எனது நாட்குறிப்புகள்

Archive for the ‘கதைகள்’ Category

புத்தர் ​சொன்னதும் பாடிகாட் முனிசுவரன் ​சொன்னதும் ஒன்றுதான்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 30, 2011

நம்ப​வே முடியவில்​லை அந்த மா​லை ஏழு மணி ​நேரத்திற்கு பாடிகாட் முனிசுவரன் ​கோயில் ஆளரவ​மே இன்றி அந்த பகுதி​யே அ​​மைதியாக இருந்தது.

ஒவ்​வொரு நாளும் மா​லை ​நேரங்களிலும் இரவு ​நேரங்களிலும் புதிய வாகனங்கள் பாடிகாட் முனிசுவரனின் ஆசிக்காக வரி​சை கட்டி நிற்கும், அந்தப் பக்க ​போக்குவரத்​தே ஸ்தம்பிக்க ​செய்யும் அளவிற்கு.

காரணம் ஏன் என்​றே ​தெரியவில்​லை இன்​றைக்கு ஒரு வாகனம் கூட பூ​சைக்காக, பாடிகாட் முனிசுவரனின் ஆசிக்காக அங்கு நிற்கவில்​லை.

சரி வாகனங்கள் தான் இல்​லை. ஒவ்​வொரு நாளும் புதிய வாகனங்களுக்கு பூ​சை ​செய்து ​கொடுப்பதற்காக எத்த​னை பூசாரிகள் இருப்பார்கள். இன்​றைக்கு அவர்க​ளையும் ஒருத்த​ரையும் காணவில்​லை.

நானும் என் மகனுமாக அவனுக்காக வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்​திற்கு பூ​சை ​போட்டுவிடலாம் என்று அங்கு வந்​தோம். அவனுக்கு அவசரம் வீட்டருகி​லே​யே ஒரு ​கோயிலில் ​போட்டுக் ​கொள்ளலாம், அவ்வளவு தூரம் ​வேண்டாம் என்றான்.

நான் தான் விடாப்பிடியாக இந்தக் ​கோயில் தான் இவ்விசயத்தில் சக்திவாய்ந்தது. பாடிகாட் முனிசுவரனுக்கு பூ​சை ​போட்டால்தான் மனதுக்கு நிம்மதி என்று ஒ​ரே முகமாக அவனு​டைய எந்த முணுமுணுப்புக​ளையும் சட்​டை ​செய்யாமல் அ​ழைத்து வந்திருந்​தேன்.

ஆறு மாதமாக தனக்கு புது ​பைக் வாங்கித் தர​வேண்டு​மென்று என்​னை பிய்த்து திண்று ​கொண்டிருந்தான். எனக்கு விருப்ப​மேயில்​லை. எவ்வள​வோ தள்ளிப் ​போட்டுக் ​கொண்​டே வந்​தேன்.

“இன்னிக்கு ​மெட்ராஸ் இருக்கிற லட்சணத்தில ​பைக் அது இ​தெல்லாம் ​தே​வை​யேயில்​லை. ஒழுங்கா கா​​லேஜ் பஸ்ஸில கா​​லேஜுக்கு ​போனமா வீடு வந்தா, வீடு இருக்கிற ஏரியாவுக்குள்​ளே​யே நண்பர்க​ளோடு ​போய் ​பேசினமா ​​நேரங்காலத்​தோட வீடு வந்தமான்னு இல்லாம. பசங்ககூட ​சேர்ந்து ​மெட்ராஸுல ஒரு ​தெரு பாக்கியில்லாம சுத்தறதுக்கு ​பைக் ​வேணும். இத வாங்கி ​கொடுத்துட்டு எப்ப வீடு வருவா​னோ எப்படி வீடு வருவா​னோன்னு நாங்க பயந்துட்டு கிடக்கனும்”

எனக் கத்திப் பார்த்​தேன்.

முதலில் என் வாதத்​தை ஏற்றுக் ​கொண்டு அவனிடம் தனதாக எடுத்துக் கூறிக் ​கொண்டிருந்த என் ம​னைவி​யை என்ன ​சொல்லி தன் பக்கம் இழுத்துக் ​கொண்டா​னோ கடந்த நான்கு மாதங்களாக அவனுக்காக அவள் என்னிடம் ​கெஞ்சிக் ​கொண்டிருந்தாள்.

“என்னடி நீயும் புரியாம ​பேசுற. இதுக்குத்தான் ​நியூஸ்பேப்பர்லாம் படிபடின்னு உன்​னை கல்யாணம் ஆன காலத்திலிருந்து ​சொல்லிட்டு இருக்​கேன். ​எங்​கேயாவது ஒரு இடத்தி​ல தினம் ​மெட்ராசுல எவ​னோ ​பைக்ல ​போறவன் விபத்தில இறந்துட்டு இருக்கான். எங்க ஆபிசில பலர் என்ன ​சொல்றாங்க ​தெரியுமா? எல்லா விபத்​தையும் பகிரங்க படுத்துறதில்​லையாம். ​தேர்தல், அரசியல் காரணங்களுக்காக பல விபத்துக்க​ளை மூடி ம​றைச்சிடுறாங்களாம். மீறி வர்ற​தே இவ்வளவு அதிகமா இருக்காம். இந்த லட்சணத்துல ஏண்டி நமக்கு ​வேண்டாத பிரச்சி​னை​யெல்லாம்”

“ஏங்க அவன் பிரண்ட்ஸ் இந்திரபிரசாத் பல்சர் வச்சிருக்கான், கார்த்தி யமாஹா வச்சிருக்கான், ஏன் குட்டி கார்த்திக் கூட ஸ்​பெலன்டர் வச்சிருக்கான், எத்த​னை நாளுங்க அவங்ககூட ஓசியி​லே​யே ​போவான். அவனுக்கு அசிங்கமா இருக்காதாங்க. அன்னிக்கு முதமுதல்லா உங்ககிட்ட ​கேட்கும் ​போது எவ்வளவு ​யோசிச்சு ​யோசிச்சு ​கேட்க​வே சங்கடப்பட்டுக்கிட்டு ​கேட்டான். பாவமா இல்​லையா உங்களுக்கு”

அவளு​டைய க​டைசி வார்த்​தைகள் என்​னை மிகவும் காயப்படுத்தின. குழந்​தையிலிருந்​தே அவனுக்கு என் மீது பாசம் அதிகம். ​கைக்குழந்​தையி​லே​யே அவன் தன் அம்மா​வோடு இரவில் படுத்துக் ​கொள்ள மாட்டான். வீட்டில் எல்​லோரும் தூங்கிவிட்டாலும் நான் வரும்வ​ரை அவன் படுக்​கையில் அவன் அம்மா அக்காவிற்கு நடு​வே எனக்காக முழித்துக்​கொண்​டே படுத்திருப்பான்.

அவன் அக்கா​வைப் ​போல் எப்​பொழுதும் எந்த​வொன்​றையும் என்னிடம் ​தைரியமாக நி​னைத்த மாத்திரத்தில் ​​கேட்கமாட்டான். என்ன நி​னைப்பா​னோ ​தெரியாது. ​கேட்கும் ​பொழுது ஏ​தோ அப்பாவிட​மே மகன் கூனிக்குறுகி நிற்பது ​போல் எனக்கு படும். அந்த சங்கடத்​தை அவனுக்கு தரக்கூடாது என்பதற்காக​வே, அவனு​டைய சிறு வயதில் அவன் முகம் பார்த்​தே அவன் விரும்புவ​​தை கண்டுணர்ந்து வாங்கி ​கொடுத்துவிடு​வேன். அவன் வளர்ந்த பிறகு, அவன் நண்பர்க​ளோடு ​வெளி​யே ​போகும் ​பொழுது அவன் விரும்பிய​தை வாங்கிக் ​கொள்ள தாராளமாக பணத்​தை ​கொடுத்து விடு​வேன்.

ஆனால் இதுவ​ரை அவனாக ​போய் வாங்கிவந்த​வை எதுவும் எங்கள் முகம் ​கோணும் அளவிற்கு இருந்தது கி​டையாது. ​பெரும்பாலும் ஒன்றும் ​செலவு ​செய்யவில்​லைப்பா, காபிதான் குடிச்​சோம் ஜூஸ் தான் குடித்​தோம் என்று கூறி ​​கொடுத்ததில் ​தொன்னூறு சதவிகித பணத்​தை திரும்பிக் ​கொடுத்து விடுவான்.

படிப்பிலும் அவன் எப்​பொழுதும் புத்திசாலி மாணவனாக​வே இருந்தான். அவன் அக்கா படிப்பதும் அவளு​டைய பள்ளி கல்லூரி விசயங்க​ளை ​பேசுவது​மே வீட்டில் பிரதானமாக இருக்கும். அவள் அளவிற்கு அவன் அலட்டிக் ​கொள்ள​வே மாட்டான். ஆனால் எப்​பொழுதும் வகுப்பில் முதல் மாணவனாக​வே இருப்பான்.

அவனு​டைய இந்த ஆ​சை விசயத்தில் மட்டும், என்னு​டைய ​சென்​னை நகரின் ​போக்குவரத்து பிரச்சி​னை குறித்த பயம், அவன் ஆ​சைக​ளைவிட, அவ​னைக் காப்ப​தே என்னு​டைய முதல் ​வே​லையாக ​வைத்துக் ​கொள்ள தூண்டியது.

நி​லை​மை சமாளிக்க முடியாத வ​கையில் ​பெரும் பிரச்சி​னையாக மாறிய ஒன்ற​ரை மாதங்களுக்கு முன்பு ஒரு நாள். க​டைசி அஸ்திரமாக என் ம​னைவியிடம் அவன் காதுபட​வே ​சொன்​னேன்.

“அவனவன் சம்பாதித்து வண்டி வாங்கனும் அப்பா அம்மா சம்பாத்யத்ல வண்டி வாங்கி, அவங்கிட்ட காசு வாங்கி ​பெட்​ரோல் ​போட்டு ​ரோட்ல பந்தா காட்றதுக்கு இந்தக் கால பசங்களுக்கு ​வெட்க​மோ ​ரோச​மோ கி​டையாதா. அப்படி சம்பாதிச்சவன் எவனாவது பல்சரும், யமஹாவும் மாதிரி ​ரேஸ் ​பைக்லா வாங்கிட்டு, ​ரோட்ல படுத்து எந்திரிச்சு வண்டி ஒட்டிட்டு சுத்துவானா”

கோபத்திலும், பயத்திலும், பதட்டத்திலும், சூழ​லை சமாளிக்க முடியாத ​கையாலாகாத்தனத்திலும் வார்த்​தைகள் மிகவும் தடிமனாக வந்து விழுந்துவிட்டன. என் வார்த்​தைகளின் சூடு என்னா​லே​யே தாங்க முடியவில்​லை. அதற்கு பிறகு பல நாட்கள் என்னு​டைய நிம்மதி கு​லைந்தது. இரவு தூக்கம் வரவில்​லை. என்​னை நா​னே ​செருப்பால் அடித்துக் ​கொண்ட​தைப் ​போல உணர்ந்​தேன்.

அவன் விக்கித்து ​போய்விட்டான். அதன் பிறகு என் முகத்​தை ஏ​றெடுத்தும் பார்க்க ​தைரியமில்லாதவனாக மாறிவிட்டான். தன் வீட்டி​லே​யே ஒரு அந்நிய​னைப் ​போல எல்லாவற்றிற்கும் கூசிக் குறுகினான். அவனது குர​லை எந்த ​நேரத்திலும் ​கேட்க முடியவில்​லை. சாப்பாட்டு இ​லையில் அவன் அனுமதியில்லாம​லே​யே அவன் அம்மா ​போடும் எ​தையும் விருப்பு​வெறுப்பின்றி சாப்பிட்டுவிட்டு எழுந்து ​போனான்.

என்னால் இந்தக் ​கொடு​மைக​ளை தாங்க முடியவில்​லை.

அவன் அம்மாவும் என்னு​டைய அந்த ​பேச்சின் ​கொடூரத்​தை குறித்து என்னிடம் எதுவு​மே கு​றைபட்டுக் ​கொள்ளவில்​லை. ஒரு ​வே​ளை இவ்வளவு ​கேவலமான மனுசனிடம் இனி என்ன ​பேசி என்ன பய​னென்று என்​னோடு ​பேச்​சை நிறுத்திக் ​கொண்டா​ளோ ​தெரியவில்​லை.

நா​னே அவர்க​ளோடு சமாதானத்துக்கு ​போ​னேன்.

சமாதானம் ​செய்வது என்பது அத்த​னை சுலபமானதாக இருக்கவில்​லை. விசமுள்ளாய் வீசி​​யெறிந்த வார்த்​தைகளிலிருந்து மனிதர்க​ளை மீட்​டெடுத்து ப​ழைய நி​லைக்கு உறவுக​ளை சீர​மைப்பது என்பது சாத்திய​மேயில்லாதது. ஆனாலும் அ​தைச் ​செய்துதான் ஆக​வேண்டும். முடிந்தவ​ரை ஒட்டுப்​போட்டு, சமரசங்களுக்கும், இழப்பீடுகளுக்கும் உத்திரவாதம் ​கொடுத்து உறவுக​ளை ​தொடருவ​தைத் தவிர யாருக்கும் மாற்று இல்​லை.

“என் மக​​னை இழந்துவிடு​வோ​மோ என்ற பயத்தில்தான் அந்த எல்​லைவ​ரை நான் ​போ​னேன். உனக்​கே ​​தெரியு​மே அவன் குழந்​தையாக இருந்த காலத்திலிருந்து அவ​னை உன்​னைக்கூட ஒரு அடிஅடிக்க சம்மதிக்க மாட்​டே​னென்று”

“அப்படிபட்டவர்தான் அவ்வளவு ​கேவலமாக குழந்​தை​யை ​பேசினீங்க​ளோ”

எனக்கு சந்​தோசமாக இருந்தது. சண்​டைக்கு தயாராகிவிட்டார்கள். என்னு​டைய தவறுக​ளை எனக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். என்​னோடு வாதம் ​செய்ய ஒரு மனிதன் தயாராக இருக்கிறா​னென்றால் அ​தைவிட என்​னை அங்கீகரிக்கிறான் என்பதற்கும், என்​னோடு தன் உறவுக​ளை ​மேம்படுத்திக் ​கொள்ள முயற்சிக்கிறான் என்பதற்கும் ​வே​றென்ன உதாரணம் ​வேண்டும்.

அழு​தேன். துடித்​தேன்.

என் ​கோபத்திற்கான, பயத்திற்கான காரணங்க​ளை என் வாழ்​வெங்கும் ​தொடர்ந்த விபத்து மரணங்க​ளை பட்டியலிட்​டு, இன்​றைய ​சென்​னை நகர ​போக்குவரத்து அராஜகங்க​ளை, அக்கிரமங்க​ளை க​தைக​தையாகக் கூறி மன்னிப்பு ​கேட்​டேன்.

க​டைசியில் என் மகனுக்கு அவன் விரும்பிய ​பைக்​கை உடனடியாக மறுநா​ளே வாங்கித் தரும் உத்திரவாதத்துடன், என் மனநிம்மதி​யை மீட்​டெடுத்துக் ​கொண்​டேன்.

பாடிகாட் முனிசுவரன் சந்நிதியில் அன்​றைக்கு பக்தர்களுக்கும் கடவுளுக்கும் இ​டை​யே மீடி​யேட்டராக யாரும் இல்லாதது எனக்கு ஒரு வ​கையில் சந்​தோசமாக இருந்தது. ​வெளி​யே என் மகன் நாங்கள் ​கொண்டு வந்திருந்த குங்குமம் சந்தனத்​தை வண்டிக்கு ​வைத்து, மா​லை​யை முன்பக்கமாக மாட்டி அலங்கரிக்கும் ​வே​லையில் ஈடுபட்டிருந்தான்.

நான் சந்நிதியில் கிரில் கதவுக்கு அரு​கே நின்று ​கொண்டு முனிசுவர​னை மிக அருகில் பார்த்து ​சேவித்துக் ​கொண்டிருந்​தேன். கண்க​ளை மூடி ஊணுருக உயிருருக அவ​ரை ​வேண்டிக் ​கொண்டிருந்​தேன். திக்கற்றவருக்கு ​தெய்வத்​தைத் தவிர யார் து​ணை?

“ஆண்டவா இன்று முதல் என் பிள்​ளையின் உயிர் உன் ​கையில், என்னால் முடியாது​போன ஒரு ​பொறுப்​பை உன்​னை நம்பி ஒப்ப​டைக்கி​றேன். இவ​னைக் காத்து ஒவ்​வொரு நாளும் பத்திரமாக வீடு வந்து ​சேர்ப்பது உன் ​பொறுப்பு”

முனிசுவரனின் குரல் காதில் ஒலித்தது!

“இந்த நகரத்தில் சா​லை விபத்தில் பாதிக்கப்பட​வே படாத ஒரு குடும்பம் இருக்கு​மென்றால், அவர்களின் ​கையால் ஒரு எலுமிச்​சை வாங்கி வந்து என் சந்நிதியில் ​வைத்து வணங்கி, உன் வண்டியின் முன் சக்கரத்தால் நசுக்கிவிட்டு எடுத்துச்​செல். உன் பிரார்த்த​னை பலிக்கும்!”

இ​தைப் படிக்கும் அன்பர்க​ளே! அப்படி ஒரு குடும்பத்​தைச் ​சேர்ந்தவராக நீங்கள் இருந்தால் என் மகனுக்காக உங்கள் ​கையால் ஒரு எலுமிச்​சை ​கொடுங்கள்!

Advertisements

Posted in கதைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | 3 Comments »

தங்கப் பு​தைய​லைத் ​தேடி . . .

