விளையாட்டுத் தேர்வு
Posted by மகேஷ் மேல் ஜூலை 15, 2018
விளையாட்டு அரங்கில்
கடைசி நிமிடங்களிலும்
காலந்தவறியும்
ஸிப்ட், ஸ்கோடா,
பிஎம்டபுள்யூ, வோல்ஸ்வேகன்,
எக்ஸ்யூவி, ஐடொவின்டி
என விதவிதமான மகிழுந்துகளில்
வரிசையாக வந்து
படோடோபமாக இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும்
குடும்பத்திலிருந்து பிள்ளைகள்
அரங்கம் முழுதும்
பணக்கார பெற்றோரின்
பகடிப் பேச்சுகளும்
பரிகாசச் சிரிப்புகளும்
அரசுப் பேருந்துகளில்
அதிசீக்கிரமாக வந்து
அமைதியாய் ஓரமாய்
ஆர்பாட்டங்கள் இல்லாமல்
அமர்ந்திருக்கின்றன
இந்தியாவின்
வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்.
லஞ்சம், ஊழல், சிபாரிசு,
சாதி, மதம்
எல்லாம் கடந்து
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான
அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து.
மறுமொழியொன்றை இடுங்கள்