எனது நாட்குறிப்புகள்

Archive for the ‘விமர்சனம்’ Category

அவரை வாசு என்றே அழைக்கலாம்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 3, 2018

ஆமாம்! பெயரில் என்ன இருக்கிறது. எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள் பல்வேறு புனைப் பெயர்களில்தான் எழுதுகிறார்கள். தமிழில் சங்க இலக்கியத்தை படைத்தவர்கள் பலரும் யாரென்றே தெரியாது. இந்தியாவின் கோவில்களில் சிற்பங்களையும், அழகிய மண்டபங்களையும் செதுக்கிய சிற்பிகள் யாரொருவரின் பெயரும் தெரியாது. இந்தியாவின் மிகச் சிறந்த நாகரீகம் என்று கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரீக மக்கள் யாரென்றும், அவர்களுடைய மொழிய எதுவென்றும் தெரியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரியாது. ஹிட்லரின் பாசிச படைகளுக்கு எதிரான வீரச் சமர்களில் இறந்த எண்ணற்ற வீரர்கள் யாரென்று தெரியாது. உண்மையில் பெயரில் என்னதான் இருக்கிறது. முன்னேறும் முன்னேற வேண்டிய சமூகங்களுக்கு சிந்தனைகளும், செயல்களும், படைப்புகளும்தான் முக்கியம். ‘மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு’ ‘யார் வாய் கேட்டோம்’ என்பதில் என்ன இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய அபாயம், ஆபத்து என்று கூறப்படுபவர்கள்; இந்தியாவின் மிகப்பெரிய அபாயம், ஆபத்திற்கு எங்கள் கொள்கைகளில், திட்டங்களில், அமைப்பு வடிவங்களில், செயல்படும் முறைகளில்தான் தீர்வு இருக்கிறது என்று கூறுகிறவர்கள் குறித்து தமிழர்களாகிய நாம் எந்தளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறோம். அல்லது நாம் தெரிந்து கொள்வதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது?

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எதுவும் அவர்களுடைய எழுத்துக்களையோ, குரல்களையோ நேரடியாக பதிவு செய்யாது. இந்திய அரசு அவர்களை பத்திரிகை நடத்தவோ, இணையப் பக்கங்களை நடத்தவோ அனுமதிக்காது. மக்களுக்கு சரி தவறுகளை பகுத்தாராயும் ஆற்றல் உண்டு என்பதை எந்தத் தரப்பும் ஏற்றுக் கொள்ளாது. மாற்றுக் கருத்துகளை மாற்றுச் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதற்கு பெயரே ஜனநாயகம் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாத அரசும் நாடுமே உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. அற்புதம்.

இந்தாண்டு சென்னை புத்தகச் சந்தையில் தோழர். தமிழ் காமராசு இந்நுாலை வாங்கித் தந்து, அவசியம் படியுங்கள் என்றார். இந்நுால் ஆங்கிலத்தில் “Let’s call him Vasu: With the Maoists in Chhattisgarh” என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு சர்வதேச பதிப்பகமான பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் சுப்ரன்ஷு சௌத்ரி பி.பி.சி நிருபர். அவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல ஊடகங்களுக்காக வேலை பார்த்தவர்.  சதீஸ்கர் மாநிலத்தின் தண்டகாரன்யா காடுகளில் 7 ஆண்டுகள் உயிரைப் பணயம் வைத்து மாவோயிஸ்ட்களுடன் காடு மலை அனைத்திலும் சுற்றித்திரிந்து, தான் அவர்களைப் பற்றியும், அவர்களின் செயல்பாடுகள், செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து கொண்டவை அனைத்தையும் பதிவு செய்ய முயன்றுள்ளார்.

2016ம் ஆண்டு இந்நுால் தமிழில் “அவரை வாசு என்றே அழைக்கலாம்: சதீஸ்கரில் உள்ள மாவோயிஸ்ட்களுடன் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர் வெளியீட்டகத்தால் வெ. ஜீவானந்தம் என்பவருடைய மொழிபெயர்ப்பில் கொண்டுவரப் பட்டுள்ளது. இணையத்தில் இந்நுால் பற்றி தேடினால் ஆங்கிலத்தில் ஏகப்பட்ட அறிமுகக் கட்டுரைகள், விமர்சனங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. பெரும் ஆங்கில தினசரிகள் மற்றும் இதழ்களின் இணையப்பக்கங்களில் விரிவான கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழில் ஓரிரண்டு பதிப்பக இணையப்பக்கங்களில், வெறும் நுாலின் விலை, கிடைக்குமிடம் பற்றிய தகவல் பகிர்வு மட்டுமே உள்ளது. நுால் தமிழில் வெளிவந்து 1 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் பிளாக்குகளிலோ, இணையப்பக்கங்களிலோ எங்கும் நுால் குறித்த கட்டுரைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை. இவற்றை வாசிப்பதற்கோ, இவை குறித்து உரையாடுவதற்கோ தேவையில்லை என்று நினைக்கிற ஒரு சமூகத்தின் விடுதலை குறித்த அக்கறைகள் பெரும் கேள்விக் குறியாகத்தான் இருக்கும் என்ற நிலை மிகுந்த வருத்தத்திற்குரியதாக இருக்கிறது. நான் பார்த்தவரை அச்சு பத்திரிகைகளிலும் ஏதும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கு முன்பாக அருந்ததி ராயின் “தோழர்களுடன் ஒரு பயணம்” என்ற ஆங்கில நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பு வந்திருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் கணபதியுடன் ஜேன் மிர்தால் நேர்காணல் தமிழில் வந்தது. “வணக்கம் பஸ்தர்” நுால் தமிழில் வந்தது. இது போன்ற நுால்கள்தான் பொது வெளியில் மாவோயிஸ்ட்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் எதற்காக, யாருக்காக போராடுகிறார்கள்? என்கிற குறைந்தபட்ட நேர்மறையான புரிதல்களை பெற உதவுபவையாக உள்ளன.

