எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன், 2017

கனவின் மாயா உலகத்திலே

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 24, 2017

எல்லா கனவுகளும்
ஒரே வகையிலானது இல்லை.
அந்த வகைக் கனவுகள்
ஹருகி முராகமியின்
பூனைகள் நகரத்தைப் போல
ஒரு வழிப் பாதையில் அமைந்தவை.
நிதானமாக
ஒரு தொடர்வண்டியில் வந்து
இறக்கிவிடப்பட்டதைப் போல
இறக்கிவிடப்படுவோம்.
அந்த கனவு நிலத்தில்
கால் வைத்துவிட்டு
திரும்பிப் பார்த்தால்
அந்தத் தொடர்வண்டி
அந்த தொடர்வண்டி நிலையம்
எல்லாமும் நொடியில் மறைந்துவிடும்

ஆதியும் அந்தமுமற்ற
கருஞ்சுழிக்குள் விழுபவர்களைப் போல
அதற்குள் விழுந்து கொண்டே
இருக்க வேண்டியதுதான்
காலாதீதமாக.

பிறகு அங்கே
யாரோ எதற்கோ துரத்துவார்கள்
ஏன் எதற்கு என்றெல்லாம்
கேள்வி கேட்டுக் கொண்டிருக்க முடியாது
ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
யாரோ எதற்கோ திட்டுவார்கள்
ஏன் எதற்கு என்றெல்லாம்
யோசித்துக் கொண்டிருக்க முடியாது
அழுது கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஓடுவதும், அழுவதும் கூட
அந்த கனவுலகத்தின் சூத்திரதாரிகள்
அனுமதிக்கும் எல்லைவரைதான்.
காலுக்கு கீழிருந்து நிலத்தை பறிப்பார்கள்
கால்கள் ஓடிக்கொண்டே இருக்கும்
நம்மால் ஓரடியும் தாண்டியிருக்க முடியாது.
கண்ணீரை நிறுத்திவிடுவார்கள்.
அழுத நிறைவின்றி
கனத்த இதயத்தை கரைத்துக் கொள்ளவே முடியாது.

அந்த நிலத்தில் உங்களுக்கு
மொழி கிடையாது
நிறம் கிடையாது
இனம் கிடையாது
பாலினம் கிடையாது
உற்றார் உறவினர்
நட்பு எதுவும் கிடையாது.
இவை குறித்த
எந்தச் சிந்தனையும் கிடையாது.

அந்த கனவுலகம் முழுவதும்
குறுக்கும் நெடுக்குமாக
மக்கள் அலைந்து கொண்டே இருப்பார்கள்
அந்நிய தேசத்தின் நகரமொன்றில்
தனித்துவிடப்பட்டவரைப் போல
அரையிருட்டில்
மணிரத்னம் படம் ஒன்றிற்குள்
சிக்கிக் கொண்டவரைப் போல
பூனைகள் நகரமொன்றில்
சிக்கிக் கொண்ட சுன்டெலியைப் போல
துளாவிக் கொண்டே அலைந்து கொண்டிருப்பீர்கள்

திடுக்கிட்டு
அந்தக் கனவிலிருந்து பிடுங்கிக் கொண்டு
நனைவில் வந்து விழ முடிந்தவர்கள்
அதிர்ஷ்டம் செய்தவர்களே.

Posted in கவிதைகள் | Leave a Comment »

வாஞ்சியும் தலித்துக்களும்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 24, 2017

“வாஞ்சியும் தலித்துக்களும்” என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையில் பெரிய வேறுபாடு இல்லாவிட்டாலும். அவருடைய அரசியல் வில்லத்தனத்தை ஆங்காங்கே காட்டவே செய்கிறார். அதையும், கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்தகும் விதமாக தக்க தர்க்கத்தை காட்டும் திறத்தோடே செய்வார்.

வேண்டுமென்றே “நெல்லையில் இந்தியா சுதந்திரம் பெறும் காலம் வரை பல கிறித்தவ தேவாலயங்களில் தலித்துக்கள் அனுமதிக்கப்படவில்லை” என்ற கருத்தை வலிந்து திணிக்கிறார். அதனை சாதி விசயத்தில் நிலவுகிற சமூகத்தின் சாதியப் போக்கோடு அவர்கள் சமரசம் செய்து கொண்டிருந்தார்கள் என்பதற்கான உதாரணமாகத்தான் பாவித்ததாக நியாயப்படுத்துவார்.

மேலே சொன்னதை விட படுமோசமான கருத்து, அடுத்து வருகிறது “வரலாற்றில் வெள்ளை ஆட்சிக்காலம் அளவுக்கு ஜமீன்தார்கள் அதிகாரத்துடன் என்றும் இருந்ததில்லை.” தனக்கு மேலே வேறொரு அதிகாரம் இருக்கும் பொழுதே, அதுவும் மேற்கத்திய மதிப்பீடுகளை தங்களின் அரசியல் நிர்வாக தேவைகளுக்காகவேனும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெள்ளையர்கள் அதிகாரத்தின் கீழே அவர்கள் அத்தனை அதிகாரத்துடன் இருக்கிறார்கள் என்றால், அதற்கு முன்பு சொல்லவும் வேண்டுமோ. அப்படியில்லாமல்தான் அன்றைய தலித்களும், ஏன் பிற்படுத்தபட்டவர்களில் கூட பலரும் (நீதிக் கட்சி போன்ற) வெள்ளை ஆட்சியை ஆதரித்தார்களா? வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு போனால் நம் கதி என்னவாகும் என பயந்தார்களா?

மேலும் “தலித்துக்களில் பெரும்பகுதி பஞ்சத்தில் இறந்தனர். ஆனால் பிரிட்டிஷார் அந்தப்பஞ்சத்திற்குக் காரணம் என்னும் உணர்வு அன்றிருக்கவில்லை. அவர்கள் செய்த எளிய நிவாரண உதவிகள் பெரிய கொடையாக கருதப்பட்டன” தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் பார்வையில் வெள்ளையர் ஆட்சி அப்படிப்பட்ட எளிய நிவாரணமா என்ன? வெள்ளையர் காலம் உண்மையிலேயே உலகின் சாளரத்தை இந்திய மக்களுக்கு திறந்துவிட்டது, புதிய பாணியில் சிந்திக்கும் மனிதர்களை உருவாக்கிவிட்டது, சாதியத்தில் மிகப் பெரும் உடைவை கொண்டு வந்தது, நவீன மனிதனை இந்தியப் பெருங்கண்டத்தில் உருவாக்கியது என்பதெல்லாம் அத்தனை சாதாரண விசயங்களா? இதற்கெல்லாம் எந்த உத்திரவாதங்களையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் போன்றவை வழங்காதது வெட்கக்கேடு.

கெட்டிக்காரர்தான் ஜெயமோகன். ஆர்எஸ்எஸ் அஜென்டாவிலிருந்து ஒரு துளியும் விலகாமல், ராஜீவ் மல்ஹோத்ராவிலிருந்து அரவிந்தன் நீலகண்டன் வரை அனைவரின் அரசியல் கோட்பாடுகளையும் அடிபிறழாமல் ஒவ்வொரு எழுத்திலும் முன்வைக்கிறார்.


  • 18 ஜுன் 2017 இரவு 8.00 மணிக்க பேஸ்புக்கில் இட்ட பதிவு

 

Posted in கட்டு​ரை | 1 Comment »

காலுக்கு கீழும் வானம்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 24, 2017

airplane

அண்ணாந்து பார்த்த மேகங்களை
இப்பொழுது தலை குணிந்து பார்க்கிறேன்
தலைக்கு மேலே மட்டுமல்ல
கீழேயும் வானம்தான்
பூமியில் கால் பாவாத பொழுதுகளில்
என் இருப்பை எதைக் கொண்டு அளப்பேன்
நான் மேலும் இல்லை
கீழும் இல்லை
இடதும் இல்லை வலதும் இல்லை
வடக்கும் இல்லை தெற்கும் இல்லை
என் இருத்தல் குறித்த எல்லா பிரமைகளையும்
என் வாழ்வு குறித்த எல்லா சாசுவதங்களையும்
எனக்குள் புரட்டிப் போடுகிறது
ஒரு ஆகாய விமானம்

Posted in கவிதைகள் | Leave a Comment »

பேன் பார்த்த ஜிம்பன்சி *

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 24, 2017

காலையிலிருந்து
ஒரே தலை அரிப்பு
சொரிந்து கொண்டே இருக்கிறேன்.
அசிங்கமாக இருக்கும் என
கையைத் தடுத்தாலும்
எப்பொழுது அது
திருப்பி தலைக்கு
போனதென்றே தெரிவதில்லை

இரவு துாக்கத்தில்
வீடு முழுவதும்
ஜிம்பன்சிக்கள்.
அவை எங்கள்
குடும்ப உறுப்பினர்களாக
வெகு காலம்
வாழ்ந்து வருகின்றன போலும்.

அங்கும் நான்
தலை அரிப்புடனே
அலைகிறேன்.

ஒரு இளம் பெண் ஜிம்பன்சி
எனக்கு பேன் பார்த்து
விடுவதாக அழைத்துச் செல்கிறது.

பேன் பார்ப்பது
குரங்குகளுக்குத்தான்
பிடித்த
பெரும் பொழுது போக்காச்சே

எனக்கு பின்னால்
என்னை உரசியவாறு
உட்கார்ந்து கொண்டு
தலையில் தலை
வைத்துக் கொண்டிருக்கிறது.

கையால் எடுக்கிறதா
வாயால் எடுக்கிறதா
தெரியவில்லை
தலை ஊறுகிறது.
கூச்சமாக இருக்கிறது.

அதன் உறுப்புகள்
என் உடலில்
உரசிக் கொண்டே இருக்கின்றன.

“எனக்கு ஒரு மாதிரி
இருக்கிறது
என்கிறது” என்னிடம்.

பரவாயில்லை.
போதும் நீ ஓய்வெடுத்துக் கொள்
எனச் சொல்லிக் கொண்டே
தப்பித்தோம் பிழைத்தோம் என
நான் கழிவறைக்கு ஓடுகிறேன்.

யாரும் பார்ப்பதற்கு முன்
என் தோள்பட்டையையும்
இடுப்புப் பகுதியையும்
கழுவிக் கொள்வதற்காக.
———–
*19 june 2017 அன்று விஷ்னுபுரம் விருது வழங்கப்பட்ட சபரிநாதனின் கவிதைகள் படித்ததன் விளைவாக எழுதியது.

Posted in கவிதைகள் | Leave a Comment »