எனது நாட்குறிப்புகள்

பாரதமாதாவும் அதன் செல்லாக்காசு பிள்ளைகளும்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

மாதம் ஒன்றாகிவிட்டது
இப்பொழுதெல்லாம்
காய்கறிகள் ரிலையன்ஸ் பிரஷ்சில் வாங்குகிறேன்
பலசரக்கு பிக் பஜாரில் வாங்குகிறேன்
தலைமுடியை ஃபெமினாவில் வெட்டுகிறேன்
உணவை சங்கீதா, அடையார் ஆனந்த பவன்,
சரவண பவனிலேயே வைத்துக் கொள்கிறேன்.

சினிமாவும் அரசியலும் பேசிக்கொண்டே
எனக்கு
முடிதிருத்தும் என் நண்பன்
இப்பொழுது என்னவானான் தெரியாது.

ஒரு முறை முதுகுப் பிடித்துக் கொண்டு
எழுந்து நடமாட முடியாமல்
படுத்துக் கொண்டிருந்த பொழுது
எனக்கு வெண்ணீர் வைத்து சுளுக்கு நீவி
சரி செய்த
கடம்பத்துார் காய்காரம்மா
என்னவானார் தெரியவில்லை.

எதிர் பலசரக்குக்கடை திறந்து
பத்துநாட்களுக்கு மேலாகிவிட்டது.
எப்பொழுது திறப்பார். திறப்பாரா
எதுவும் தெரியவில்லை.

சுடச்சுட வியாபாரம் ஆகிக் கொண்டிருந்த
தெருமுனை இட்லிகடையில்,
இப்பொழுதெல்லாம்
அவர் மனைவி மட்டும்,
விசிறியால் விசிறிக் கொண்டு
தெருவைப் பார்த்த வண்ணம்
நாள் முழுதும் உட்கார்ந்திருக்கிறார்.

எனக்கு இணைய வங்கிக் கணக்கெல்லாம் தெரியாது.
எனக் கூறி.
அவசரத்திற்கு வங்கி சென்று பணம் எடுத்து
என்வீட்டில் வந்து கொடுத்துவிட்டுச் சென்ற
நண்பர்
இந்தக் கலவரங்களில்
எந்தக் கோயில் வாசலில் இரவெல்லாம் படுத்திருந்து
அதிகாலை எழுந்து
எந்த வங்கிக் கிளை வாசலில்
நின்று கொண்டிருக்கிறாரோ.

நாங்கள் மொழி தெரியாத தேசத்தில், அகதிகள்.
பேன் கார்டு, சிபில், வங்கி அட்டை
எல்லாவற்றின்
வாடிக்கையாளர் சேவை மையங்களிலும்
ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே
பேச தேர்ந்தெடுக்க முடிந்த இரு மொழிகள்.

எப்படியோ திக்கித் திணறி தட்டுத் தடுமாறி
பேசிப் பார்க்கிறேன்.
ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்கச் சொல்கிறாரகள்.
ஏதேதோ பிழைச் செய்திகள் வருகின்றன, என்றால்
மின்மடல் அனுப்பச் சொல்கிறாரகள்.
மின்மடல் அனுப்பினால்
ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்பச் சொல்லி வழிகாட்டுகிறார்கள்.

இப்படியாக நாங்கள்
நுாற்றிமுப்பது கோடி ஜனங்களும்
எங்கள் பிரதமரின் வழிகாட்டுதல்படி
உலகிலேயே
முதல் நாடாக
முதல் தலைமுறையினராக,
பணமற்ற உலகை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

– 28 நவம்பர் 2016

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: