எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூலை 18th, 2018

என் சமூகம் உனக்கு முன்பாக போகும்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

“என் சமூகம் உனக்கு முன்பாக போகும்”
எப்படியோ போ
பின்னால் வருபவருக்கு
கொஞ்சம் இடைவெளிவிட்டு
காலைத் தடுக்காமல் போ

-15 செப்டம்பர் 2016

Posted in கவிதைகள் | Leave a Comment »

நான்காவது தோட்டா

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

மூன்று தோட்டாக்கள் அல்லாமல்
ஒரு நாலாவது தோட்டாவும் இருக்கலாம்தானே!
அவரின் உயிரைப் பறித்தது.

நான்காவது யாருடையது என்பதைவிட
எங்கே விழுந்து கிடக்கக் கூடும்
என்பதுதான் முக்கியமானது.

ஒன்று முதுகை பின்புறமாக
துளைத்துக் கொன்டு
அந்த பிரார்த்தனை மண்டபத்தின்
பின்னால் போய் விழுந்து கிடந்தது

மற்றொன்று அஸ்தி கரைக்கும் பொழுது
சாம்பலில் கிடந்தது

மூன்றாவது கழுவிக் குளிப்பாட்டும் பொழுது
சால்வையிலிருந்து
கீழே விழுந்து கிடந்தது

அவரின் ஆன்மாவைத் துளைத்துச் சென்ற
அந்த நான்காவது
எங்கே விழுந்து கிடக்கும்?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலா?

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலா?

ராமராஜ்ஜியத்திற்கும் இந்தியப் பாராளுமன்றத்திற்கும் இடையிலா?

கிராம சுயராஜ்ஜியத்திற்கும் கார்ப்ரேட் உலகிற்கும் இடையிலா?

கைத் தொழிலுக்கும் நவீனத் தொழிற்சாலைகளுக்கும் இடையிலா?

அஹிம்சைக்கும் உலகின் ஐந்தாவது மிகப் பெரும் இராணுவத்துக்கும் இடையிலா?

எளிமைக்கும் ஆடம்பரத்திற்கும் இடையிலா?

தேவைகளுக்கும் பேராசைகளுக்கும் இடையிலா?

மதக்கலவரங்களுக்கான சதியாலோசனைகள் நடைபெறும் இடங்களிலா?

மேலும் ஒரு தோட்டா மட்டுமல்ல
பல இருக்கக்கூடும்
தேடுங்கள் தேடுங்கள்
நன்கு தேடிப் பாருங்கள்

தல்ஸ்தோயின் ஒரு சிறுகதையைப் போல
தோண்டித் தேடிய இடத்தில்
தோட்டா கிடைக்காவிட்டாலும்
விதைக்கலாம் நல்ல அறுவடையை எதிர்பார்த்து

-12 அக்டோபர் 2017

Posted in கவிதைகள் | Leave a Comment »

பாரதமாதாவும் அதன் செல்லாக்காசு பிள்ளைகளும்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

மாதம் ஒன்றாகிவிட்டது
இப்பொழுதெல்லாம்
காய்கறிகள் ரிலையன்ஸ் பிரஷ்சில் வாங்குகிறேன்
பலசரக்கு பிக் பஜாரில் வாங்குகிறேன்
தலைமுடியை ஃபெமினாவில் வெட்டுகிறேன்
உணவை சங்கீதா, அடையார் ஆனந்த பவன்,
சரவண பவனிலேயே வைத்துக் கொள்கிறேன்.

சினிமாவும் அரசியலும் பேசிக்கொண்டே
எனக்கு
முடிதிருத்தும் என் நண்பன்
இப்பொழுது என்னவானான் தெரியாது.

ஒரு முறை முதுகுப் பிடித்துக் கொண்டு
எழுந்து நடமாட முடியாமல்
படுத்துக் கொண்டிருந்த பொழுது
எனக்கு வெண்ணீர் வைத்து சுளுக்கு நீவி
சரி செய்த
கடம்பத்துார் காய்காரம்மா
என்னவானார் தெரியவில்லை.

எதிர் பலசரக்குக்கடை திறந்து
பத்துநாட்களுக்கு மேலாகிவிட்டது.
எப்பொழுது திறப்பார். திறப்பாரா
எதுவும் தெரியவில்லை.

சுடச்சுட வியாபாரம் ஆகிக் கொண்டிருந்த
தெருமுனை இட்லிகடையில்,
இப்பொழுதெல்லாம்
அவர் மனைவி மட்டும்,
விசிறியால் விசிறிக் கொண்டு
தெருவைப் பார்த்த வண்ணம்
நாள் முழுதும் உட்கார்ந்திருக்கிறார்.

எனக்கு இணைய வங்கிக் கணக்கெல்லாம் தெரியாது.
எனக் கூறி.
அவசரத்திற்கு வங்கி சென்று பணம் எடுத்து
என்வீட்டில் வந்து கொடுத்துவிட்டுச் சென்ற
நண்பர்
இந்தக் கலவரங்களில்
எந்தக் கோயில் வாசலில் இரவெல்லாம் படுத்திருந்து
அதிகாலை எழுந்து
எந்த வங்கிக் கிளை வாசலில்
நின்று கொண்டிருக்கிறாரோ.

நாங்கள் மொழி தெரியாத தேசத்தில், அகதிகள்.
பேன் கார்டு, சிபில், வங்கி அட்டை
எல்லாவற்றின்
வாடிக்கையாளர் சேவை மையங்களிலும்
ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே
பேச தேர்ந்தெடுக்க முடிந்த இரு மொழிகள்.

எப்படியோ திக்கித் திணறி தட்டுத் தடுமாறி
பேசிப் பார்க்கிறேன்.
ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்கச் சொல்கிறாரகள்.
ஏதேதோ பிழைச் செய்திகள் வருகின்றன, என்றால்
மின்மடல் அனுப்பச் சொல்கிறாரகள்.
மின்மடல் அனுப்பினால்
ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்பச் சொல்லி வழிகாட்டுகிறார்கள்.

இப்படியாக நாங்கள்
நுாற்றிமுப்பது கோடி ஜனங்களும்
எங்கள் பிரதமரின் வழிகாட்டுதல்படி
உலகிலேயே
முதல் நாடாக
முதல் தலைமுறையினராக,
பணமற்ற உலகை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

– 28 நவம்பர் 2016

Posted in கவிதைகள் | Leave a Comment »

ஆசிஃபா – ஜமீலா – குதிரை வீரன்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

ஆசிஃபாவைப் பற்றி கேள்விப்பட்ட பொழுது
எனக்கு சட்டென்று ஞாபகம் வந்த்து ஜமீலாதான்.

அவளும் கூட மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்தவள்தான்.

கல்வி கற்க வழியின்றி மேய்ச்சல் தொழிலை ஏற்றுக் கொண்டவள்.

புல்வெளிகளையும், உயர்ந்த மலைகளையும், குதிரைகளையும் ரசிப்பவள்.

இயற்கையை ஆழ்ந்து ரசித்து கற்றவள்.
மிருகங்களை அரவணைத்து அவற்றின் அன்பைப் பெற்றவள்.

மனிதர்களைப் பற்றி ஏதும் அறியாதவள்.

பழமைவாதிகள், மத வெறியர்கள், காமுகர்களின் கோட்டைக்குள் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்.

அவளைக் காக்க செம்படை
ஒரு குதிரை வீரனை அனுப்பியது.

அந்த மலை அடிவார கிராமங்கள்
மூழ்கிக் கிடந்திருந்த அந்தகார இருளிலிருந்து,
ஜமீலாவை மட்டுமல்ல
மனிதர்கள் அனைவரையும்
மீட்டெடுத்தான் அந்தக் குதிரை வீரன்.

ஆசிஃபாக்களும் கல்வியில் சிறந்த பேராசிரியர்களாக ஆகி இருக்க முடியும்
ஜமீலாவைப் போல,
நாங்களும் அந்த குதிரைவீரனாக ஆகியிருப்போமேயானால்

Posted in கவிதைகள் | Leave a Comment »