அறுபதுகளில் துவங்கிய நக்சல்பாரி இயக்கம், பல்வேறு ஏற்ற இறக்கங்களோடு, பல்வேறு சித்தாந்த செயல்முறை மாறுபாடுகளோடு இன்றைக்கு 2017களில் மாவோயிஸ்டாக இந்திய அரசிற்கு இந்தியாவின் மையப் பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கிறது.

இந்திய அரசு அவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள். கல்வியறிவும் நவீன சிந்தனைகளும் இல்லாத ஆதிவாசிகள் பழங்குடிகளை ஏமாற்றி கேடயமாக பயன்படுத்துகிறார்கள், இந்தியாவின் எதிரிகளோடு ரகசியமாக கைகோர்த்துக் கொண்டு இந்தியாவின் அமைதியை, ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிக்கிறார்கள். நாட்டில் வன்முறை வெறியாட்டங்களை நடத்துகிறார்கள், பொதுச் சொத்துக்களை அழிக்கிறார்கள், காவல்துறை மற்றும் துணை இராணுவப்படைகளை கொலை செய்கிறார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்பது பொது மக்களாகிய நமக்கு எதுவும் தெரிவதில்லை. இந்தியா பல்வேறு மொழி பேசும் மாநிலங்களாக இருப்பதை மாற்றி ஒரே மொழி பேசும் நாடாக மாற்ற நினைக்கும் மத்திய அரச அதே வேளையில் பல்வேறு மொழி பேசுபவர்களாக மக்கள் பிரிந்து கிடைப்பதன் வசதிகளை, லாபங்களை பெரிய அளவில் அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஒரு புறம் சந்தையின் தேவைகளுக்காக ஒன்றிணைக்கவும் மற்றொருபுறம் அடக்கியாளும் தேவைகளுக்காக பிரித்து வைக்கவுமாக ஒரே நேரத்தில் இருவிதமான நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தின் சிலிகுரி மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில் துவங்கிய நக்சல்பாரி இயக்கம் என்று சொல்லப்பட்ட விவசாயிகள் இயக்கம் கடும் அடக்குமுறைகளுக்கும், படுகொலைகளுக்கும் பிறகு, ஆந்திரத்தில் பற்றி எரிந்தது எண்பதுகளில் ஆந்திரத்தில் நடத்தப்பட்ட கடும் அடக்குமுறைகள் மற்றும் போலி மோதல் படுகொலைகளுக்குப் பிறகு இப்பொழுது ஜார்கன்ட் என்று அழைக்கப்படும் தனி மாநிலத்தின் தண்டகாரன்ய காடுகளுக்கு இடம் பெயர்ந்தது. அங்குள்ள ஆதிவாசிகள், பழங்குடி மக்களின் பிரச்சினைகளை எடுத்து போராடியது. அவர்களை மிக மோசமாக ஏமாற்றிவந்த நகர்ப்புறத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் ஏஜென்ட்களிடமிருந்து அவர்களை காப்பாற்றியது. உலகமயமாக்கலுக்குப் பிறகு அங்குள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க வந்த கார்ப்பரேட்களிடமிருந்து அம்மக்களை பாதுகாக்க இந்திய அரசையும், துணை இராணுவப்படைகளையும் எதிர் கொள்ளக் கூடிய அளவிற்கு அவ்வியக்கம் பிரம்மாண்டமாக வளர்ந்தது. கிட்டத்தட்ட இந்தியாவிற்குள் விடுதலைப்புலிகளைப் போல தனிப்படைகளை கட்டும் அளவிற்கு அவ்வியக்கம் வளர்ந்து இந்திய மற்றும் உலக ஆட்சியாளர்களையே பயங்கொள்ள வைக்கும் அளவிற்கு இன்று வளர்ந்து நிற்கிறது.

அவ்வியக்கத்தை அழித்து ஒழிப்பதற்கு சகல தந்திரங்களையும் இந்திய மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசம், காவல்துறை மற்றும் துணை இராணுவப்படைகளும் நடத்தி வருகின்றன. ஒரு சந்தன வீரப்பனை பிடிக்கவே தமிழக காவல்துறை எத்தனை தந்திரங்களை, சட்டத்திற்கு மீறிய செயல்களை செய்தன என்பதை புரிந்து கொண்டிருக்கிற தமிழக மக்களுக்கு மாவோயிஸ்ட்கள் பிரச்சினையின் பரிமானத்தை புரிந்து கொள்வது அத்தனை கடினமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

இந்திய அரசு சட்டப்படி, ஜனநாயக வழிமுறைகளின்படி இப்பிரச்சினையை கையாள முடியாது என்ற முடிவுகளுக்கு வந்துவிட்டதையும். எந்த மோசமான வழிமுறையிலேனும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற முடிவில் இருப்பதையும் தான் சல்வா ஜுடும், போலி மோதல் படுகொலைகள், பழங்குடிகளை காடுகளை விட்டு வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்திருப்பது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருப்பது என அனைத்தும் நிரூபிக்கின்றன.

சரி! உண்மையில் மாவோயிஸ்ட்களா அல்லது இந்திய அரசா யார்தான் நல்லவர்கள்? சரி இந்திய அரச சொல்கிறபடி அப்பகுதிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் காரணமாக இருக்கிறார்கள். மற்ற பகுதிகளில் இந்திய அரசு அப்படியென்ன மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

தமிழக மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கி, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன், கெயில் எரிவாயுத்திட்டம், என தமிழக நதிகளையும், காடுகளையும், இயற்கை வளங்களையம், நீர்நிலைகளையும் அழித்து, சுற்றுபுறத்தை மாசுகேடானதாக மாற்றி அந்நிய நிறுவனங்கள் கொள்ளையடிக்க கட்டுப்பாடற்ற முறையில் தமிழக நிலத்தை திறந்துவிட்டிருக்கிற இதே இந்திய அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கைகளாலும், திட்டங்களாலும் தமிழகம் முழுதும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு தமிழனும் அறிவான்.

நகர்ப்புறங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் விவசாயமும், நீர்நிலைகளும் அழிக்கப்பட்டு மக்கள் குடிக்கவும் நீரின்றி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை தமிழக நகர்ப்புற மக்களும் அறிவார்கள்.

இவற்றிற்கெல்லாம் யார் முடிவு கட்டுவார்கள், எப்படி முடிவு கட்டுவது என்று தெரியாமல் தமிழக மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இன்றைய நிலைக்கு எதிராக நெட்டை நெடு மரங்களென நின்று கொண்டிருக்கிறார்கள். அனைவரும் தமிழக மக்கள் முன்பு அம்பலப்பட்டுக் கிடக்கிறார்கள். எங்கும் மக்கள் தலைமையின்றி, வழிகாட்டுதலின்றி, எந்தத் திட்டமிடலுமின்றி, தனியே இலக்கற்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற நிலைதான் இதைவிடப் பன்மடங்காக சதீஸ்கர் மாவட்டத்தின் தண்டாகரன்யா, பஸ்தர் காடுகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கே அவர்களோடு மாவோயிஸ்ட்கள் நிற்கிறார்கள். அம்மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். பாரம்பரியமாகவே வில் அம்பு ஈட்டிகளுடன் தங்கள் எதிரிகளுக்கு எதிராக போராடும் போர்குணமிக்க அம்மக்களுக்கு நவீன ஆயுதங்களை ஏந்தவும், எதிரிகளுக்கு எதிராக நவீன வீயூகங்கள் வகுக்கவும் மாவோயிஸ்ட்கள் கற்றுத் தருகிறார்கள். அதன் உட்பகுதிகளில் அவர்கள் இந்திய அரசோ, இராணுவமோ, அதிகாரப்படைகளோ நுழையவும் முடியாத தனி நாட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நாம் இங்கு எங்கும் தமிழ் மொழி மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதையும், அழித்தொழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு அதற்கு எதிராக போராடிக் கொண்டும் இருக்கிறோம். அங்கே அப்பழங்குடிகளின் மொழியாகிய கோண்டி மொழியில் பாடத்திட்ட்ங்களை உருவாக்கி அவர்கள் கற்பித்து வருகிறார்கள். அந்நிய மூலதனத்தின் துனையின்றி அம்மக்களின் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு சுயமான உற்பத்தி பொருளாதார முறைகளை நவீனபானியில் உருவாக்கி வருகிறார்கள்.

இவை பற்றியெல்லாம் இந்நுாலில் இதன் ஆசிரியர் தன் நேரடி அனுபவங்களை பேசுகிறார்.

மற்றொருபுறம் அப்பகுதிகளில் காடுகளில் வாழும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஆதிவாசிகள் பழங்குடிகளுக்குத் தாண்டி மற்றவர்களுக்கும், நகரங்களில் வாழும் மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளைச் சாந்த மக்களுக்கும் மாவோயிஸ்ட்கள் பற்றி எதுவும் தெரியாது. அவர்களது நோக்கங்கள், லட்சியங்கள் எது குறித்தும் தெரியாது. அவர்கள் இந்த நுாற்றாண்டில் உலகம் முழுவதும் எதிர்ப்பியக்கங்கள் ஒழித்தழிக்கப்பட்டும், சமரசங்களுக்கு உள்ளாகியும் வரும் சூழலில் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது பெரும் கேள்விக்குறி. அவர்களது இராணுவவாத செயல்பாடுகளும், பின்தங்கிய மக்களைச் சார்ந்து செயல்படும் முறைகளும் எத்தனை வீதம் சரி என்று தெரியாது. வளர்ந்த இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், அறிவுஜீவிகளும் வளர்ந்துள்ள நிலையில் அவர்கள் மத்தியில் எல்லாம் வேலை செய்யவே முடியாத நிலையில் இருக்கும் அவர்களுடைய செயல்பாடுகள் சரியா என்கிற கேள்விகள் உள்ளன. இவை குறித்தெல்லாம் இந்நுாலில் ஆசிரியர் அவர்களோடு உரையாடியதாகத் தெரியவில்லை.

கடைசியாக மொழிபெயர்ப்பு குறித்தும், தமிழ் பதிப்பு குறித்தும் சில வார்த்தைகள். அருந்ததி ராயின் “தோழர்களுடன் ஒரு பயணம்” நுாலின் மொழிபெயர்ப்பை ஒப்பிடும் பொழுது இந்நுாலின் மொழிபெயர்ப்பு நன்கு புரியும் விதத்திலும், கோர்வையாகவும் இருக்கிறது. வெகு சில இடங்களில் வாக்கிய அமைப்புகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உரையோ, தமிழ் பதிப்புக்கான உரையோ, ஆங்கில நுால் வெளிவந்த விபரங்களோ, ஆசிரியர் குறித்த விபரங்களோ எதுவும் இல்லாமல் தமிழில் நுால் பதிப்பிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகச் சிறந்த பதிப்புப் பாரம்பரியம் கொண்ட தமிழுக்கு இழுக்கு.

மூல நுால் குறித்த ஓரிரு விமர்சனங்கள்

1. துவங்கும் பொழுது இருந்த மொழியும், நடையும் பிற்பாடு காணாமல் போகிறது. பின்னால் முழுவதும் உணர்ச்சியற்ற வெறும் புள்ளிவிபர தகவல் மழைதான்.
2. ஏழு வருடங்கள் மாவோயிஸ்டகள் உடனே வாழ்ந்து அறிந்ததற்கான ஆழமும், விரிவும் நுாலில் இல்லை.
3. நுாலின் தலைப்புக்கு மாறாக அவர் யார் இவர் யார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிற ஆசிரியரின் நடுத்தர வர்க்க ஆர்வம் இந்நுாலின் நோக்கத்திற்கும், பரந்த இந்திய மற்றும் உலக வாசகர்களின் வாசிப்பு நோக்கத்திற்கும் தேவையற்றதாக இருக்கிறது.
4. அவர்களுடைய கொள்கை, திட்டங்கள், இந்தியா மற்றும் அதன் உழைக்கும் மக்கள் பற்றிய அவர்களுடைய நிலைப்பாடுகள், புரிதல்கள் பற்றிய விரிவான பேட்டிகள் இல்லை.
5. அதன் பொதுச் செயலாளர் கணபதி, கிஷன்ஜி, போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பக்கங்களில் அவர்களுடனான நேர்காணல்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தையே அளித்தது.
6. ஆசிரியரின் இன்றைய வனிக நலன்சார்ந்த இதழியல் அணுகுமுறைக்கும், பரபரப்பு இதழியல் எழுத்துக்களுக்கும், மிக சீரியசான பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த அக்கறை சார்ந்த செயல்பாடுகளுக்கும் இடையே நுால் தடுமாறுகிறது.

Advertisements

Posted in கட்டு​ரை, விமர்சனம் | Leave a Comment »

லெனின் – ஹெகல் – மேற்கத்திய மார்க்சியம்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 18, 2018

கெவின் பி. ஆண்டர்சனின் “உலக அரசியலிலும் தத்துவத்திலும் இயங்கியலின் மீள்கண்டுபிடிப்பும் அதன் உள்ளார்ந்த ஆற்றலும்” என்ற இக்கட்டுரை 2001ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்று. 2007ல் Duke University Press மூலமாக ஸ்லோவோக் சிசேக்கால் SIC தொடரின் 7வது தொகுப்பாக தொகுக்கப்பட்டு வெளிவந்த “Lenin Reloaded: Toward a Politics of Truth” என்ற நுாலில் இடம்பெற்றது. இக்கட்டுரையானது ஜனவரி-ஜுன் 2017ல் வெளிவந்த புதிய ஆராய்ச்சி இதழில் பேராசிரியர் ந. முத்துமோகனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

இதில் பேசப்படும் கருத்துக்கள் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பழையவை, இதற்கு முன்பு இக்கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா, இதுதான் முதன் முறையாக தமிழில் வெளி வருகிறதா தெரியவில்லை. ஆனாலும் இக்கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் குறுகிய வட்டங்களில் நிறைய விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பழைய கருத்துக்கள் தான். நான் இங்கு என் வாசிப்புகள் மற்றும் புரிதல்களின் அடிப்படையில் அவற்றைக் குறித்த என் வாசிப்பனுபவங்களை பதிவு செய்கிறேன். இக்கட்டுரையை வாசிக்கும் பொழுது மீண்டுமொரு முறை லெனின் மற்றும் மார்க்சின் நுால்களை எடுத்து புரட்டிப் பார்க்கவும், தோழர்களோடு இதில் உள்ள கருத்துக்கள் குறித்து உரையாடவும், சந்தேகங்களை தெளிவு பெறவும் சந்தர்ப்பம் வாய்த்ததை ஒரு பெரிய பயனாகக் கருதுகிறேன்.

இக்கட்டுரை புதிய ஆராய்ச்சியில் முழுமை பெறவில்லை. அடுத்த இதழில் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாசித்தவரை இங்கு அதனை பதிவு செய்து கொள்கிறேன்.

இக்கட்டுரையில் ஆண்டர்சன் கீழ்க்கண்ட கண்ணோட்டங்களை முன்வைக்கிறார்.

* இயங்கியலில் அவரது பணிகள் சமநிலையற்றவையாக உள்ளன; இதனை அவரது ‘பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனவாதமும்’ (1908) நுாலின் எந்திரத்தனமான அணுகுமுறை எடுத்துக் காட்டுகிறது. (பக் 54)

* இயங்கியல் நோக்கிலிருந்து சொல்வதானால் இந்த நுாலில் (பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனவாதமும்) அடிப்படையான இரண்டு குறைபாடுகள் உண்டு. முதலாவதாக, மார்க்சியப் பொருள்முதல்வாதத்தின் கொச்சையான பிரதிபலிப்புக் கொள்கையின் கருத்தான “புறவய எதார்த்தத்தின் பிரதி, தோராயமான பிரதி” (LCW 14:182) என்பது இந்நுாலில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவதாக, இந்நுாலில் லெனின் எல்லாவிதமான கருத்துமுதல்வாதங்களையும் “அலங்கரிக்கப்பட்ட பேய்க்கதைகள் அல்லாமல் வேறில்லை” (LCW 14:165) எனக் கூறி அறவே விலக்கித் தள்ளியிருந்தார். (பக். 58)

* தத்துவத்தின் இரண்டு மிகப்பெரிய முகாம்கள் எனப்படும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற எங்கெல்சிய இருமையைக் கடந்து பிறிதொன்றை நோக்கிச் செல்கிறார். (பக். 59)

* இளம் மார்க்ஸ் 1844ல் கிட்டத்தட்ட இது போலத்தான் “கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டினின்றும் வேறுபடக்கூடிய, அதே வேளையில் அவை இரண்டின் ஒன்றுபட்ட உண்மையைக்” குறித்து நிற்கும் “ஓர் உறுதியான இயற்கையியம் அல்லது மனிதநேயத்தை” உருவாக்க முனைந்தார். (பக். 61)

* கருத்துமுதல்வாதம் குறித்த அவரது (லெனின்) முந்தைய நிராகரிப்புகளை கைவிடத் தொடங்குகிறார் (பக். 61)

* லெனின் மெய்யான மார்க்சியத்தை மீட்டெடுத்தார், ஹெலிய இயங்கியலின் (“எல்லா இயக்கங்களுக்கும் வாழ்விற்கும் மூலதாரமாக விளங்குவது முரண்பாடே”) மையத்திற்குச் திரும்பிச் செல்வதால் மட்டுமல்ல, ஹெலின் தருக்கவியல் முழுமைக்கும் அவர் திரும்பிச் சென்றார். (பக். 57)

* ஒருவர் ஹெகலின் தர்க்கவியல் நுால் முழுவதையும் பயிலாமல், புரிந்து கொள்ளாமல் மார்க்சின் மூலதனம் நுாலை, குறிப்பாக அதன் முதல் இயலை, சரியாக உள்வாங்கிக் கொள்ளுதல் இயலாது. எனவே, கடந்த அரைநுாற்றாண்டுக் காலத்தில் மார்க்சியர்களில் ஒருவரேனும் மார்க்சைப் புரிந்து கொண்டது கிடையாது (LCW 38:180) (பக். 57) [இந்நுாலில் குறிப்பிட விடுபட்ட இம்மேற்கோளின் கீழ்ப்பகுதி: Hegel actually proved that logical forms and laws are not an emptyshell, but the reflection of the objective world. More correctly, he did not prove, but made a brilliant guess. (LCW 38:180)]

* பொருள்முதல்வாத நிலைப்பாடுகளிலிருந்து ஹெலிய இயங்கியலை முறையாகப் பயில்வதற்கான வேலைகளை நாம் திட்டமிட வேண்டும் (பக். 56) [இந்நுாலில் குறிப்பிட விடுபட்ட இம்மேற்கோளின் கீழ்ப்பகுதி: i.e., the dialectics which Marx applied practically in his Capital and in his historical and political works, and applied so successfully that now every day of the awakening to life and struggle of new classes in the East (LCW33:233)]

* விரைவில் அவர், தத்துவத்தின் இரண்டு மிகப்பெரிய முகாம்கள் எனப்படும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற எங்கெல்சிய இருமையைக் கடந்து பிறிதொன்றை நோக்கிச் செல்கிறார். “கருத்து உருமாறி அதிலிருந்து எதார்த்தம் தோற்றம் பெறுகிறது என்ற கருத்து அற்புதமானது! வரலாற்றுக்கு மிக முக்கியமானது. இன்னும் மனிதரின் தனிப்பட்ட வாழ்விலும் இதற்கு ஏராளமான உண்மை இருக்கிறது. கொச்சையான பொருள்முதல்வாதத்திற்கு எதிராரனது. கவனிக்க வேண்டிய உண்மை. பொருளுக்கும் கருத்துக்கும் இடையிலான வேறுபாடு நிபந்தனை அற்றதல்ல, எல்லையற்றதல்ல” (LCW 38: 114)

இங்கு கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற சொற்களுக்கும் கருத்து, பொருள் என்ற சொற்களுக்கும் இடையிலான வேறுபாடு புறந்தள்ளப்பட்டு லெனினை பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற எங்கெல்சிய இருமையைக் கடந்து பிறிதொன்றை நோக்கிச் செல்கிறார் எனக் குறிப்பிடுகிறார். லெனின் இந்த மேற்கோளிலேயே தெளிவாகக் குறிப்பிடுகிறார் இது ‘கொச்சையான’ பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது என.

மார்க்சின் மிகப் பிரசித்தமான மேற்கோளான “theory also becomes a material force as soon as it has gripped the masses” என்று தன்னுடைய A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right என்னும் நுாலின் முன்னுரையில் குறிப்பிடுகிற கருத்தை லெனின் இங்கு தனது சொற்களில் குறிப்பிடுகிறார் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறதே தவிர, அவர் ஹெகலின் கருத்துமுதல்வாத இயங்கியலை ஏற்கிறார் என்றோ அல்லது பொருள்முதல்வாத நிலையிலிருந்து விலகிச் செல்கிறார் என்றோ கருத இடமிருப்பதாகத் தெரியவில்லை.

* தருக்கவியல் விஞ்ஞான நோட்டுப் புத்தகங்கள் முழுவதிலும் லெனின் கொச்சையான பொருள்முதல்வாதத்தின் ஒருபக்கச் சார்பைத் தவிர்க்க விரும்புவதைக் கவனிக்க முடிகிறது. ஓரிடத்தில் அவர் சொல்கிறார், “கருத்துக்களின் புறவயப் பண்பை மறுதலிப்பது… அபத்தமானது” (பக். 60)

இங்கு தெளிவாகக் குறிப்பிடப்படுவதுபோல இங்கு மட்டுமல்ல. மார்க்ஸ், எங்கெல்ஸ் காலந்தொட்டே மார்க்சிய மூலவர்கள் கொச்சை பொருள்முதல்வாதம், இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் போன்ற பல போக்குகளையும் எதிர்த்து எழுதி வந்துள்ளனர் என்பதை அவர்களின் பல எழுத்துக்களிலும் நாம் பார்க்கிறோம்.

* “மனிதனின் அறிதல் புறவய உலகைப் பிரதிபலிப்பது மட்டுமல்ல, அதனைப் படைக்கவும் செய்கிறது” (LCW 38:212). இது ஹெலிய இயங்கியலைச் செயல்பாட்டு வேகத்துடன், விமர்சனரீதியா, புரட்சிகரமாக லெனின் உள்வாங்கியதற்கான எடுத்துக்காட்டு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மேற்கோள் மார்க்சின் மிகப் பிரபலமான ஃபாயர்பாக் ஆய்வுரைகளில் வரும் மேற்கோளை ஞாபகமூட்டுகிறது. லெனின் மேலும் மேலும் அதிகமான வகையில் தன் சொந்த வழிமுறைகளில் மார்க்சை நெருங்கி வருவதைத்தான் காட்டுகிறது என்றே தோன்றுகிறது.

லெனினின் ‘தத்துவக் குறிப்பேடுகள்’ வாசகர்களுக்காக முறையாக எழுதி பதிப்பிக்கப்பட்ட நுால் அல்ல. அது அவர் முக்கிய தத்துவ நுால்களை படித்துக் கொண்டிருந்த பொழுது எழுதி வைத்துக் கொண்ட குறிப்புகள். பொதுவாக குறிப்புகள் என்பன சந்தேகத்திற்கு உரியன, பதில் சொல்ல மற்றும் கவனத்தில் கொள்ள விரும்புவனவற்றை எடுத்துக் கொள்வதாகும். அவற்றிலிருந்து ஒருவரின் அத்துறைசார்ந்த அன்றைய முழுமையான கருத்துக்களை, முடிவுகளை நாம் நேரடியாக தெரிந்து கொள்ள முடியாது. அவருடைய வெளியிடப்பட்ட நுால்கள் மற்றும் கருத்துக்களிலிருந்துதான் நாம் அவற்றிற்கு பொருள் கொள்ள முடியும்.

லெனின் நேரடியாக எங்கும் தான் தனது முந்தைய நுாலான ‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்’ நுாலின் முடிவுகளையோ முன்வைக்கப்ட்ட வாதங்களையோ, வாதமுறைகளையோ தவறென்று குறிப்பிட்டதாகவோ. ‘தத்துவக் குறிப்பேடுகள்’ க்குப் பிறகும் எங்கும் தன்னுடைய இயக்கவியல் பொருள்முதல்வாத நிலைப்பாடுகளில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டதாகவோ, எங்கெல்சின் முக்கிய முடிவுகள் மற்றும் எழுத்துக்கள் தவறானவை எனக் குறிப்பிட்டதாகவோ தெரியவில்லை.

மேலும் அவருடைய எழுத்துக்களில் தொடர்ச்சியையும், வளர்ச்சியையும் தான் நாம காண்கிறோமே தவிர முன்னுக்குப் பின் முரண்களையோ, தடுமாற்றங்களையோ, குழப்பங்களையோ நாம் காணவில்லை.

லெனின் வாழ்நாளில் மார்க்ஸ் எங்கெல்சின் முக்கிய நுால்கள் குறிப்பாக The German Ideology போன்றவை பதிப்பிக்கப்படவில்லை என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே அவர்களுடைய கருத்துக்களுக்கு அவர்கள் வந்து சேர்ந்த வழிமுறைகளையும், அவற்றின் காரணங்களையும் தன் சொந்த தேடல்களின் வழியாக லெனின் கண்டடைந்தார் என்கிற சிறப்புகளையும் தான் இவை நிரூபிக்கின்றனவே அன்றி லெனின் எங்கெல்சிடமிருந்தோ மார்க்சிடமிருந்தோ வேறுபட்டார் என்று கருத இடமிருப்பதாகத் தெரியவில்லை.

இக்கட்டுரை குறித்த எனக்கொரு அடிப்படை சந்தேகம்: இதன் ஆசிரியர் ‘பொருள்முதல்வாதம்’ என்பது அடிப்படையில் கருத்தின் இருப்பையும், கருத்தின் செயல்ஊக்கமான பங்கையுமே மறுக்கக் கூடியது என்ற புரிதல் கொண்டவரோ. அது போலவே மறுபக்கத்தில் ‘கருத்துமுதல்வாதம்’ குறித்துமோ?

மார்க்ஸ் எங்கெல்ஸ் நுால்களில் கடிதங்களில் நிறைய அவர்கள் ஹெகலின் இயக்கவியலை நாங்கள் எவ்வாறு பார்க்கிறோம் ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு பார்க்கிறோம். அவற்றிலிருந்து எங்களுடைய பொருள்முதல்வாதமும், இயக்கவியலும் மாறுபடும் புள்ளிகள் எவை? தலைகீழாக நின்று கொண்டிருந்த அவற்றை எவ்வாறு காலால் நிற்க வைத்தோம் என்று பேசுகிறார்கள். அந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் பொழுது லெனினின் எழுத்துக்கள் தொடர்ச்சியான சீரான வளர்ச்சிப் போக்கில் இருப்பதாகவே தெரிகிறது. லெனின் நுால்களையும், குறிப்பேடுகளையும் எவ்வாறு படிப்பது, எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் நமக்கிருக்கும் குழப்பங்களையும், சிக்கல்களைத்தான் இது போன்ற கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, அவருக்கு இருக்கும் குழப்பங்களையோ, சிக்கல்களையோ வெளிப்படுத்துவதாக எண்ண இடமில்லை என்றே தோன்றுகிறது.

Posted in விமர்சனம் | Leave a Comment »

புதிய ஆராய்ச்சி இதழ் கட்டுரை

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 12, 2018

கடைசியாக வந்த புதிய ஆராய்ச்சி இதழை தோழர் தமிழ் காமராசு கொடுத்தார். தமிழில் வரும் விசய கணமான தீவிர விசயங்களைப் பற்றி பேசும் ஆங்கில இதழ்களுக்கு நிகரான தமிழ் இதழ்களில் ஒன்று. ஏற்கனவே ஒரு சில இதழ்கள் வாங்கியிருக்கிறேன்.

இவ்விதழில் தமிழகப் போராட்டங்கள் மற்றும் போராட்ட சூழல்கள், மக்களின் மன நிலை குறித்தும் அவற்றை புரிந்து கொள்வதில் உள்ள கோட்பாட்டுப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக அலசும் பேராசிரியர் இரா. முரளியின் கட்டுரை, இந்திய விவசாயப் பிரச்சினைகள் குறித்த மும்பை ஆங்கில ஆய்விதழின் முக்கிய கட்டுரைகள் குறித்த பிரவீனி்ன் கட்டுரை. தமிழ் காமராசுவின் அம்பேத்கர் தத்துவம் குறித்த பேராசிரியர் ஒருவரின் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு, முத்து மோகனின் தத்துவம் குறித்த ஒரு கட்டுரை என ஆழமான தீவிரமான கட்டுரைகள் நிறைய இடம் பெற்றுள்ளன.

நேற்றிரவு முதல் இரு கட்டுரைகளை வாசித்தேன்.

இரா. முரளியின் கட்டுரையில் தமிழகப் போராட்டங்கள் குறித்த விரிவான அறிமுகமும், குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் பிற போராட்டங்களுக்கும் இடையிலான வேற்றுமைகளுக்கான காரணங்களும் பேசப்படுகின்றன. இவற்றை விளங்கிக் கொள்வதிலும், இவற்றில் உள்ள சிக்கல்களை புரிந்து கொள்வதிலும், இவற்றில் வினையாற்றுவதிலும் இடதுசாரிகள் எதிர் கொண்ட கொள்கிற சிக்கல்கள், அம்சங்களுக்கான தத்துவப் போக்குகள் குறித்தும் பேசுகிறார். எல்லா தரப்பு அம்சங்களையும் விவாதத்திற்காக முன் வைக்கிறார் என்கிற அடிப்படையில் இது தீவிரமான, ஆழமான, காத்திரமான உரையாடலுக்கான ஒரு சட்டகத்தை உருவாக்கித் தரும் கட்டுரையாக கருதுகிறேன்.

நவீனத்துவத்தின் சாதக பாதகங்கள், நவீனத்துவம் சமகால பிரச்சினைகளை எதிர்கொள்வதில் எடுக்கும் பிற்போக்கு மற்றும் முற்போக்கு பாத்திரம் என்பதான பார்வைகளில் அடிப்படையில் ஏதோ சிக்கல் இருப்பதாகவே தோன்றுகிறது. நவீனத்துவம் என்ற ஒற்றை அணுகுமுறை ஏற்படுத்தும் சிக்கல், நவீனத்துவத்தை எதிர்க்கிறேன் என்கிற போதே மார்க்சியத்தையும் எதிர்க்கிற சிக்கல்களுக்குள்ளும், மார்க்சியத்தை ஆதரிக்கிறேன் என்கிற போதே நவீனத்துவத்தையும் ஆதரிக்கிறேன் என்கிற நெருக்கடிக்குள்ளும் நாம் மாட்டிக் கொள்கிறோமோ என்று அஞ்ச வைக்கிறது.

அதே போல பின்நவீனத்துவம் பற்றிய பேச்சுக்கள் மேலும் இப்பிரச்சினை குறித்த மேலதிகமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மார்க்சிய சிந்தனாமுறை, எழுத்துமுறையில் நவீனத்துவம் என்ற ஒற்றை அணுகுமுறை அரசியல் பொருளாதார வர்க்க உள்ளடக்கங்கள் நீக்கம் செய்கிற ஒரு போக்காக காண வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே தோன்றுகிறது.

பின்நவீனத்துவம் என்பது ஆசிய ஆப்பிரிக்க குறிப்பாக இந்தியா போன்ற சூழல்களில் முதலாளித்துவத்திற்கும், அதற்கு முந்தைய சமூக அமைப்புகளுக்கும் இடையிலான சமரசத்தை முன்னிறுத்தும் ஒரு போக்காகவே பொதுவிலும், இக்கட்டுரையிலும் இனங்காணத் தோன்றுகிறது.

பகுத்தறிவு, தர்க்கம், விஞ்ஞான ஆய்வு முறைகள், போன்ற நவீனத்துவ கூறுகள் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் அளவிற்கே அதனால் அங்கீகரிக்கவும், ஆதரிக்கவும் படுகிறது. பொதுவாகவே முதலாளித்துவம் உலகம் முழுவதும் அதற்கு முந்தைய சிந்தனா முறைகளுடனும், மத்திய கால அணுகுமுறைகளுடனும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதும், தேவைக்கேற்ப அவற்றை ஊக்கப்படுத்துவதும் ஏகாதிபத்தியத்தின் கீழான சமச்சீரற்ற உலக வளர்ச்சி மற்றும் இயங்குமுறையில் தேவைப்படுகின்ற ஒன்றாக இருப்பதாகவே படுகிறது.

கட்டுரையின் மொழியிலேயே சொல்வதானால் நவீனத்துவம் என்பது உலக ஏகாதிபத்திய சமூக அமைப்பின் கீழ் முற்றுப் பெறாத ஒரு புரட்சியாகவே இருக்கிறது. இதனை புதிய ஜனநாயகப் புரட்சி பற்றிப் பேசுகிற லெனினிய மாவோவிய சிந்தனைகளுடனும், அரசியல் திட்டங்களுடனும் இணைத்துப் பார்க்கலாம்.

இது என்னுடைய முதல் குறிப்புகள். இன்னும் விரிவாக அக்கட்டுரை குறித்த வாசிப்பனுபவத்தை எழுதலாம் என உள்ளேன்.

Posted in விமர்சனம் | Leave a Comment »

“பின்நவீனத்துவம்- கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி” நூல் குறித்து

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 19, 2014

1555469_546315872166910_1454384252880968643_n

திருப்பூர் குணா எழுதிய ”பின்நவீனத்துவம் – கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி” நூல் வாசிக்கக் கிடைத்தது. மார்க்சியவாதிகளுக்கு ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கான நல்லதொரு நூல். ஆழமான மார்க்சிய கல்விக்கான அவசியத்தையும், மார்க்சிய விரோத தத்துவங்களை புரிந்து கொள்வதிலும் எதிர்கொள்வதிலும் உள்ள சிக்கல்களையும், நடைமுறையில் அது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில் காட்ட வேண்டிய கவனத்தையும் வலியுறுத்துகிறது என்கிற அளவில் முக்கியமான நூலாகிறது.

மற்றொருபுறத்தில் நடந்து முடிந்த நீண்ட தத்துவார்த்த போராட்ட வரலாற்றில் மா்க்சியம் சரியென நிரூபிக்கப்பட்டிருப்பதையும் இது புரிய வைக்கிறது. பாமக தோன்றிய பொழுது பல்வேறு மார்க்சிய குழுக்களில் இருந்த பல தோழர்கள் மத்தியில் பாமக குறித்த ஊசலாட்டம் தவறான புரிதல்கள் இருந்தன. அவற்றை நிறப்பிரிகை போன்ற இதழ்கள் மேலும் ஆழப்படுத்தின. ஆனால் மார்க்சிய குழுக்களின் தலைமைகள் தெளிவாக இருந்தன. பாமகவின் அமைப்பு வடிவத்தை, வர்க்க பின்னணியை, அரசியல் நோக்கங்களை. நடவடிக்கைகளை அவர்கள் மார்க்சிய வழியில் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை தங்கள் அணிகளிடம் வலியுறுத்தினார்கள்.

அதே சமயத்தில் பின்நவீனத்துவம் குறித்த தத்துவார்த்த புரிதல்களையும், நடைமுறை பிரச்சினைகளையும் இந்நூல் அதிகம் குழப்பிக் கொள்வதாகவே தோன்றுகிறது. தத்துவத்தை அப்படியே வறட்டுத்தனமாக நடைமுறை விசயங்களை புரிந்து கொள்வதில் பின்பற்றும் பொழுது ஏற்படும் சிக்கல்களை இந்நூல் எதிர்கொள்வதாகப்படுகிறது. எதிரிகளை குறைத்து மதிப்பிடுவதில் உள்ள எல்லா அபாயங்களும் எதிரிகளை மிகையாக மதிப்பிடுவதிலும் உள்ளது. இத்தகைய மிகை மதிப்பீடுகள்தான், எல்லாவற்றையும் முன் தீர்மானிக்கப்பட்டவைகளாகவும், திட்டமிட்ட சதியாகவும் புரிந்து கொள்வதை நோக்கி நம்மைத் தள்ளிவிடுகிறது.

நாம் மார்க்சிய தத்துவத்தை இயங்கியல்பூர்வமாக புரிந்து பயன்படுத்த வேண்டும். தத்துவத்தின் முடிவுகளை, இயக்கத்தின் விதிகளை பொருளின், சமூகத்தின் இயக்கத்தின் தன்னியல்பான செயல்பாடுகளின் முறைமையாகக் காண வேண்டும். ஒவ்வொரு இயற்கையான மற்றும் சுதந்திரமான அமைப்பிற்கும் சுயமான எதிர்ப்பாற்றல் (Auto Immunisation) உண்டு, அது தனக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்கொள்வதும், அழித்தொழிப்பதும், தனக்கு தேவையானவற்றை உருவாக்கிக் கொள்வதிலும் இத்தகைய அம்சங்களின் தன்மையை மார்க்சியவாதி நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அல்லாமல் எல்லாவற்றையும் மேலிருந்து இறக்கப்படுவதாகவும் திட்டமிட்டு மட்டுமே செய்யப்படுவதாகவும் கருதுவது, எதிரியை பற்றிய மிகை மதிப்பீடாக மாறிவிடவும், அமைப்பின் சிக்கலான செயல்வடித்தை இயங்கியல்பூர்வமாக புரிந்து கொள்ள முடியாததாகவும் தோன்றுகிறது.

தமிழகத்தின் பின்நவீனத்துவவாதிகள் பாமகவை விமர்சனமற்று ஏற்றுக் கொண்டதற்கான அடிப்படை, அவர்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம், அவர்களது மார்க்சிய எதிர் மனநிலையும், பின்நவீனத்துவம் போன்ற தவறான புரிதல்களும் தானே தவிர, தெரிந்தே வேண்டுமென்றே செய்தார்கள் என்கிற பார்வைகள் சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்களுக்கு சமூகத்தை புரிந்து கொள்வதிலும் அதன் சிக்கல்வாய்ந்த இயக்கப் போக்கையும், பல்வேறு அம்சங்களுக்கிடையேயான சிக்கலான ஊடாட்டங்களையும் இயங்கியல்பூர்வமாக புரிந்து நடைமுறையில் வெற்றிகரமாக கையாள்வதில் பெரும் பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

தத்துவம் நடைமுறை என்கிற இரண்டு விசயங்களுக்கு இடையிலான இயங்கியல்பூர்வமான உறவை புரிந்து கொள்வதில் நமக்கு நிறைய மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. கோட்ப்பாட்டுரீதியாக நம்மோடு அனைத்து விசயங்களிலும் ஒத்த கருத்துடையவர்களோடு மட்டுமே கூட்டமைப்பு வைப்போம் என்கிற பார்வைகள் ஒரு விதமான வறட்டுப்பார்வைகளே. நாம் மாசேதுங்கின் ஐக்கிய முன்னணி தந்திரத்திலிருந்து, கோமிங்டானுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செய்து கொண்ட ஒப்பந்தங்கள், சமரசங்கள். அந்த ஐக்கிய முன்னணியால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகள் அனைத்தையும் தாண்டி நீண்ட காலத்திற்கு மாவோ அந்த ஐக்கிய முன்னணியை வலியுறுத்தியதையும், இரண்டாம் உலகப்போரின் போது ஸ்டாலின் ஏகாதிபத்திய நாடுகளோடு ஏற்படுத்திக் கொண்ட ஐக்கிய முன்னணியையும் ஆழமாக கற்றுத் தேறவேண்டும்.

பாமக வன்னிய சாதிச் சங்கத்திலிருந்து தோன்றியது என்பது எவ்வாறு மறுக்க முடியாத உண்மையோ அது போலவே அன்றைக்கு பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளோடு அது தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். பாமக என்ற அமைப்பை இயங்கியல்பூர்வமாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அதற்குள் சாதி ஆதிக்க வாதிகள் மற்றும் ஜனநாயக  சக்திகளுக்கு இடையேயான போராட்டம் இருந்தது. அந்தப் போராட்டம் அதன் அடிப்படையான வர்க்க நலன்களிலிருந்தே நடைபெற்றது. தன்னை அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கான மாற்றாக நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ராமதாஸ் தலைமையில் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட போராட்டத்தில் அத்தகைய முயற்சிகளின் தோல்வியின் பின்னணியில் இன்றைக்கு ராமதாஸ் போன்றவர்கள் சாதி ஆதிக்க வாதிகளிடம் சரணடைந்துள்ளனர். சாதி ஆதிக்கவாதிகள் இன்றைக்கு முன்வைக்கும் மாற்றும் சாதி வெறி அரசியலும் கூட வெற்றி பெற்ற கோட்பாடாக அவர்களை நிறுத்திவிடவில்லை.

பின்நவீனத்துவத்தின் தோற்றம், நோக்கம் குறித்து சர்வதேசப் பின்னணியிலும், சோசலிச நடைமுறைகளின் அனுபவங்கள் பாடங்களின் பின்னணியிலும் ஆழமாக கற்று உள்வாங்க வேண்டியிருக்கிறது. அவற்றை வெறுமனே ஏகாதிபத்தியங்களின் சதித்திட்டம் என்பதாக மட்டும் புரிந்து கொள்வது எதிரிகள் குறித்த மிகை மதிப்பீட்டிற்கும், அகப்பிரச்சினைகளையும், இயக்கச் சிக்கல்களையும் புரிந்து கொள்வதில் பாரதுாரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தாங்களே உங்கள் நூலில் குறிப்பிட்டுள்ள யமுனா ராஜேந்திரனின் ”நான் பின்நவீனத்துவ நாடோடி அல்ல” நூல் முதற்கொண்டு பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் இவை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவை குறித்து நம்மிடையே ஆழமான விவாதங்களை நாம் நிகழ்த்தி நமது புரிதல்களை செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

Posted in விமர்சனம் | Leave a Comment »