எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூலை 4th, 2018

சிவனைத் தேற்றுதல்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 4, 2018

கண்களைத் துடைத்துக் கொள் ஐயனே
ஏன் அழுகிறாய்?
உன் உடுக்கையிலிருந்து
நீ உருவாக்கித்
தந்த்தல்லவா எம் மொழி
அகத்தியனுக்கும்
தமிழ்ச் சொல்லிக் கொடுத்த
ஆசிரியன் அல்லவா நீ
அவனுக்கென்ன தெரியும்
உன் வரலாறு
கிடக்கிறான் விடு
கார்பரேட் சாமியார்.

வைகைக்கு கரை கட்டிய
தமிழ்க்கடவுளே
ஏழை கிழவிக்காக
பிரம்படி பட்ட
உன் வரலாறு
தெரியாது அவனுக்கு.

நீ இருந்து தமிழ் வளர்த்த
சங்கம் தெரியாது
அந்தத் தற்குறிக்கு

நரிதனை பரியாக்கி
தமிழனைக் காத்தவன் நீ
தமிழ் நிலத்தில் பிறந்த
கொக்கிற்கும்
மோட்சம் அருளியவன் நீ.

உனைப்பாடி பாடித்தான்
தமிழ் தனை வளர்த்துக் கொண்டது.
உனைப்பாடிய கவிதை எல்லாம்
நீக்கிவிட்டால்
தமிழ் தன்னுள் எதைக் கொண்டது?

ஆழவாயனாய் வந்து
எம்நிலத்தை
அளந்து தந்தவன் நீ

நீ வடக்கின்
நரமாமிசம் திண்ணும் அகோரி அல்ல
வேடனோடும் வேட்டை உணவை பகிர்பவன்

நீ எந்நாட்டுக்கும் உரியவனாயினும்
தென்னாடு உடையவன் ஆயிற்றே.

நீ வடக்கின் வெள்ளைச் சிவன் இல்லை
தெற்கின் கறுப்பனாயிற்றே

நீ எம்நிலத்தில்
உருவழிந்து நின்ற
மூதாதையரின் குறியீடன்றோ

Posted in கவிதைகள் | Leave a Comment »

திரிசங்கு நகரம்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 4, 2018

வாட்ஸ் ஆப்பில்
புதிய எண்ணிலிருந்து
நான்கு செய்திகள்
எரிச்சலோடு
உள் நுழைந்தேன்.

“குறுகிய கால
சிறப்புத் திட்டம்
குறைந்த வட்டிக்கு
தனிநபர் கடன்”
முகவரிடமிருந்து
விளம்பர செய்தி.

கோபத்தோடு
கடைசி வரை ஓட்டினேன்
‘Report Spam’
‘Block’
‘Add to Contacts’.

எவ்வளவு வட்டி போட்டிருக்கிறான்?
மீண்டுமொருமுறை
மேலே பார்த்தேன்.
சரி எதற்கும் இருக்கட்டும்
பிறகு பார்க்கலாம்.

நீக்கவும் முடியாமல்
தடுக்கவும் முடியாமல்
இழக்கவும் முடியாமல்
ஏற்கவும் முடியாமல்
இந்த விசுவாமித்ரர்கள்
அமைத்துக் கொடுத்த
திரிசங்கு நகரத்தில்
மேலும் இல்லாமல்
கீழும் இல்லாமல்
அந்தரத்தில்
ஒரு வாழ்க்கை

Posted in கவிதைகள் | Leave a Comment »