எனது நாட்குறிப்புகள்

Archive for the ‘கவிதைகள்’ Category

தேவதூதர்கள்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 19, 2018

ஒரு மழைநாளில்
கடமைகள் ஏதுமில்லாத
அமர்வதற்கு
பூவும் செடியுமற்ற
பாழ்நிலத்திற்கு
எங்களை
ஏன் அனுப்பினீர்கள்
இறைவா!

Advertisements

Posted in கவிதைகள் | Leave a Comment »

விளம்பர அழைப்புகள்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 19, 2018

என் கைபேசியில்
வரும்
விளம்பர அழைப்புகளை,
விரும்பா அழைப்புப் பட்டியலில்
சேர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
நான்
மலையைக் குடையும் மூடக்கிழவனா?
பொத்துக் கொண்டு
நீர் பீரிடும் அணையை
கைகளால் பொத்தித் தடுக்கும்
பேதைச் சிறுவனா?

– 17 ஜூலை 2017

Posted in கவிதைகள் | Leave a Comment »

என் சமூகம் உனக்கு முன்பாக போகும்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

“என் சமூகம் உனக்கு முன்பாக போகும்”
எப்படியோ போ
பின்னால் வருபவருக்கு
கொஞ்சம் இடைவெளிவிட்டு
காலைத் தடுக்காமல் போ

-15 செப்டம்பர் 2016

Posted in கவிதைகள் | Leave a Comment »

நான்காவது தோட்டா

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 18, 2018

மூன்று தோட்டாக்கள் அல்லாமல்
ஒரு நாலாவது தோட்டாவும் இருக்கலாம்தானே!
அவரின் உயிரைப் பறித்தது.

நான்காவது யாருடையது என்பதைவிட
எங்கே விழுந்து கிடக்கக் கூடும்
என்பதுதான் முக்கியமானது.

ஒன்று முதுகை பின்புறமாக
துளைத்துக் கொன்டு
அந்த பிரார்த்தனை மண்டபத்தின்
பின்னால் போய் விழுந்து கிடந்தது

மற்றொன்று அஸ்தி கரைக்கும் பொழுது
சாம்பலில் கிடந்தது

மூன்றாவது கழுவிக் குளிப்பாட்டும் பொழுது
சால்வையிலிருந்து
கீழே விழுந்து கிடந்தது

அவரின் ஆன்மாவைத் துளைத்துச் சென்ற
அந்த நான்காவது
எங்கே விழுந்து கிடக்கும்?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலா?

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலா?

ராமராஜ்ஜியத்திற்கும் இந்தியப் பாராளுமன்றத்திற்கும் இடையிலா?

கிராம சுயராஜ்ஜியத்திற்கும் கார்ப்ரேட் உலகிற்கும் இடையிலா?

கைத் தொழிலுக்கும் நவீனத் தொழிற்சாலைகளுக்கும் இடையிலா?

அஹிம்சைக்கும் உலகின் ஐந்தாவது மிகப் பெரும் இராணுவத்துக்கும் இடையிலா?

எளிமைக்கும் ஆடம்பரத்திற்கும் இடையிலா?

தேவைகளுக்கும் பேராசைகளுக்கும் இடையிலா?

மதக்கலவரங்களுக்கான சதியாலோசனைகள் நடைபெறும் இடங்களிலா?

மேலும் ஒரு தோட்டா மட்டுமல்ல
பல இருக்கக்கூடும்
தேடுங்கள் தேடுங்கள்
நன்கு தேடிப் பாருங்கள்

தல்ஸ்தோயின் ஒரு சிறுகதையைப் போல
தோண்டித் தேடிய இடத்தில்
தோட்டா கிடைக்காவிட்டாலும்
விதைக்கலாம் நல்ல அறுவடையை எதிர்பார்த்து

-12 அக்டோபர் 2017

Posted in கவிதைகள் | Leave a Comment »