எனது நாட்குறிப்புகள்

லெனின் சின்னத்தம்பி நாவல் ஒரு வாசிப்பனுபவம்

Posted by ம​கேஷ் மேல் மே 21, 2017

nullகடந்த மே 1 முதல் 7ம் தேதி அலுவலக வேலையாக பெர்லின் சென்றிருந்தேன். லன்டனில் உள்ள தோழர் மூலமாக தோழர் ஜீவமுரளி அறிமுகம் கிடைத்து, ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடன் இரண்டு நாட்கள் பெர்லினின் சில இடங்களுக்கு சென்று பார்த்தேன்.

அவருடைய ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலையும், ‘வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை’ கட்டுரைத் தொகுப்பையும் எனக்கு அளித்தார். பல கட்டுரைகளை அங்கேயே வைத்து வாசி்த்தேன்.

நாவலை மே 8ம் தேதி ஞாயிறு விமான பயணத்தில் படிக்க துவங்கினேன். மே 19ம் தேதி வெள்ளிக்கிழமையோடு நாவலை படித்து முடித்தேன். எத்தனையோ நாவல்களை துவங்கி சில பக்கங்களிலேயோ, பாதியிலேயோ கூட நிறுத்தியிருக்கிறேன். இன்னும் கூட அந்த நாவல்களின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. சில நாவல்களை மிகுந்த எதிர்பார்ப்போடு வாங்கிவிட்டு ஏமாற்றத்தோடு முழுமையாக படிக்காமல் வைத்திருக்கிறேன். இது போன்ற வெகு சில நாவல்களைத்தான் இத்தனை ஆர்வத்தோடு விடாமல் தொடர்ந்து படித்து சில நாட்களில் முடித்திருக்கிறேன்.

இந்நாவல், அந்த வகையில் படிக்க சுவாரசியமாகவும், எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. மிகச்சில கதாபாத்திரங்கள், மூன்றே இடங்கள், அதிலும் ஒரு உணவுத் தொழிற்சாலையின் பெரிய சமையலறைதான் 99 சதவீத கதை நிகழும் இடம். இப்படிப்பட்ட மிகச்சிறு இடத்தில் இத்தனை விறுவிறுப்பாக ஒரு 255 பக்க நாவலை வாசகனின் ஆர்வம் கெடாமல் நிகழ்த்தி முடித்திருப்பது ஒரு சாதனைதான்.

கதை துவங்கி13ம் பக்கம் வரைதான் கதை கதாநாயகனின் இல்லத்தில் நிகழ்கிறது. அதன் பிறகு முழுவதும் உணவுத் தொழிற்சாலையின் சமையலறையில்தான் காய்கறி நறுக்கிக் கொண்டே, பாத்திரங்களை கழுவிக் கொண்டே, குப்பைகளையும், சாப்பிட்ட மற்றும் கழுவ வேண்டிய பாத்திரங்களை பொறுக்கிக் கொண்டேயும் தன்னுடனே நம்மையும் அழைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தின் அன்றாட வாழ்க்கை, பிரச்சினைகள், போரட்டங்கள், சிக்கல்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தி காட்டிக் கொண்டே போகிறார் ஆசிரியர். மீண்டும் வீட்டிற்கு 156ம் பக்கத்தில் வந்து 164ம் பக்கத்தில் மீண்டும் வேலைக்கு கிளம்பி விடுகிறார். இறுதியில் நாவல் முடிகிற போதுதான் அதாவது 246ம் பக்கத்தில் மீண்டும் வீடடைகிறார்.

நாவல் தனிப்பட்ட முறையில் என்னை சுவாரசியமாக இழுத்ததற்கு பல காரணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள். 5 அல்லது 6 நாட்களில் உலகின் மிகப்பெரிய நகர் ஒன்றை எந்தளவிற்கு ஒருவனால் முழுமையாக பார்த்து விளங்கிக் கொண்டுவிட முடியும்? இந்தியாவில் சென்னையில் நாம் கற்பனையும் செய்து பார்த்திராத ஒரு வாழ்க்கை, கலாச்சாரம், நகரம், பிரம்மாண்டமான கட்டிடங்கள், வெகு சுத்தமான சாலைகள், மக்கள் தேவைக்கு ஏற்ப கணக்கச்சிதமான ஒழுங்கு குலையாத போக்குவரத்துகள், இவற்றிற்குள் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. அவர்களுடைய அன்றாட நடைமுறைகள் என்ன? அவர்களுடைய விருப்பு வெறுப்புகள், குடும்பம், விழாக்கள், பொழுது போக்குகள், பரஸ்பர உறவுகள், உரையாடல்கள், இப்படி ஒவ்வொன்றும் எப்படி இருக்கும்? அரசுக்கும் மக்களுக்குமான உறவுகள் அன்றாட வாழ்வில் அதன் பல்வேறு தளங்களில் எப்படி இருக்கும்? கிழக்கு ஜெர்மன் மேற்கு ஜெர்மன் மக்களின், வாழ்க்கையின், கலாச்சாரத்தின், மன அமைப்புகள், குணாதிசயங்கள், வித்தியாசங்கள் என்ன? பாசிச காலகட்டம் பற்றியும், ஹிட்லர் ஆட்சி அன்றைய ஜெர்மன் குறித்தும் பொதுவான அம்மக்களின் பார்வைகள் என்ன? அகதிகளாக இலங்கையிலிருந்து பெர்ளின் சென்ற மக்கள் எப்படி முற்றிலும் புதிய சூழல்களில் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள்? என்னென்ன சௌகரியங்களையும் அசௌகரியங்களையும் புதிய நிலத்தில் அவர்கள் அனுபவிக்கிறார்கள், என்பதாக நான் தெரிந்து கொள்ள விளைந்த விசயங்களின் எண்ணிக்கை பட்டியலிடத் துவங்கினால் பெருகிக் கொண்டே போகிறது. இவற்றையெல்லாம் இது போன்ற நாவல்களில் வழி தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வம் இதனை மிகுதியாக்கியது.

நாவலின் முதல் பக்கங்கள், நான் நேரில் சென்று பார்த்த ஆசிரியரின் வீட்டை அப்படியே படம் பிடித்துக் காட்டிக் கொண்டு சென்றது, என்னை நாவல் பலமாக உள்ளிழுக்க ஒரு காரணமாக அமைந்தது. தற்பொழுது வேலையில்லாமல் இருப்பதாகவும், வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்ன ஆசிரியரின் கடந்த கால ஜெர்மன் வாழ்வை முழுமையாக இரு நாட்களில் பேசித் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. நாவல் மற்றும் அவருடைய கட்டுரைகள் வாயிலாக அவருடைய தனிப்பட்ட வாழ்வையும், அவருடைய அரசியல் மற்றும் இலக்கிய விருப்பங்களையும், கருத்துக்களையும் மிக விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.

அவ்வளவு விரிந்த பரந்த நகரையும், அதன் பலதரப்பு மக்களின் வாழ்வையும், அதன் சமூக கலாச்சார அம்சங்களையும், ஏதிலிகள் இச்சூழலை எவ்வாறு விளங்கிக் கொண்டார்கள், எப்படி இதோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள போராடுகிறார்கள் அல்லது படுத்திக் கொண்டார்கள். என இன்னும் விரிவான தளங்களில் என் எதிர்பார்ப்புகள் இந்நாவலில் கிடைக்கவில்லை என்ற பொழுதிலும், ஒரு தொழிற்சாலை அதற்குள் வரும் பலதரப்பட்ட மனிதர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பலதரப்பிலான பிரச்சினைகளின் வழியாக கோடிட்டு காட்டிச் செல்கிறது நாவல்.

நாவல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஒத்த தன்மைகளை மிக அழுத்தமாக கூறுவதன் மூலமாக ஒரு யுனிவர்சாலிடியை உருவாக்கிக் காட்டுவதில் வெற்றி பெறுகிறது. தொழிற்சாலைகள் இயங்கும் விதமும், முதலாளிகள், அவர்களுக்கு கீழே மேற்பார்வையாளர்கள், முதலாளிகளையும், அவர்களின் உரிமைகளையும், சலுகைகளையும், சொத்துக்களையும் பாதுகாப்பதில் அரசும், அதன் நிர்வாகமும் காட்டுகிற அக்கறையையும், தொழிலாளர் நலம் நாடும் அரசுகள் என்று சொல்லிக் கொண்டாலும் தொழிலாளர்களை ஏமாற்றுவதில், நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதில் என இந்த யுனிவர்சாலிடி மிகத் தத்ரூபமாக கண் முன்னே காட்சிப்படுத்தப்படுகிறது.

இன்னொரு வகையிலும் இந்நாவல் இந்த யுனிவர்சாலிடியை சரியாக கடைபிடிக்கிறது. நம சமகாலத்தில் தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், உழைப்புச் சுரண்டல்கள், போன்றவற்றை மையம் வைத்து வரும் நாவல்களில், தொழிற்சங்கங்களோ, தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதோ, சங்கம் அமைத்து போராடுவதோ வருவதில்லை. இந்திய தமிழக நாவல்கள் பலவற்றின் மீது ஒரு விமர்சனமாகவும், குறையாகவும் முன்வைக்கப்படுகிறது. இந்த இலக்கணங்கள் இந்திய தமிழகத்திற்கு மட்டுமில்லை, உலகம் முழுவதற்கும் பொதுவானதுதான் என இந்நாவல் நிரூபிக்கிறது. இவற்றின் ஊடாகத்தான் நம் காலத்தை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குமான வித்தியாசம், அங்கெல்லாம் நளினமாகவும், நாசூக்காகவும், சட்டவழி நின்றே தாங்கள் அனைத்தையும் செய்வதான பாவனை மாறாமலும் செய்கிறார்கள். உலகைக் கொள்ளையடிக்கிற மிக பிரம்மாண்டமான செல்வத்தின் மிகச் சிறு பகுதியில் தங்கள் நகரையும், அடிப்படை கல்வி, சுகாதார வசதிகளையும் பராமரிக்கிறார்கள். இதைக்கானும் மூன்றாம் உலகத்தவன் முதல்பார்வையில் சொக்கி தன்னுடைய அடிப்படை புரிதல்களில் சறுக்கியும், குழம்பியும் விடுகிறான்.

என்னை ஆச்சர்யப்படுத்திய நாவலின் சில அம்சங்கள்: மற்றவர்கள் அனைவரையும் அவன் என்றே விளிக்கும் ஆசிரியர் மறந்தும் லெனின் சின்னத்தம்பியை ஒரு இடத்திலும் அவ்வாறு விளிக்கவில்லை. நிறைய ஜெர்மனின் புழக்க, பொருட்கள், மற்றும் உணவுகளின் பெயர்களும் சொற்களும் எம்போன்றவர்களுக்காக எந்த விளக்கமும் கொடுக்காமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. (இதை நாவல் குறித்த அறிமுகத்திலேயே என்னிடம் ஜீவமுரளி குறிப்பிட்டிருந்தார்). அதே போல அத்தியாயங்கள் பிரிக்காமல் 255 பக்கத்தில் ஒரு நாவல் ஒரே அத்தியாயமாக எழுதி முடிக்கப்பட்டுள்ளது. நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. சில இடங்களில் இது எழுத்துப்பிழையா அல்லது இலங்கையைச் சேர்ந்த தமிழ் சொல் அல்லது எழுத்து வழக்கா என்ற குழப்பத்தையும் என் போன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்துகிறது,

ஒரு நல்ல நாவல் அடிப்படையில் கடைசி வரை வாசிக்க துாண்ட வேண்டும். இரண்டாவது, உலகம் முழுவதும் உள்ள மக்களோடு வாசகன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துாண்ட வேண்டும். இவ்வுலகம் குறித்த மாயைகளை உடைத்து நிதர்சனங்களை உணர்த்த வேண்டும். ஒரு இலக்கிய அனுபவமாக வாசகனின் மனத்தில் நின்று உரையாட வேண்டும். இத்தகைய அனைத்துத் தளங்களிலும் இந்நாவல் எனக்கு நல்லதொரு அனுபவமாகியது.

தன்னுடைய முந்தைய 24 வருட இலங்கை, இந்திய வாழ்வையும், ஐரோப்பாவில் வேலை சூழலுக்கு அப்பாலான அனுபவங்களையும் இணைத்திருந்தால், நாவல் இன்னும் கனமானதாக இன்னும் முழுமையானதாக ஆகியிருக்குமோ என்ற ஒரு ஆவல் தோன்றியது.

முதலாளித்துவம், முதலாளி, தொழிலாளி, தொழிற்சாலை, அரசு என்ற இந்த வட்டம் மிக முக்கியமானது இதுதான் நம் வாழ்வின் பிற எல்லா தொடர்புகளுக்கும், உறவுகளுக்கும் அடிப்படையானது. பெரும்பாலான நாவல்கள், இலக்கியங்கள் இந்த அடிப்படையான வட்டத்தில் மனிதர்களின் வாழ்வை மிகக் குறைவாகவே பேசுகிறது. மாறாக இந்நாவல் அந்த வாழ்வையே பிரதானமாகவும், முற்று முழுதாகவும் பேசுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: