எனது நாட்குறிப்புகள்

சாம்ராஜின் ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவல் அறிமுகம் குறித்து

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 13, 2017

OnaiKulachinnam

இன்றைய இந்துவில் என் பழைய நண்பர் சாம்ராஜின் ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவல் குறித்த ‘ஓநாய்கள் இல்லாத நிலத்தில் எலிகள் தான் அரசர்கள்’ கட்டுரை நடுப்பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.

முன்பு சாம்ராஜ்ஜிற்கு நீண்ட காலம் கழித்து ஒரு முறை தொலைபேசியில் பேசினேன். அப்பொழுது “கோ. கேசவனோடுதான் உங்களை மதுரையில் எங்கும் எப்பொழுதும் பார்ப்பேன்”, என்று கூறினேன். “இப்பொழுது என் நண்பர்கள் வட்டத்தில் யாருக்கும் அந்த சாம்ராஜை தெரியாது” என்றார்.

நானும் கூட வெகுநாட்கள் கழித்து இணையவெளியில்தான் மீண்டும் சாம்ராஜை கண்டுகொண்டேன். அவருடைய பெயர் ஜெயமோகன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகன் நட்புவட்டத்தோடு அவர்களுடைய குழு கூட்ட இலக்கிய விவாதங்களோடு குறிப்பிடப்பட்டிருந்ததிலிருந்து வாசித்தேன்.

இன்றைய இந்து கட்டுரையின் முதல் பத்தியை, அவர் கோ.கேசவனோடான தன்னுடைய உறவிலிருந்துதான் துவங்கியுள்ளார். அந்த முதல் பத்தி மொழிபெயர்ப்பின் சிக்கலை புரியவைப்பதற்கானதாக மட்டும் தோன்றவில்லை.

மிக நல்ல மொழிபெயர்ப்புக்கான உதாரணமாக சி.மோகனின் ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலைக் குறிப்பிடுகிறார் சாம்ராஜ். மோசமான மொழிபெயர்ப்புகளால், உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பில் தன் மதிப்பிழந்து போனதைக் குறிப்பிடுகிறார்.

தமிழில் வரும் மொழிபெயர்ப்புகள் குறித்து நாம் எல்லோரும் எப்பொழுதும் இது போன்ற நமது விமர்சனங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட மோசமான மொழிபெயர்ப்புகள் எவை? எப்படி அவற்றை மோசமான மொழிபெயர்ப்புகள் என்று கூறுகிறோம் என்கிற விவரங்களை நாம் பெரும்பாலும் பேசுவதில்லை.

சமீபத்தில் காலச்சுவடின் ‘பனி’ நாவல் மொழிபெயர்ப்பில் உள்ள அடிப்படை தவறுகளை சுட்டிக் காட்டி பாரிஸ் சுகன் என்பவர் பேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவை வாசித்தேன். இது போன்ற வகைமாதிரிகள் ஏறத்தாழ மிகமிகக் குறைவு எனக் கருதுகிறேன்.

ஆங்கிலமோ, அல்லது வளர்ச்சியடைந்த நாடுகளின் மொழிகளோ மொழிபெயர்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவமோ அல்லது பொதுவில் அம்மொழியின் வளர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவமோ தமிழ்நாடு அரசோ, தனியார் அமைப்புகளோ, அல்லது மக்களாகிய நாமோ கொடுப்பதில்லை. அதையும் மீறித்தான் தமிழில் இதுபோன்ற மிகப்பெரிய பணிகள் முற்றிலும் தனிமனிதர்களின் ஆர்வத்திலிருந்தே எந்தப் பிரதிபலன்கள் எதிர்பார்ப்பும் இன்றி நடைபெறுகின்றன.

சங்க இலக்கியங்களை தேடித் சேர்த்ததில் துவங்கி பாரதியார் படைப்புகள் அனைத்தையும் தேடித் தொகுத்தது வரை தமிழுக்கு நிகழ்ந்த அனைத்து சாதனைகளும் யாரின் உதவியும், ஒத்துழைப்பும் இன்றி தனிமனிதர்கள் பங்களிப்பே. தங்கள் சொத்து சுகங்கள் இன்பம் துன்பம் அனைத்தையும் தியாகம் செய்து எந்த அங்கீகாரங்களுக்கும், மரியாதைக்கும் கவலைப்படாமல் செய்த சாதனைகளே.

இன்றைக்கும் பல தமிழ்பெயர்ப்புகள் பல்வேறு துறைகளிலும் நிகழ்ந்து கொண்டிருப்பது, முற்றிலும் தனிமனிதர்களின் ஆர்வத்தால்தான். அம்மொழிபெயர்ப்புகளை பதிப்புக்கும் பதிப்பகங்கள் கூட எந்த Editorial குழுவும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் விசித்திரமான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம்.

ஆசிரியர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே தட்டச்சுக்கோ, அதையும் மொழிபெயர்ப்பாளரே செய்து கொடுத்துவிட்டால் அச்சுக்கோ அனுப்பும் சூழலில்தான் வசிக்கிறோம். இத்தகைய சூழல்களில் தமிழுக்கு குறைந்தபட்ச அறிமுகமாகவேனும் உலக இலக்கியங்கள் கிடைக்கிறதே. போராடியேனும் படித்துக் கொள்ள ஒரு பிரதி இருக்கிறதே என உண்மையில் மகிழ்ச்சியடையும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

‘ஓநாய் குலச் சின்னம்’ நாவல் குறித்து சர்வதேச அளவில் பல விமர்சனங்கள் வந்துள்ளன. அதனை வெறும் சீனப் புரட்சி, சீனக் கலாச்சாரப் புரட்சி குறித்த விமர்சனமாக மட்டும் புரிந்து கொள்வது சரியா என்கிற கேள்விகள் உள்ளன. இயற்கையின் இயங்குதன்மையையும் அவற்றின் காரண காரியங்களையும், அதன் உள்ளார்ந்த சங்கிலித் தொடர்களையும், அது நிகழ்த்தும் ஓர் உயிர்ச் சமநிலையையும் குலைப்பது என்பது இன்று நேற்றல்ல. என்றைக்கு மனித நாகரீகம் தோன்றியதோ அன்றைக்கே அவை துவங்கிவிட்டன.

அதன் பாரதுாரமான விளைவுகளை நாம் முதலாளித்துவத்தின் உச்சகாலகட்டத்தில், இன்னும் ஒரு படி மேலே போனால் அது ஏற்படுத்திய விஞ்ஞான சாதனைகள் துணைகொண்டு, அது கண்டு சொன்ன விஞ்ஞான ஆய்வுகள், ஆராய்ந்தறிந்த இயற்கை இயங்குமுறைகளிலிருந்தே இந்த விமர்சனங்களையும் தொகுத்துக் கொண்டிருக்கிறோம்.

சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் நவீன உற்பத்திமுறையையும், வாழ்க்கைமுறையையும் கொண்டு வந்த கம்யூனிச அரசுகளின் மீது வைக்கப்படும் இத்தகைய விமர்சனங்கள் மட்டும் முதலாளித்துவ உலகத்தால் அதிகம் கொண்டாடப்படுவதும், வியந்தோதப்படுவதும் புரிந்து கொள்ள முடியக் கூடியதே.

இந்த நாவலுக்கு பரிசு வழங்கிய சர்வதேச அமைப்பு, உண்மையிலேயே இந்நாவலில் பேசப்படும் இயற்கைக்கு எதிரான மனிதர்களின் யுத்தம் பற்றிய எச்சரிக்கை படைப்பு என்பதால்தான் இந்நாவலுக்கு அப்பரிசை வழங்கியது என்று நம்புவோமானால் நம்மை விட புத்திசாலிகள்(!) யாரும் இருக்க மாட்டார்கள். நிச்சயம் அதற்காக அது அதனை வழங்கியிருக்க முடியாது. ஏனென்றால் அந்தக் கரியை அதுவும் அது சார்ந்த வர்க்கமும் அதன் முகத்தில் அதைவிட அதிகமான மடங்கில் மட்டுமல்ல தன்மையிலும் பூசிக் கொண்டிருக்கிறது.

குறைந்தபட்சம் கம்யூனிசம் பெரும்பான்மை மக்களுக்கான நலனிலிருந்து அதனைச் செய்தது. ஆனால் முதலாளித்துவம் ஆகச் சிறுபான்மை மக்களின் பேராசைக்காக அறுதிப் பெரும்பான்மை மக்களை மட்டுமல்ல இப்பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் வாழ்வையும் இருத்தலையும் பெரும் அச்சுறுத்தலில் சிக்க வைத்திருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: