எனது நாட்குறிப்புகள்

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை! – நுால் விமரிசனம்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 23, 2016

ரங்கநாயகம்மா நுால் “சாதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு…” குறித்த வாசிப்பனுபவங்கள் – 1

-பேஸ்புக்கில்

13 ஆகஸ்ட், 2016

ஒரு முறை லெனின் குறிப்பிட்டார், “நம் காலகட்டத்தை விளக்குவதற்கு நுாறு மாரக்ஸ் இருந்தாலும் போதாது” என. நம் காலகட்டத்தின் சிக்கல்களையும், அதன் தோற்றுவாய்களையும், அதன் அடிப்படைகளையும் புரிந்து கொள்கிற வழிமுறையின் சிக்கல்களை புரிந்து கொள்ள இந்த மேற்கோள் மிக முக்கியமானது. எல்லா கோட்பாடுகளும் எதிர்கொள்கிற கோட்பாடு சார்ந்த நடைமுறை சார்ந்த சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. எந்தவொன்றும் விதிவிலக்கல்ல. பலவற்றிற்கும் நடைமுறை தான் இறுதித் தீர்வுகளை வழங்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

ஒரு ஆய்வாளர் அறிஞராக உள்ள அம்பேத்கர் கிடைத்த துண்டு துக்கானியான வரலாற்று ஆதாரங்களுக்குள் நின்று விவாதிப்பதற்கும் ஒரு நாவலாசிரியர் ஆய்வாளராக மாறும் பொழுது அவருடைய கற்பனா ஆற்றல் அவருக்குள் ஏற்படுத்தும் சிக்கல்களையும் இந்த நுால் முழுவதும் பார்க்க முடிகிறது. அம்பேத்கரின் ஆய்வில் வெளிப்படுத்தும் விபரங்களில் பிழைகள் ஏற்படுமேயானால் அது நமக்கு கிடைத்த முரண்பாடான, குழப்படியான, முழுமையற்ற வரலாற்று தகவல்களே காரணமாக அமைகின்றன என்றே படுகிறது. அவர் ஒரு முழுமையான சித்திரத்தை வழங்குகிறார் என்றே இந்த நுாலிற்குள் இருக்கும் அம்பேத்கரின் வழியாகக் கூட புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அம்பேத்கர் வரலாற்றை ஆராய்வதற்கு மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர், அவர் வேறுவகையான ஆய்வுமுறையை கைகொண்டவர். நாம் மார்க்சிய வழிமுறையில் சாதி குறித்து ஆய்வு செய்யும் நோக்கமிருந்தால், அந்த வழியில் நாம் முன்னேறலாம். வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி விதண்டாவாதமும், மயிர்பிளக்கும் வாதங்களும் செய்ய வேண்டியது என்ன அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அம்பேத்கர், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் உறுதியாக இறுதிவரை நின்றவர். அவர்கள் விடுதலைக்காகவே அல்லும்பகலும் அயராது உழைத்தவர். அவர்களையும் அவர்களின் நலன்களையும் யாராலும் மறுக்க முடியாத வகையில் இந்திய பொது அரசியல் நீரோட்டத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத்தியவர். அம்மக்களின் அடையாளமாக தன்னை நிறுவிக் கொண்டவர். அத்தகைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஒரு ஐகானை, லிஜன்டை அதற்குரிய மரியாதையோடு இந்நுால் அணுகவில்லை. கேளியும், நக்கலும், நையாண்டியும் இந்நுால் ஆசிரியரின் நோக்கத்தை சந்தேகத்திற்குரியதாக்குகிறது.

நுாலின் தலைப்பே ஒரு மாரக்சிய ஆய்வு நுாலுக்குரிய வழிமுறையை தேர்வு செய்து கொள்ளவில்லை. இந்திய மார்க்சிய ஆய்வாளர்கள் யார் ஒருவரின் நுாலும் இது போல பிறரை சீண்டும் நோக்கத்தோடும், முதல்பார்வையிலேயே வெறுத்தொதுக்கும் நோக்கத்தோடும் வைக்கப்பட்டிருப்பதாக பார்த்த ஞாபகமில்லை.

ஒரு தோழர் தன்னுடைய விமர்சனத்தில், “எதற்கு இந்தளவிற்கு நீண்ட மேற்கோள்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார். நுால் அமைப்பு என்கிற வடிவம் முக்கியமானது, அதை அதன் உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. இந்த நுாலின் உள்ளடக்கமானது, அம்பேத்கரின் ஆய்வுமுறையின் அடிப்படைகளே தவறு என்றும், அவர் அடிப்படை தரவுகளை விளங்கிக் கொண்ட விதமே தவறு என்றும், அவர் தன்னுடைய அடிப்படை விளங்கிக் கொள்வதில் உள்ள தர்க்கச் சிக்கல்களையே உணரவில்லை எனவும் நிரூபிக்க முயல்கிறது. அதன் பிரதான நோக்கம், சாதிய சிக்கல்கள் குறித்த மார்க்சிய பார்வையை வளர்ப்பதாகவோ, விளக்குவதாகவோ இல்லை. நாம் வாசித்தவரை அவ்வாறெல்லாம் அத்தனை பெரிய ஸ்காலரை சொல்லுவதற்கான முகாந்திரங்கள் தென்படவில்லை. பரந்த வாசிப்புக் கொண்ட எவரொருவரும் அப்படியெல்லாம் அவரை விமர்சிக்க முடியாதென்றே தோன்றுகிறது.

இந்திய வரலாற்றில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கின்றன. இருள் சூழ்ந்த காலங்கள் உள்ளன. முறையான தொல்லியல் ஆய்வுகளும், ஒப்பியல் ஆய்வுகளும் பாரபட்சமின்றி நடத்தி முடிக்கப்படவில்லை. இந்திய வரலாற்று ஆய்வுகள் சமகால அரசியல் அபிலாஷைகளால் மேலும் குழப்படி செய்யப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த ஆய்வாளர்கள் உறுதியாக கிடைத்த தரவுகளைத் தாண்டி எந்தவொன்றையும் தங்கள் கற்பனைகளால் நிரப்பமாட்டார்கள்.

வருணம்-சாதி, சூத்திரர்-பிராமணர் போன்ற பல விவாதங்களில் அம்பேத்கர் தன் முன்னுள்ள பல முரண்பட்ட, குழப்படியான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படைகளில் நின்று கொண்டு பேசுகிறார். அதனுாடாக அவர் வரலாற்றை புரிந்து கொள்ள முயல்கிறார், அது ஒரு தரப்பு, ஒரு பார்வை. “அவர்கள் கருப்பாக இருந்தார்கள்” என்று ஒருவர் சொன்னால் “அப்படியானால் மற்றவர்கள் எல்லோரும் சிவப்பாக இருந்தார்களா?” என ஒரு தர்க்க நிலையை ஒருவர் எடுத்தால் அது ஒரு சரியான வாதமுறையாகுமா? இப்படியான ஒரு தர்க்கமுறையை இந்நுால் முழுவதும் நுாலாசிரியர் பின்பற்றுகிறார்.

ஓரிடத்தில் சூரிய குலத்தவர் சூத்திரர்களாக இருந்த வரலாற்று ஆதாரங்களின் படி பேசுகிறார், மற்றொரு இடத்தில் இஷ்வாகு வம்சத்தினர் குறித்த வரலாற்றுத் தரவுகளின் படி பேசுகிறார். ஒட்டு மொத்தத்தில் அவர் முதலில் மூன்று வருணங்களாக இருந்து அதிலிருந்து நான்கு வருணங்களாக மாறியதாக ஒரு வரலாற்றுச் சித்திரத்தை காட்ட முனைகிறார் என்றுதான் பார்க்க முடிகிறதே தவிர, அதற்குள் உள்ள பல்வேறு போக்குகளும் இருந்திருக்கலாம் தானே என்றுதான் தோன்றுகிறதே தவிர. அதை மறுக்கும் நுாலாசிரியரின் நிலையோடு நம்மால் உடண்பட முடியவில்லை. அம்பேத்கர் முன்வைக்கும் எல்லா வரலாற்றுத் தகவல்களுக்கும் அவர் பழைய இலக்கியங்கள் பலவற்றிலிருந்த தெளிவான ஆதாரங்களை கொடுக்கிறார் என்பதை நுாலாசிரியரின் நுாலிலிருந்தே தெரிந்து கொள்ளவும் முடிகிறது.

பக்கம் 53ல் அம்பேத்கரின் ஒரு மேற்கோளைப் போட்டு ஒரு விவாதத்தை நடத்துகிறார். அந்த மேற்கோளில் அம்பேத்கர், இந்தோ-ஆரிய சமுதாயத்தை சேர்ந்த சூத்திரர்கள் இந்து சமுதாயத்தை சேர்ந்த சூத்தரர்களிடமிருந்து வேறுபட்டதொரு சூத்திரர்களாவர் என்கிறார். இதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் சமகால வரலாற்றிற்கும் எங்கும் நேரடியாக பொருத்திப் பார்க்கக்கூடாது, அது வரலாற்றை புரிந்து கொள்ளும் சரியான வழிமுறையாகாது. அதைச் சரியாகவே அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அன்றைக்கு வேறுபட்ட சமூகங்களுக்குள் நடந்த சண்டையாக இருந்த நிலையிலிருந்து பல்வேறு சமூகங்கள் ஒன்று கலந்து இந்திய துணைக்கண்டத்தில் இன்றைக்கு நாம் காணும் ஒரே சமூகம் வந்திருக்கிறது. இன்றைக்கு உள்ள பிரச்சினை ஒரே சமூகத்திற்குள்ளான பிரச்சினை அதனால் எவ்வகையிலும் இன்றைய பிரச்சினைகளை நேற்றைய பிரச்சினைகளோடு முடிச்சுப் போட முடியாது. அம்பேத்கர் சொல்கிறபடி இன்றைய சூத்திரர்களுக்கான மூலத் தோற்றம் அதுவாகவே இருந்தாலும் அன்றைய சூத்திரர்களின் பிரச்சினைகளும், நிலைமைகளும், சமூக அமைப்புகளும் வேறு, இன்றைய சூத்திரர்களின் பிரச்சினைகளும், நிலைமைகளும், சமூக அமைப்புகளும் வேறு. பண்பளவில் அந்த மனிதனே வேறு இந்த மனிதனே வேறு.

(இப்படியாக போய்க் கொண்டிருக்கிறது எனது விமர்சனம்…)

ரங்கநாயகம்மா நுால் “சாதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு…” குறித்த வாசிப்பனுபவங்கள் – 2

-பேஸ்புக்கில்

18 ஆகஸ்ட், 2016

இந்த நுாலில் ரங்கநாயகம்மா கேட்கும் சில கேள்விகளை எடுத்துக் கொண்டு விவாதித்தால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

1. ஏன் இந்து மத நுால்கள், புராணங்கள், யஞ்கோபவீதம், கலியுகம், சடங்குகள் குறித்து ஆர்வத்தோடும், இத்தனை நீளமாக அம்பேத்கர் பேச வேண்டும்?

இரண்டு விதமான அணுகுமுறைகள் உள்ளன

1. நமக்கு எதிரே இருக்கும் ஒரு பொருளையோ, மனிதரையோ, சமூக இயக்கத்தையோ இது ஏன் நான் நினைத்தவாறு, விரும்பியவாறு, எதிர்பார்க்குமாறு இல்லை என்ற நோக்கிலிருந்து அணுகுவது
2. அவை ஏன் அவ்வாறு இருக்கிறது, அது அவ்வாறு இருப்பதற்கான அதன் அக புற காரணிகள் என்ன என்ற நோக்கிலிருந்து அணுகுவது

இங்கே இந்த நுாலில் முதல்வகை அணுகுமுறையே கையாளப்பட்டிருக்கிறது.

அம்பேத்கரை புரிந்து கொள்வதற்கு அவருடைய ஆளுமையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவருடைய சமகால உலகம், அதன் விவாதங்கள், முன்னெடுப்புகள் ஆகிய பின்புலத்திலிருந்து அவரை அணுக வேண்டும்.

அம்பேத்கர் யார்?

மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு பகுதியில் ஒடுக்கப்பட்ட மகர் இனத்தில் இரண்டு மூன்று தலைமுறையாக பிரிட்டிஷ் இராணுவத்தில் வேலை செய்த குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவருக்கு கல்வியில் இள வயதிலிருந்தே நல்ல ஆர்வம் இருந்திருக்கிறது. அவரை படிக்க வைக்க ஆர்வமும் சக்தியுமுள்ள குடும்பத்திலிருந்து வருகிறார். ஆனாலும் சமூகம் சாதியரீதியாக தொடர்ந்து அவரை அவமானப்படுத்தவும், பொது சமூகத்தின் அனைத்து உரிமைகளும் மறுக்கவும் செய்கிறது. அவரது சமகால உலகில் இந்தியாவின் பல இடங்களிலும் பொருளாதாரரீதியாக முன்னேறும் வாய்ப்புகளும், முன்னேறவும் செய்கிற பல தலித்கள் தாக்கப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் காண்கிறார். இத்தகைய அம்சங்கள் அம்பேத்கரின் சிந்தனாமுறையிலும், செயல்பாட்டிலும் தீர்மானகரமான தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காண்கிறோம்.

அரசாங்கம் தலித்கள் பள்ளிக்கூடம் வரவும் படிக்கவும் அனைவருக்கும் போல் சமமாக உரிமை கொடுத்தாலும் சாதி இந்துக்கள் அதை பொறுக்க முடியாமல் பெரும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். சக மாணவர்களோடு ஒன்றாக அமரவும், ஒரே பானையில் தண்ணீர் அருந்தவும் அனுமதிப்பதில்லை.
பரோடா மன்னரின் ஆசியோடும், உதவியோடும் படிக்க முடிகிறது. அமெரிக்கா சென்று பொருளாதாரத் துறையில் ஆய்வு செய்து பட்டம் பெற முடிகிறது. இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் யாரும் செய்திடாத சாதனையாக முதன்முறையாக ஒரு நுாற்றாண்டு இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வை செய்ய முடிகிறது. இங்கிலாந்து சென்று தத்துவமும், சட்டமும் பயின்று பார் அட் லா ஆக முடிகிறது. திரும்பி வந்து பரோடா சமஸ்தானத்தில் கணக்குத்துறையில் அதிகாரியாக வேலை செய்ய முடிகிறது, பின்னாட்களில் வெற்றிகரமான வக்கீலாக தொழில் செய்ய முடிகிறது. ஆனால் அதே ஊரில் ஒரு வீடு எடுக்க முடியவில்லை. ஆக பொருளாதாரரீதியாக தங்களால் சாதிக்கமுடியும், முன்னே வர முடியும் ஆனால் சாதியும் அது சார்ந்த கலாச்சாரமும் தான் தங்களுக்கு பெரும் தடை என்பதாக வாழ்க்கை அனுபவங்கள் பாடம் புகட்டிக் கொண்டே இருக்கிறது.

அறிவு குறித்த ஆதிக்க சாதிகளின் பிற்போக்கு கோட்பாடுகள், அறிவை பெறுவதற்கும், வளர்ப்பதற்கும் பாரம்பரியமாக எங்களால் மட்டுமே முடியும். உங்களுக்கு அறிவை பெறும், வளர்க்கும் ஆற்றலும் திறமையும் கிடையாது என்கிற கருத்துக்களை தன் வாழ்வையே முன்னுதாரணமாக வைத்து அடித்து நொறுக்கி குப்பைக் கூடையில் எறிந்த அம்பேத்கரால், அன்றைக்கு இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் குறித்து தீவிரமாக பேசிக் கொண்டிருந்த ஆரிய சமாஜம் போன்றவற்றோடு, நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டது அப்படித்தான் அவருடைய இந்துமதம் குறித்த ஆரம்பகால தீவிர எழுத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்சிய ஆய்வுமுறை என்பது பொருட்களையோ, மனிதர்களையோ, சமூகத்தையோ இயங்கா நிலையில் வைத்து, சட நிலையில் வைத்து ஆய்வு செய்வதில்லை மாறாக அவற்றை அவற்றின் இயக்க நிலையில் வைத்து ஆய்வு செய்வதே.

அம்பேத்கரை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றால், அம்பேத்கர் என்னும் ஆளுமையின் தோற்றம் வளர்ச்சி என்கிற முறையான வளர்ச்சி பரிணாமத்தில் வைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு அவருடைய எழுத்துக்களையும் செயல்களையும் காலவரிசையில் ஒழுங்கு செய்து கொண்டு அவற்றின் தொடர்ச்சியில் ஆய்வு செய்ய வேண்டும்.

அம்பேத்கர் தன்னுடைய ஆரம்ப கட்டங்களில் தொடர்ச்சியாக இந்துமதத்திற்குள் தீவிர சீர்திருத்தத்திற்காக எழுத்தாலும் செயலாலும் போராடுகிறார். அந்த காலகட்டத்தின் அவருடைய எழுத்துக்களில், இந்துமத இலக்கியங்களோடு ஒரு உடண்பாட்டுத் தன்மையிலான ஒரு உரையாடலை நாம் காண முடிகிறது. அடுத்த கட்டங்களில் கடும் போராட்டங்களின் தோல்விகளிலிருந்து இதற்குள்ளான சீர்திருத்தங்கள் சாத்தியமில்லை என்கிற முடிவுகளுக்கு வருகிறார். அப்பொழுது அவர் பிற மதங்கள் குறித்த வாசிப்புகளிலும், ஆய்வுகளிலும் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அவர் இந்துமதத்தை துறந்து வேறு மதத்திற்குப் போகப்போவதாக அறிவிக்கிறார். அப்பொழுதும் அவருக்கு இந்துமதத்திலிருந்து கடும் நெருக்கடி வருகிறது. சீக்கிய மதத்திற்கு கூட செல்லுங்கள் ஆனால் அந்நிய மதங்களுக்கு போவதை ஏற்றுக் கொள்ள முடியாது என. அவர் பௌத்தத்தை தேர்ந்தெடுக்கிறார். இங்கே தமிழகத்தில் கூட இத்தகைய போக்கை நாம் அயோத்திதாசப் பண்டிதர் போன்றவர்களிடம் காண முடிகிறது.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நுாற்றாண்டின் மாறிய சூழலில், வெள்ளையர் ஆட்சியின் கீழ் ஒரு வகை அறிவொளி இயக்கம் இந்தியாவில் பரவிவந்ததன் பின்னணியில், சாதி, இந்திய சமூகத்தில் நிகழ்த்தத் துவங்கிய பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசாங்கம் ஒப்பீட்டளவில் தலித்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனால் சமூகம் அவர்களுக்கு எதிராக இருக்கிறது. தலித்களின் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அங்கீகரிக்கிற அரசாங்கத்தின் போக்கால் சாதி இந்துக்கள் மேலும் மேலும் வெறுப்படைகிறார்கள். இச்சூழலை எதிர்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வரலாற்றின் நீண்டகால பிரச்சினை ஒன்றிற்கு தீர்வு காண முயல்கிறார்கள் அம்பேத்கர் போன்றவர்கள்.

சாதிய பிரச்சினையை அதன் சமூக, உற்பத்தி, பொருளாதார பின்புலங்களிலிருந்து பார்ப்பதற்கு மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல அம்பேத்கர். அவர் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அதன் அடிப்படையையே நிராகரித்தவர். அவர் மார்க்சியத்தின் அடிப்படையான உபரி மதிப்புக் கோட்பாட்டையே மறுத்து நீண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தொன்னுாற்றி ஒன்பது சதம் பொருளாதார அறிஞர்கள் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் என்கிற பின்னணியில் அம்பேத்கர் என்னும் பொருளாதார அறிஞரின் இந்த நிலை ஆச்சரியத்திற்குரியதல்ல. அமெரிக்க இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்து வளர்ந்த இந்தியராகிய அம்பேத்கர் அதை ஏற்றுக் கொண்டிருந்தால்தான் அது ஆச்சர்யம்.

(தொடரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: