எனது நாட்குறிப்புகள்

ஜீ.வி. பிளகானவ்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 6, 2016

ஏ.கே. வொரோன்ஸ்கி

முதலில் பிரசுரமானது: “ரபோச்சீ க்ராய்”, 30 மே 1920;
மூலம்: http://sovlit.org/akv;
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு: F. Choate, for “Art as the Cognition of Life”;
பிரதி எடுத்தவர்: ஜோசப் மவுன்ட்.

பிளகானவ் வருந்தத்தக்க சூழலில் மறைந்தார். தனது மரணத்திற்கு முன்பாக அவர் ருஷ்யாவின் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து மட்டும் மிகப் பெரிய அளவில் தன்னை விலக்கிக்கொண்டிருக்கவில்லை; மாறாக அவரை அவருடைய சமகால உடன் சிந்தனையாளர்கள் பலர் விலக்கிவிட்டிருந்தனர். போரும் ருஷ்ய புரட்சியும் பிளாகனவை அவருடைய நேற்றைய எதிரிகளின் – எந்த சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக அவர் ஈவிரக்கமற்றதும் தன்னிகரற்றதுமான போராட்டத்தை நடத்தினாரோ – முகாமில் துாக்கியெறிந்துவிட்டது.

பிளகானவ் ருஷ்ய மற்றும் மேற்கு ஐரோப்பிய தொழிலாளர் இயக்கங்களுக்காக ஏராளமான காலத்தால் அழியாத பங்களிப்புகளைச் செய்திருந்த போதிலும் அறிவுலகத்தால் நிராகரிக்கப்பட்டவராக மறைந்தார்.

ஒரு நொடியும் தன் மூர்க்கத்தை குறைத்துக் கொள்ளாமல் தன் குழந்தைகளையே கபளிகரம் செய்யும் சனியைப் (கிரகம்) போல, புரட்சி ஈவிரக்கமற்றது. அது நேற்றைய தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் துாக்கியெறியும், நாளை அவர்களை அதலபாதாளத்தில் அரசியல் அநாமதேயங்களாக வீசியெறியும். நமது காலம் கொடூரமான காலம், ஈவிரக்கமற்றது, நன்றி கெட்டது. நிகழ்ச்சிகளின் சுழற்காற்றில், தனி மனிதர்கள் தானியத்திலிருந்து பிரிக்கப்பட்ட பதரைப் போல காணாமல் போகிறார்கள், கம்பீரமானவர்கள் சிறுத்து தரையில் கிடக்கிறார்கள்.

சில நேரங்களில் ஆபத்தான துாரத்தில், இன்றைய புயல்களால் அடித்துச் செல்லப்பட்டு, நாம் கவனமின்றி கடந்த பல நிகழ்வுகளும், மறந்து போன பல தனிநபர்களும், எதிர்காலத்தில் தங்களின் முழுஆற்றலோடு பல பத்தாண்டுகளுக்கு அடியில் உள்ள புழுதிகளிலிருந்து எழுந்து வருவார்கள்; எதிர்காலம் கடந்தகாலத்தின் கணக்கைத் தீர்த்து வரலாற்று கண்ணோட்டத்தை மீட்டெடுக்கும்.

நான் நம்புகிறேன் பிளக்கானவ் என்னும் நட்சத்திரம் மீண்டும் தன்னுடைய அனைத்துப் புகழோடும் ஜொலிக்கும்.

பிளகானவ் உயிரோடு இல்லை என்ற பொழுதிலும், அவர் கடந்த காலத்தை சேர்ந்தவராகிவிட்டார் என்ற பொழுதிலும், பிளகானவைப் பற்றி பாரபட்சமற்ற மற்றும் நேசமற்ற ஆய்வாளரின் தொணியில் பேசுவது கம்யூனிஸ்ட் போல்ஸ்விக்குகளாகிய நமக்கு மிகக் கடினமானது, எல்லாம் இப்பொழுதுதான் நடந்தன, சமீபத்திய வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டங்களை ஞாபகப்படுத்திக் கொள்வது மிக எளிதானது…

… ஜுலை 1917. தற்காலிக அரசாங்கம், பிளகானவுடைய “ஐக்கிய” உறுப்பினராகிய திரு. அலக்சின்ஸ்கியுடன் சேர்ந்து, லெனினுக்கும் டிராட்ஸ்கிக்கும் எதிராக ஜெர்மன் ஜெனரல் ஸ்டாஃபின் ஏஜென்ட்கள் என்ற அபத்தமான கோபமூட்டும், இழிவான, அற்ப கட்டுக்கதையை உருவாக்கினர். விசாரணை நடத்தப்பட்டது, புலனாய்வு செய்யப்பட்டது. பிளகானவிற்குத் தெரியும் இது அப்பட்டமான பொய் என்று. அவர் மிக புத்திசாலி, இந்த குற்றச்சாட்டை நம்புவதற்கு, அவருக்கு லெனினையும் டிராட்ஸ்கியையும் மிக நன்றாகத் தெரியும். ஆனால் தன்னுடைய “ஐக்கிய”த்தினால் பிளகானவ் மௌனமாக இருந்தார். அவருடைய கணமான மற்றும் அதிகாரப்பூர்வமான வார்த்தைகள் எதுவும் வெளி வரவில்லை. அவர் அலக்சின்ஸ்கியை “ஐக்கிய”த்தை விட்டு வெளியேற்றவில்லை. இந்த மௌனம் மிக மோசமான குற்றம், இது ரஷ்ய மற்றும் மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு பிளகானவ் இழைத்த குற்றம்; இது பிளகானவ் செய்த தவறுகள் மற்றும் பிழைகளிலேயே மிக மோசமானதும் மிகப் பெரியதும் ஆகும். இதை நாம் மறந்துவிட வேண்டும் என்றும், நமது ஞாபகங்களிலிருந்து இதை அழித்துவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியுமா?…

ஆனால் போல்ஸ்விக்குகளாகிய நாம் வேறொரு பிளகானவையும் அறிவோம்…

பிளகானவ் ரஷ்ய புரட்சிகர மார்க்சியத்தின் தந்தையாவார். அவர்தான் ரஷ்ய தொழிலாளர் இயக்கத்திற்கும், ரஷ்ய பாட்டாளி வர்க்க புரட்சிக்கும் முதல் போதகரும் தீர்க்கதரிசியும் ஆவார். அவர்தான் சோசலிசத்திற்கான ரஷ்ய போராட்டத்தின் அடிப்படையும், அடிக்கட்டுமானமும், ஆதரவும், ரஷ்ய தொழிலாளர்களே என்பதை முதலில் கண்டுபிடித்தவர். இன்று நமக்கு இது, தெளிவான, நிரூபிக்கப்பட்ட உண்மை, ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்பு பிளகானவ் கூறிய “ரஷ்ய புரட்சிகர இயக்கம் புரட்சிகர தொழிலாளர் இயக்கமாகவே முகிழ்க்கும்” என்று கூறுவதற்கு ஒருவருக்கு ஏராளமான அறிவாற்றலும் நுண்உணர்வும் தேவை. அந்நேரத்தில், இந்தக் கூற்று எந்தவித்திலும் தெளிவாகத் தெரியக்கூடியதல்ல. அந்நேரத்தில் இருந்த அறிவுத்துறையின் பெரும்பான்மையினர் தொழிலாளர்களை எதிர்மறையாகவே பார்த்தனர், அவர்களை முதலாளித்துவத்தின் கழிவுகளாகவே பார்த்தனர். ரஷ்ய “ஒபிஸ்சினா” (விவசாய கம்யூன்), தன்னெழுச்சியான புகச்சேவ் கலகக்காரர்கள் போன்றவர்களே புரட்சிகர செயல்யுத்திகளுக்கான அடிப்படையாகும். பிளகானவே ரஷ்ய தொழிலாளர்களை கண்டுபிடித்தார், அப்பொழுதுதான் முதன்முதலாக ரஷ்யாவில் வர்க்க போராட்டம் குறித்த கோட்பாடு பிரகரடனப்படுத்தப்பட்டது, அந்தக் கோட்பாடே ஒவ்வொரு வர்க்க போராட்டமும் அரசியல் போராட்டமே என்று கூறியது.

பிளகானவ் ஏறத்தாழ தனது முழு நாற்பது வருட எழுத்து மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் விளைபொருளான சோசலிசத்திற்காக போராடினார். அவர் என்.கே. மிக்கைலவ்ஸ்கி மற்றும் பிற பாபுலிஸ்ட்களுடன் நடத்திய அரசியல் விவாதங்கள் ரஷ்ய சமூகத்தின் வரலாற்றில் படிப்பினையும் ஆர்வமும் மிக்க பக்கங்கள். பிளகானவ் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றின் வளர்ச்சி கட்டத்தில் எதார்த்ததின் முன்னால் வெற்று மாயைகள் இரக்கமற்ற முறையில் சிதைத்து அழிக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு சோர்வடையாதிருந்தார். இப்பிரச்சினையில் பிளகானவ் நமக்கு வளமிக்க இலக்கிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார், அவை இன்றைக்கும் எதனாலும் தன் மதிப்புக் குறையவில்லை, அந்த போராட்டம் ஏற்கனவே முதலாளித்துவ உறவுகளை நீர்க்கச் செய்து கொண்டிருக்கிறது.

பிளகானவ் ரஷ்ய மார்க்சியத்திற்கு மட்டுமல்ல, பொதுவில் மார்க்சியத்திற்கே தந்தையாவார். அவர் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் மாணவராவார், ஆனால் அவர் தன் ஆசான்களின் வழியில் மேலும் முன்னேறிய மாணவர்களின் வரிசையில் ஒருவராவார், ரத்தமும் சதையுமான புதிய சூழ்நிலைகளில் தத்துவத்தை மேம்படுத்தியவர். நிகழ்வுகள் மற்றும் தரவுகளின் மீது வேலை செய்து, தங்கள் ஆசான்களால் உருவாக்கப்பட்டதை செம்மைப்படுத்தி ஆழப்படுத்தினார். பிளகானவ் மார்க்சின் போதனைகளின் ஆற்றலிலும்  முறையிலும் முழுமையான புலமை பெற்றிருந்தார். அவருடைய எழுத்தாற்றலில் புரட்சிகர கொள்கை அதன் அனைத்து நெகிழ்வு, ஆழம் மற்றும் இரக்கமற்ற தீவிரத்தன்மை ஆகியவற்றோடு உற்சாகம் ததும்புவதாக இருந்தது. அனைத்து மாணவர்களும் இ்த்தன்மையை கைகொள்ள முடியவில்லை. நமக்கு தன் ஆசிரியர்களின் கொள்கையை வரட்டுவாதமாக, ஒருவித உயிரற்று விரைத்துப் போனதாக மாற்றிய மாணவர்களின் உதாரணங்கள் தெரியும். ஆனால் பிளகானவின் விசயத்தில் இது நிகழவில்லை ஏனென்றால் அனைத்திற்கும் முதலில் அவர் அந்த முறையிலேயே மிகச் சிறப்பாக புலமை பெற்றிருந்தார். பிளகானவ் ஒரு கல்வியாளரோ, வறண்ட உயிரற்ற வரட்டுவாதியோ அல்ல. நாம் அனைவரும் பிளகானவிடமிருந்து எவ்வாறு பல்வேறு சிக்கலான தத்துவார்த்த பிரச்சினைகளை புரட்சிகர மார்க்சிய வழியில் அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிளகானவ் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட வரையறைகளுக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் தான் கற்றுக் கொண்டவற்றை சோர்வின்றி திரும்பத்திரும்ப விளக்கினார். அவருக்கு விருப்பமான கூற்றுகளையும், விருப்பமான சிந்தனைகளையும் – இருப்பே உணர்வைத் தீர்மானிக்கிறது மாறாக உணர்வு இருப்பைத் தீர்மானிப்பதில்லை – போன்றவற்றை சோர்வின்றி திரும்பத்திரும்ப கிட்டத்தட்ட  தன் அனைத்துக் கட்டுரைகளிலும் எழுதினார். ஆனால் பாருங்கள் எப்படி இந்த “பழைய” பொருள் புதிய முறையில், சோர்வு தராத வகையில், புதிய சிந்தனையாக முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் மேலும் வளர்க்கப்பட்டு அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது. பாருங்கள் உங்கள் கண்களின் முன்னாலேயே மிகப் பிரசித்தமான கூற்றுக்கள் புதிய வெளிச்சத்தில் “வாழ்விலிருந்து” உயிரோட்டமாக குளித்தெழுந்து வருவதை.

பதினெட்டாம் நுாற்றாண்டு பிரஞ்சு பொருள்முதல்வாதிகளையும், ஜெர்மன் தத்துவஞானிகளான ஹெகல், ஃபிச், ஃபாயர்பாக் போன்றவர்களையும் பிளகானவ் அறிந்த அளவி்ற்கு அவருடைய சமகாலத்தவர்கள் ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இவ்விசயத்தில், பிளகானவிற்கு இணையானவர்கள் யாருமில்லை. மார்க்சியர்களான நம் மத்தியில் மிகப் பரந்த தத்துவஞானக் கல்வியுடையவர்கள் மிகக் குறைவே. தத்துவஞானப் பிரச்சினைகளைப் பொருத்தவரை நாம் பொதுவாக புறம் தள்ளிவிடுகிறோம், அதற்கு நாம் கடைசி முக்கியத்துவமே கொடுக்கிறோம். மார்க்சும் எங்கெல்சும் பல அறிவுச்சுடர்மிக்க அசாதாரணமான கூற்றுக்களை வெளிப்படுத்தியுள்ளனர், ஆனால் பிளகானவே அவை அனைத்தையும் ஒரு முறைக்குள் ஒருங்கிணைத்துத் தந்தார். யார் ஒருவர் மார்க்சியத்தின் தத்துவஞான அடிப்படைகளை முழுமையாக படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு பிளகானவின் புத்தகங்களைத் தவிர, வேறு எந்த மாற்றும் இல்லை, படிப்பதற்கு வேறு எந்த புத்தகங்களும் இல்லை. இவ்விசயத்தில் நம்முடையவற்றுடன் ஒப்பிடும் பொழுது, மேற்கு ஐரோப்பிய சோசலிச இலக்கியங்கள் கூட பற்றாக்குறைதான்.

தத்துவஞான பிரச்சினைகளைப் பொருத்தவரை பிளகானவ் ஒரு இயக்கவியல் பொருள்முதல்வாதி. இருபதாம் நுாற்றாண்டில் பொருள்முதல்வாதத்திற்காக பிளகானவ் நடத்திய விஞ்ஞானப்பூர்வமான போராட்டத்திற்கு தனித்த தன்மை உள்ளது. முதலாளித்துவம் வெகுகாலத்திற்கு முன்பே வீழ்ச்சி அடையத் துவங்கிவிட்டது. உற்பத்தி உறவுகள் சம்பந்தபட்டவற்றில் மட்டுமல்ல, அரசியல் சம்பந்தபட்டவற்றில் மட்டுமல்ல, விஞ்ஞானம் மற்றும் கலை பிரிவுகளிலும் அது வெகுகாலத்திற்கு முன்பே இறந்துவிட்டது. சமீப ஆண்டுகளில் முதலாளிகளின் அரசியல் பிற்போக்கு மற்றும் காலாவதி நிலையோடு விஞ்ஞானச் சிந்தனைகளில் இழிவான இயக்கமானதும் சேர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த பதினெட்டாம் நுாற்றாண்டு பொருள்முதல்வாதமும் டார்வினிசமும் மதத்தின் இடத்தில் விஞ்ஞானத்தை மாற்ற முயற்சி நடத்தின, ஆனால் முன்னெப்போதும் இல்லாதவகையில் மிக வேகமாக கான்டியனிசத்தின் பிற்போக்கு பக்கம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் தத்துவஞான சிந்தனையில் குதர்க்கவாதிகளை கவனமாக பார்க்கத் துவங்குகிறோம். முதலில் அவானரிஸ், பிறகு புத்திசாலியும் அறிவாளியுமான பெர்க்ஸன், அதன் பிறகு தன்னுடைய பயனோக்குவாதத்துடன் வந்த கடமையுணர்வுமிக்க ஜேம்ஸ் மற்றும் பலர். பொருள்முதல்வாதம் காலாவதியாகிவிட்டதாக, எளிய கொள்கையாக அறிவிக்கப்பட்டது. பிற்போக்கு முதலாளித்துவத்தின் ஆதரவு சோசலிச காலகட்டத்திலும் தத்துவஞான சிந்தனைகளின் பின்னணியில் தெளிவாக வெளிப்பட்டது. பிளகானவின் பொருள்முதல்வாதத்திற்கான போராட்டம் என்பது படித்தவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வகையில் இருந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கு எதிரான போராட்டம். பிளகானவ் ஈவிரக்கமற்றவகையில் தத்துவஞான வரலாற்று அறிவால் முழுமையான ஆயுதபாணியாகி இந்தப் போராட்டத்தில் நுழைந்தார். அடடா! பக்தனோவ், பசரோவ், லுனாசார்ஸ்கி போன்ற அனுபவ-ஒருமைவாதிகளுக்கு எதிராக எத்தகையதோர் அழித்தொழிக்கும் வகையிலான விமர்சனங்களை முழங்கினார்! பக்தனோவ், பசரோவ், லுனாசார்ஸ்கி ஆகியோரின் தத்துவார்த்த செயல்பாடுகள் பிளகானவின் கட்டுரைகளுக்குப் பின்னால் மங்கி மறைந்தன, வெகுவிரைவில் அவை மிகக் குறைவானோரின் கவனத்தையே கவரக்கூடியவையாக ஆகின என்றால் அது உண்மை.

மார்க்சியவாதிகளாகிய நம்மால் போதுமான அளவில் பாராட்டப்படாத பிளகானவின் மிகப்பெரிய பங்குள்ள ஒரு பகுதி உள்ளது. அதுதான் இலக்கிய விமர்சனத் துறையாகும். பிளகானவ் ரஷ்ய சமூக மற்றும் கலையாக்க சிந்தனைகளை பல கட்டுரைகளிலும் நுால்களிலும் விட்டுச் சென்றுள்ளார், அவை செர்னிசெவ்ஸ்கி பற்றிய புத்தகம், பெலின்ஸ்கி, ஹெர்ஸன், யுஸ்பென்ஸ்கி, நெஹ்சவ் பற்றிய கட்டுரைகள். இவை பிளகானவ் எழுதிய முழுமையான பட்டியலில் மிகவும் சிறியனவே. மார்க்சிய வழியில் நமது சமூக சிந்தனைகளின் வரலாற்றை விளக்கியவராக பிளகானவ் தனித்தும் ஒப்புவமையற்றும் நம்முன் திகழ்கிறார். பெலின்ஸ்கி, யுஸ்பென்ஸ்கி பற்றிய பிளகானவின் கட்டுரைகள், நமது இலக்கிய வரலாற்றை மார்க்சிய வழியில் விளக்கிய தலைசிறந்த படைப்புகளாகும், இன்றைவரை அவற்றை மிஞ்சியவர்கள் யாருமில்லை. ஒவ்சியானிகோவ்குலிகோவ்ஸ்கி போன்ற காத்திரமான மற்றும் “நடுநிலையான” கல்விமான்கள் கூட பிளகானவை இவ்விசயத்தில் மிகுந்த மதிப்புடன் அணுகினர். ரஷ்யாவில் வாசிப்புப் பழக்கமுள்ள மக்கள்திரளிடையே யுஸ்பென்ஸ்கி பற்றி விவரித்து விளக்கிய முதல் மனிதர் பிளகானவ் தான் என்பதற்கு போதுமான குறிப்புகள் உள்ளன. இங்கே நாம் பிளகானவின் தத்துவஞான படைப்புகள் பற்றி கூறுகின்ற ஒரே விசயம், யாரொருவர் நமது சமூக சிந்தனை வரலாற்றையும் நமது இலக்கியங்களையும்  – மார்க்சிய பார்வையில் – கிரகித்துக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கு பிளகானவே புதையல் வீடு. துாய்மையான கலையாக்க உணர்வுடன் விசயம் குறித்த முழுமையான அறிவையும், ஆழமான தனிச்சிறப்பு வாய்ந்த திறனாய்வு ஆற்றல்களையும் பிளகானவ் ஒருங்கிணைத்தார். இந்தத் துறையில் மார்க்சிய முறையை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பதை பிளகானவ் தெளிவாக விளக்கினார்.

பிளகானவும் சந்தர்ப்பவாதிகளும்…

1890களிலேயே மார்க்சின் கொள்கையை திரித்துரைத்த மேற்கு ஐரோப்பிய சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக பேசிய முதல் மனிதர் பிளகானவ் தான் என்பது மிகச் சிலருக்கே தெரியும். காவுத்ஸ்கி மற்றும் பிற மரபுவழிப்பட்ட மார்க்சியர்கள் தங்கள் குரல்களை அதன் பிறகே இணைத்துக் கொண்டனர். இந்த போராட்டத்தில் பிளகானவ் தன்னுடைய அரசியல் விவாதத் திறனை சோர்வற்ற மற்றும் முழுமையான ஆற்றலுடன் வெளிப்படுத்தினார். இன்றைக்கு யாரொருவருக்கும் பெர்ன்ஸ்டினும் அவருடைய ரஷ்ய நண்பர்களாகிய ஸ்டூருவ், துகான்-பரனோவ்ஸ்கி போன்றவர்கள் மார்க்சியத்தை விகாரப்படுத்தி, மார்க்சியத்திலிருந்து அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை விலக்கி, மார்க்சியத்தை சுவிகரித்து, பலஹீனப்படுத்தி, முதலாளித்துவத்திற்கு கீழ்மைப்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்றனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இதற்குக் காரணமான பிளகானவிற்கு சிரம்தாழ்ந்த மிகப்பெரிய நன்றி…

பிளகானவின் பாணிக்கான அறிவாற்றலுக்கும் மற்றும் துாய்மையான எளிமைக்கும் காரணம் முழுத்தெளிவான சிந்தனையும், கூர்மையும் நெகிழ்வுமான மனமுமேயாகும். பிளகானவ் மிகச் சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிய அழகிய ரஷ்ய மொழியில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். அரசியல் விவாதக்காரராக, பிளகானவ் எப்பொழுதுமே தன்னுடைய எதிராளிகளுக்கு மிக ஆபத்தானவராகவே இருந்தார். அவருடைய அரசியல் விமர்சனம் எப்பொழுதும் உண்மையில் பேராபத்தை விளைவிப்பதாகவும்  மிகக் குறிபார்த்து தாக்குவதாவுமே இருந்தது. பிளகானவின் கூர்மையான மற்றும ஈவிரக்கமற்ற கிண்டல்கள், மேலும் அரசியல் விவாதத்திற்கான ஆர்வம் ஆகியவை  அவருடைய பிரக்ஞைப்பூர்வமான சிறந்ததன்மையால் எப்பொழுதும் மாறாமல் உந்தப்பட்டது. அவருடைய பேச்சும் எழுத்தும் “விரும்பக்கூடிய ஒருவரால் ஆளப்படுவதைப் போல்” இருந்தது. இது பலரை எரிச்சலுாட்டியது. ஆனால் பிளகானவ் இந்த வழிமுறையினையே செயல்பட தேர்ந்தெடுத்திருந்தார். அவருடைய  வாசிப்புமுறை பிரம்மாண்டமானது, அவருடைய அரசியல் விவாத பலத்தை பொருத்தமட்டில், அவருடைய அம்புகள் ஒவ்வொன்றும் நெருப்பம்புகள் எனக் கூறப்பட்டன.

பிளகானவிற்கு இதில் எந்த சாதகமும் இல்லை என்பது தெரிந்துதான் இருந்தது. அவர் ஒருமுறை தன்னுடைய கூற்று சரியானது தான் என ஏற்றுக் கொண்டுவிட்டால், அதன் தர்க்க எல்லைவரை சென்றுபார்ப்பவர். அவர் தன்னுடைய நேற்றைய நண்பர்களை தன்னுடைய தீவிரமான எதிரிகளின் கூடாரத்தற்குள் சுத்தமாக வீசியெறிந்துவிடக்கூடியவர். அவர் தன்னுடைய நேற்றைய அணியிலிருந்து தன்னுடைய கூட்டை முறித்துக் கொண்டு தன் வழியில் செல்லக்கூடியவர், சிலவிசயங்களில் அவர் சரியானவர் தான்.  ஒவ்வொரு தடுமாற்றமும், பிளகானவின் ஒவ்வொரு விலகலும் அதனால் மிகப்பெரிய தவறாக மாறின. இது அதற்கான அவருடைய மனத்தின் நெகிழ்வுத்தன்மையை விலக்கிவிடவில்லை, பிளகானவின் அறிவாற்றல் வளைந்து போகக்கூடியதுமட்டுமல்ல, மாறாக மிகவும் உறுதியானதும் கூடத்தான்.

ஒரு செயல்யுத்தியாளராக, பிளகானவ் பல மிக மோசமான செயல்யுத்தித் தவறுகளைச் செய்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்வின் இறுதியில் வலதுசாரி தற்காப்பாளர்களால் சூழப்பட்டிருந்தார். பிளகானவின் மனம் தத்துவத்தில் ஊறி இருந்தது. ஆனால் செயல்யுத்தியை பொறுத்தவரை அவர் பலஹீனமானவர். இது பெரிய மனிதர்கள் பலருக்கும் ஏற்பட்டதுதான். டால்ஸ்டாய் மிகச் சிறந்த கலைஞர், ஆனால் மிகப் பலஹீனமான தத்துவஞானி, மேலும் அவர் தன்னுடைய ஆற்றல்கள் குறித்து தானே எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். கார்க்கியும் கூட அற்புதமான கலைஞர், ஆனால் மிகச் சராசரியான அரசியல் விமர்சகர், அது போல பலர். பொதுவில் செயல்யுத்தி பிளகானவின் பலஹீனமான பகுதி. ஒரு உண்மை என்னவென்றால் பிளஹானவ் மென்ஸ்விக்குகளோடு இருந்தார், அதன்பிறகு தற்காப்பாளர்களோடு  இருந்தார்,  இவை அவருடைய செயல்யுத்தி பலஹீனங்களை மட்டும் வெளிப்படுத்தவில்லை மாறாக பாரீஸ் கம்யூனின் வீழ்ச்சிக்குப்பிறகு தொழிலாளர் இயக்கம் வடிவம் பெற்று, வளர்ந்து, பலம்பெறும் காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக சேர்ந்தவராக இருந்தார். இது சட்டவாதம், பாராளுமன்றவாதம், “அமைதியான போராட்டம்” என்னும் சட்டகத்துக்குள் வளர்ந்து வந்த தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் காலகட்டமாகும். நமக்குத் தெரியும் பிளகானவ் மட்டும் இவ்வாறு “வீணானவர்” அல்ல, மாறாக கடந்த காலத்தின் காவுத்ஸ்கி, கியூஸ்டே போன்ற பல பிரபலங்களும் அடங்குவர். பிளகானவ் ரஷ்ய புரட்சிகர தலைமறைவு இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார், ஆனால் எந்தவிதத்திலும் அவருக்கு மேற்குடன் சுமூகமான தொடர்பு இருக்கவில்லை என்பதே உண்மை.

இங்கே நாம் பிளகானவ் நமது புரட்சிகர தலைமறைவு இயக்கத்தை நேசித்ததைக் குறி்த்துக் கொள்ள வேண்டும், அது ஹெர்ஸன் காலகட்டத்திலிருந்து வளர்ச்சியடைந்து தொடர்கின்ற ஒன்று. இந்த அர்த்தத்தில், பிளகானவ் ஒரு போல்ஷ்விக் ஆவார். ஒரு மென்ஷ்விக்காக அவர் 1905-1906 வரை போல்ஷ்விக்குகளுக்கு எதிராக கடுமையான யுத்தத்தை நடத்தினார், ஆனால் வெகு சீக்கிரத்திலேயே பெரும்பான்மையான மென்ஷ்விக்குகள் சீரழிவுவாத சகதியில் மூழ்கி, தலைமறைவு இயக்கத்தை சீரழிந்துவிட்டதாகவும், இருத்தலுக்கான காலத்தை இழந்துவிட்டதாகவும் அறிவித்த பொழுது, பிளகானவ் மென்ஷ்விக்குகளுடன் முறித்துக் கொண்டு, போல்ஷ்விக்குகளை வீரியத்துடன் ஆதரிக்கத் துவங்கினார், அதன் பிறகு “பிராவ்தா”வுடன் இணைந்து பணியாற்றினார். தீவிரமான பிற்போக்குத்தனங்களும், ஓடுகாலித்தனங்களும், துரோகங்களும் நிறைந்த ஆண்டுகளில் பிளகானவ் புரட்சிகர மார்க்சிய தலைமறைவு இயக்கத்தை பார்த்துக் கூறினார், “முயலே, எத்தனை அற்புதமாக ரகசிய பொந்துகளை உருவாக்கினாய்”. நம் அனைவருக்கும் ஞாபகமிருக்கும் “பிராவ்தாவில்” வெளிவந்த பெட்ரஸோவ்விற்கு எதிரான பிளகானவின் கட்டுரை. “ஏவுகணையிலிருந்து வந்த குண்டுகள்”, (அந்த சொற்றொடரின் அர்த்தம் “ஏராளமான பொய்கள்”) என்பதே அப்பொழுது வந்த பல தொடர்கட்டுரைகளில் ஒன்றிற்கு பிளகானவ் வைத்த தலைப்பு.

யுத்தத்தின் போது மென்ஸ்விக்குகளும் பிளகானவை விலக்கிவிட்டனர். ஜெர்மனியை குறிப்பாக பிளகானவ் குறைகூறினார், அவர் ஜாரின் ரஷ்யாவும் அதன் அணி நாடுகளும் ஒரு நியாயமான யுத்தத்தை நிகழ்த்துவதாகக் கூறினார். அவர் ஜெர்மன் சமூகஜனநாயகவாதிகளை தாக்கினார். பிரஞ்சு மற்றும் ஆங்கில சமூக தேசபக்தர்களின நிலையை சரியென்று ஆதரித்தார். பிப்ரவரி புரட்சி மற்றும் தற்காலிக அரசாங்கங்கள் குறித்த பிளகானவின் மதிப்பீடுகள் மிகப் பிரசித்தமானவை. ஆனால் அக்டோபர் நாட்களில் கெரன்ஸ்கி பெட்ரோகிரார்டை மீட்பதற்காக கிரஸ்னோவினுடைய கஸாக்குகளின் உதவியுடன் செய்த முயற்சிகளுக்கு எதிராக பிளகானவ் பேசியவை  பலருக்குத் தெரியாது. கெரன்ஸ்கி கிராஸ்னியோய் செலோவை (சிறு நகரம்) கைப்பற்றிவிட்டு பெட்ரோகிராடை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மிகப் பிரபலமான புரட்சியாளரும் பிளகானவின் நண்பருமான ஒருவர் பிளகானவிடம் துாதனுப்பப்பட்டார் – அல்லது சொந்த முயற்சியில் அவரே சென்றார் – பெட்ரோகிராடிற்குள் கஸாக்குகள் நுழைந்தவுடன் ஒரு அமைச்சரவையை உருவாக்குவது குறித்த வேலையில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கு பிளகானவ், “நான் நாற்பது வருடங்களாக பாட்டாளிகளுக்காக வேலை செய்துவிட்டேன், என்னால் அவர்கள் தவறான பாதையில் போனாலும் தொழிலாளர்களுக்கு எதிராக சுட முடியாது” என்று பதிலளித்தார்.

இந்த பதிலிலிருந்து தெரிய வருவது, அவருடைய எல்லா சமீப தவறுகள் மற்றும் விலகல்களுக்கும் அப்பால், ஒரு பழைய புரட்சியாளரின் ஆத்மா பிளகானவிற்குள் நீடித்திருக்கிறது, அது தன்னை அவருடைய மிக மோசமான தவறுகளுக்கு இடையிலும் வெளிப்படுத்துகிறது.

பிளகானவின் பெயர் பெலின்ஸ்கி, ஹெர்ஸன், செர்னிசெவ்ஸ்கி ஆகியோரின பெயர்களுக்கு அடுத்து வைக்கப்பட வேண்டியது. பிளகானவ் படிக்கப்பட வேண்டியவர், ஒவ்வொரு வர்க்க உணர்வுள்ள  தொழிலாளர்களும் பிளகானவின் சிறந்த எழுத்துக்களை தெரிந்திருக்க வேண்டும். இன்றைக்கும் மிஞ்சமுடியாததாக இருக்கும் அவருடைய மிகப்பெரிய அறிவுச்சுடர்மிக்க படைப்புகளை பிளகானவின் தவறுகளை காரணம் காட்டி ஊதாசீனப்படுத்துவோமேயானால் அது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றமாகவே இருக்கும்.

நன்றி: https://www.marxists.org/archive/voronsky/1920/plekhanov.htm

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: