எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூலை, 2017

மாபெரும் சோவியத் கலைக்களஞ்சியம்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 12, 2017

இணையத்தில் எந்த முக்கிய விசயங்கள் குறித்து குறிப்பாக இடதுசாரி நுால்கள், மனிதர்கள், சம்பவங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து தேடினாலும் “http://encyclopedia2.thefreedictionary.com” தேடலில் வந்து நிற்கும். மற்றெல்லா தொடுப்புகளிலும் (link) இருக்கும் விபரத்தைவிட மேலதிகமானதும் ஆழமானதுமான தகவல்கள் கிடைக்கும். ஆனால் எல்லாவற்றிலும் தலைப்புக்கீழ் ஒரு எச்சரிக்கை பொறிக்கப்பட்டிருக்கும்.
“The following article is from The Great Soviet Encyclopedia (1979). It might be outdated or ideologically biased.”

என்னடா நாம் கேள்விப்பட்டதேயில்லையே இது என்ன encyclopedia? என அதிலேயே தேடினால். அந்த என்சைக்ளோபீடியாவிலேயே அது குறித்து மிக ஆழமான விரிவான கட்டுரை இருப்பதாகக் கூறி அதையும் அதே எச்சரிக்கை வாசகங்களுடன் வழங்குகிறது அந்த வலைப்பக்கம்.

சோவியத் யூனியனின் மையக் கமிட்டியின் வழிகாட்டுதலோடு 1925களில் சோவியத் என்சைக்ளோபீடியா முதல் பதிப்பு 66 பாகங்களாக 65,000 கட்டுரைகளுடனும், 12,000 படங்களுடனும், ஆயிரத்திற்கு மேற்பட்ட வரைபடங்களுடனும் 4,400 ஆசிரியர்களின் பங்களிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகள் இடைவெளியில் இரண்டாம் மூன்றாம் பதிப்புகள் மிகப்பெரிய கமிட்டியின் கீழ் அதிசிறந்த அறிஞர்கள் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது இவை யாரிடமும் இருக்கிறதா? மென்புத்தகமாக கிடைக்குமா எனத் தேடி வருகிறேன்.

இதில் நான் சொல்ல வருவது என்ன விசயமென்றால் “It might be outdated or ideologically biased.” என்று எச்சரிக்கிறார்கள். இங்கு எது சித்தாந்த சார்பு இல்லாமல் இருக்கிறது? அறிவுப்பரவலே ஆபத்து என நினைக்கும் இன்றைய அரசுகளுக்கு இடையில், அந்தக் கட்டுரைகள் எப்படி காலாவதியானவையாக மாறிவிடப் போகிறது?

நம்முன்னால் உள்ள கேள்வி எளிமையானது. நீங்கள் முதலாளித்துவப் பார்வையில் இந்த உலகை பார்க்க விரும்புகிறீர்களா? அல்லது தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பார்வையில் இந்த உலகை பார்க்க விரும்புகிறீர்களா என்பதுதான். உழைக்கும் மக்கள் பார்வையில் வரலாறு, விஞ்ஞானம், அரசியல் செயல்பாடுகள், உலக நிகழ்ச்சிகள், ஆளுமைகள், அமைப்புகள், போக்குகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள நமக்கு “மாபெரும் சோவியத் கலைக்களஞ்சியம்” போன்றவை அவசியம்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

லண்டன் குண்டன்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 12, 2017

சிலை போல நிற்க வேண்டும்
அசையவோ, சிரிக்கவோ, பேசவோ கூடாது
ஆட்டத்தின் விதியே அதுதான்
அசையவோ, சிரிக்கவோ, பேசவோ வைக்க வேண்டும்
ஆட்டத்தின் வெற்றியே அதுதான்

பார்த்துச் சிரிப்பவனும்
கைகொட்டி ஆராவரித்தவனும் மட்டுமல்ல
எதிர்த்தவர்களும், விமர்சித்தவர்களும்
ஆட்டத்தைக் காண வேண்டாம்
என அறைகூவுபவர்களும்
எல்லோரும்
ஏதோ ஒரு முனையில்
இந்த ஆட்டத்தில் பங்கு பெற்றவர்களாகிறோம்.

இது ரியாலிடி ஷோவே இல்லை
என வாய் திறந்தவன்
தான் தோல்வியுற்று
அந்த ஆட்டத்தை வெற்றி பெறச் செய்கிறான்.

அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதும்,
தனிமனிதர்களை வேவுபார்ப்பதும்
கீழ்மை என வாய் திறந்தவன்
தான் தோல்வியுற்று
அந்த ஆட்டத்தை வெற்றி பெறச் செய்கிறான்.

இதைப்பற்றி பேசவே கூடாது, ஒதுக்க வேண்டும்
என்று சொல்வதன் வழியாக
மௌனம் கலைந்து
தோல்வியுற்று விடுகிறோம்.

அந்த ஆட்டத்தின் வெற்றியும் தோல்வியும்
வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதன் வெற்றியும் தோல்வியும்
ஆதரவு எதிர்ப்பு எண்ணிக்கையால்
தீர்மானிக்கப்படவில்லை
நாம் மேருமலையின்
எந்தப் பக்கம் நிற்கிறோம்
என்பதல்ல
நாகத்தின்
தலையையோ வாலையோ பிடித்து
கடைந்து கொண்டிருக்கிறோம்
என்பதில்தான்
ஆட்டம் தன் அமிர்தத்தை
அருந்திக் கொண்டிருக்கிறது.

ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
அந்த ஆட்டத்தில் இன்னும்
விளையாடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல
வெளியேற்றப்பட்டவர்களும், வெளியே இருப்பவர்களும் கூட
அந்த ஆட்டத்திற்குள்தான் இருக்கிறோம்.

பல கோணங்களில் காமிராக்கள்
அரங்கத்தை நோக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ஆட்டம்
நகர் முழுவதையும் தன் கண்காணிப்பில் வைத்திருக்கிறது.

Posted in கவிதைகள் | Leave a Comment »

நட்பழைப்பு

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 12, 2017

இந்த உலகத்தில்
நான் எல்லோருக்கும்
நட்பழைப்பு அனுப்ப முடிவதில்லை.

சிலரை என்னால்
பின் தொடர மட்டுமே முடியும்
பதிவுகளை ஒரு தொண்டனைப் போல
என் பக்கம் பங்கிட்டுக் கொள்ளலாம்,
மகிழ்ச்சியை ஒரு வாக்காளனைப் போல
விருப்பக் குறியிட்டு காட்டலாம்
இப்பொழுது கொஞ்சம் மேலதிகமாய்
அழுகையையும், கோபத்தையும்
கூட குறியிட்டுக் காட்டலாம்.

சமதையாக அமர்ந்து
உரையாடும் வாய்ப்புகளில்லை.

நட்பாக இருப்பதற்கு
எல்லைகளும், அனுமதிகளும் கோரும்
இந்த உலகம்
பின் தொடர்வதற்கு
எந்தக் கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை.

Posted in கவிதைகள் | Leave a Comment »