எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன், 2018

சுயம்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 25, 2018

எனக்கருகில் பெரும் துயரென
வீழ்ந்து கிடக்கிறது அந்தக் கை.

ஓர் இரவில் பெரும் சுமையென
ஆகிப் போனது அந்தக் கை.

முதல் நாள் வலது கையால்
அதனைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தேன்
பார்ப்பவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லியவாறு

அடுத்த நாள் கழுத்தில் தூளி கட்டி
அதனைச் சுமந்து சென்றேன்.
எல்லோரும் தூளிக்குள் எட்டிப் பார்த்து
விசனித்துக் கொண்டிருக்கிறார்கள்

சுயம் அழித்து என்னோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டியவை
தனித்துக் காட்டிக் கொள்ளும் தருணங்களில்
அதன் வலி சொல்லிமாளாதது

Posted in கவிதைகள் | Leave a Comment »

காலா படம்: எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 15, 2018

காலா படம். எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது. நான் புரிந்து கொண்ட ரஜினி இக்கதையை தான் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டது. ரஜினி மட்டுமல்ல, தனுஷ், சௌந்தர்யா, என இப்படம் சம்பந்தப்பட்ட பெருந்தலைகள் அனைவர் குறித்தும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கால கட்டம், எத்தகைய நெருக்கடியான, எத்தகைய ஆபத்தான காலகட்டம் . இத்தகைய காலகட்டத்தில் ஒரு வெகுஜன சினிமா இத்தனை காத்திரமான அரசியல் நிலைப்பாடோடு, எதிரியை சீண்டும் துணிவோடு இயக்க இயக்குநர் ரஞ்சித் துணிவை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன் தில்லிருந்தா வாங்கடா” என்ற வசனம் எனக்கென்னவோ கலைத்துறையில் மாவீரனாக ஒத்தையில் நின்று கொண்டு ரஞ்சித் சவால் விடுவதாகவே தோன்றியது.

ஒரு நடிகனாக ரஜினி இத்தகைய கதைகளையும் நடிக்கத் தேர்ந்தெடுத்ததன் வழியாக ஒரு நடிகனாக வெற்றி பெற்றுவிட்டார். இத்தகைய கதைகளும், சினிமாவும் தரும் வெற்றியை அரசியல்ரீதியாக ரஜினி அறுவடை செய்வாரா, யார் அறுவடை செய்வார், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்பதெல்லாம் காலம் தான் தீர்மானிக்கும்.

கதைப்படியான மும்பை தேர்வு ஒரு அர்த்தத்தில் இந்துராஷ்டிரத்தின் மையத்தை, இதயப் பகுதியை செய்த தேர்வாகவே தோன்றுகிறது.

கதைக்குள்தான் எத்தனை நுட்பமான குறிப்புகள். ஆனால் எந்தவொன்றும் புரிந்து கொள்ள கடினமான பூடகமான குழப்பத்திற்கு இடமான குறிப்புகள் இல்லை. எல்லாம் மிக நேரடியாக, தெளிவாகவே உள்ளன.

நானா படேகரும், அவருடைய கட்சியும், அவருடைய நடவடிக்கைகளும் நேரடியாகவே பாஜக, சிவசேனாவை பிரதிபலிக்கின்றன.

மிகப் பெரிய தட்டி விளம்பரத்தில் “நான் ஒரு தேச பக்தன். இந்நாட்டை சுத்தம் செய்வேன்” என நெற்றியில் தீட்டப்பட்ட குங்குமத்துடன் வெள்ளை உடையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் நானா படேகர்.

கருப்பு உடைக்கும், வெள்ளை உடைக்குமான உரையாடலில், “கருப்பு அனைத்து நிறங்களையும் தன்னில் பிரதபலிக்கும், தன் நிறத்தை இழக்காமல் வெளிப்படுத்திக் கொள்ள திறந்து நிற்கும்” என்பதாக வரும் வசனங்கள் மனதை அள்ளுகின்றன.

லெனின் என்று பெயர் வைத்த மகனைப் பார்த்து கோபத்தில் ரஜினி கூறுவார் “உனக்குப் போய் அந்த மேதையின் பெயரை வைத்தேன் பாரு. கோபத்துல திட்டக் கூட முடியலை” என.

இடதுசாரிகள் மீதான விமர்சனத்துடன், அவர்களுடைய முக்கியத்துவத்தை, அவர்களுடைய அவசியத்தை வலியுறுத்தும் இடங்களுக்கு அந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் வளர்ச்சி குறித்த மாயைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை விமர்சிப்பார் “ஊரை, பிரச்னையை, வரலாறை, பாரம்பரியத்தை எதையும் புரிஞ்சுக்கிறதில்லை, இரண்டு புத்தகத்தை படிச்சிட்டு எல்லா தெரிஞ்ச மாதிரி பேசுறது” அதே நேரம் படிச்சுட்டு சேரியை விட்டு வெளியே போக நினைக்கும் பிள்ளைகளை பார்த்து கூறுவார் “அவன் இங்க தான்டா நிப்பான், உங்களை மாதிரி எங்கேயும் ஓடமாட்டான்.” இப்படியாக கருப்பு, சிவப்பு, நீலம் ஆகியவற்றை காவிக்கு எதிராக ஓரணியில் திரட்டும் வசனங்களும், காட்சிகளும், ஜனரஞ்சக சினிமாவில் சமகால சூழலில் பார்வையாளனுக்கு தேவைப்படும் உற்சாகத்தை வழங்கும் இடங்கள்.

நாயகன் படமும் இதே தாராவியை மையமாகக் கொண்ட கதைதான். அதன் நாயகன் வீட்டில் கொலை நடந்தவுடன் இறுதி காரியம் முடிவதற்குள் எதிரியின் வீட்டில் அதைவிட கூடுதலாக தலைகள் உருளும். இங்கேயும் அதே போல நாயகன் வீட்டில் கொலை நிகழ்கிறது, மாறாக எதிரியின் வீட்டைத் தாக்கும் எந்த முயற்சியும் இல்லை. தனியொருவனாக நாயகன், தான் குலைந்துவிட வில்லை, அதே கொள்கை உறுதியோடு களத்தில் நிற்கிறேன் என்று சொல்லிவர மட்டுமே செல்கிறான்.

நாயகனின் வீட்டில் தலித் என்பதால் தண்ணீர் கூட வாங்கி அருந்த மறுக்கும் வில்லனின் வீட்டிற்கு நாயகன் செல்லும் பொழுது, அவர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கக் கூடாது என நினைக்கும் பார்வையாளனின் மனம். ஆனால் எந்த சுழிப்பும், எந்தப் வெறுப்புமின்றி குழந்தையின் கையால் தண்ணீர் வாங்கி புன்னகையோடு அருந்துவான்.

இப்படியாக வெகுஜன சினிமாவிற்குள் தான் கருதும் மாற்றுக் கருத்தியல்களை முன்வைத்தபடியே செல்கிறது காலா.

அறிவான பெண் ஒரு பக்கமும் அன்பான பெண் ஒரு பக்கமுமாக ஒரு காதலியும் ஒரு மனைவியும் நாயகனுக்கு. அறிவான பெண்ணால் நாயகனை அறிவாலும் வெல்ல முடியவில்லை, வாழ்க்கையிலும் இணைய முடியவில்லை. அன்பான பெண் நாயகனை வென்று அவன் குலசாமியாக இருக்கிறாள் என்கிற அம்சம் மட்டும் ரஜினியின் பார்முலாவிற்கு சரியாகப் பொருந்திப் போகிற விதிவிலக்கு.

உலக வரைபடத்தில் இன்று இந்தியாவே ஒரு சேரிதான். இந்தியன் ஒவ்வொருவனும் தலித்தான். ‘வளர்ச்சி’, ‘சுத்தம்’ குறித்த இந்திய உரையாடல்களின் பின்னணியில். இந்த கான்ஷியஸ் ஒன்று இந்தப் படத்தின் ஊடாக நமக்கு ஏற்படவே செய்கிறது.

சேரி என்றால் என்ன?

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி.
ஆகக் கொடுமையாக சுரண்டப்படும் மக்கள் வாழும் பகுதி.
நகரத்திலேயே மிக ஏழ்மையான மக்கள் வாழும் பகுதி
அடிப்படை சுகாதாரம், நல்ல காற்று, நீர், நிலம் மறுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி.
குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் பகுதி.

உலக அரங்கில் இந்தியாவின் இடம் என்ன?

சாக்கடைகளும், குப்பைகளும் நிறைந்த நாடு.
ஆடு, மாடுகளோடும், பன்றிகளோடும் ஒன்றாக வாழும் மக்கள் நிறைந்த நாடு.
குரங்கையும், பாம்பையும், மாட்டையும் வழிபடும் மக்கள் நிறைந்த நாடு.
சுகாதாரம், நாகரீகம் குறித்த எந்த அறிவும் இல்லாத நாடு.
திருடர்களும், கொள்ளையர்களும், வன்முறையாளர்களும் வாழும் நாடு.

அமெரிக்காவிலோ, ஐரோப்பியாவிலோ போய் சில காலம் வாழ்ந்து பார்க்கும் இந்தியன், தன்னை தலித்தாக உணர்வான்.

உலகிலேயே ஆக மோசமாக சுரண்டப்படக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த நாடு.
ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக மாற்றப்பட்ட நாடு.
இயற்கை வளங்கள் அனைத்தும் கேள்வி கேட்பாடின்றி சுரண்டப்படும் நாடு.
வாழ்விடங்களை விட்டு, விவசாய நிலங்களை, கடலை, விட்டு அந்நிய கார்ப்ரேட்களின் நலன்களுக்காக விரட்டப்படும் விவசாயிகளும், மீனவர்களும், பாரம்பரிய தொழில் புரிவோரும், கோடானு கோடி உழைக்கும் மக்களும் நெருக்கமாக நிறைந்த நாடு.

‘நிலம் என் உரிமை’ என்கிற கோஷம் தலித்திற்கான கோஷம் மட்டுமில்லை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில், ஒவ்வொரு இந்தியனின் கோஷமும் தான். தஞ்சையில், சேலத்தில், துாத்துக்குடியில், தேனியில், கதிராமங்கலத்தில், கூடங்குளத்தில் ஒலிக்கும் கோஷமும் அதுவே.

ஒரு மூன்று நான்கு மாநிலங்கள் தழுவிய இந்து ராஷ்டிரம் என்கிற கருத்தியல் செல்வாக்கு தன்னை இந்தியாவின் வடகிழக்கு முதல் தெற்கு எல்லைவரை விஸ்தரித்துக் கொள்ள நடத்தும் பாசிச யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஒரு மாற்று கருத்தியல் யுத்தமுனையில் நின்று கொண்டிருக்கிறது, அதன் முன்னணியில் அதற்கு தலைமைதாங்கும் ஆற்றலோடு தமிழகம் நிற்கிறது.

இந்த கருத்தியல் செல்வாக்கின் வலிமை ரஜினி போன்ற நடிகர்களையும் கருப்புடை அணிந்து, சேரியில் நின்று, அசுர யுத்தம் நடத்தும் கதையில் நடிக்க வைத்திருக்கிறது.

Posted in கட்டு​ரை, சினிமா விமர்சனம் | Leave a Comment »