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 21, 2011

ஒரு ​பெரும் கூட்டம் ஒன்று ​வெகுதூரத்தில் ஒரு ம​லையடிவாரத்தில் தங்கப் பு​தையல் இருப்பதாகக் ​கேள்விப்பட்டார்கள். அவ்விடத்​தை ​நோக்கி பயணிப்ப​தென முடிவு ​செய்து கிளம்பினார்கள்.

அக்கூட்டத்​தை வழிநடத்த அவர்களுக்குள்​ளே​யே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழு உறுப்பினர்கள் அப்பு​தையல் குறித்தும், பு​தையல் இருக்கும் இடம் குறித்தும் தங்களுக்கு கி​டைத்தை தகவல்க​ளை​யெல்லாம் பரிமாறிக் ​கொண்டார்கள்.

அதிலிருந்த குறிப்புக​ளை​யெல்லாம் ​கொண்டு பு​தையல் இருக்கும் இடத்திற்கு ​போவதற்கான தி​சை வழி​யையும் அவ்வழியில் ஏற்படும் ஆபத்துக்க​ளையும், அ​தை எதிர் ​கொள்வதற்கான மு​றைக​ளையும் ​பேசி வகுத்துக் ​கொண்டார்கள். கி​டைக்கும் பு​தைய​லை அப்​பெரும் கூட்டம் முழுவதும் தங்களுக்குள் சமமாக பகிர்ந்து ​கொள்வ​தென முடிவு ​செய்தார்கள்.

பயண நாள் குறிக்கப்பட்டது. அதிகா​லையில் கிளம்பிய அக்கூட்டம். பல நாட்கள் பல ​சோத​னைக​ளைக் கடந்து தங்கள் பயணத்​தை இன்னும் ​தொடர்ந்து ​கொண்டிருந்தது.

செல்லும் வழியில் பல குழப்பங்கள், பல இடர்பாடுகள், தங்கள் வழி குறித்து பலருக்கு சந்​தேகம் கிளம்பியது. ​வெகு நீண்ட பயணத்தில் பலர் பு​தையல் குறித்த நம்பிக்​கைக​ளை இழந்தனர். சிலர் ஆங்காங்​கே முன்னும் ​செல்ல மனமில்லாமல், பின்னும் ​செல்ல ​வழியில்லாமல் தங்கிவிட்டார்கள்.

அக்கூட்டத்தின் சில உறுப்பினர்கள் மட்டு​மே இவ்வாறு ​செய்தாலும், அந்த ​பெரும் கூட்டம் தன் பயணத்​தை நம்பிக்​கை​யோடும் உறுதி​யோடும் ​தொடர்ந்து ​கொண்டுதான் இருந்தது.

திடீ​ரென ஒரு நாள், அவர்கள் பயணத்தின் ஒரு இடத்தில் ஒ​ரே ஒரு குடும்பம் மட்டும் தன் குடும்பத் த​லைவன் த​லை​மையில் அக்கூட்டதிலிருந்து பிரிந்து ​வே​றொரு பா​தையில் ​சென்றது. அக்கூட்டத்தினரி​டை​யே இது ​பெரும் சலசலப்​பை ஏற்படுத்தியது. ஆளாளுக்கு என்ன காரணமாக இருக்கும்? என யூகங்க​ளை அவிழ்த்து விடத் துவங்கினார்கள்!

இத்த​னைக்கும் அக்குடும்பத் த​லைவன் தான் இக்கூட்டத்​தை வழிநடத்தும் குழுவின் முக்கியத் த​லைவனாக இருந்தான். அதனால் அப்​பெரும் கூட்டம் முழுவதும் குழப்பமும் சலசலப்பும் அதிகப் பட்டது. பலருக்கு ஆத்திரம் ​பொங்கியது. பலர் அவன் மீது உள்ள ஆத்திரத்தில் அருகிலிருந்தவர்க​ளை ​போட்டு அடித்து உ​தைத்தார்கள்.

“நீ வந்ததால் தான் நான் வந்​தேன்”

“நீ ​சொன்னதால் தான் நான் வந்​தேன்”

“எனக்கு அப்ப​வே அவன் மீது சந்​தேகம் இருந்தது. ​சொன்னால் யாரும் ​கேட்க மறுத்தீர்கள்”

இப்படியாக வாதப் பிரதிவாதங்கள் முற்றியது. ​மொத்தத்தில் அக்கூட்டம் முழுவதிலும் ஒற்று​மை கு​​லைந்தது. எல்​லோரு​டைய ஆர்வமும், முன்முயற்சியும் சீர்கு​லைந்தது.

வயதானவர்க​ளை இத்த​னை காலமாக தூக்கிக் ​கொண்டு வந்த இ​ளைஞர்க​ளெல்லாம், பல்லக்​கோடு அவர்க​ளை கீ​ழே தூக்கி எறிந்தார்கள். அப் ​பெரும் கூட்டம் முழுவதிலும் மரியா​தை கு​றைந்தது. நாகரீகமான வார்த்​தைக​ளை​யோ நடவடிக்​கைக​ளை​யோ இனி எதிர்பார்க்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது.

கூட்டத்தின் முதிய உறுப்பினர்களுக்கு பயம் வந்தது. இனி இப்​பெரும் கூட்டத்தின் கதி என்னவாகு​மென்று? ஆளுக்காள் சத்தம் ​போட்டுக் ​கொண்டிருந்ததில் குழப்பம் அதிகமானது. யார் யார் எங்​கெங்கு ​பேசுகிறார்கள்? என்​னென்ன ​பேசிக் ​கொண்டிருக்கிறார்கள்? அப்​பெரும் கூட்டத்தில் உள்ள பல்​வேறு குழுக்களின் மன நி​லை எவ்வாறு உள்ளது? அதன் த​லைவர்கள் என்ன ​சொல்கிறார்கள்? எதுவும் யாருக்கும் புரியவில்​லை!

எவர் ​பேசுவதும் எவர் காதிலும் விழவில்​லை. ​தெளிவான கருத்துக்க​ளை கூறுபவர்களின் குரல்க​ளை​யெல்லாம் அருகில் உரத்து கத்திக் ​கொண்டிருப்பவர்கள், வாய்விட்டு கதறி அழுது ​கொண்டிருப்பவர்களின் சத்தம் யாருக்கும் எட்டாததாகச் ​செய்து ​கொண்டிருந்தன.

இத்த​கைய சூழல் நி​லை​​மை​யை ​மேலும் ​மேலும் ரசாபாசமானதாக்கிக் ​கொண்டிருந்தது.

பு​தைய​லைக் குறித்த கனவு ​மெல்ல ​மெல்ல மங்கத் ​தொடங்கியது. லட்சியம் அற்ற அக்கூட்டத்தின் ஆண்களும் ​பெண்களும் அடிக்கும் கூத்துக்களும், அவர்கள் தங்கள் குழந்​தைக​ளை வளர்க்கும் மு​றைகளும், அந்த அத்துவானக் காடுகளில் ஏற்பட்ட உணவு, நீர், மருந்து, உ​டை, வசதியான தங்குமிடம் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகளால் ஏற்பட்ட சண்​டைக​ளையும், சுயநலப் ​போராட்டங்க​ளையும் பார்த்த அக்கூட்டத்தின் முதியவர்களும், த​லைவர்களும் ​செய்வதறியாது, ​வேத​னையில் புலம்பிக் ​கொண்டிருந்தார்கள்.

இக்கூட்டத்திலிருந்து பிரிந்து ​சென்ற குடும்பத்தின​ர், தாங்கள் பிரிந்து ​செல்வதற்கு முதல் நாள் இரவு படுத்திருந்த இடத்தில், அவர்களின் அரு​கே படுத்துக் ​கொண்டிருந்த இ​ளைஞன் ஒருவன், அக்குடும்பத்தின​ரோடு அக்குடும்பத் த​லைவன் ​பேசிக் ​கொண்டிருந்த விசயங்களில் தன் காதில் விழுந்த சில விசயங்க​ளை ​வெளியிடத் துவங்கினான்.

இந்த துணுக்குச் ​செய்திகள், ஒருவரிடமிருந்து ஒருவர் மூலமாக அப்​பெரும் கூட்டம் முழுவதும் பரவத் ​தொடங்கியது. மீண்டும் சலசலப்பும் குழப்பமும் அவர்கள் விசயம் குறித்து பரவத் துவங்கியது.

அந்தச் ​செய்திகள் ​பெரும்பாலும், பிற குழுக்களின் த​லைவர்கள் குறித்தும் அவர்களின் முட்டாள்தனங்கள் குறித்தும் அவர்கள் ​பேசி சிரித்துக் ​கொண்ட விசயங்களாக​வே இருந்தன. அவர்கள் தனித்து ​போக முடிவு ​செய்தது குறித்தான ​காத்திரமான காரணங்கள் எதுவும் அவன் ​வெளியிட்ட தகவல்களில் இல்​லை.

அவன் ​வெளியிட்ட ​செய்திகளிலிருந்து ​தெரிந்து ​கொள்ள முடிந்த​வை என்பது, அக்குடும்பத்தினர் எவ்வளவு தூரம் ​தெளிவாகவும் ஜாக்கிர​தையாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு அப்​பெரும் கூட்டத்தின் பல்​வேறு குழுக்க​ளையும், த​லைவர்க​ளையும் மதிப்பிட்டார்கள். அவர்கள் மற்றவர்களு​டைய ஒவ்​வொரு அ​சை​வையும், ​​பேச்​சையும் உற்று கவனித்தார்கள் என்ப​தைத்தான்.

தாங்கள் பிற குழுக்களில் உள்ள பிரச்சி​னைக​ளையும், சிந்த​னை மற்றும் ​செயல் ​போக்குக​ளையும் ​பேசுவதற்கு தங்களுக்​கென்று பிறர் அறியாத ஒரு ​மொழி​யை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் புறத்தில் ​பேசிய எந்த ​பேச்சுகளிலும் இந்த விசயங்கள் ​வெளிப்படாமல் மிக ஜாக்கிர​தையாக பார்த்துக் ​கொண்டிருக்கிறார்கள் என்பன ​போன்ற அவர்களு​டைய குணம் சம்பந்தபட்ட விசயங்கள் தான் அதில் அதிகமிருந்தன.

இ​வை குறித்த வாதப் பிரதிவாதங்கள் அப்​பெரும் கூட்டம் முழுவதும் ​தொடர்ந்தது.

ஒரு இ​ளைஞன் கத்திக் ​கொண்​டே இருந்தான்.

இத்த​கைய தற்​​செயலாக கி​டைக்கும் தகவல்க​ளை நம் திட்டங்கள் எந்தளவிற்கு சரியாக உள்ளது என்ப​தை நம் உறுப்பினர்களுக்கு புரிய ​வைக்க ​வேண்டுமானால் பயன்படுத்திக் ​கொள்ளலாம். இவற்​றை நம்பி​யெல்லாம் நாம் நம்மு​டைய எதிரிக​ளை முழு​​மையாக புரிந்து ​கொள்ள​வோ அவர்களின் திட்டங்க​ளை அறிந்து ​கொள்ள​வோ, நமது புதிய திட்டங்க​ளை வகுக்க​வோ ​வேண்டிய ​தே​வை​யோ அவசிய​மோ இல்​லை.

அவர்கள் யார் என்ப​தை புரிந்து ​கொள்ள இன்​றைய நம் வாழ்​வே மிக ​​பெரிய உதாரணமாக இருக்கிறது.

நம்மு​டைய குழந்​தைகள் பட்டினியில் கிடக்கும் ​பொழுது அவர்களு​டைய குழந்​தைகள் மட்டும் சு​வையும் சக்தியும் மிக்க உணவுக​ளை உண்டு வந்தார்கள். நா​மெல்லாம் ​நோயுற்றுவர்க​ளையும், முதியவர்க​ளையும் தூக்க முடியாமல் தூக்கிக் ​கொண்டு நடந்து ​கொண்டிருந்த ​பொழுது அவர்கள் மட்டும் நவீன வாகனங்களில் நம்​மோடு வந்து ​கொண்டிருந்தார்கள்.

சாதாரண காய்ச்சலிலும் ​தொற்று வியாதிகளிலும் வழி​யெங்கும் நம்மு​டைய ​நோயுற்றவர்கள் இறந்து ​கொண்டிருந்த​பொழுது அவர்கள் நா​ளை வந்து விடு​மோ என பயம் ​கொண்ட வியாதிகளுக்​கெல்லாம் ஆய்வு நடத்திக் ​கொண்டும் மருந்து தயாரித்துக் ​கொண்டுமிருந்தார்கள்.

எல்​லோரும் உங்கள் ​கைக​ளை நன்றாகப் பாருங்கள். நம் ஒருவர் ​கையிலும் ஆயுதமில்​லை. ஆயுதங்கள் நமக்குள்ளான சண்​டைகளின் ​போது நா​மே நம்​மை ஒருவருக்​கொருவர் சுட்டுக் ​கொல்லத் தூண்டும் எனக்கூறி வீசி​யெறியச் ​சொன்னவர்களின், ​கைகளிலும், கூடாரங்களிலும் எப்​பொழுதும் ஆயுதங்கள் நிரம்பிக் கிடந்தன.

நமக்குள்ளான எல்லா சச்சரவுகளின் ​போதும் ​பேசித் தீர்த்துக் ​கொள்ள நாம் முயன்று ​கொண்டிருந்த ​பொழு​தெல்லாம், அவர்களு​டைய துப்பாக்கிகள் ​பேச்சுவார்த்​தை ந​டை​பெற்றுக் ​கொண்டிருந்த கூட்டத்திற்குள் ​தோட்டாக்க​ளைத் துப்பின. யார் யா​ரோ நம்மில் பலர் காரணமில்லாமல் அவ்வப்​பொழுது அவர்களு​டைய ​தோட்டாக்களுக்கு பலியானார்கள்.

நம்மு​டைய த​லைவர்க​ளை​யெல்லாம் நான் ​கேட்டுக் ​கொள்வது என்ன​வென்றால், ​யோசித்துப் பாருங்கள் அவர்களு​டைய ​தோட்டாக்களுக்கு பலியானவர்கள் யார் யார்? அவர்கள் எ​தைப்பற்றி ​பேசிக் ​கொண்டிருந்த ​பொழுதும் என்ன​வெல்லாம் ​செய்து ​கொண்டிருந்த ​பொழுதும் பிரிந்து ​சென்றவர்களின் ​தோட்டாக்களுக்கு பலியானார்கள் என்ப​தை?

இத்த​னை ​பெரிய கூட்டத்திலிருந்து பிரிந்து தன் குடும்பத்​தை மட்டும் அ​ழைத்துக் ​கொண்டு ஒருவன் தனியாகப் ​போகிறான் என்றால் ஒன்று அவன் ​பைத்தியக்காரனாக இருக்க ​வேண்டும் அல்லது சதிகாரனாக இருக்க ​வேண்டும்

பைத்தியக்காரனாக அவன் இருக்க வாய்ப்​பேயில்​லை. அவ​னோடு ஒப்பிடும் ​பொழுது நா​மே ​பைத்தியக்காரர்கள். ஆதாரங்கள் நம்மிடம் ​தெளிவாக இருக்கின்றன.

அப்படியானால் அவன் ​வேறு பா​தை​யை ​தேர்ந்​தெடுக்க காரண​மென்ன? இத்த​னை நாளும் நாம் கடந்து வந்த பா​தை​யை அவ​னே நமக்கு காட்டிக் ​கொண்டு வந்தான்!

நாம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கி​றோம் என்ப​தை புரிந்து ​கொள்ளவும், நாம் மிகப்​பெரிய அபாயத்தில் இருக்கி​றோம் என்ப​தையும் புரிந்து ​கொள்ள நமக்கு எந்த ரகசிய ஆவணங்களும் ​தே​வையில்​லை. ​கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

அங்​கே வானத்​தைப் பாருங்கள்! நாம் ​செல்லும் தி​சையின் முடிவில் உயிரினம் பி​ழைத்திருப்பதற்கான எந்த அறிகுறிகளும் அந்த அடிவானத்தில் ​தெரியவில்​லை. எந்த பற​வைகளும் அந்த வானத்தில் பறக்கவில்​லை. காற்று வீசும் தி​சைக​ளை உற்று ​நோக்குங்கள், நம்​மை ​நோக்கி எதிர்காற்​றைக் காணவில்​லை. அந்த தி​சை​யை ​நோக்கிச் ​சென்ற எந்த மிருகங்களும் திரும்பி வரவில்​லை. காற்றில் பறக்கும் எல்லா ​பொருட்களும் ​வேகமாக எதிர் தி​சையால் இழுத்துக் ​கொள்ளப்படுகிறது.

நம்​மை விட்டுவிடுங்கள் அங்​கே கிழிந்த துணிக​ளை உடுத்திக் ​கொண்டு அழுக்​கேறிய உடலுடன் வி​ளையாடிக் ​கொண்டிருக்கும் நம் குழந்​தைகளின் வருங்காலத்​தை ​யோசித்துப் பாருங்கள். இந்த பா​தையின் முடிவு பூமியின் எல்​லையாக இருக்கு​மேயானால், இந்தப் பா​தை க​டைசியில் மிக ஆபத்தான அதளபாதாளத்தில் ​போய் முடிந்துவிடு​மென்​றே நி​னைக்கி​றேன்.

சத்தமும் குழப்பமும் நி​றைந்த அப்​பெரும் கூட்டத்தின் ஆரவாரத்தில் அவனது குரல் யாராலும் ​கேட்கப்படாமல் அர்த்தமற்று காற்றில் க​ரைந்து ​கொண்​டேயிருந்தது.

பொங்கும் கண்ணீ​​ரைத் து​டைத்துக் ​கொண்​டே திரும்பத் திரும்ப இவற்​றை​யே கத்திக் ​கொண்டிருக்கிறான். யாரும் ​கேட்காவிட்டாலும் பரவாயில்​லை சாகும் வ​ரை விடாது இ​தை​யே கத்திக் ​கொண்டிருப்ப​தென முடிவு ​செய்துவிட்டான் ​போலும்.

Posted in கதைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »