எனது நாட்குறிப்புகள்

Archive for மார்ச், 2014

எழுத்தும் ரச​னையும்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 22, 2014

உனக்கு பசிக்கும் ​பொழுது ​சொல்
என் பயணப் ​பையில் என்​னென்ன இருக்கிற​தென்று எனக்குத் ​தெரியவில்​லை
ஆனால் நாம் பசியாறுவதற்குத் ​ச​மைக்கச் சில பலசரக்குகள் கண்டிப்பாக இருக்க​வே ​செய்யும்

என்னால் அவற்​றை பல வண்ண மூடிக​ளைக் ​கொண்ட கண்ணாடி டப்பாக்களில்
எளிதில் அ​டையாளம் காணும் வ​கையில் ​பெயர் எழுதி ஒட்டி
பார்க்க அழகாக அடுக்கி ​வைத்து
சிம்னிகள் ​பொருத்தப்பட்ட நவீன சமயல​றையில்
நவநாகரீகமாக ச​மைத்து
பரிமாறுவதற்கான சகல ​மே​ஜை நாகரீகங்களுடனும் விதிகளுடனும்
உனக்கு பரிமாறிக் ​கொண்டிருக்க முடியாது

பசிக்கு உணவளிக்க மட்டு​மே சில ​பொருட்கள் இருக்கலாம்
ருசிக்கு உணவளிக்க கிட்டத்தட்ட என்னிடம் எதுவு​மே நீ எதிர்பார்க்க முடியாது

நீ எப்​பொழு​தேனும் உணர்ந்திருக்கிறாயா அவசர ச​மையலின் ருசி​யை
அவசர ச​மையலுக்கான ருசி அதிலிருந்து வருவதில்​லை
நான் நி​னைக்கி​றேன் எப்​பொழுது​மே ச​மையலின் ருசி
ச​மைக்கப்பட்ட உணவுகளி​லோ ச​மைக்கப்பட்ட மு​றைகளி​லோ இல்​லை

Posted in கவிதைகள் | Leave a Comment »

கவிதைக்கு தொன்மங்கள், படிமங்கள், குறியீடுகள் அவசியமா?

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 9, 2014

கவிதை குறித்து, நண்பர் ஒருவருடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை சாத்திய அறைக்குள் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்ல உரையாடலாக அது அமைந்திருந்தது. அந்த உரையாடலிலிருந்து பெற்றுக்கொண்ட கேள்விகளைத் தொடர்ந்து இப்பொழுதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அந்த உரையாடல் பல புதிய திறப்புகளை ஏற்படுத்தித் தந்தது. அந்த உரையாடலைத் தொடர்ந்து ஏற்கனவே படித்த புத்தகங்களை தேவை கருதி திரும்ப வாசிக்கும் பொழுது புத்தகங்களிலிருந்து மேலும் பல புதிய திறப்புகள் கிடைத்தன.

விவாதம் கவிதைகளில் தொன்மங்கள், படிமங்கள், குறியீடுகள் பயன்படுத்துவது பற்றி இருந்தது. அந்த நண்பர் இது வரை இரண்டு மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். தமிழ்த்துறை விரிவுரையாளராக ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றுகிறார். நான் கடந்த இருபது வருடங்களாக விட்டுவிட்டு சில காலங்களில் கவிதை எழுதுவதும், தொடர்ந்து இலக்கியம், இலக்கிய விமர்சனங்கள் படிப்பதுமாக இருப்பவன்.

என்னுடைய சமீப கவிதைகள் சிலவற்றில் ஹாலிவுட் படங்களை படிமங்களாக்கி நான் எழுத முயன்ற சில கவிதைகள் குறித்து பேச்சு வந்தது. அப்பொழுது அவர், “நான் இப்படங்களை பார்த்ததே இல்லை ஆகவே உங்கள் கவிதைகள் எனக்குப் புரியவில்லை, நானும் கூட டிவி விளம்பரங்கள் சிலவற்றை குறித்த விமர்சனக்கவிதைகள் எழுதியுள்ளேன். அவை அந்த விளம்பரங்களை பார்க்காதவர்களுக்கு எந்த விதத்திலும் ரசிக்கக்கூடியதாக இருக்கப்போவதில்லை. மேலும் இத்தகைய கவிதைகள் காலத்தால் அழிந்துவிடும் இத்தகைய படங்களையும், விளம்பரங்களையும் பயன்படுத்துவதால் அவற்றின் நிரந்தரத்தன்மை கேள்விக்குள்ளாகிறது” என்றார்.

நான் “போகட்டுமே என்ன இப்போ. எல்லா இலக்கியங்களும் காலம் கடந்து நிற்பதில்லை. காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக எந்த நல்ல இலக்கியமும் படைக்கப்படுவதில்லை. படைப்பாளன் தன் சமகால உலகம் குறித்து தன் சக மனிதர்களுடன் தனக்கு உவப்பான ஒரு மொழியில் ஏதோ பகிர்ந்துகொள்ள விரும்புகிறான். அவ்வளவுதான்” என்று கூறி, சமீபத்தில் படித்த மாயாகாவ்ஸ்கியின் ஒரு கவிதையைக் குறிப்பிட்டேன். அக்கவிதை

என் கவிதைகள்
போர்க்களத்தில்
ஒரு வீரனைப்போல்
சாகவேண்டும்

என்பதாக இருந்தது.

அவர், “எனக்கு தொன்மங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் உள்ள சில சிக்கல்கள் முக்கியமானவை எனப் படுகிறது. ஒரு கவிதையை புரிந்து கொண்டு ரசிப்பதற்கு, நான் வேறு ஏதேதோ பலவற்றை தேடிப் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதை முன்நிபந்தனை ஆக்குவது என்னை அக்கவிதையை தவிர்த்துவிட்டு விலகிச் செல்ல வைக்கும் எனத் தோன்றுகிறது” என்றார்.

நான் “நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை இருக்கிறது. ஆனால் நல்ல இலக்கியங்கள் வாசகனை மேலும் மேலும் உயர்த்திச் செல்லத்தானே வேண்டும். வாசகனை மேல்நோக்கி அழைக்காமல் அவனை அவன் நிற்கும் அதே இடத்தில் நிறுத்தி வைப்பது எவ்வாறு நல்ல இலக்கியமாகும்?” என்றேன்.

“எனக்கு குறிப்பாக இந்து மதம் சார்ந்த தொன்மங்களை பயன்படுத்துவதில் உடன்பாடில்லை.” என்றார்
எனக்கும் அந்த கூற்றில் ஓரளவு உடண்பாடுதான். இந்து கலாச்சாரம் பாரம்பரியம் என்பதை உலகின் பிற மதங்களைப் போல அணுக முடிவதில்லை. வேறு எல்லா மதங்களுக்குள்ளும் மனிதர்களிடையே வேற்றுமை இருந்தாலும், ஒரு மிகப்பெரிய உழைக்கும் மக்கள் பிரிவை நிரந்தரமாக தனக்கு வெளியே தீண்டப்படாதவர்களாக, தனது கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் எந்த உரிமைக்கும் சொந்தம் கொண்டாடலுக்கும் அனுமதி அற்றவர்களாக நிறுத்தி அடக்கி ஆள்வதாக/ஆண்டதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் இந்துமதம் சார்ந்த தொன்மங்களை எவ்வாறு கையாள்வது என்பது நம்காலத்தில் மிக முக்கியமான சிக்கல்தான்.

சமீபமாக பேஸ்புக்கில் வந்த சில பதிவுகளும் அதற்கு வந்த எதிர்வினைகளும் கூட இத்தகைய வழியிலேயே புரிந்து கொள்ள வேண்டி வருகிறது. எழுபதுகள், என்பதுகளில் நக்சல்பாரி இயக்கம் சார்ந்த சில பாடல்களை ஒரு தோழர் தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு பாடல்

“சர்க்காரு எல்லோருக்கும் பொதுவானதுன்னு
சில சண்டாளர் சொல்லுறாங்க மேடை மேல நின்னு” என்பதாக இருந்தது.

அதற்கு வந்த ஒரு பின்னூட்டம் “சண்டாளர்” என்ற வார்த்தை பிரயோகத்தை ஆட்சேபித்திருந்தது. ஆனால் அந்த பின்னூட்டக்காரருக்கு அப்பாடல் 70/80/90களில் பல கிராமங்களில், நகரங்களின் பல தெருக்களில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்காக அம்மக்களின் மத்தியில் பாடப்பட்டவை என்பதும் அது அவ்வார்த்தையை அதன் வரலாற்றுரீதியான அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்பதும் தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ தெரியவில்லை. ஆனாலும் அவர் கூற்று நம் காலத்தின் கூற்று. இன்றைக்கு அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவதில் நமக்கு நிறைய வரலாற்றுப் புரிதல்களும், தெளிவும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

அதுபோலவே கடந்த காலத்தில் இந்துமதம் சார்ந்த தொன்மங்களை மிகவிரிவாக மிக ஆழமாக சமகால சமூகக் கொடுமைகளை அவலங்களை ஆக்ரோசத்துடன் வெளிப்படுத்தும் விதத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், உழைக்கும் மக்களுக்கு தத்துவார்த்த அரசியல் புரிதல்களை ஏற்படுத்தும் விதத்தில் இடதுசாரி கவிஞர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

என்பதுகளில் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பு என்று சிலர் கோரிக்கை வைத்தனர். தமிழீழ அமைப்புகள் இந்திய அரசுடன் தந்திரோபாயமாக நெருங்கிய உறவினை கொண்டிருந்தனர். வல்லாதிக்க குணம் கொண்ட இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த பூதகி கண்ணனுக்கு பால் கொடுக்கும் படிமத்தை பயன்படுத்தி கவிஞர் இன்குலாப் இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்

கம்சனின் பிடியில்
ஈழக் குழந்தை
கதறி அழுகிறது!
உண்மைதான்.
அதற்காகப்
பூதகியைப் போய்ப்
பாலூட்டச் சொல்லாதீர்கள்!

இன்னும் கவிதைகளில் தொன்மங்கள் பயன்படுத்துவதன் சிறப்பு குறித்தி மாசேதுங் கூட பேசியிருக்கிறார் என ஒரு தோழர் ஒரு கட்டுரைக்கான லிங்க் கொடுத்தார், ஆனால் இன்னும் அதை படிக்கவில்லை.

இம்மாத “இனிய உதயம்” இதழில் அக்னிபுத்திரன் (எ) கனல்மைந்தன் தன் நேர்காணலில் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். “படிமம், குறியீடு என்பவை முற்போக்குக் கவிஞர்களின் கைவாள், கவசம் போன்றவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தும் போது கவிதை உச்சத்தை எட்டும்”.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

வாசிக்காமலே ஒரு விமர்சனம்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 4, 2014

இதே தலைப்பில் வெள்ளையானை வெளிவந்தபொழுது தோழர்களுடன் நடந்த ஒரு உரையாடலின் பகுதியாக நான் வெள்ளையானை நாவலை புரிந்து கொள்வதில் ஒன்றும் சிக்கல் இல்லை என்ற கண்ணோட்டத்தில் எழுதிய கட்டுரையை ஜெயமோகன் மறுத்திருந்தார்.

அதாவது அதன் வழியாக அவர் எனக்கு கூற விரும்பியது, படிக்காமல் எந்த நூலையும் விமர்சிக்கக்கூடாது என்பதாக நான் புரிந்து கொண்டேன். ஓர் அர்த்தத்தில் அது சரிதான் என்றாலும், அந்தக் கட்டுரையை படித்த எந்த ஒருவரும் அப்படி அதனை விமரிசித்திருக்க முடியாது.

காரணம். அதன் ஆரம்பத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். வலதுசாரி சிந்தனையுடையவரான ஜெயமோகன் எப்படி தலித் ஆதரவு நிலை எடுத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார், இதை எப்படி புரிந்து கொள்வது என தோழர்கள் வைத்த சந்தேகத்திற்கு, நம் சமகால ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டால் தலித் ஆதரவு நிலைகுறித்த வலதுசாரிகளின் போக்கை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என்பதற்காகத்தான் அப்பதிவை எழுதினேன்.

அதில் அதற்கு மேல் கதையின் விபரங்களுக்குள்ளோ, கதை குறித்த விமர்சனங்களுக்குள்ளோ நான் போகவில்லை.

ஆனால் அதே ஜெயமோகன், இப்பொழுது வெண்டி டோனிகரின் நூல் குறித்து,”வெண்டி டானிகரும் இந்தியாவும்” நான் செய்ததாக அவர் குறிப்பிடும் அதே தவறை செய்கிறார். ராஜா குசுவிடலாம் போலிருக்கிறது.

Posted in ​ஜெய​மோகன் | Leave a Comment »