எனது நாட்குறிப்புகள்

Archive for ஓகஸ்ட், 2019

இந்திய விடுதலை இயக்கம்: அகிம்சையால் விளைந்த விந்தையா?

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 15, 2019

அகிம்சை வழிப் போராட்டத்தால் ஏகாதிபத்தியங்களோ, முதலாளிகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ தங்கள் வாழ்வை, லாபத்தை கைவிட்டு சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் போராடும் மக்களுக்கு கொடுத்துவிட்டு ஓடி ஒழிந்துவிடுவார்களா என்ற அடிப்படையான கேள்விதான் “விந்தை” என்கிற ஆச்சரியத்தில் தொக்கி நிற்கிறது.

அகிம்சை வழியில் போராடும் மக்களும் கூட தன்னுடைய போராட்டத்தில் உறுதியாக இருந்தால், சட்டம் ஓழுங்கு போன்ற தீராத தலைவலியாக, சிக்கலாக மாறினால், அவர்கள் மீதும் வன்முறையை எப்படி பிரயோகிக்க வேண்டும், எவ்வாறு அவர்களை ஓட விடவேண்டும் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் வெள்ளை ஆட்சி காலத்திலிருந்தே நன்கு கற்று தெளிவு பெற்றிருந்திருக்கிறார்கள்.

ஆளும் வர்க்கங்கள் எந்தளவிற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு, நம் காலக்கட்டத்தில் கூடங்குளமும், துாத்துக்குடியும் முக்கியமான உதாரணங்கள். சர்வதேச அளவில் ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தேர்தல் வழியில் சமத்துவத்தை கொண்டு வர முயன்ற முற்போக்காளர்கள் மிக முக்கிய உதாரணங்கள். பஸ்தர் காடுகளில் காந்திய குடில் அமைத்து பழங்குடிகள் மத்தியில் வேலை செய்த சிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகள் மேலும் சிறந்த உதாரணங்கள்.

சமீபத்தில் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நுாற்றாண்டு துவக்கத்தை ஒட்டி, இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் துவக்க கால வரலாற்றை வாசிக்கத் துவங்கினேன். அவற்றை வாசிக்கும் பொழுது, கிடைத்த ஆச்சர்யங்களில் “அகிம்சையால் விளைந்த விந்தைக்கான” பதில்கள் அடங்கியிருப்பதை உணர முடிந்தது.

காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு நுாற்றாண்டு கண்ட பிறகும் 1929 வரையும் கூட அது பூரண சுதந்திர கோரிக்கை வைக்கவில்லை. 1947லும் கூட அதன் தொன்டர்களும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களும் கூட ஆகஸ்ட் 15 1947 அன்று சுதந்திர கிடைக்கப் போவது குறித்த எந்த அறிகுறியும் முன்னமே அறியாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பவையெல்லாம் ஆச்சர்யத்திற்கு உரிய உண்மைகள்.

1917 ருஷ்யப் புரட்சியின் தாக்கம் இந்தியாவில் மிகப் பலமாக இருந்தது. 1923ல் தொழிலாளர் விவசாயிகள் கட்சி என்ற பெயரில் சென்னையில் ஒரு அமைப்பு தோன்றியது. 1925-இல் சிங்காரவேலர் தலைமையில் கான்பூரில் இந்தியப் பொதுவுடமை கட்சி துவங்கப்பட்டது.

பெஷாவர், கான்பூர், மீரத் ஆகிய இடங்களில் பொதுவுடமையாளர்கள் மீது சதி வழக்குகள் போடப்பட்டன. 1925ல் துவங்கப்பட்ட பொதுவுடமைக் கட்சி 1934ல் தடை செய்யப்பட்டது.

ருஷ்யப் புரட்சியின் தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல பின்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, ஜப்பான், பல்கேரியா, துருக்கி என ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை பரவியிருந்தது. இந்த எல்லா நாடுகளிலும் எழுச்சிகளும் கலகங்களும் தொடர்ந்து நடைபெற்றன.

வீரேந்திரநாத் சாட்டோ (சரோஜினி நாயுடுவின் சகோதரர்), பூபேந்திரநாத் தத்தா (விவேகானந்தரின் சகோதரர்), எம்.பி. திருமலாச்சாரியார் (இந்தியா பத்திரிகை ஆசிரியர்), எம்.என். ராய், சௌகத் யுஸ்மானி,அபானி முகர்ஜி, அப்துல் ராப் போன்றவர்கள் Armed National Revolutionaries எனக் கூறப்பட்டு வெள்ளையர்களால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் தலைமறைவாக நாடு விட்டுத் தப்பி பெர்லின், தாஷ்கண்ட் போன்ற பகுதிகளுக்குச் சென்று நாடு கடந்த இந்திய அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர்.

“எமது புரட்சி வெற்றி பெறின் இந்தியாவில் ஒரு சோசலிசக் குடியரசு ஏற்படுத்தலே எங்கள் லட்சியம்” என அறிவித்தனர். இந்தியாவின் அறிவுத்துறையினர் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பல்வேறு வெளிநாடுகள் மூலமாக
அக்டோபர் புரட்சிக்கு வெகு காலம் முன்பாகவே பொதுவுடமை நுால்கள் கிடைக்கப் பெற்று படித்து, விவாதித்து, குழுக்களாக இயங்கத் துவங்கியிருந்தனர். 23-11-1918லேயே சத்தார், ஜப்பார் என்ற இரு இசுலாமிய சகோதரர்கள் லெனினைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

1919ல் அபானி முகர்ஜியுடன் இணைந்து எம்.என்.ராய் An Indian Manifesto என்ற பெயரில் “இந்தியப் பொதுவுடமை அறிக்கையை” வெளியிட்டார். இந்தியப் பொதுவுடமையாளர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், வெளியிடுகளில், துண்டு பிரசுரங்களில் பிரதானமாக இருந்தவை “பிரிட்டன் ஏகாதிபத்திய எதிர்ப்பு” என்பதும் “இந்தியாவில் பொதுவுடமைச் சிந்தனைகளை பரப்புவது” என்பதுமாக இருந்தது என்கிறார்கள்.

சோவியத் பொதுவுடமைக் கட்சி மற்றும் பொதுவுடமையாளர்களின் சர்வதேசக் கழகமும், அன்றைக்கு கீழ்த்திசை நாடுகள் என அழைக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் மக்களுடன் இணைந்து நிற்பது, அவர்கள் விடுதலைக்காக பாடுபடுவது என்ற இலட்சியத்துடன் பல அமைப்புகளை உருவாக்க உதவி புரிந்தார்கள். இந்நாடுகளின் அரசியல் சமூகப் பிரச்னைகளை சர்வதேச அளவில் ஆய்வு செய்தார்கள். அதற்கென மிகப் பெரும் அறிவாளிகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கினார்கள். இந்திய அறிவாளிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்களை ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதன் அடிப்படையில் இந்திய விடுதலைக்கான பாதைகளை அமைக்கவும் ஊக்கப்படுத்தினார்கள். அன்றைக்கு வந்த அவற்றின் வெளியீடுகள் பலவற்றிலும், இருந்த பிரதானமான நோக்கங்கள்

“ஆசியாவில் புரட்சிகர கலகங்களை ஏற்படுத்துதல், புரட்சியாளர்களுக்கு துணையாக இருத்தல்”

“அதன் மாணவர்களுக்கு புரட்சிகர அரசியலை, பொதுவுடமைச் சிந்தனைகளை பரப்புதல்” என்பதாக இருந்தன. இப்படியான நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்ட “இந்தியா இந்தியர்களுக்கே” என்ற சர்வதேச பிரச்சார கழகத்தின் ஒரு வெளியீட்டின் முன் அட்டையில் இப்படியாக முழக்கம் வைக்கப்பட்டிருந்தது,

“இந்தியா இந்தியர்களுக்கே,
ஏகாதிபத்தியவாதிகள் ஒழிக.
அகிலம் வாழ்க”

இந்தியத் துணைகண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு வகையான கடும் போராட்டங்கள் 17, 18ம் நுாற்றாண்டுகளில் துவங்கி 20ம் நுாற்றாண்டில் வெள்ளையர் ஆட்சி வெளியேறும் வரை மிகத் தீவிரமாக நடைபெற்றக் கொண்டிரு்நதிருக்கிறது. ஆதிவாசிகள், பழங்குடிகளின் கலகங்கள் முதல், சமூக விடுதலைக்கான போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், தொழிலாளர்களின் போராட்டங்கள் என பல்வேறு வகையான சமூகப் பிரிவுகள், உழைக்கும் வர்க்கங்களின் கலகங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. பெரும்பாலான தீவிரப் போராட்டங்கள் எதிலும் காங்கிரசின் பங்கு இல்லை. அவர்கள் தாங்கள் நடத்திய முன்னெடுத்த அடையாளப் போராட்டங்களுக்கு எதிராகவே கூட விமர்சிக்கவும், கைவிடவும் கூடியவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் மக்களின் வீறு கொண்ட போராட்டங்களிலிருந்து காததுாரம் ஓடுபவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்.

பொதுவுடமை எழுச்சியையும், கருத்துக்களின் பரவலையும் தொடர்ந்து இத்தகைய போராட்டங்கள் அனைத்தையும் எவ்வாறு ஒரு கண்ணியில் இணைப்பது, இத்தகைய போராடும் அனைத்து தரப்பு பிரிவுகளையும் பொதுவுடமைச் சிந்தனைகள் மற்றும் கட்சியின் கீழ் இணைப்பது எனத் தீவிரமாக பொதுவுடமையாளர்கள் இயங்கத் துவங்கிய இருபதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில்தான், இரண்டாம் உலகப் போரும், அக்டோபர் புரட்சியும், பொதுவுடமையாளர்களின் சர்வதேச அகிலமும் வெள்ளை ஏகாதிபத்திங்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்துவிட்டன.

வரலாற்றில், வாழ்க்கையில் எந்த அதிசயங்களுக்கும், அற்புதங்களுக்கும் சாத்தியமில்லை. வரலாறு எண்ணற்ற மக்களின் தியாகத்தாலும், இரத்தத்தாலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்றின் இயக்கம் என்பது தர்க்கப்பூர்வமான நிகழ்வுகளின் தொகுப்பு என நம்பிக்கை கொண்ட எந்தவொரு மாணவனும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிவுப்பூர்வமாக கற்றுக் கொள்ள விரும்பும் யார் ஒருவரும், சொல்லிக் கொடுக்கப்பட்ட, சொல்லிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற தர்க்கமற்ற வழிமுறைகளைக்கு மாறாக தர்க்கப்பூர்வமாக கற்றுக் கொள்ள விரும்பினால் மேற்கண்ட இந்தியப் பொதுவுடமையாளர்களின் வரலாற்றை ஆழமாக கற்றே தீரவேண்டும்.

இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும், சமத்துவத்திற்காகவும் எண்ணற்ற தோழர்கள் தங்கள் வாழ்வை, இரத்தத்தை இம்மண்ணில் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்திய விடுதலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியப் பொதுவுடமைடயாளர்கள் செய்திருக்கும் பணி அளப்பரியது.

அவற்றையெல்லாம் நினைக்குந் தோறும் பாரதிதாசனின் இந்த வரிகளே ஞாபகம் வரும்

சித்திரச் சோலைகளே
உமை நன்கு திருத்தப் இப்பாரினிலே
முன்னம் எத்தனை தோழர்கள்
இரத்தம் சொறிந்தனரோ உங்கள் வேரினிலே

Posted in கட்டு​ரை | Leave a Comment »