எனது நாட்குறிப்புகள்

கசாப்புக்கடைக்காரன்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 13, 2017

கசாப்புக்கடைக்காரன்
கழுத்தறுத்து வீசப்பட்ட கோழிகளை
துடிப்படங்கும் வரை காத்திருக்கிறான்
இறகுகளை பறிப்பதற்கும்
குடலை உருவுவதற்கும்
எங்கள் பிரதமருக்கு
அந்த அவகாசம் கூட இல்லை
துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே
எங்கள் இதயங்களை சமைத்து
தன் எசமானர்களின்
மேசையில் பரிமாறும்
அவசரத்தில் இருக்கிறார்
வழிவிடுங்கள்.

9 August 2017

Advertisements

Posted in கவிதைகள் | Leave a Comment »

பூமியையே பார்த்திராத சந்ததிகள்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 13, 2017

ஆதியில் நாம் ஒன்றாய் இருந்தோம்
இடையில் நாம் இரு துருவங்கள் ஆனோம்
மீண்டும் நாளை
உறுதியாய் ஒன்று கலப்போம்
நமது குலம்
அண்டவெளி எங்கும் பற்றிப்படரும்
நமக்கு
பூமியையே பார்த்திராத
சந்ததிகள் பிறப்பார்கள்

9 August 2017

 

Posted in கவிதைகள் | Leave a Comment »

இறப்பவனுக்கும் ஆதார்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 13, 2017

அரசவையிலிருந்து
ரகசிய அரசவைக் கவிஞருக்கு
அனுப்பப்பட்ட பதில் மடல்.

நல்லது கவிஞரே
காரியத்தை சிறப்பாகச் செய்தீர்கள்
அரசரின் மனம் குளிர்ந்தது.

ஒரு வருத்தம்
இந்த நாடு முழுவதற்கும்
ஒரே மொழி இல்லாததுதான்
அல்லது
நீங்கள்
நமது தேசிய மொழியில்
எழுத முடியாததுதான்.

ஆதார் கேட்பது
இறப்பவனுக்கல்ல
அவனுடைய
இறப்புச் சான்றிதழ் கேட்பவனுக்குத்தான்

நமது போராட்டம்
இறக்கப் போகிறவனோடு அல்ல
வாழப் போகிறேன் என்ற
வைராக்கியத்தோடு
நம் முன் தலை நிமிர்பவனோடுதான்
என்பதை
கூட்டத்தின் கவனத்திலிருந்து
அற்புதமாக மறைத்து விட்டீர்கள்.

அரசர் தன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை
உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.

நரகத்தை யமனும்
சிவலோகத்தை சிவனும்
வைகுண்டத்தை பெருமாளும்
இத்யாதி இத்யாதி உலகங்களை
அவரவர் கடவுள்களும் பார்த்துக் கொள்வார்கள்

நமது அரசர் நன்கு அறிவார்
பரத கண்டத்திற்கு மட்டுமே
தான் பொறுப்பென்பதை.

ஆவிகளின் ரகசிய திட்டங்கள்
எப்பொழுதும் அரசருக்கு
அனுசரனையானவைதான்

ஆவிகள் அரசருடனான
பொதுத் திட்டங்களோடுதான்
தங்களின்
தனித் திட்டங்களையும்
நிறைவேற்றிக் கொள்கின்றன.

மரணம் என்பது பகிரங்கமானது
மரணம் என்பது அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுவது
மரணம் என்பது தண்டனைகளின் உயர்வடிவம்
மரணம் என்பது சட்டங்களுக்கு உட்பட்டது
மரணம் என்பது ஒழுங்குமுறைகளை நிர்பந்திப்பது
மரணம் என்பது நிலவுவதை நிரந்தரப்படுத்துவது
மரணம் என்பது புவிமண்டலத்தின் சகல பிரதேசங்களையும் அரசரின்

கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது

புலவரே
இந்த ரகசியம் நம்மோடு இருக்கட்டும்.
நேற்று நாம் அவரவர் ஆதாருக்காக
அவரவரை மிரட்டினோம்
இன்று அடுத்தவர் ஆதாருக்காக
ஒவ்வொருவரையும் மிரட்டுகிறோம்
நாம் எப்பொழுதும்
உடமைகளை
கண்காணித்துக் கொண்டே இருக்கிறோம்.

இன்றைக்கு
அவை அவனுடையதாக இருக்கலாம்
ஆனால்
நாளை நிச்சயம்
அவை அவனுடையதாக இருக்கக்கூடாது

– 5 ஆகஸ்ட் 2017

Posted in கவிதைகள் | Leave a Comment »

ஹோலோஹாஸ்டிற்குள் எதிரொலித்தபடி ஒரு குரல்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 13, 2017

நான்கு பேர்
அனுப்பப்பட்டார்கள்
பயத்தில் ஒருவர்
தானாகவே
தற்கொலைக்குச் சமமான
முடிவெடுத்து
விலகல் கடிதம் கொடுத்துவிட்டார்
மீதமுள்ளவர்கள்
மனிதவள அதிகாரியின்
அறைக்கு அழைக்கப்பட்டோம்.

ஏன் எதற்கு
என்று யாரும் யாரிடமும்
கேட்டுக் கொள்ளவில்லை
தொங்கிய தலையுடன்
ஒருவர் பின் ஒருவராக
உள்ளே நுழைந்தோம்.

அதிகாரி பேசத் துவங்கினார்
கண்கள்
இருட்டிக் கொண்டு வந்தது
என் காதுகளில்
விழுந்தவை

“எங்களுக்கு நிறைய
வேலையாட்கள் தேவைப்படுகிறார்கள்
உங்களில் ஒவ்வொருவருக்கும்
எங்களிடம் வேலையிருக்கிறது
தச்சர்கள் தேவை
மின் பணியாளர்கள் தேவை
பிளம்பர்கள் தேவை
மேஸ்திரிகள் தேவை
சித்தாள்கள் தேவை
மருத்துவ பணியாளர்கள் தேவை
எதுவும் தெரியாதவர்களும்
பயப்படத் தேவையில்லை
கற்றுக் கொடுத்து
வேலை தருவோம்

நீங்கள் அனைவரும்
நீண்ட துாரம்
நடந்து களைத்து
வந்திருக்கிறீர்கள்

உங்கள் ஆடைகளை
களைந்துவிட்டு
அந்த அறையில் சென்று
நன்கு குளித்துவிட்டு வாருங்கள்
உங்களுக்கான
புதிய ஆடைகளும்
சுடச்சுட சிற்றுண்டிகளும்
வேலைகளும்
காத்துக் கொண்டிருக்கின்றன”

ஒலிபெருக்கியிலிருந்து
அந்த
ஹோலோஹாஸ்டிற்குள்
எதிரொலித்தபடி
ஒரு குரல்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

 

2 August 2017

பேஸ்புக்கில் பிரசுரித்தது

Posted in கவிதைகள் | Leave a Comment »