எனது நாட்குறிப்புகள்

Archive for the ‘Uncategorized’ Category

அபிராமிகள் ஏன் உருவாகிறார்கள்?

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 17, 2018

டாக்டர் ஷாலினியின் விகடன் நேர்காணல் பிரச்னையின் மையத்தை தொடவில்லை. இன்னும் பெரிய ஏரியல் வீயுவில் பார்க்க வேண்டிய பிரச்னை. சமூகமும் அதன் பண்பாடும் என்றென்றைக்கும் மாறாத ஒன்றோ, அனைத்து இதர விசயங்களிலிருந்தும் துண்டித்துக் கொண்ட, அனைத்துக்கும் அப்பாற்பட்ட சுயேச்சையான ஒன்றோ அல்ல.

காலமாற்றத்தில், சமூக பொருளாதார அம்சங்களில் ஏற்படுகின்ற தீவிரமான வளர்ச்சி மாற்றங்களில் அதில் உள்ள அனைத்தும், அவற்றின் மதிப்பிடுகள் அனைத்தும் தொர்ச்சியாக மாறுகின்றன. இதற்கு குடும்ப உறவுகள், மனித உறவுகள், இரத்த உறவுகள், மனிதர்களின் அக மதிப்பிடுகள், ஒழுக்கம், பண்பாடு என எதுவும் விதிவிலக்கல்ல.

பெண்கள் தியாகமே உருவானவர்கள், குடும்பத்திற்காக, கணவன், பிள்ளைகளுக்காக ஒரு பெண் தன் வாழ்க்கையையே, தன் ஆசாபாசங்களையே முற்றிலுமாக தியாகம் செய்வாள்/ செய்ய வேண்டும் என்கிற பழைய வாழ்க்கைமுறையும், கட்டுப்பாடுகளும், கலாச்சாரமும், தீவிரமான எதிர்பார்ப்புகளும் இன்றைய உலகமயமாக்கல், கார்ப்பரேட் மயமாக்கல் காலகட்டத்தில் ஆட்டம் காண்கின்றன.

நண்பரோடு ஒரு முறை பெர்லின் வீதிகளில் பேசிக் கொண்டே போனபோது சட்டென்று எங்கள் உரையாடலில் வந்து விழுந்த ஒரு அம்சம். நீங்கள் உலகமயமாக்கல், நவீனமயமாக்கல், கார்ப்ரேட்மயமாக்கல் என்கிற விசயங்களை பிரித்து அதன் பொருளாதார அம்சங்கள் மட்டும் எங்களுக்கு போதும், அதன் உணவு, உடை, வாழ்க்கைமுறை, சிந்தனைமுறை, பண்பாடு போன்ற விசயங்கள் வேண்டாம் என்றெல்லாம் கூற முடியாது. அவை எப்பொழுதும் முழு பேக்கேஜாகத்தான் கொடுக்கபடும் என்றேன்.

இத்தகைய அம்சங்கள், நாம் சற்று ஆழமாக சிந்திக்கவும், உரையாடவும் வேண்டிய விசயங்கள். இன்றைய தொழில்நுட்ப மற்றும் தகவல் பரிமாற்ற புரட்சிகள், கார்ப்ரேட் உற்பத்திமுறையின் நுகர்வு வெறி கலாச்சாரத்தால் வழிநடத்தப்படுகிறது. இதன் மிக ஆபத்தான நேரடி விளைவுகளாகத்தான் இத்தகைய வழக்குகளை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

மனித சமூகத்தின் உற்பத்தி தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சிக்கும் அதனோடும் அதற்கு முன்பாகவும் வளர வேண்டிய நவீன பண்பாட்டு கலாச்சார வளர்ச்சிக்கும் இடையிலான முரணை தீர்க்கமுடியாத்தாக எதிர்எதிர் துருவங்களாக முதலாளித்துவமானது தனது லாப நோக்கிலான உற்பத்திமுறைக்காக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த முரணே நம் சமகால வாழ்வின் சகலமுனைகளிலும் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் சகிக்கமுடியாத கொடூரத்துடன் எங்கும் வெடித்து வெளிக் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.

Posted in Uncategorized | Leave a Comment »

விளையாட்டுத் தேர்வு

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 15, 2018

விளையாட்டு அரங்கில்
கடைசி நிமிடங்களிலும்
காலந்தவறியும்
ஸிப்ட், ஸ்கோடா,
பிஎம்டபுள்யூ, வோல்ஸ்வேகன்,
எக்ஸ்யூவி, ஐடொவின்டி
என விதவிதமான மகிழுந்துகளில்
வரிசையாக வந்து
படோடோபமாக இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும்
குடும்பத்திலிருந்து பிள்ளைகள்

அரங்கம் முழுதும்
பணக்கார பெற்றோரின்
பகடிப் பேச்சுகளும்
பரிகாசச் சிரிப்புகளும்

அரசுப் பேருந்துகளில்
அதிசீக்கிரமாக வந்து
அமைதியாய் ஓரமாய்
ஆர்பாட்டங்கள் இல்லாமல்
அமர்ந்திருக்கின்றன
இந்தியாவின்
வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்.

லஞ்சம், ஊழல், சிபாரிசு,
சாதி, மதம்
எல்லாம் கடந்து
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான
அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து.

Posted in Uncategorized | Leave a Comment »