன் பொருள். அதாவது இன்று மனதில் எழும் கருத்துக்கள் முன்பு நிதர்சனமாய் நடந்த பொருளின் வரலாற்றை தீர்மானிக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொன்னால் வரலாறு என்பது அனைத்து கட்டுக் கதைகளின் மொத்தம் என்பதாகி விடும். நம்மால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் வரலாற்றை மறு கட்டமைப்பு செய்யலாம் என்று ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அது விளம்பு நிலை மக்களின் சார்பான ஒரு மறு கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அனைத்து மறு கட்டமைப்புகளும் சரி என்று சொல்வது நமக்கான அரசியலாக இருக்க முடியாது. பதிவு பெரிதானதர்க்காக மன்னிக்கவும். தவிர்க்க முடியவில்லை.
குவாண்டம் உலக அதிசயங்கள் குவாண்டம் உலகோடு நின்று விடும்

Magesh Ramanathan :-
===================
தங்களுடனான உரையாடல் மிகவும் பயனுடைய ஒன்று. இணைய விவாதங்களின் அதிகபட்ச சாத்தியங்களை எப்பொழுதும் கணக்கில் கொள்கிறேன். என்னை யாரென்று உங்களுக்குத் தெரியாது. உங்களை யாரென்று எனக்குத் தெரியாது. பொதுவான இணைய உலாவிகளின் குண இயல்புகளைக் கொண்டே நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆபத்துக்களை கணக்கிலெடுத்துக் கொண்டு மிக ஜாக்கிரதையாக கூடுமானவரை தவறான புரிதல்களுக்கு இடமளிக்காதவாறு உரையாட முயல்கிறேன்.

//பொருளை நிறையாக கருதி நீங்கள் அளவிடும் போது அது தன்னை நிறையாக மட்டுமே வெளிப் படுத்துகிறது. பொருளை அலையாகக் கருதி அளவிடும் போது அது அலையாக மட்டுமே தன்னை வெளிப் படுத்துகிறது. நீங்கள் நினைப்பதற்கு ஏற்ப்பவே பொருள் வெளிப்படுகிறது. அலையாகக் கருதி அதன் திசை வேகத்தை அளவிடும் போது அதன் நிறையை நீங்கள் அளவிட முடியாது// இது குறித்தெல்லாம் பல்வேறு கட்டுரைகளில் வாசித்திருக்கிறேன். என்னுடைய கேள்வி இவை மீண்டும் புற உலகை புரிந்து கொள்வதில், அவற்றை பகுத்தாராய்வதில், அவற்றை வெற்றிகரமாக கையாள்வதில் மனிதனுக்கு உள்ள சிக்கல்களைத்தானே வெளிப்படுத்துகிறது. இவை பொருள் குறித்த நமது பௌதீக வரையறைகள் பற்றிய பிரச்சினைதானே தவிர இவை பொருள் குறித்த தத்துவார்த்த வரையறைகள் பற்றிய பிரச்சினை அல்ல என்பதே என் புரிதலாக இருக்கிறது.

துணைத் தளபதி மார்கோஸ்:-
=======================

கருந்துளையின் விளிம்பிலிருந்து event horizon அதன் மையம் singularity நோக்கி ஒருவர் பயணிக்கும் போது அவரின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் எதிர்காலத்தையும் அவர் காணுவார். பொருள் இன்னும் வரவில்லை. அவர் எதிர் காலத்தைக் காண்பதால் பொருள் குறித்த கருத்து அவரிடம் முதலில் வந்து விட்டது. இப்போது புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பது குவாண்டம் மாடலில் மட்டுமே சாத்தியம். அது நம்மைச் சுற்றி இருக்கும் பெரிய புற உலகு குறித்த மாடல்களுக்கு பொருந்தாது. அதாவது நியூட்டோனியன் மாடலுக்கு பொருந்தாது. மார்க்சியத்தில் நாம் கற்ற பொருள்முதல் வாதம் நியூட்டோனியன் மாடலுக்கு மிகச் சரியாக பொருந்தக் கூடியது. அதில் குழப்பத்தை உண்டு பண்ண நினைப்பவர்கள் இந்த குவாண்டம் தியரியைக் கொண்டு வருவர் என்பதை எச்சரிப்பதே என் பதிவு. குவாண்டம் அதிசயங்கள் குவாண்டம் உலகுக்கு மட்டுமே பொருந்தி வருபவை. அவை அனைத்து மாடல்களுக்கும் பொருந்தக் கூடிய உலகளாவிய விதிகள் அல்ல.

இணைய உரையாடல் குறித்து எழுதியிருந்தீர்கள். சரியான அவதானிப்பு. மிக மோசமான பதிவுகளுக்கு எதிர் வினையாற்றினால் மிகவும் கோவித்துக் கொள்கிறார்கள். ஒன்றைப் பதிந்து விட்டால் கடைசி வரையிலும் அதை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பார்வைகளையும் சற்றும் கணக்கில் கொள்வதில்லை. விவாதம் ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதலாகப் போய் விடுகிறது. இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன். ஆஸ்டின் என்பவர் சிசுக் கொலை குறித்து எழுதியிருந்தார். குழந்தையை வீசி விட்டுச் சென்ற பெண்ணை தே… மகள் என்று பதிந்திருந்தார். நான் மாற்றுக் கருத்தை முன் வைத்த போது கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார். சிசுக் கொலைக்கு பெண் மட்டுமே காரணமல்ல என்று நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை. இன்னொரு பதிவு. கலையரசன் அவர்களுடையது. குழந்தைகள் செங்கொடி ஏந்தி மே தின அணி வகுப்பில் செல்கின்றனர். பால் வடியும் முகமுடைய குழந்தைகளுக்கு கம்யூனிச தத்துவம் குறித்து போதிக்கக் கூடாது என்பது என் நிலைப்பாடு. தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வேண்டும் என்று சொன்னது பெரிய சண்டையைக் கிளப்பி விட்டது. தத்துவம் சரியா தவறா என்பதல்ல பிரச்சனை. திணிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டா இல்லையா என்பது ஒரு அடிப்படை கேள்வி. எல்லாவற்றையும் கற்றறியும் சூழல் ஏற்ப்படுத்துவதே நாம் செய்ய வேண்டியது. மதமானாலும் மார்க்சியமானாலும் பாசிசமானாலும் தேர்ந்தெடுக்கும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு. திணிக்கும் உரிமை பெற்றோருக்கு இல்லை. இது மிகவும் சாதரணமான ஒரு விவாதம். எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் அங்கு புரிதல் நடக்கவில்லை. பதிவுகளை தங்களின் சுயத்தின் ஆளுமையின் நீட்சியாக கருதுவதால் மாற்றுக் கருத்தை ஏற்க்க மறுக்கிறார்கள். வராலாறு எழுதுவது குறித்து நான் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தேன். சீனிவாச ராகவன் ஐயா மக்கள் மனதில் உள்ள படிமங்களில் இருந்து வரலாற்றை மீட்க்க முடியும் என்ற கருத்தைச் சொன்னார். அவர் சொன்னது சரியென்று பட்டது. நான் என் கருத்தை மாற்றிக் கொண்டேன். அவர் சொன்னது சரியென்று அவரிடம் சொன்னேன். இப்படி திறந்த புத்தகமாக இருப்பதில் என்ன தவறென்று தெரியவில்லை. செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதி தொலைவில் உள்ளது என்பது மட்டும் புரிகிறது.

Magesh Ramanathan :-
===================

//கருந்துளையின் விளிம்பிலிருந்து event horizon அதன் மையம் singularity நோக்கி ஒருவர் பயணிக்கும் போது அவரின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் எதிர்காலத்தையும் அவர் காணுவார். பொருள் இன்னும் வரவில்லை. அவர் எதிர் காலத்தைக் காண்பதால் பொருள் குறித்த கருத்து அவரிடம் முதலில் வந்து விட்டது. இப்போது புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். // உங்களுடைய முதல் பதிவில் தத்துவம் குறித்த கருத்துக்கள் இருந்ததே என்னை இவ்வுரையாடலை நோக்கி உந்தித் தள்ளியது. அதில் பொருள்முதல்வாதம் குறித்த கருத்து இடம் பெற வில்லையென்றால் நான் ஒரு விஞ்ஞானத்தின் ஆர்வமிக்க மாணவனாக வாசித்ததோடு நிறுத்திக் கொண்டிருப்பேன். கருந்துளையின் மையம் நோக்கி பயணிக்கும் பொழுது பிரபஞ்சத்தின் எதிர்காலம் தெரியும் என்கிற கோட்பாடுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வெறும் என் அடிப்படை அறிவை மட்டும் வைத்துக் கொண்டு இவற்றை விவாதித்தால் வறட்டுவாதம் என்பதாகவே படும். தெரிந்து கொண்டு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடுகிறேன். நன்றி

துணைத் தளபதி மார்கோஸ்:-
========================
கேள்விகளை ஆரோக்கியமாக வைத்த உங்களுக்கு நன்றி. மீண்டும் பேசுவோம்.

Advertisements

Posted in கட்டு​ரை | Leave a Comment »