எனது நாட்குறிப்புகள்

Archive for the ‘சினிமா விமர்சனம்’ Category

பரியேறும் பெருமாள்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 11, 2018

தமிழ்ச் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை பார்வையாளர்களின் இதயத்திற்கு நெருக்கமாக, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பேசிய முதல் வெகுசனப் படம் இது எனக் கருதுகிறேன்.

சின்னக் கவுன்டர், தேவர்மகன், கிழக்குச் சீமையிலே, பசும்பொன், பாரதி கண்ணம்மா என பல ஆதிக்க சாதி பெருமை பேசிய படங்களால் நிரப்பபட்டிருந்த தமிழ்ச் சினிமாவின் நீண்ட பட்டியலில் மிகமிக அபூர்வமானவை இத்தகைய படங்கள்.

எப்படியிருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை வெகுசன சினிமா தளத்தில் கையாள்வதாகவே இருந்தாலும், அவை ஆதிக்கசாதிகளின் திரை மொழியை கைகொள்ள முடியாது என்பதை இப்படம் புரிய வைக்கிறது.

இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வலியும், வேதனையும், வாழ்வில் முன்னேற படும்பாடுகளும், விலகினாலும் விடாது துரத்தும் சாதிய மனநிலைகளும் ஒரு வெகுசன சினிமாவின் வரம்புக்குள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளும், அதை அவர்கள் எதிர் கொள்ளும் முறைகளும், அதற்கான விடுதலை வழிகளும் தேர்ந்து கொண்ட அரசியல் வழிமுறைகளிலிருந்து விலகாமல் முன்வைக்கப்படுகிறது.

இந்த அரசியல் வழிமுறைளின் சிக்கல்களையும், போதாமைகளையும், அவை சாதிய சிக்கல்களின் பன்முகத்தன்மையை எந்தளவிற்கு உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறித்தும் உரையாடல்களுக்கான வெளியினை முற்போக்கு சிந்தனை கொண்ட சகல மக்களின் முன்பும் திறந்து விடுகிறது.

தொடர்ந்து வெகுசன சினிமா வெறும் பொழுது போக்குக்கானது. இதையெல்லாம் யாரும் கவனம் கொள்ளப் போவதில்லை. வெகுசன சினிமாவில் முன்வைக்கப்படும் எந்த சீரியசான விசயங்களும் மக்களிடம் எந்த கவனயீர்ப்பும் முக்கியத்துவமும் பெறாது என்றும் ஒருபுறம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் தமிழ்ச்சினிமாவிற்குள் இத்தகைய படங்கள் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணவே செய்யும் என்றே புரிகிறது.

ஆதிக்க சாதிகளின் பெருமைகளை பேசிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா, இடித்துரைப்பார் இன்றி இருந்த நிலை மாறியுள்ளது. கோளோச்சும் கலை மாற்றுத் தரப்பாரின் கலையால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய முன்னகர்வு.

இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகைமை உருவாகி இருக்கிறது. உலகளவில் கறுப்பின சினிமா என்ற வகைமை உள்ளதாம். சமீபத்தில் தமிழ்ச்சினிமாவில் இப்படி ஒரு வகைமை உருவாகி வருகிறது. இது நல்ல ஆரோக்கியமான நகர்வுதான்.

காலந்தோறும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டங்கள் அன்றன்றைய சொத்துடமை வர்க்கங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டேதான் இருந்திருக்கின்றன. அவை காலந்தோறும் மிக்க கொடூரமாக ஒடுக்கப்பட்டிருந்தாலும், கனிசமான வெற்றிகளையும் ஈட்டுவதில் தவறவில்லை.

இந்திய, தமிழக அளவில் அரச, மத, சமூக தளங்களில் ஏற்பட்ட பலதொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கும், கலகங்களுக்கும், மாற்றங்களுக்கும் பின்னே இத்தகைய போராட்டங்கள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்பதை நாம் இனம் காண வேண்டியுள்ளது.

நம் காலத்தில் நாம் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கடும் தாக்குதலையும் அதற்கு எதிரான அவர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களையும் கண்டு வருகிறோம். அதற்கு தமிழகம் துவங்கி இந்தியா முழுதும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

குறிப்பாக உலகமயமாக்கலின் பின்னணியில் இந்திய கிராமச் சமூகங்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள், அங்குள்ள சொத்துடமை வர்க்கங்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளின் பின்னணியில் இவற்றை காண வேண்டியுள்ளது.

ரியல் எஸ்டேட், நகர்ப்புற வேலையை நோக்கி உழைக்கும் பிரிவின் நகர்வு, இன்னும் பல இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் இந்திய கிராமப்புற பொருளாதாரத்தை தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது.

பிரதானமாக பாதிக்கப்பட்ட கிராமப்புற சொத்துடமை வர்க்கத்தின் கோபம் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்க சாதி மக்களின் மீது திருப்பப்பட்டு சாதி ஒடுக்குமுறைகளாக மாற்றப்படுகின்றன.

தமிழகத்தில் சமீபமாக நடைபெற்ற சாதிய தாக்குதல்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றில் சாதியக் கட்சிகளின் மிக முக்கியமான பங்கு தெளிவாக வெளிப்பட்டன.

இவை சாதிய சமூகங்களின் நலனை, அதன் பின்னாலுள்ள சொத்துடமை வர்க்கங்களின் நலனை முன்பைப் போல தனிப்பட்ட பண்ணையார்கள், ஜமீன்தார்கள் அல்லாமல் கட்சிகள்தான் அதிகாரவர்க்கங்கள், காவல்துறை,போன்ற அரச நிறுவனங்களின் துணையோடு நிர்வகிக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது.

சிலகாலம் முன்புவரை ஆதிக்கசாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் இளைஞர்களுக்கு இடையிலான காதல் இன்றைய அளவிற்கு மிகப்பெரிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட சர்வசாதாரனமானவையாக இருந்தன. அவற்றிற்கான எதிர்ப்பு குடும்ப அளவில்தான் இருந்தன. அவை இந்திய சட்டங்களின் துணை கொண்டு எளிதாக எதிர் கொள்ளப்பட்டன. ஆனால் இளவரசன் கொலை என்பது இத்தகைய காதல் எதிர்ப்பு பண்புரீதியான மாற்றம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியது. இதில் சம்பந்தபட்ட குடும்பத்தினரும், காதலர்களுமே பகடைகளாக பயன்படுத்தப்பட்டனர். இவை வட்டார அளவில் உள்ள கட்சிகள் குலைந்து வரும் சாதி ஆதிக்கங்களைை தடுத்து தற்காத்துக் கொள்ள களமிறங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய போராட்டங்களில் ஆதிக்கசாதி பிரிவைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் காதலித்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்களோடு சேர்ந்து வாழ காட்டிய வீரம் ஈடு இணையற்றது. இது சங்கப்பெருமை பேசும் தமிழ்ச்சமூகத்தின் ஈராயிரமாண்டுகால வீரத்திற்கும், காதலுக்கும் சான்று. இது இப்படத்தில் சரியாக கவனத்தில் கொள்ளப்படவில்லையா அல்லது பொது சமூகம் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக அர்த்தம் கொண்டு அந்தப் பெண்களை “பாவம் அந்த பசங்க, இதுகளுக்கு எத்தனை நெஞ்சழுத்தம், அப்படி என்ன ஆம்பள கேட்குது, பெத்து வளர்த்தவங்க மேல கொஞ்மாவது பாசம் வேண்டாம்” என ஏசும் என தயங்கி விட்டார்களா தெரியவில்லை.

இறுதிக் காட்சிகள் எதார்த்த தளத்திலிருந்து எதிர்பார்ப்பு தளத்திற்கு நகர்ந்துவிட்டது. இந்த எதிர்பார்ப்புகள் இப்பிரச்னைகளுக்கு பின்புள்ள சொத்துடமை, அரசியல் நலன்கள் ஆகியவற்றை கவனமாக கணக்கிலெடுக்காமல், எதிர்தரப்பின் வெறும் தவறான புரிதல்கள்தான் என குறைத்து மதிப்பிடுவதால் வருவதோ எனத் தோன்றுகிறது.

இத்தகைய படங்கள் எடுக்கும் இயக்குநர்கள் சொத்துறவுகள் குறித்தும், சமகாலத்தில் அவற்றில் ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும், கல்வி, காதல், நகர்ப்புற பிரச்னைகள் தாண்டி கிராம்ப்புற வாழ்வின் சிக்கல்கள், கட்சிகளின் இயங்குமுறை போன்றவை அன்றாட வாழ்வில் வெளிப்படும் துல்லியமான இடங்களை இனங்கண்டு கதைகளை அமைப்பார்களேயானால் கதை வாழ்வை இன்னும் நெருக்கமாக அணுகி பெரிய திறப்புகளை உண்டாக்கியதாக அமையும்.

Posted in சினிமா விமர்சனம் | Leave a Comment »

காலா படம்: எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 15, 2018

காலா படம். எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது. நான் புரிந்து கொண்ட ரஜினி இக்கதையை தான் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டது. ரஜினி மட்டுமல்ல, தனுஷ், சௌந்தர்யா, என இப்படம் சம்பந்தப்பட்ட பெருந்தலைகள் அனைவர் குறித்தும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கால கட்டம், எத்தகைய நெருக்கடியான, எத்தகைய ஆபத்தான காலகட்டம் . இத்தகைய காலகட்டத்தில் ஒரு வெகுஜன சினிமா இத்தனை காத்திரமான அரசியல் நிலைப்பாடோடு, எதிரியை சீண்டும் துணிவோடு இயக்க இயக்குநர் ரஞ்சித் துணிவை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன் தில்லிருந்தா வாங்கடா” என்ற வசனம் எனக்கென்னவோ கலைத்துறையில் மாவீரனாக ஒத்தையில் நின்று கொண்டு ரஞ்சித் சவால் விடுவதாகவே தோன்றியது.

ஒரு நடிகனாக ரஜினி இத்தகைய கதைகளையும் நடிக்கத் தேர்ந்தெடுத்ததன் வழியாக ஒரு நடிகனாக வெற்றி பெற்றுவிட்டார். இத்தகைய கதைகளும், சினிமாவும் தரும் வெற்றியை அரசியல்ரீதியாக ரஜினி அறுவடை செய்வாரா, யார் அறுவடை செய்வார், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்பதெல்லாம் காலம் தான் தீர்மானிக்கும்.

கதைப்படியான மும்பை தேர்வு ஒரு அர்த்தத்தில் இந்துராஷ்டிரத்தின் மையத்தை, இதயப் பகுதியை செய்த தேர்வாகவே தோன்றுகிறது.

கதைக்குள்தான் எத்தனை நுட்பமான குறிப்புகள். ஆனால் எந்தவொன்றும் புரிந்து கொள்ள கடினமான பூடகமான குழப்பத்திற்கு இடமான குறிப்புகள் இல்லை. எல்லாம் மிக நேரடியாக, தெளிவாகவே உள்ளன.

நானா படேகரும், அவருடைய கட்சியும், அவருடைய நடவடிக்கைகளும் நேரடியாகவே பாஜக, சிவசேனாவை பிரதிபலிக்கின்றன.

மிகப் பெரிய தட்டி விளம்பரத்தில் “நான் ஒரு தேச பக்தன். இந்நாட்டை சுத்தம் செய்வேன்” என நெற்றியில் தீட்டப்பட்ட குங்குமத்துடன் வெள்ளை உடையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் நானா படேகர்.

கருப்பு உடைக்கும், வெள்ளை உடைக்குமான உரையாடலில், “கருப்பு அனைத்து நிறங்களையும் தன்னில் பிரதபலிக்கும், தன் நிறத்தை இழக்காமல் வெளிப்படுத்திக் கொள்ள திறந்து நிற்கும்” என்பதாக வரும் வசனங்கள் மனதை அள்ளுகின்றன.

லெனின் என்று பெயர் வைத்த மகனைப் பார்த்து கோபத்தில் ரஜினி கூறுவார் “உனக்குப் போய் அந்த மேதையின் பெயரை வைத்தேன் பாரு. கோபத்துல திட்டக் கூட முடியலை” என.

இடதுசாரிகள் மீதான விமர்சனத்துடன், அவர்களுடைய முக்கியத்துவத்தை, அவர்களுடைய அவசியத்தை வலியுறுத்தும் இடங்களுக்கு அந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் வளர்ச்சி குறித்த மாயைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை விமர்சிப்பார் “ஊரை, பிரச்னையை, வரலாறை, பாரம்பரியத்தை எதையும் புரிஞ்சுக்கிறதில்லை, இரண்டு புத்தகத்தை படிச்சிட்டு எல்லா தெரிஞ்ச மாதிரி பேசுறது” அதே நேரம் படிச்சுட்டு சேரியை விட்டு வெளியே போக நினைக்கும் பிள்ளைகளை பார்த்து கூறுவார் “அவன் இங்க தான்டா நிப்பான், உங்களை மாதிரி எங்கேயும் ஓடமாட்டான்.” இப்படியாக கருப்பு, சிவப்பு, நீலம் ஆகியவற்றை காவிக்கு எதிராக ஓரணியில் திரட்டும் வசனங்களும், காட்சிகளும், ஜனரஞ்சக சினிமாவில் சமகால சூழலில் பார்வையாளனுக்கு தேவைப்படும் உற்சாகத்தை வழங்கும் இடங்கள்.

நாயகன் படமும் இதே தாராவியை மையமாகக் கொண்ட கதைதான். அதன் நாயகன் வீட்டில் கொலை நடந்தவுடன் இறுதி காரியம் முடிவதற்குள் எதிரியின் வீட்டில் அதைவிட கூடுதலாக தலைகள் உருளும். இங்கேயும் அதே போல நாயகன் வீட்டில் கொலை நிகழ்கிறது, மாறாக எதிரியின் வீட்டைத் தாக்கும் எந்த முயற்சியும் இல்லை. தனியொருவனாக நாயகன், தான் குலைந்துவிட வில்லை, அதே கொள்கை உறுதியோடு களத்தில் நிற்கிறேன் என்று சொல்லிவர மட்டுமே செல்கிறான்.

நாயகனின் வீட்டில் தலித் என்பதால் தண்ணீர் கூட வாங்கி அருந்த மறுக்கும் வில்லனின் வீட்டிற்கு நாயகன் செல்லும் பொழுது, அவர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கக் கூடாது என நினைக்கும் பார்வையாளனின் மனம். ஆனால் எந்த சுழிப்பும், எந்தப் வெறுப்புமின்றி குழந்தையின் கையால் தண்ணீர் வாங்கி புன்னகையோடு அருந்துவான்.

இப்படியாக வெகுஜன சினிமாவிற்குள் தான் கருதும் மாற்றுக் கருத்தியல்களை முன்வைத்தபடியே செல்கிறது காலா.

அறிவான பெண் ஒரு பக்கமும் அன்பான பெண் ஒரு பக்கமுமாக ஒரு காதலியும் ஒரு மனைவியும் நாயகனுக்கு. அறிவான பெண்ணால் நாயகனை அறிவாலும் வெல்ல முடியவில்லை, வாழ்க்கையிலும் இணைய முடியவில்லை. அன்பான பெண் நாயகனை வென்று அவன் குலசாமியாக இருக்கிறாள் என்கிற அம்சம் மட்டும் ரஜினியின் பார்முலாவிற்கு சரியாகப் பொருந்திப் போகிற விதிவிலக்கு.

உலக வரைபடத்தில் இன்று இந்தியாவே ஒரு சேரிதான். இந்தியன் ஒவ்வொருவனும் தலித்தான். ‘வளர்ச்சி’, ‘சுத்தம்’ குறித்த இந்திய உரையாடல்களின் பின்னணியில். இந்த கான்ஷியஸ் ஒன்று இந்தப் படத்தின் ஊடாக நமக்கு ஏற்படவே செய்கிறது.

சேரி என்றால் என்ன?

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி.
ஆகக் கொடுமையாக சுரண்டப்படும் மக்கள் வாழும் பகுதி.
நகரத்திலேயே மிக ஏழ்மையான மக்கள் வாழும் பகுதி
அடிப்படை சுகாதாரம், நல்ல காற்று, நீர், நிலம் மறுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி.
குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் பகுதி.

உலக அரங்கில் இந்தியாவின் இடம் என்ன?

சாக்கடைகளும், குப்பைகளும் நிறைந்த நாடு.
ஆடு, மாடுகளோடும், பன்றிகளோடும் ஒன்றாக வாழும் மக்கள் நிறைந்த நாடு.
குரங்கையும், பாம்பையும், மாட்டையும் வழிபடும் மக்கள் நிறைந்த நாடு.
சுகாதாரம், நாகரீகம் குறித்த எந்த அறிவும் இல்லாத நாடு.
திருடர்களும், கொள்ளையர்களும், வன்முறையாளர்களும் வாழும் நாடு.

அமெரிக்காவிலோ, ஐரோப்பியாவிலோ போய் சில காலம் வாழ்ந்து பார்க்கும் இந்தியன், தன்னை தலித்தாக உணர்வான்.

உலகிலேயே ஆக மோசமாக சுரண்டப்படக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த நாடு.
ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக மாற்றப்பட்ட நாடு.
இயற்கை வளங்கள் அனைத்தும் கேள்வி கேட்பாடின்றி சுரண்டப்படும் நாடு.
வாழ்விடங்களை விட்டு, விவசாய நிலங்களை, கடலை, விட்டு அந்நிய கார்ப்ரேட்களின் நலன்களுக்காக விரட்டப்படும் விவசாயிகளும், மீனவர்களும், பாரம்பரிய தொழில் புரிவோரும், கோடானு கோடி உழைக்கும் மக்களும் நெருக்கமாக நிறைந்த நாடு.

‘நிலம் என் உரிமை’ என்கிற கோஷம் தலித்திற்கான கோஷம் மட்டுமில்லை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில், ஒவ்வொரு இந்தியனின் கோஷமும் தான். தஞ்சையில், சேலத்தில், துாத்துக்குடியில், தேனியில், கதிராமங்கலத்தில், கூடங்குளத்தில் ஒலிக்கும் கோஷமும் அதுவே.

ஒரு மூன்று நான்கு மாநிலங்கள் தழுவிய இந்து ராஷ்டிரம் என்கிற கருத்தியல் செல்வாக்கு தன்னை இந்தியாவின் வடகிழக்கு முதல் தெற்கு எல்லைவரை விஸ்தரித்துக் கொள்ள நடத்தும் பாசிச யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஒரு மாற்று கருத்தியல் யுத்தமுனையில் நின்று கொண்டிருக்கிறது, அதன் முன்னணியில் அதற்கு தலைமைதாங்கும் ஆற்றலோடு தமிழகம் நிற்கிறது.

இந்த கருத்தியல் செல்வாக்கின் வலிமை ரஜினி போன்ற நடிகர்களையும் கருப்புடை அணிந்து, சேரியில் நின்று, அசுர யுத்தம் நடத்தும் கதையில் நடிக்க வைத்திருக்கிறது.

Posted in கட்டு​ரை, சினிமா விமர்சனம் | Leave a Comment »

The Belko Experiment

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 22, 2017

“The Belko Experiment” என்றொரு படம். 2016ல் வெளிவந்திருக்கிறது. இன்று இரவு பார்த்தேன். கொலம்பியாவின் புற நகர்ப் பகுதியில் உள்ள ஒரு லாப நோக்கமற்ற பெரிய நிறுவனம். அதில் 80ற்கும் மேலான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

கொலம்பியாவின் நிலவரப்படி இது போன்ற நிறுவன கட்டிடங்கள் கடும் பாதுகாப்பு வளையங்களில் உள்ளன. வழக்கம் போல ஒரு நாள் காலை வேலைக்கு வரும் ஊழியர்கள். அசாதாரணமான பாதுகாப்பு சோதனைகளை எதிர் கொள்கிறார்கள். பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் புதியவர்களாக உள்ளனர்.

அலுவலகத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்த சில நிமிடங்களில், அலுவலக ஒலிபெருக்கியில் ஒரு செய்தி வருகிறது. உங்களில் யாரேனும் இருவரை நீங்களே கொலை செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் பலரை கொன்றுவிடுவோம் என. இது யாரோ விளையாடுகிறார்கள் என அசட்டையாக இருக்கிறார்கள். வெகு சீக்கரத்தில் நிலமை மோசமாகிறது. திடீரென சில ஊழியர்கள் தலைவெடித்து கோரமாக இறக்கிறார்கள்.

அனைவருக்கும் விபரீதம் புரிந்து கட்டிடத்தை விட்டு வெளியேற நினைக்கிறார்கள். அதற்குள் கட்டிடத்தின் வெளிப்புறம் முழுவதும் இரும்புக் கதவுகளால் ஒரு ஜன்னல் பாக்கியில்லாமல் அந்த பிரம்மாண்ட கட்டிடம் முழுவதும் மூடிக் கொள்கிறது.

மீண்டும் ஒரு அறிவிப்பு. இம்முறை உங்களில் 30 பேரை நீங்களே கொன்றுவிடுங்கள் இல்லாவிட்டால் நாங்கள் 60 பேரைக் கொன்று விடுவோம் என்று அறிவிக்கப்படுகிறது. யார் இந்த அறிவிப்புக் குரலுக்கு சொந்தக்காரர். அவருடைய எதிர்பார்ப்பு என்ன? எதுவும் யாருக்கும் புரியவில்லை.

தப்பிப்பதற்காக மொட்டைமாடிக்கு ஓடுகிறார்கள். கண்ணுக்கெட்டிய துாரம் வரை அக்கட்டிடத்தைச் சுற்றி ஆளரவமற்ற வனாந்திரமாக இருக்கிறது. துாரத்தில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி துாரத்தில் புறவழிச் சாலை ஒன்றும் அதில் சில சரக்கு லாரிகள் அவ்வப்பொழுது போய்க் கொண்டிருக்கின்றன. இங்கிருந்து யாரையும் உதவிக்கு அழைக்க முடியாது.

இதற்குள் கட்டிடத்தில் உள்ள அனைவருக்கும், உயிர்ப்பயம் தொற்றிக் கொண்டுவிடுகிறது. அனைவரின் முகமும் கலவரத்தால் மாறி விடுகிறது. நடவடிக்கைகளில் வித்தியாசம் தோன்றத் துவங்கிவிடுகிறது. அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னுடன் மூன்று ஊழியர்களை துணைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஆயுதங்கள் சகிதமாக தங்களில் முப்பது பேரை கொலை செய்ய தேர்ந்தெடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். ஊழியர்களில் இன்னொரு பிரிவு கதாநாயகன் நாயகி தலைமையில் தப்பிப்பதற்கான உபாயங்களை தேடலாம், நம்மில் சிலரை கொலை செய்வது தவறு என அவர்களுடன் போராடுகிறார்கள்.

கதாநாயகன் உட்பட முப்பது பேரை தேர்ந்தெடுத்து அந்தக் குழு ஒவ்வொருவராக கொல்லத் துவங்கிவிடுகிறது. இந்த கலவரத்தில், அன்றுதான் முதன்முதலாக அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த பெண் நிலவரையில் பயத்தில் பதுங்கி இருக்கிறாள். அவள் சத்தம் கேட்டு மேலே வந்து பார்க்கிறாள். ஊழியர்கள் சக ஊழியர்களாலேயே உயிருக்கு பயந்து கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, நிலவரைக்கு ஓடி மைய மின்சார இணைப்புகளை துண்டித்து விடுகிறாள். இருட்டில் கதாநாயகன், நாயகி உட்பட பல தப்பிக்கிறார்கள்.

கண் போன போக்கில் ஓடியவர்களை சுட்டதில், 29 பேர் கொல்லப்படுகிறார்கள். அறிவிப்பு குரல் சொன்னபடி 30 பேர் கொல்லப்படாததால், பலர் முன்பு போலவே மர்மமான முறையில் தலைவெடித்து கொல்லப்படுகிறார்கள்.

கொலம்பியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல், தாதா கும்பல்கள் அதிகமென்பதால், இது போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உடலில் சிப்களை பொருத்துவது வழக்கமாம். தொலைந்து போனால் தேடுவதற்கும், அடையாளம் காண்பதற்கும் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக. அது போல அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் தலையின் பின்புறத்தில் சிப்களும், அதேனோடு சேர்த்து சிறிய வெடிகுண்டுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அது தவிர அந்த கட்டிடம முழுவதும் ஒற்றுபார்க்கும் கேமராக்களும், மைக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் துணையோடு யாரோ வெளியிலிருந்து அத்தனையையும் அமர்ந்து இடத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது முறையாக ஒரு அறிவிப்பு வருகிறது. யார் அனைவரையும் கொன்று ஓராளாக வெற்றி பெறுகிறாரோ அவர் விடுதலை செய்யப்படுவார் என.

இந்தச் சண்டையில் அனைவரும் மடிய, இறுதியில் கதாநாயகனும், எதிர் அணியைச் சேர்ந்த தலைவரான அதிகாரியும் மற்றும் பிழைக்கிறார்கள். இறுதிச் சண்டையில் அந்த அதிகாரியை கொன்று கதாநாயகன் மட்டும் பிழைக்கிறான். அவனை வெளியில் காவல் இருக்கும் வீரர்கள் அக்கட்டிடத்திலிருந்து இழுத்துச் சென்று அந்த வளாகத்தில் இருக்கும் வேறொரு கட்டிடத்திற்குள் கொண்டு செல்கிறார்கள்.

அங்கே அந்த அறிவிப்பு குரலுக்குச் சொந்தக்காரரைக் காண்கிறான் கதாநாயகன். அவன் தன்னை சமூக விஞ்ஞானி என அறிமுகம் செய்து கொள்கிறான். தங்களுடைய பணி மனித குணங்களை ஆய்வு செய்வதுதான் என கூறுகிறான். எங்களுடைய சோதனையின் முடிவுகள் விரிவானவை, அவை எங்கள் ஆய்வுகளுக்கு பயன்படும் எனக் கூறுகிறான். மேலும் கதாநாயகனிடம் தற்பொழுதைய உன் மனநிலையை எங்களுக்கு கூறு என a, b, c என பயமாக இருக்கிறது, தப்பித்ததாக உணர்கிறேன், குழப்பமாக இருக்கிறது இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய் என்கிறான். அதற்குள் தன் சக நண்பர்களை உட்கார்ந்த இடத்திலிருந்து தலையில் பொருத்தப்பட்ட குண்டுகளை வெடிக்கச் செய்த ரிமோட் இயந்திரம் அவ்வறையில் இருப்பதை பார்த்து விடுகிறான்.

அதே போல சக ஊழியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊழியர்களின் தலையிலிருந்து கைப்பற்றப்பட்ட குண்டுகளை சேகரித்து வைத்திருந்த கதாநாயகன், வரும் வழியிலேயே அதை பாதுகாப்பு வீரர்களின் உடைகளில் அவர்களுக்கே தெரியாமல் சொருகி வைத்துவிடுகிறான். கண நேரத்தில் பாய்ந்து அந்த ரிமோட்டை இயக்கி அனைவரையும் கொன்று விடுகிறான். அறிவிப்பு குரலுக்குச் சொந்தக் காரனையும் சுட்டு கொன்று விட்டு அந்த கட்டிடத்தை விட்டு அவன் மட்டும் தனியனாக வெளியே வருகிறான்.

அவனைப் போலவே இது போல உலகம் முழுவதும் நடக்கும சோதனைகளில் தப்பி வெளி வந்த பலரையும் யாரோ ஒரு கட்டுப்பாட்டறையில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆய்வின் முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்து விட்டது என அறிவிக்கிறார்கள்.

அத்துடன் படம் முடிகிறது.

நம் நிகழ்கால வாழ்க்கை மட்டும் வருங்கால வாழ்க்கை பற்றிய ஏதோ அபாயங்கள் குறித்த மங்களான கனவு ஒன்றிலிருந்து வெளிவந்தது போல் இருக்கிறது. படம் பார்த்து முடிக்கையில்.

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பிற பகுதிகளில் உள்ள மக்களின் மன நிலைகள் அந்த அதிகாரியின் மனநிலை போலவே தோன்றியது. ஆதார் கார்டை அனுமதித்தது, தலையில் உங்கள் பாதுகாப்பிற்குத்தான் என்று சொல்லி சிப்களையும், வெடிகுண்டுகளையும் பொருத்தியது ஞாபகப்படுத்துகிறது. உங்களில் பலரை நீங்களே கொன்றுவிடுங்கள் என்ற அறிவிப்பு பாசிசமயமாகி வரும் நம் சமூகத்தை ஞாபகப்படுத்துகிறது.

தனியார் கல்விக் கூடங்கள், அணுஉலைகள், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள், ஜிஎஸ்டி, ஆதார்கார்டு, கைரேகைகள், புகைப்படங்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுகள், கலப்பட பால், என விரியும் இந்தச் சதிவலைகளை அனைத்தையும் யாரோ எங்கிருந்தோ இயக்கிக் கொண்டும், இதிலிருந்து நம்மை வைத்து புதிய புதிய ஆராய்ச்சிகளையும், கொலைகார திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டுமிருப்பதாக மிரட்டுகிறது இந்தப்படம்.

Posted in சினிமா விமர்சனம் | Leave a Comment »

துப்பாக்கியின் அரசியல்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 26, 2012

​நேற்று மா​லைக் காட்சி s2வில் நான்கு ​பேர் ​கொண்ட என் குடும்பத்துடன் துப்பாக்கி படத்திற்குச் ​சென்றிருந்​தோம். ரூபாய் 1000ம் ​செலவு. 20 வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படித்துக் ​கொண்டிருந்த ​பொழுது என் அம்மா அ​தே ​போன்ற நான்கு ​பேர் ​கொண்ட என் குடும்பத்​தை ரூபாய் 500 பணத்தில் ஒட்டு​மொத்த மாதத்​தையும் ஓட்டினாள். நி​னைத்துப் பார்த்தால் ​நெஞ்சம் கணக்கிறது.

நானா ​கை​யைப் பிடித்து இழுத்​தேன் என எந்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும் ​கேட்க முடியாது. தீபாவளிக்கு முதல் நாள் புதிய த​லைமு​றை ​தொ​லைக்காட்சியின் கலந்து​ரையாடலில் தி​ரையரங்க உரி​மையாளர்கள் சங்கத் த​லைவர் குறிப்பிட்ட​தைப் ​போல, அ​னைத்து ​தொ​லைக்காட்சிகளிலும் நாள் முழுவதும் இத்த​கைய படங்களுக்கு விளம்பரம் ஓடிக் ​கொண்​டே இருக்கிறது. மக்க​ளை ​கை​யைப் பிடித்தல்ல மூ​ளை​யைப் பிடித்து இழுத்துக் ​கொண்டிருக்கிறார்கள்.

குழந்​தைகளுக்குக் கூட தான் இப்படத்​தை பார்க்கா விட்டால் தங்கள் வட்டங்களில் தனக்கு அவமானம் என்று நி​னைக்கும் நி​லை உள்ளது. அதிலும் “நான் ஐநாக்சில் துப்பாக்கி பார்த்துவிட்​டேன், நீ பார்க்க​லையா?” என் சக நண்பர்கள் குழந்​தைகளிடம் ​கேட்கிறார்கள். அதாவது இத்த​கை​யை படங்க​ளை பார்ப்பது மட்டுமல்ல பார்த்த தி​யேட்டர்களும் உங்களுக்கான தகுதியாகிறது.

தி​ரைப்படம் என்பது ஒரு க​லையாகிறது. ஆனால் க​லையின் ​தொழில்நுட்பங்க​ளை பற்றி ​பேசுவதற்கான தகுதி நமக்கு இருக்கிற​தோ இல்​லை​யோ அதன் அரசிய​லைப் பற்றி ​பேசுவதற்கான முழுத்தகுதி நமக்கு இருக்கிறது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்​வொரு மனிதனுக்கும் தன்​னைச் சுற்றி நிகழும் ஒவ்​வொன்றின் உள்​ளேயும் உள்ள அரசிய​லைப் பற்றி ​பேசுவதற்கான முழுச்சுதந்திரம் இருக்கிறது. இந்தியாவில் ஓட்டுப் ​போடுவதற்கான வயது தான் 18​யே தவிர, அரசியல் ​பேசுவதற்கான வயதல்ல அது. யாரும் ​பேசலாம்.

வியாபாரரீதியான படங்க​ளைப் ​போய் ஏன் மூச்​சைப்பிடித்துக் ​கொண்டு ​தொண்​டை வரண்டு​போக அரசியல் ​பேசுகிறீர்கள் என சில நண்பர்கள் ​கேட்கிறார்கள். முதலில் தி​ரைப்படங்களில் commercial சினிமா, serious சினிமா, Art சினிமா என்ற பாகுபாடுக​ளே அ​யோக்கியத்தனமானது. அ​தைவிட அ​யோக்கியத்தனமானது ஒவ்​வொன்றுக்கும் ஒவ்​வொரு வித அளவு​கோள்க​ளை பயன்படுத்த ​வேண்டும் என்று கூறுவது. உண்​மையில் மக்க​ளை எ​வை​யெல்லாம் பாதிக்கிற​தோ, எ​வை​யெல்லாம் மக்களின் ​பொருளாதார வாழ்​வையும், சிந்தனாமு​றை​யையும் தீர்மானிக்கிற​தோ அ​வை அ​னைத்தும் குறித்து ​பேச எனக்குள்ள உரி​மை​யே ஜனநாயகம்.

முருகதாஸ் என்ற இயக்குநர் ​வெறும் தி​ரைப்பட இயக்குநராகத் ​தெரியவில்​லை. அவர் மத்திய அரசிற்கான தி​ரைப்படத் து​றையில் அதன் ​கோட்ப்பாட்டு பிரச்சாரகராக மாறி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சி​னைகளில் இராணுவத்​தை பயன்படுத்த ​வேண்டியதன் அவசியத்​தை வலியுறுத்தும் ஒரு படமாக ​வெளிவந்திருக்கிறது. இது மத்திய அ​மைச்சர் பா. சிதம்பரம் ​போன்றவர்களின் ​நேரடி கருத்தியல் நீட்சியாக பார்க்கப்பட ​வேண்டியிருக்கிறது.

​பொதுவாக இராணுவம் என்பது ஒரு நாட்டின் ​வெளிநாட்டுப் பாதுகாப்​பை உறுதி​செய்வதற்கான ஒரு ப​​டை. காவல்து​றை என்பது உள்நாட்டில் அதன் சிவில் மற்றும் கிரிமனல் சட்டங்க​ளை ந​டைமு​றைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான ஒரு ப​டை. இராணுவத்தின் இயங்குமு​றை ​வேறு காவல்து​றையின் இயங்குமு​றை ​வேறு. ஒரு நாட்டின் எல்​லைகளுக்கு ​வெளியிலிருந்து வரும் ஆயுதத்தாக்குதல் சார்ந்த அச்சுறுத்தல் விசயத்தில் ​செயல்படுவது மட்டு​மே அதன் ​வே​லை. அதன் அடிப்ப​டையி​லே​யே அது பிரச்சி​னைக​ளை ஆயுதரீதியாக மட்டு​மே எதிர்​கொள்ளக்கூடியது. ​மேலும் எல்​லைகளில் இராணுவத்தின் நடவடிக்​கைகள் குறித்து உள்நாட்டில் அதன் எந்த ​செய்தித் ​தொடர்பு சாதனங்களும் சந்​தேகங்க​ளை​யோ ​கேள்விக​ளை​யோ எழுப்பக்கூடாது, விவாதங்க​ளை நடத்தக் கூடாது.

ஆனால் இத்த​கைய ​போக்குக​ளை உள்நாட்டுப் பிரச்சி​னைகளில் எப்படி க​டைபிடிப்பது? இதற்கான ஒரு உபாயமாக திட்டமிட்டு முன்​னெடுக்கப்படுவதுதான் இசுலாமிய பயங்கரவாதம். ​நேற்று காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு இன்​றைக்கு மத்திய இந்தியா முழுவதும் ​போராட்டங்கள் தீவிரமாக பரவிவருகிறது மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ​கொள்​கைக​ளே இதற்குக் காரணம். இவற்​​றை ​வெறும் வன்மு​றை நிகழ்வுகளாக எதிர்​கொள்ளக் கூடாது, இவற்​றை ​வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சி​னைகளாக எதிர்​கொள்ளக்கூடாது என்கிற கருத்து அப்பகுதிகளின் அறிவுஜீவிகள் மத்தியிலிருந்து மிக வலுவாக ​வெளிப்படுகிறது. அவற்​றை சமூகப் ​பொருளியல் பிரச்சி​னைகளாக, தனியார்மயம். தாராளமயம், உலகமயத்தின் வி​ளைவாக கருத ​வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவற்​றிற்கான நியாயங்க​ளை நீர்த்துப் ​போகச் ​செய்யவும், தங்களின் இராணுவவாத அணுகுமு​றைக்கு நியாயம் கற்பிக்கவு​மே இசுலாமிய பயங்கரவாதம் கட்ட​மைக்கப்படுகிறது.

​பொதுவாக ஒரு க​லைப்ப​டைப்பு என்பது சமூக வாழ்வின் ​தொடர்ச்சியாக இருந்த ​போதிலும், அது அதன் அளவில் முழு​மை ​பெற்றதாக​வே இருக்கும் இருக்க ​வேண்டும். ஆனால் இசுலாமிய பயங்கரவாதத்​தை அடிப்ப​டையாக ​வைத்து எடுக்கப்படும் படங்கள் பிற படங்களிலிருந்து முற்றிலும் ​வேறுபட்ட​வை. எல்லா தி​ரைப்படங்களின் வில்லன்களுக்கும் அவர்களின் ​செய்​கைகளுக்கான ஒரு அடிப்ப​டைக் காரணம் அப்படத்தில் சுட்டிக் காட்டப்படும். அவர்கள் பணம், பதவி மற்றும் ​பெண் ஆகியவற்றிற்காக எத்த​கைய சமூக வி​​ரோத காரியங்க​ளையும் ​செய்யத் துணிவார்கள். அவர்க​ளை இறுதியில் கதாநாயகன் திருத்துவான் அல்லது திருந்த பல சந்தர்ப்பங்கள் ​கொடுத்தும் திருந்தாததால் அவன் இறுதியில் ​கொ​லை ​செய்யப்படுவான். கதாநாயகன் ​செய்தது சமூகத்திற்கு நல்ல காரிய​மே ஆனாலும் சட்டத்தின் படி தவறு என்பதால் அவன் மு​றைப்படி தண்ட​னை ​பெற்று ​சி​றை ​செல்வான்.

இந்த அடிப்ப​டை இலக்கணங்களுக்கு முற்றிலும் எதிரானது இசுலாமிய பயங்கரவாதத்​தை அடிப்ப​டையாக ​வைத்து ​வெளிவரும் தி​ரைப்படங்கள். இசுலாமிய பயங்கரவாதத்திற்கு காரணங்களாக படம் தன்னளவில் எந்த காரணங்க​ளையும் கூற ​மெனக்​கெடுவதில்​லை. ஆளும் வர்க்கங்களின் ​நேரடி ​பொறுப்பாளனாகிய மத்திய அரசின் காரணங்களிலிருந்​தே அ​வை ​தொடங்குகின்றன. இசுலாமிய தீவிரவாத அ​மைப்புகள் எந்த நன்​மை​யைக் எதிர்பார்த்து இந்தியாவின் பலபகுதிகளில் ​பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு ​வெடிக்கச் ​செய்கின்றன? என்ற ​கேள்வி ஒவ்​வொரு இந்தியனின் மனதிலும் இருக்க​வே ​செய்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகள் கூறும் காரணங்கள் மக்களுக்கு ஏற்பு​டைய​வையாக இல்​லை.
இந்தியாவில் குண்டு ​வைப்பதால் நன்​மை அ​டையப் ​போகிறவர்கள் யார்? பாகிஸ்தானா? ஆப்கானிஸ்தானா? ஈராக்கா? ஈரானா? சவுதி அ​ரேபியாவா? அல்லது ​வேறு ஏ​தேனும் இசுலாமிய நாடா? அப்பாவி மக்க​ளை ​கொ​லை ​செய்வதால் இந்தியாவின் ஸ்திரத்தன்​மை​யை கு​லைப்பதால் எத்த​கைய நன்​மை​யை அவர்கள் அ​டைவார்கள்? அதிலும் அவர்கள் குண்டு ​வைக்கும் இடங்கள் ஒன்றும் அந்தளவிற்கு ​பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல்ரீதியான ​கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அல்ல. அப்படி இல்​லை​யென்றால் இந்திய இசுலாமியர்கள் பயன​டைவார்களா அல்லது பாதுகாப்பு உத்திரவாதம் ​பெறுவார்களா என்றால் அதுவும் இல்​லை. இத்த​கைய நடவடிக்​கைகளால் இந்திய இசுலாமியர்கள் ​மேலும் ​மேலும் ​நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும், தனி​மைப்படுதலுக்கு​​மே ஆளாகிறார்கள்.

இதற்கான வி​டை என்ன​வோ உலகமுழுவதும் இசுலாமிய பயங்கரவாதத்​தை உருவாக்கி வளர்த்த அ​மெரிக்க நலனின் பின்னணியில் மட்டு​மே வி​டைகாணக்கூடியதாக இருக்கும் என்​றே நம்பத் ​தோன்றுகிறது. ஆனால் இந்திய அர​சோ அ​மெரிக்காவின் ​நெருக்கமான கூட்டாளி. அ​னைத்துத் து​றைகளிலும் இருவரும் பரஸ்பரம் முழு​மையாக ஒத்து​ழைத்துக் ​கொள்ளக் கூடியவர்கள்.

ஒரு க​லைப்ப​டைப்பிற்கு இருக்க ​வேண்டிய காரண காரிய மற்றும் தர்க்க நியாயங்கள் எதுவு​மே இத்த​கைய படங்களுக்கு ​தே​வைப்படுவதில்​​லை. தி​ரைக்க​தையில் உள்​ளே உள்ள பல ஓட்​டைகளில் உள்ள தர்க்க நியாய மீறல்க​ளை நாம் கவனமாக குறிப்பிடுகி​றோம் ஆனால் அதன் கருவி​லே​யே உள்ள தர்க்க நியாய மீறல்க​ளை ​பேச மறுக்கி​றோம் அல்லது ​பேசுபவர்க​ளை கிண்டல் ​செய்கி​றோம்.

யாரு​மே பார்க்காத படங்களில் அல்லது க​லைப்படங்களில்(!) உள்ள அரசிய​லைப் ​பேசுவ​தைவிட முக்கியமானது இத்த​கைய ​பெரும்பாலான மக்கள் பார்க்கும் படங்களில் உள்ள அரசிய​லை ​பேசுவதுதான். ஓடாத படங்களின் அரசிய​லைப் ​பேசுவது ஒரு ​வே​ளை அப்படத்தின் விளம்பரத்திற்குவேண்டுமானால் உதவலாம். ஆனால் இத்த​கைய படங்க​ளை பார்ப்பவர்களுக்கு இதில் உள்ள பிரச்சி​னைக​ளை புரிந்து ​கொள்ள உதவுவது மிக மிக அவசியத் ​தே​வை என்​றே கருதுகி​றேன்.

நண்பர்கள் கூறுகிறார்கள் லாஜிக்​கெல்லாம் பார்க்காதீர்கள் படம் விறுவிறுப்பாக ​போகிறதா இல்​லையா? பாடல்கள் ​வேண்டுமானால் அவ்வளவு நன்றாக இல்​லை மற்றபடி என்ன கு​றைச்சல்?

நானும் கூடச் ​சொல்​வேன். விஜய் ​ரொம்ப ​மெனக்​கெட்டு புதுப்புது ​மேனரிசங்கள், எக்ஸ்பிரசன்ஸ் எல்லாம் முயற்சிக்கிறார். வழக்கமான பாணியிலிருந்து தன்​னை மாற்றிக் காட்ட முயற்சிக்கிறார். சில காட்சிகளில் அர்னால்ட் ஸ்வஸ்​நேக்க​ரை இமி​டேட் பண்ணி காட்டுகிறார். ஒரு சண்​டையில் சில்வர்ஸ்டர் ஸ்டா​​லோ​னை இமி​டேட் பண்ணி காட்டுகிறார் இப்படி​யே ​சொல்லிக் ​​கொண்​டே ​போகலாம். எல்லாவற்​றையும் தாண்டி நம் மனதில் எஞ்சி நிற்ப​தே மிக முக்கியமானது. அது இப்படம் இராணுவத்திற்கு சமர்ப்பணம் ​செய்யப்படுகிறது அதாவது இராணுவ அணுகுமு​றை​யே மத்திய அரசிற்கு வரும் எல்லா பிரச்சி​னைகளுக்குமான தீர்வு என்று நம்​மை ஏற்றுக் ​கொள்ளச் ​செய்ய முயற்சிக்கிறது.

Posted in சினிமா விமர்சனம் | 2 Comments »