எனது நாட்குறிப்புகள்

The Belko Experiment

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 22, 2017

“The Belko Experiment” என்றொரு படம். 2016ல் வெளிவந்திருக்கிறது. இன்று இரவு பார்த்தேன். கொலம்பியாவின் புற நகர்ப் பகுதியில் உள்ள ஒரு லாப நோக்கமற்ற பெரிய நிறுவனம். அதில் 80ற்கும் மேலான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

கொலம்பியாவின் நிலவரப்படி இது போன்ற நிறுவன கட்டிடங்கள் கடும் பாதுகாப்பு வளையங்களில் உள்ளன. வழக்கம் போல ஒரு நாள் காலை வேலைக்கு வரும் ஊழியர்கள். அசாதாரணமான பாதுகாப்பு சோதனைகளை எதிர் கொள்கிறார்கள். பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் புதியவர்களாக உள்ளனர்.

அலுவலகத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்த சில நிமிடங்களில், அலுவலக ஒலிபெருக்கியில் ஒரு செய்தி வருகிறது. உங்களில் யாரேனும் இருவரை நீங்களே கொலை செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் பலரை கொன்றுவிடுவோம் என. இது யாரோ விளையாடுகிறார்கள் என அசட்டையாக இருக்கிறார்கள். வெகு சீக்கரத்தில் நிலமை மோசமாகிறது. திடீரென சில ஊழியர்கள் தலைவெடித்து கோரமாக இறக்கிறார்கள்.

அனைவருக்கும் விபரீதம் புரிந்து கட்டிடத்தை விட்டு வெளியேற நினைக்கிறார்கள். அதற்குள் கட்டிடத்தின் வெளிப்புறம் முழுவதும் இரும்புக் கதவுகளால் ஒரு ஜன்னல் பாக்கியில்லாமல் அந்த பிரம்மாண்ட கட்டிடம் முழுவதும் மூடிக் கொள்கிறது.

மீண்டும் ஒரு அறிவிப்பு. இம்முறை உங்களில் 30 பேரை நீங்களே கொன்றுவிடுங்கள் இல்லாவிட்டால் நாங்கள் 60 பேரைக் கொன்று விடுவோம் என்று அறிவிக்கப்படுகிறது. யார் இந்த அறிவிப்புக் குரலுக்கு சொந்தக்காரர். அவருடைய எதிர்பார்ப்பு என்ன? எதுவும் யாருக்கும் புரியவில்லை.

தப்பிப்பதற்காக மொட்டைமாடிக்கு ஓடுகிறார்கள். கண்ணுக்கெட்டிய துாரம் வரை அக்கட்டிடத்தைச் சுற்றி ஆளரவமற்ற வனாந்திரமாக இருக்கிறது. துாரத்தில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி துாரத்தில் புறவழிச் சாலை ஒன்றும் அதில் சில சரக்கு லாரிகள் அவ்வப்பொழுது போய்க் கொண்டிருக்கின்றன. இங்கிருந்து யாரையும் உதவிக்கு அழைக்க முடியாது.

இதற்குள் கட்டிடத்தில் உள்ள அனைவருக்கும், உயிர்ப்பயம் தொற்றிக் கொண்டுவிடுகிறது. அனைவரின் முகமும் கலவரத்தால் மாறி விடுகிறது. நடவடிக்கைகளில் வித்தியாசம் தோன்றத் துவங்கிவிடுகிறது. அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னுடன் மூன்று ஊழியர்களை துணைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஆயுதங்கள் சகிதமாக தங்களில் முப்பது பேரை கொலை செய்ய தேர்ந்தெடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். ஊழியர்களில் இன்னொரு பிரிவு கதாநாயகன் நாயகி தலைமையில் தப்பிப்பதற்கான உபாயங்களை தேடலாம், நம்மில் சிலரை கொலை செய்வது தவறு என அவர்களுடன் போராடுகிறார்கள்.

கதாநாயகன் உட்பட முப்பது பேரை தேர்ந்தெடுத்து அந்தக் குழு ஒவ்வொருவராக கொல்லத் துவங்கிவிடுகிறது. இந்த கலவரத்தில், அன்றுதான் முதன்முதலாக அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த பெண் நிலவரையில் பயத்தில் பதுங்கி இருக்கிறாள். அவள் சத்தம் கேட்டு மேலே வந்து பார்க்கிறாள். ஊழியர்கள் சக ஊழியர்களாலேயே உயிருக்கு பயந்து கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, நிலவரைக்கு ஓடி மைய மின்சார இணைப்புகளை துண்டித்து விடுகிறாள். இருட்டில் கதாநாயகன், நாயகி உட்பட பல தப்பிக்கிறார்கள்.

கண் போன போக்கில் ஓடியவர்களை சுட்டதில், 29 பேர் கொல்லப்படுகிறார்கள். அறிவிப்பு குரல் சொன்னபடி 30 பேர் கொல்லப்படாததால், பலர் முன்பு போலவே மர்மமான முறையில் தலைவெடித்து கொல்லப்படுகிறார்கள்.

கொலம்பியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல், தாதா கும்பல்கள் அதிகமென்பதால், இது போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உடலில் சிப்களை பொருத்துவது வழக்கமாம். தொலைந்து போனால் தேடுவதற்கும், அடையாளம் காண்பதற்கும் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக. அது போல அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் தலையின் பின்புறத்தில் சிப்களும், அதேனோடு சேர்த்து சிறிய வெடிகுண்டுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அது தவிர அந்த கட்டிடம முழுவதும் ஒற்றுபார்க்கும் கேமராக்களும், மைக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் துணையோடு யாரோ வெளியிலிருந்து அத்தனையையும் அமர்ந்து இடத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது முறையாக ஒரு அறிவிப்பு வருகிறது. யார் அனைவரையும் கொன்று ஓராளாக வெற்றி பெறுகிறாரோ அவர் விடுதலை செய்யப்படுவார் என.

இந்தச் சண்டையில் அனைவரும் மடிய, இறுதியில் கதாநாயகனும், எதிர் அணியைச் சேர்ந்த தலைவரான அதிகாரியும் மற்றும் பிழைக்கிறார்கள். இறுதிச் சண்டையில் அந்த அதிகாரியை கொன்று கதாநாயகன் மட்டும் பிழைக்கிறான். அவனை வெளியில் காவல் இருக்கும் வீரர்கள் அக்கட்டிடத்திலிருந்து இழுத்துச் சென்று அந்த வளாகத்தில் இருக்கும் வேறொரு கட்டிடத்திற்குள் கொண்டு செல்கிறார்கள்.

அங்கே அந்த அறிவிப்பு குரலுக்குச் சொந்தக்காரரைக் காண்கிறான் கதாநாயகன். அவன் தன்னை சமூக விஞ்ஞானி என அறிமுகம் செய்து கொள்கிறான். தங்களுடைய பணி மனித குணங்களை ஆய்வு செய்வதுதான் என கூறுகிறான். எங்களுடைய சோதனையின் முடிவுகள் விரிவானவை, அவை எங்கள் ஆய்வுகளுக்கு பயன்படும் எனக் கூறுகிறான். மேலும் கதாநாயகனிடம் தற்பொழுதைய உன் மனநிலையை எங்களுக்கு கூறு என a, b, c என பயமாக இருக்கிறது, தப்பித்ததாக உணர்கிறேன், குழப்பமாக இருக்கிறது இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய் என்கிறான். அதற்குள் தன் சக நண்பர்களை உட்கார்ந்த இடத்திலிருந்து தலையில் பொருத்தப்பட்ட குண்டுகளை வெடிக்கச் செய்த ரிமோட் இயந்திரம் அவ்வறையில் இருப்பதை பார்த்து விடுகிறான்.

அதே போல சக ஊழியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊழியர்களின் தலையிலிருந்து கைப்பற்றப்பட்ட குண்டுகளை சேகரித்து வைத்திருந்த கதாநாயகன், வரும் வழியிலேயே அதை பாதுகாப்பு வீரர்களின் உடைகளில் அவர்களுக்கே தெரியாமல் சொருகி வைத்துவிடுகிறான். கண நேரத்தில் பாய்ந்து அந்த ரிமோட்டை இயக்கி அனைவரையும் கொன்று விடுகிறான். அறிவிப்பு குரலுக்குச் சொந்தக் காரனையும் சுட்டு கொன்று விட்டு அந்த கட்டிடத்தை விட்டு அவன் மட்டும் தனியனாக வெளியே வருகிறான்.

அவனைப் போலவே இது போல உலகம் முழுவதும் நடக்கும சோதனைகளில் தப்பி வெளி வந்த பலரையும் யாரோ ஒரு கட்டுப்பாட்டறையில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆய்வின் முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்து விட்டது என அறிவிக்கிறார்கள்.

அத்துடன் படம் முடிகிறது.

நம் நிகழ்கால வாழ்க்கை மட்டும் வருங்கால வாழ்க்கை பற்றிய ஏதோ அபாயங்கள் குறித்த மங்களான கனவு ஒன்றிலிருந்து வெளிவந்தது போல் இருக்கிறது. படம் பார்த்து முடிக்கையில்.

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பிற பகுதிகளில் உள்ள மக்களின் மன நிலைகள் அந்த அதிகாரியின் மனநிலை போலவே தோன்றியது. ஆதார் கார்டை அனுமதித்தது, தலையில் உங்கள் பாதுகாப்பிற்குத்தான் என்று சொல்லி சிப்களையும், வெடிகுண்டுகளையும் பொருத்தியது ஞாபகப்படுத்துகிறது. உங்களில் பலரை நீங்களே கொன்றுவிடுங்கள் என்ற அறிவிப்பு பாசிசமயமாகி வரும் நம் சமூகத்தை ஞாபகப்படுத்துகிறது.

தனியார் கல்விக் கூடங்கள், அணுஉலைகள், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள், ஜிஎஸ்டி, ஆதார்கார்டு, கைரேகைகள், புகைப்படங்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுகள், கலப்பட பால், என விரியும் இந்தச் சதிவலைகளை அனைத்தையும் யாரோ எங்கிருந்தோ இயக்கிக் கொண்டும், இதிலிருந்து நம்மை வைத்து புதிய புதிய ஆராய்ச்சிகளையும், கொலைகார திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டுமிருப்பதாக மிரட்டுகிறது இந்தப்படம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: