எனது நாட்குறிப்புகள்

கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 24, 2022

இத்தாலியைச் சேர்ந்த மார்செல்லோ முஸ்ட்டோ என்பவர் எழுதிய “The Last Marx (1881-1883): An Intellectual Biography” என்கிற நுாலை தமிழில் எஸ்.வீ.ஆர் “கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)” என்கிற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இத்தாலி மொழியில் 2016ல் வெளியிடப்பட்ட இந்நுால் தமிழில் 2018லேயே வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் வெளிவராத நிலையிலும். உலக மொழிகளில் மிகச் சில மொழிகளில் மட்டுமே (சீன, ஜப்பானிய, ஜெர்மன், கொரிய, போர்ச்சுகீசிய) வந்திருந்த அதே நேரத்தில் தமிழிலும் வெளி வந்திருப்பது, உண்மையிலேயே சிறப்புக்குரியது.

இந்நுால் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் ரஷ்ய வழிப்பட்ட மார்க்ஸ் குறித்த புரிதல்களின் போதாமையை வெளிப்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டிருப்பதாகப் புரிகிறது. அவருடைய வெளியிடப்படாத பல எழுத்துக்கள், குறிப்புகள், இறுதிக்கால வாழ்க்கை ஆகியவற்றை முன்வைத்து மார்க்ஸ் குறித்த புதிய பார்வைகளை உருவாக்க நினைக்கிறது.

ஆங்கிலத்தில் “Last Marx” என்று குறிப்பிடுவதற்கு பின்னுள்ள வரலாற்று பின்புலத்தை தன்னுடைய மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில் குறிப்பிடும் எஸ்வீஆர், தான் ஏன் ஆங்கிலத் தலைப்பிற்கு மாறாக வேறு ஒரு தலைப்பை பயன்படுத்தி இருக்கிறேன் என தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடவில்லை.

நுாலை படித்ததில் இருந்து புரிந்து கொண்டதன் படி, இந்நுால் இரண்டு முக்கிய விசயங்களை குறிப்பிடுகிறது. ஆனால் தான் சொல்ல வரும் கருத்தை நேரடியாக குறிப்பிடாமல் குறிப்பால் உணர்த்த முனைகிறதோ என்கிற எண்ணம் ஏற்பட்டது.

முதல் விசயம், இது காறும் மார்க்சின் பிரதான கருத்தாக கருதப்படும். உலகத்தில் உள்ள பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளும் முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு வந்த பிறகே சோசலிசத்தை நோக்கி முன்னேற முடியும். சோசலிசத்திற்கான முன்நிபந்தனை முதலாளித்துவப் புரட்சி. இதற்கு அடிப்படையாக மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் உட்பட பல எழுத்துக்களும் ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன, அவற்றில் பெரிய அளவில் உண்மையும் உள்ளது என இந்நுால் குறிப்பிடுகிறது. இந்நுாலில் அவருடைய பிற்காலத்திய பல கடிதங்கள், குறிப்புகள், வெளியிடப்படாத பல முன் வரைவுகள் ஆகியவற்றை முன்வைத்து இக்கருத்து மறுத்தெழுதப்படுகிறது. சோசலிசத்திற்கான வழி இதுான் என்பதோ, சோசலிசம் இப்படித்தான் இருக்கும் என்றோ மார்க்ஸ் எங்கும் குறிப்பிடவில்லை. அவருடைய முந்தைய ஆய்வுகள் பலவும் மேற்கு ஐரோப்பாவை முன்வைத்தே செய்யப்பட்டவை, அவை அனைத்துக் கண்டங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை அவருடைய பிந்தைய புரிதலாக இருந்தது என்கிற கருத்தை இந்நுால் ஏற்படுத்துகிறது. இந்த விவாதம் பெரும்பாலும் ரசியாவின் ஓபிசீனாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது விசயம், மார்க்ஸ் மேற்கு ஐரோப்பாவிற்குமே முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்று மட்டுமே கூறிவந்ததாகக் கருதப்பட்டு வந்தது. மாற்றாக அவர் தன் இறுதிக் காலத்தில் தன் மருமகனுடனும், பிரான்ஸ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி கூட்டமைப்பைச் சேர்ந்த ஜுல் குஸ்ட் என்பவருடனும் இணைந்து எழுதிய அரசியல் செயல்திட்டத்தை விரிவாக இந்நுால் முன்வைக்கிறது. முதலாளித்துவத்திற்குள்ளேயே தேர்தலில் பங்கு பெறுவது, முதலாளித்துவ கட்சிகளுக்கு சமமாக தொழிலாளர் கட்சியை உருவாக்குவது, முலாளித்துவ சமூகத்திற்குள் தொழிலாளரின் பேரம் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது என்கிற காரியசாத்தியமான வழிமுறைகளை நோக்கி அவர் முன்னகர்ந்தான ஒரு கருத்தும் கிடைக்கிறது.

நவீன மொழிநடையிலும், நவீன உரையாடும் பாணியிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்நுால் அவருடைய கடைசி கால 1881லிருந்து 1883 வரையான அன்றாட வாழ்வையும், வாசிப்பையும், எழுத்துக்களையும், சிந்தனைப் போக்கையும் படம் பிடித்துக் காட்ட நினைக்கிறது. அவருடைய முந்தைய இளம் வயது வேகம் குறைந்து எதார்த்தத்தை முதியவருக்கேயான முதிர்ச்சியோடும். தன் பலங்களையும், பலஹீனங்களையும் நன்கு உணர்ந்தவராகவும், அவருக்கே உரித்தான ஆய்வு முறையியல்களையும், அணுகுமுறைகளையும் கைவிடாதவராகவும், மேலும் மேலும் அதனை வளர்த்து மேம்படுத்தி உறுதியாக பின்பற்றியவராகவும் இந்நுாலில் குறிப்பிடப்படுகிறார்.

MEGA2 என்று சொல்லப்படுகிற மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை அனைத்தையும் (இது காறும் வெளியிடப்படாத அவருடைய கடிதங்கள், குறிப்புகள், முன்வரைவுகள் அனைத்தும் அடங்கியதாக) தொகுக்கும் பணி இத்தகைய நுாலை எழுதுவதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

Posted in விமர்சனம் | Leave a Comment »

சர்வதேச தொழிலாளர் ஆய்வு அமைப்பின் தொழிலாளர் கல்விக்கான பாடத்திட்டம்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 1, 2020

LRD1பேஸ்புக்கில் உள்ள “Marxist Internet Archive” என்ற குழுவில், சமீபத்தில் ஒரு பழைய நுாலை பகிர்ந்து கொண்டார்கள். அது “A Guide to the Study of Marx – An Introductory Course of Classes and Study Circles” என்கிற நுாலாகும். இந்நுாலை எழுதியவர் சர்வதேச மார்க்சிய அறிவுச்சூழலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் காலம் தொட்டு லெனின் காலம் தாண்டி 1943கள் வரை மிக பிரபலமாக இருந்த Max Beer (1864-1943) என்பவர்.  ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர் மார்க்சிய இதழியலாளராக, பொருளாதார அறிஞராக, வரலாற்றாளராக இருந்துள்ளார்.

காரல் காவுத்ஸ்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க ரஷ்ய புரட்சிக்கு வெகு முன்பு லண்டன் வந்திருந்த லெனினுக்கு இஸ்கரா பத்திரிகையை பதிப்பிப்பதற்கான அச்சகத்தை Clerkenwell என்னும் இடத்தில் உருவாக்க உதவியுள்ளாராம். ரஷ்யப் புரட்சிக்கு பின்னர், மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆய்வுக் கழகம் அமைக்கப்பட்டு அவர்களின் தொகுப்பு நுால்கள் தயாரிப்பு வேலைகளை சோவியத் யூனியன் துவங்கிய பொழுது, சோவியத் யூனியன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அங்கு சென்று ரியாஸ்னோவ், கிராஸ்மென் போன்றவர்களுடன் இணைந்து 1928 வரை மார்க்ஸ் எங்கெல்ஸ் பதிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களுடனும் அவர்களின் சமகாலத்தவருடனும் மிக நெருக்கமான அனுபவங்களை கொண்டிருந்த அவரின் பங்களிப்புகள் அந்த தொகுப்பு வேலைகளில் மிகப் பெரிய பங்களிப்பாக இருந்துள்ளதாம்.

நெருக்கடி பற்றிய கொள்கை, ஏகாதிபத்தியம் ஆகியவை பற்றி மார்க்சிய அறிவுப் புலத்தில் மிக துவக்கத்திலேயே தீவிரமாக சிந்தித்தவர்கள், எழுதியவர்களில் இவரும் ஒருவர் என குறிப்பிடப்படுகிறார். Day & Gaido என்னும் இருவரால் பதிப்பிக்கப்பட்ட “ஏகாதிபத்தியத்தை கண்டுபிடித்தல்” நுாலில் இவரின் எழுத்துக்களும் அன்றே இடம் பெற்று இருந்திருக்கிறது.

“A Guide to the Study of Marx – An Introductory Course of Classes and Study Circles” என்னும் இந்நுால்  தொழிலாளர் கல்விக் குழுக்களுக்கான ஒரு பாடத்திட்டமாக மிகச் சுருக்கமாக அதன் வரலாற்றையும், அதன் உள்ளடக்கங்களையும் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் வரிசையாக வெளியிடப்பட்ட வரிசையில் 14வது நுாலாகும்.

இவ்வரிசை நுால்களின் பதினான்காவது நுாலான இந்நுாலின் ஆசிரியர் தான் Max Beer, இது 32 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய பிரசுரம். இதன் உள்ளடக்கம் வருமாறு

  1. மார்க்சின் வாழ்க்கைச் சுருக்கம்
  2. மாரக்சின் பொதுவான பார்வைகள்
  3. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
  4. அரசியல் பொருளாதாரம்

உள்ளடக்கப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் “வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும்”  என்ற தலைப்பில் சிறு குறிப்பு ஒன்றை மேக்ஸ் பீர் வழங்கியுள்ளார். அந்த குறிப்பை படிக்கவே சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த குறிப்பு புதியவர்கள் மார்க்சின் மூலதனம் நுாலில் எந்த பகுதிகளை முதலில் படித்தால் மூலதனம் நுால் குறித்த நல்லதொரு புரிதலைப் பெறலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

“மார்க்சின் பொதுவான பார்வைகள்” என்ற அத்தியாயத்தின் துணைத் தலைப்புகளே, மார்க்ஸ் காலத்து மார்க்சியர்களின் தனித்த பார்வைகளை வெளிப்படுத்துவதாகவும், புதிய கோணங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதாகவும் உள்ளன என்ற எண்ணத்தை உருவாக்கியது.

  1. வர்க்க சமூகம்
  2. வர்க்க சமூகத்தின் மூன்று கட்டங்கள்
  3. பொருளாதாரம், அறம் மற்றும் சட்ட கருத்துக்களின் சார்புத்தன்மை
  4. பரிணாமம் குறித்த மார்க்சின் கருத்தாக்கம்

இதைப் போலவே பிற அத்தியாயங்களின் தலைப்புகளும், அதற்குக் கீழே மிகச் சுருக்கமாக அவை விளக்கப்பட்டுள்ள பாங்கும் நம்மைக் கவருவதாக உள்ளன.

ஒரு 32பக்க நுாலில் இத்தனை விரிவான தலைப்புகளை மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்க முடியுமா என்கிற ஆச்சரியத்தை எழுப்புகின்றன. அதே நேரத்தில் வகுப்பு எடுப்பவர்களுக்கான எளியமுறையில சாரமான விசயங்களை ஞாபகத்திற்காக குறிப்பிடும் கையேடாக அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நுாலின் மூன்றாம் பக்கத்திலேயே இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வெளியிடப்பட்ட வரிசை நுால்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் தலைப்புகளும் நம்மை ஈர்க்கக்கூடியவைகளாகவும், படிக்கத் துாண்டுபவைகளாகவும் உள்ளன. அவற்றை எழுதியவர்கள் வெவ்வேறு ஆசிரியர்கள்.

இந்த வரிசையை வெளியிட்டிருப்பவர்கள் “The Labour Research Department” என்றும் அதன் கீழே லண்டனின் ஒரு முகவரியும் அதன் முன் அட்டையின் கீழ்ப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

யார் இந்த “The Labour Research Department”? இவர்கள் வெளியிட்ட இவ்வரிசையின் பிற நுால்களும் கிடைக்குமா என கூகுளில் தேடிய பொழுது கிடைத்த விசயங்கள்.

“The Labour Research Department” இது இங்கிலாந்தைச் சேர்ந்த  “பேபியன் சமூகம்” என்னும் அமைப்பின் ஒரு துணை அமைப்பாக இருந்துள்ளது. இந்த “Fabian Society” என்கிற அமைப்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சோசலிச அமைப்பு. இது புரட்சிகரமான வழியில் அல்லாமல் படிப்படியான சீர்திருத்தங்களின் ஊடாக ஒரு ஜனநாயக சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பு. இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் வரை இந்த அமைப்பாலும், இதன் சிந்தனைகளாலும் கவரப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்/இருந்திருக்கலாம் என அறிய வருகிறோம்.

இந்த “Fabian Society” தான் 1895ல் இங்கிலாந்தில் London School of Economics and Political Science என்பதை தோற்றுவித்தது. இந்த அமைப்பு பற்றிய மிக விரிவான விக்கிபீடியா பக்கம் ஆங்கிலத்தில் உள்ளது.

இந்த பேபியன் சோசலிசத்திற்கும் மார்க்சிய சோசலிசத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து ஓரளவு அறிந்து கொள்ள இந்த comparison-between-fabian-socialism-and-marxian-socialism என்ற ஆங்கிலக் கட்டுரை உதவலாம்.

“The Labour Research Department” தொழிற்சாலைகள் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுக்காக 1912 ல் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது முதலில் “பேபியன் ஆய்வுத் துறை” என்ற பெயரில் Beatrice, Sidney Webb, George Bernard Shaw, Robin Page Arnot போன்ற பிரபலங்களின் தலைமையில் துவங்கப்பட்டது. “Monthly Circular” என்ற அதன் மாதாந்திர சுற்றறிக்கை இதழ் 1917ல் உருவாக்கப்பட்டது. 1918ல் இந்த அமைப்பானது, தனது உறுப்பினர் எண்ணிக்கை பன்மடங்கானதனை ஒட்டி விரிவாக்கம் செய்யப்பட்டு, “The Labour Research Department” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அன்றைய மிக பிரபலங்களான Barbara Drake, Joseph Rowntree, Leonard Woolf, Archibald Fenner Brockway, Emile Burns, Harry Politt, Noreen Branson போன்றவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இந்த “The Labour Research Department” என்பது, அன்றைக்கு இங்கிலாந்தில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களின் மத்தியிலும் பிரச்சாரங்களையும், போராட்டங்களுக்குத் தேவையான அடிப்படை ஆய்வுகளையும் செய்து அறிக்கைகள் தரும் ஒரு மிகப் பெரிய அமைப்பாக இருந்துள்ளது. தொழிற்சங்க சம்மேளனத்தின் 99 சதவீத தொழிற்சங்கங்கள் தன்னை இதனுடன் இணைத்துக் கொண்டு இருந்திருக்கிறது.

இந்த அமைப்பு பெண்கள், தொழிற் சங்கங்கள், போராட்டங்கள், ஏகாதிபத்தியம், பாசிசத்தின் எழுச்சி, உலக யுத்தத்தின் வெடிப்பு, குடியிருப்பு, இனவாதம், கல்வி போன்ற பல விசயங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்தன. இவை அந்த அமைப்பு நடத்திய இதழ்களான Labour Research, Fact ServiceBargaining Report போன்றவற்றில் வெளிவந்தன. இந்த அமைப்பு பாசிசம் குறித்த மிக முக்கியமான விமர்சகனாக இருந்துள்ளது. இந்த அமைப்பு “Who Backs Mosley?” போன்ற பல் முக்கிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளது.

இந்த அமைப்பு குறித்தும், இதன்  தொகுப்புகள் குறித்தும் மிக விரிவான 538 பக்க பிடிஎப் ஒன்று கீழ்க்கண்ட பக்கத்தில் தற்பொழுது (01/08/2020) படிக்கக் கிடைக்கிறது.

https://student.londonmet.ac.uk/media/london-metropolitan-university/london-met-documents/professional-service-departments/library-services/tuc-library-collections/archives/LRD-institutional-papers.pdf

இந்த அமைப்புதான் தொழிலாளர்களுக்கு அவர்களின் வரலாற்றையும், அவர்களின் தத்துவத்தையும் கற்றுக் கொடுப்பதற்காக, கல்விக் குழுக்களுக்கான விரிவான பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளது.  அந்த வரிசை நுால்களே இவை. மேலே குறிப்பிட்ட கோப்பில் கண்டுள்ளபடி இவ்வரிசையானது 1926 முதல் 1928க்குள் வெளிவந்திருக்கலாம். இதன் பிற வரிசை நுால்களை எழுதியவர்கள் அன்றைக்கு மிகப் பிரபலமாக இருந்துள்ள பல ஆங்கில சோசலிஸ்ட் அறிஞர்களான G.D.H. Cole, M.H. Dobb, Emile Burns, C.P. Dutt, R. Page Arnot, R.W. Postgate, Alderman John Scurr, Sydney Herbert, M.I. Cole, J.F. Horrabin, Hugh Dalton, Maurice Dobb போன்றவர்கள்.

 1 The British Labour Movement George Douglas Cole London: Labour Research Department (35pp) (1925)
 2 The Development of Modern Capitalism Maurice H Dobb London: Labour Research Department (30pp) (c1925)
 3 Finance Emile Burns London: Labour Research Department (24pp) (c1925)
 4 English Economic History George Douglas Cole London: Labour Research Department (31pp) (c1925)
 5 Biology C P Dutt London: Labour Research Department (32pp) (c1925)
 5 Biology: Second Edition C P Dutt London: Labour Research Department (32pp) (n.d.)
 6 The Russian Revolution Robin Page Arnot London: Labour Research Department (35pp) (c1925)
 7 Chartism and the Grand National R W Postgate (23pp) (c1925)
 8 Unemployment George Douglas Cole London: Labour Research Department (32pp) (c1925)
 9 An Outline of Local Government John Scurr London: Labour Research Department (32pp) (c1925)
 10 British Trade Unionism George Douglas Cole London: Labour Research Department (31pp) (c1925)
 11 The French Revolution Sydney Herbert London: Labour Research Department (23pp) (c1925)
 12 AN Introduction to World History Margaret Cole London: Labour Research Department (44pp) (c1925)
 13 Economic Geography J F Horrabin London: Labour Research Department (24pp) (c1925)
 14 A Guide to the Study of Marx Max Beer London: Labour Research Department (32pp) (c1925)
16 Money and Prices Maurice Dobb London: Labour Research Department (31pp) (c1925)
17 Scientific Method James Johnstone London: Labour Research Department (31pp) (c1925)
 18 The Development of Machines in Production A Serner London: Labour Research Department (32pp) (1927)
 19 Imperialism Emile Burns London: Labour Research Department (32pp) (1927)
 20 Modern Capitalism: Its Origins and Growth Maurice Dobb London: Labour Research Department (32pp) (1928)

மேலும் தொடர்ந்த தேடலில், கீழ்க்கண்ட இணைய தொடுப்பில் இவ்வரிசையின் மற்ற மூன்று நுால்கள் கிடைத்தன.

https://palmm.digital.flvc.org/islandora/search/the%20labour%20research%20department?type=edismax&collection=palmm%3Aroot

  1. Chartism and the Trade Union
  2. English Economic History
  3. Finance

LRD2LRD3LRD4

 

Posted in கட்டு​ரை | Leave a Comment »

உடோபியா அல்லது இன்பமான உலகம் என்றால் என்ன?

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 28, 2020

ThomasMoreசர் தாமஸ் மூரின் உடோபியா

1477 முதல் 1535 வரை வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் மூர் என்பவர் எழுதிய நுாலின் பெயர் “உடோபியா”. இதுவே இத்தலைப்பில் எழுதப்பட்ட முதல் நுால். இது கிரேக்க சொல்லான ou-topos என்பதன் ஆங்கிலச் சொல். இதற்கு அர்த்தம் “எங்குமே இல்லாத” அல்லது “காணமுடியாத இடம்” என்பனவாம். இதே போன்ற உச்சரிப்பைக் கொண்ட மற்றொரு கிரேக்கச் சொல் eu-topos, என்பதன் அர்த்தம் “நல்ல இடம்”.

இந்த நுாலில் சர் தாமஸ் மூர், ஒரு தீவில் இருக்கக்கூடிய தனக்கென பிரத்யேகமான சமூக ஒழுங்குகளை, வாழ்க்கைமுறையை, பண்பாட்டை கடைபிடித்து ஒழுகும் ஒரு சமூகத்தை படைத்துக் காட்டியுள்ளார்.

Utopian

பதினாறாம் நுாற்றாண்டின் முக்கிய மூன்று உடோபியன் எழுத்துக்களின் தொகுப்பாக வெளிவந்த ஆக்ஸ்போர்ட் கிளாசிக்கல் பதிப்பின் முன் அட்டை

இந்நுால் இரண்டு பகுதிகளாக உள்ளது. இதன் இரண்டாம் பகுதி 1515ல் எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி அதற்கு அடுத்த வருடம் எழுதப்பட்டுள்ளது. ஆட்வெர்ப் என்னும் இடத்திற்கு மூர் சென்ற பொழுது அங்கு அவர் ஆட்வெர்பின் குடிமகனான பீட்டர் கில்சை சந்திக்கிறார். பீட்டர் கில்ஸ் அவரை ரபேல் கித்தலோடே என்பவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய பெயருக்கு கிரேக்க மொழியில் “முட்டாள்தனமாக பேசக்கூடியவர்” என்று அர்த்தம். அவருடனான உரையாடலில் அவர் ஒரு கடலோடி என்பதைத் தாண்டி பல விசயங்களைத் தெரிந்தவர் என்பது தெரியவருகிறது. மூர் அவருடனான உரையாடல்களில் மூலம் அவர் பழுத்த ஞானமுடையவர் என்பதையும், நம்பமுடியாத அனுபவங்களை பெற்றவர் என்பதையும் அறிகிறார். ரபேல் கித்தலோடே தனது நண்பரான அமெரிகோ வெஸ்பெரிக்கியுடன் அமெரிக்காவிற்கு ஒரு கடற்பயணம் செய்கின்ற பொழுது, சமுத்திரத்தின் மேற்கு அரைக்கோளத்தில் எங்கோ ஓரிடத்தில் திறண்மிக்க நிலமான உடோபியாவைக் கண்டிருக்கிறார்.

உடோபியா நுாலின் முதல் பகுதி அந்த முன்னுதாரணமில்லாத தொன்மத் தீவைப் பற்றி விவரிக்கவில்லை. அவர் ஏழாம் ஹென்றியின் காலத்தில் இங்கிலாந்திற்குச் செல்கிறார். அங்கு அவர் கார்டினலாக உள்ள மோர்டன் என்பவரைச் சந்தித்து சில சீர்திருத்தங்களை பரிந்துரைக்கிறார். அச்சீர்திருத்தங்கள் இங்கிலாந்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார். அவற்றுள் சில, திருடர்களுக்கு வழங்கப்படும் மரணதண்டனையை நீக்குதல், சூதாட்டத்தை தடை செய்தல், கம்பளிக்காக செம்மறி ஆடுகள் வளர்ப்பதை முழுமையாக சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்தல், கொலைகார வீரர்களை பயன்படுத்தலை நிறுத்துதல், சரக்குகளின் விலையை குறைத்தல், பணக்காரர்கள் மற்றும் பெரும் நிலவுடைமையாளர்களுக்கு பொது நிலங்களை பகிர்ந்து அளிப்பதை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவை. இவருடைய இந்த ஆலோசனைகளை கார்டினல் மோர்டன் அமைதியாக பதிலேதும் கூறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடன் அமர்ந்து இந்த உரையை கேட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர் இது இங்கிலாந்தின் வரலாற்றுக்கும் வழக்கத்திற்கும் மாறானது, இத்தகைய சீர்திருத்தங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார்.

இந்த நுாலின் முதல் பகுதியில், 16ம் நுாற்றாண்டு இங்கிலாந்தில் நிலவிய மோசமான சமூக பொருளாதார அம்சங்கள் பலவற்றை மூர் குறிப்பிடுகிறார். இதற்கெல்லாம் அப்பால் மூர் மற்றொன்றையும் குறிப்பிடுகிறார். எந்த ஒரு சமூகத்தின் தீமைகளும், அதற்குள் இருப்பவர்களை விட அதற்கு வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்களுக்குத்தான் சட்டென பிடிபடும். முதல் பகுதியில் வரும் வழக்கறிஞரின் நீண்ட மறுப்புரைகளில் குறுக்கிட்டு கார்டினல் மோர்டன், சுருக்கமாக கூறுகிறார். பதினாறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல மக்களும் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த முதல் பகுதி, பின் வரும் பகுதியில் மூர் உருவாக்கி காட்டும் உடோபியன் சமூகத்திற்கான நியாயப்பாட்டை நிறுவுவதாக உள்ளன.

island utopia

நுாலில் இடம்பெற்றிருந்த உடோபிய தீவின் வரைபடம்

இரண்டாம் பகுதியில் ரபேல் கித்தலோடே தனது பயணங்களின் போது தான் கண்ட, புராணீகமான அந்த உடோபியன் தீவின் பண்பாட்டை விரிவாக விளக்குகிறார். அந்த உடோபிய தீவு மன்னராட்சி பிறை நிலா வடிவில் அமைந்துள்ளது. இரு நுாறு மைல் விட்டம் கொண்டது. பிற பகுதிகளிலிருந்து அது மனிதர்களால் கட்டப்பட்ட கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது. அது அந்த ராஜாங்கத்தின் அரசரான உடோபசால், எதிரிகளாலோ, மனித குலங்களை வேட்டையாடும் அண்டை அயலாராலோ தாக்கப்படாமல் இருப்பதற்காகவும், தங்களை காத்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய உடோபியா பரிசோதனை முயற்சிகள் வேறு எவராலும் முறியடிக்கப்படாமல் இருப்பதற்காகவும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தீவு 54 மாகானங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிற்கும் ஒரு நகரம் உள்ளது. ஒவ்வொரு நகரமும் அதன் அண்டை நகரிலிருந்து ஒரு நாள் நடைபயண துாரத்தில் உள்ளன. அதன் தலைநகரத்தின் பெயர் அமேரூட். அந்நகரத்தின் தலைவனே, அந்தத் தீவின் ஆட்சியாளன்.

அதன் அரசாங்கம் ஒப்பீட்டளவில் எளிமையானது. வயோதீகர்களால் பாரம்பரிய முறைப்படி ஆளப்படுவது. முப்பது குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு அலகிற்கும் ஒருவர் வாக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இது போன்ற பத்து குழுக்கள் சேர்ந்த ஒவ்வொரு அமைப்பும் அந்தத் தீவின் கவுன்சிலிற்கான ஒரு உறுப்பினரை தேர்வு செய்கிறது. இந்த கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தீவின் இளவரசர் ஆவார். ஒரு வேளை அவர் கொடுங்கோலாட்சி செய்து ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்படாவிட்டால், அவர் தன் வாழ்நாள் முழுதும் அரசராக இருப்பார்.. இந்த கவுன்சில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூடி முக்கிய விசயங்களை விவாதிக்கும். எந்த ஒரு முடிவும் அதே நாளில் எடுக்கப்படுவதில்லை. பிரச்சினைகள் அக்குவேறாக ஆணிவேறாக எந்த அவசரமும் இன்றி விவாதிக்கப்படும்.

theprinceofUtopia

தனது குறியீடான கதிர் கட்டுடன் செல்லும் மன்னர்

தனது லட்சிய அரசில் மூர் அனைத்து மனிதர்களும் உழைக்க்கூடியவர்களாக படைத்துள்ளார். அசாதாரணமான திறமைகளைக் கொண்டவர்களும், பயிற்சிக்காகவும், கல்விக்காகவும் தேர்வு செய்யப்பட்டவர்களையும் தவிர, எல்லா மனிதர்களும் வியாபாரத்திலோ, கைவினைத் தொழில்களிலோ ஈடுபட்டுள்ளார்கள். வேலைநாள் என்பது 6 மணி நேரம் ஆகும். வேலை நேரம், காலை மதியம் என ஒவ்வொரு நாளும் சம அளவில் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் இரண்டு வருடங்களை கிராமப்புறங்களில் விவசாயத்தில் அங்கேயே தங்கி ஈடுபட வேண்டும். அனைவரும் வேலை செய்வார்கள், அனைவருக்கும் தேவையான உணவும், பிற பொருட்களும் அங்கு இருக்கும். அனைத்து சரக்குகளும் சமூகத்திற்கு உடைமையானதாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சமூகத்தின் நன்மையையும், சமூகத்தின் வளத்தையும் காத்து நிற்பார்கள். மக்கள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் எளிமையாக அமைத்துக் கொண்டிருப்பார்கள். யார் ஒருவரும் தங்களின் சக மனிதர்களைவிட அதிகமாக பெற வேண்டும் என்ற விருப்பங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். உடோபியாவின் அரசன் கதிர் கட்டு ஒன்றை தங்கள் வளத்தின் குறியீடாக எப்பொழுதும் தாங்கிச் செல்வான். ஒவ்வொரு மனிதனும் இயற்கையோடு இயைந்த உடைகளான தோல், கம்பளி போன்றவற்றால் ஆன ஆடைகளையே அணிவார்கள். நகைகள் குழந்தைகள் விளையாடுவதற்கு கொடுக்கப்படும். ஆடம்பரமான உடைகளும், நகைகளும் அணிவது குழந்தைத்தனமாகக் கருதப்படும். தங்கம் வெள்ளி முதலானவற்றை மக்கள் வெறுப்பார்கள், அவை கழிவறை பீங்கான்கள் செய்யவும், அடிமைகளைக் கட்டும் சங்கிலிகள் செய்யவும், குற்றதண்டனைகளுக்கான குறியீடுகள் செய்யவும் பயன்படுத்தப்படும்.

வன்முறை, இரத்தவெறி, சூது ஆகியவை உடோபியாவில் தடைசெய்யப்பட்டுள்ளன. கால்நடைகளை மக்கள் வெட்டமாட்டார்கள் அடிமைகள்தான்(!) வெட்டுவார்கள். மக்கள் பொழுதுபோக்க தோட்டங்களை சரிசெய்தல், வீடுகளை அலங்கரித்தல், மனிதத்தன்மையை மேம்படுத்தும் சொற்பொழிவுகள், உரைகளை கேட்டல், இசையை ரசித்தல், ஒவ்வொருவருக்கும் பயனுள்ள முறையில் கலந்து செயல்படுதல் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு கால்பகுதியிலும் அமைந்திருக்கும் விலாசமான, காற்றோட்டமான, மருத்துவமனைகளில் நோயாளர்கள் தங்கி சுகமடைவார்கள். சுகப்படுத்த முடியாத வியாதிகளால் துன்பப்படுபவர்கள் பாதிரியார்கள், அரசாங்கத்தார், மற்றும் அவர்களுடைய உறவினர்களின் ஆலோசனையுடனும் அனுமதியுடனும் வலியற்ற முறையில் மரணமடைய உதவுவார்கள். அனைவரும் பொது உணவுக் கூடங்களில் உணவு உண்பார்கள், அவ்வுணவானது அடிமைகளால் அக்குடும்ப தலைவிகளின் தலைமையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தவிர, இளையவர்களும் முதியவர்களும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்பார்கள். அவர்கள் உணவு நேரத்தின் போது தங்களுக்கிடையே மேலோட்டமான, சுவையான விசயங்கள் குறித்து பேசிக் கொள்வார்கள்.

communalLiving

உடோபியாவின் சமூக உணவுக் கூடம் (நுாலின் பக்கங்களில் இடம்பெற்ற ஓவியம்)

குற்றவாளிகள் உடோபிய சமூகத்தில் கொலை செய்யப்படமாட்டார்கள், அவர்கள் அடிமைகளாக்கப்படுவார்கள். களவொழுக்கம் தண்டனைக்குரிய குற்றம், அவர்கள் அடிமைகளால் தண்டிக்கப்படுவார்கள். திருமணம் செய்து கொள்வதற்காக தங்கள் இணையை தேர்வு செய்து கொள்வதற்கு உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் தங்களுக்கிடையே ஒளிவு மறைவின்றி அவர்களின் விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருவருக்கொருவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். திருமணத்திற்கு ஏற்ற ஆண் வயது 22 பெண்ணின் வயது 18. குடும்பத்தின் நலனே அடிப்படைக் குறிக்கோள். சமூக நலன் சிறந்த முறையில் இருப்பதையே மக்கள் விரும்புவார்கள்.

engagementsformarriage

நிச்சயதார்த்தம் (நுாலில் இடம்பெற்றுள்ள ஓவியம்)

உடோபியன் மக்கள் மதநம்பிக்கை உடையவர்கள். அவர்கள் மத சகிப்புத்தன்மையை கடைபிடிப்பவர்கள். சிலர் கிறிஸ்துவர்களாக இருப்பார்கள். பிறர் அவரவர் விரும்பும் கடவுளையும், மதத்தையும் பின்பற்றுவார்கள். நாத்திகமும், ரகசிய ஆபத்தான மதக் குறுங்குழுக்களும் தடைசெய்யப்பட்டிருக்கும்.

இது தான் அந்த நுாலில் உள்ள சுருக்கமான விசயம்.

வழக்கறிஞராகவும், அரசாங்க உயர் பதவி வகித்தவராகவும் அக்காலத்தில் தாமஸ் மூர் இருந்துள்ளார். எட்டாம் ஹென்றியின் நம்பிக்கைக்குரிய அரசதிகாரியாக இருந்துள்ள அவர், 1529ல் இங்கிலாந்தின் சான்சிலராக உயர்ந்துள்ளார். கத்தோலிக்க மதப்பற்றாளராக இருந்த அவர், அன்றைக்கு கத்தோலிக்கத்தில் சீர்திருத்தம் குறித்த தீவிரமாக பேசப்பட்ட சூழல்களிலும், புரோட்டஸ்டன்டினிசத்தின் தோற்றத்திற்கான காரணமாக இருந்த அன்றை ஐரோப்பிய தேவாலய சூழல்களில் பதினாறாம் நுாற்றாண்டில் மூர் எழுதிக் கொண்டிருந்தார். கத்தோலிக்க தேவாலய முறையிலிருந்து விலகிய மன்னருக்கு எதிராக தொடர்ந்த பேசி வந்ததால் அவர் 1535 ஜீலை 6ம் நாள் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவரைப் போலவே பதினாறாம் நுாற்றாண்டில் பிரான்சிஸ் பேகன் “நியூ அட்லான்டிஸ்” என்கிற உடோபியன் நாவலை எழுதினார். பிளாட்டோவின் டிமியாசில் (Timaeus) முதலில் தொலைந்த அட்லான்டிஸ் பற்றிய கதை இடம் பெற்றிருந்தது. நியூ அட்லான்டிஸ் மிக பண்டைய கால இடம் ஒன்றைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தை வழங்குகிறது. இந்தத் தீவின் மக்கள் வளர்ந்த நாகரீகத்தினைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். இதன் வரலாறு ஊழிக்காலத்தில் தொடங்குகிறது. எப்படி இருந்தாலும் உடோபியா சுவாரசியமான, கற்பனைநிறைந்த, காதல்மிக்க கட்டுக்கதையாக உள்ளது. அது மேலும் அறிவார்ந்த அம்சங்களையும் கொண்டதாக உள்ளது. உடோபிய என்பது ஒரு கோட்பாடாக வாழ்க்கை அமைப்பாக இருந்தாலும் அது வெறும் வாதத் தொகுப்பு மட்டுமல்ல. அது காட்சிப்பூர்வமானது. அது அறிவார்ந்த காதல்பூர்வமான பாத்திரங்களைக் கொண்டது.

பேகான் தனது வர்ணனைகளை மிக அழகாக துவங்கியுள்ளார். இது மிக அழகியல்பூர்வமாக எழுதப்பட்ட ஓர் எழுத்து. இக்கதை முழுமையடையாத ஒன்றாக பேக்கனால் விடப்பட்டுவிட்டது. அவருக்கு ஒரு காதல் கதையோ அல்லது சுவாரசியமான கதையோ சொல்வது நோக்கமாக இருக்காததால், தான் சொல்ல அறிவியல்பூர்வமான விசயங்களை சொல்லிவிட்டதாக கருதிய ஓர் இடத்தில் அவர் கதையை நிறுத்திவிட்டார்.

பிரான்சிஸ் பேகானின் உடோபியா முந்தைய உடோபியாக்களை சிறிதளவே ஒத்திருந்தது. பிளாட்டோவின் ரிபபிளிக்கை போல அது ஒரு பொருளாதார தத்துவமோ, மூரின் உடோபியாவைப் போலவோ ஜொனாதன் ஸ்விப்டுடையதைப் போலவோ அது பொருளாதார பகடியோ அல்ல. அவருடையது அவருடைய சமகாலத்தவரான காம்பனெல்லாவின் 1620ல் பதிப்பிக்கப்பட்ட நுாலான “The City of the Sun”ற்கு மிக நெருக்கமானது என சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருமே அரிஸ்டாடிலிய முறைகளை கேள்விக்கு உட்படுத்துபவர்கள்.

அதே போல ஹென்றி நெவில் என்பவர் “தி ஐசில் ஆப் பைன்ஸ்” எழுதினார்.

பதினெட்டாம் நுாற்றாண்டு புரட்சிகளும், உடோபிய சிந்தனைகளும்

இவர்களைத் தொடர்ந்து 18 நுாற்றாண்டுகளில் பல உடோபிய சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் de Contdorcet, ரூசோ, வாசிங்கடன் போன்றவர்கள். இத்தகைய உடோபிய சிந்தனைகள் சமூக பொருளாதார நடவடிக்கைகளை நோக்கி இட்டுச் சென்றன. இவை சமூக மாற்றத்தை நிகழத்துவதற்கான உரிமைகளும், காரணங்களும் இருப்பதாக நம்பின.

உடோபியா என்பது எதார்த்த உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கற்பனையாக அதற்கு வெளியே கண்டன. ஆனால் புரட்சிகள் எதார்த்த உலகில் வெடிக்கத் துவங்கின. இவை அமெரிக்காவிலும், பிரான்சிலும் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கான வழியமைத்தன.

கிரேட் பிரிட்டனின் காலனிகளை மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இழந்தார். பிரான்சின் பதினாறாம் லுாயிஸ் மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது. சராசரி மக்கள் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

புரட்சிகள் உடோபிய சிந்தனைகளை எதார்த்த உலகில் சாத்தியமாக்கிவிடுமா என்கிற கேள்விகளை எழுப்பின?

உடோபிய சிந்தனைகள் நடைமுறைபடுத்தும் பொழுது என்ன விளைவுகள் ஏற்படும், அவை எப்படி எதார்த்தத்தில் வெளிப்படும் என்பதற்கான சாத்தியங்களாக பதினெட்டாம் நுாற்றாண்டின் ஐரோப்பாவும் அமெரிக்காவும் சான்று பகன்றன.

பத்தொன்பதாம் நுாற்றாண்டின் உடோபியன் சோசலிசம்

இவர்களைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நுாற்றாண்டில் மாபெரும் தொழிற்புரட்சியின் பின்னணியில் ராபர்ட் ஓவன், டைடுஸ் சால்ட் போன்றவர்கள் தொழிலாளர்களுக்கான மாதிரி சமூகங்களை உருவாக்கினார்கள். இவை தான் Socialist Utopias என அழைக்கப்பட்டன. மத்திய ஸ்காட்லான்டில் அமைந்திருந்தது ஓவனுடைய நியூ லனார்க், மேற்கு யார்க்ஷைரில் அமைந்திருந்தது சால்டினுடைய சால்டைர். இவை சுய தேவை பூர்த்தி பெற்ற சமூக குழுமங்களாக அமைந்தன. இவை அத்தொழிலாளர்களின் துணி ஆலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டவை. இங்கே தொழிலாளர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அதற்கு வெளியே வேறெங்கும் வழங்கப்படாத நல்லதொரு வாழ்க்கைச் சூழல் அமைக்கப்பட்டிருந்தது.

NewLanark

மத்திய ஸ்காட்லான்டில் அமைந்திருந்த ஓவனுடைய நியூ லனார்க்

SaltairFromNorth

மேற்கு யார்க்சைரில் அமைந்திரு்நத டைடுல்ஸ் சால்ட்டின் சால்டைர் குடியிருப்பின் வடக்குப் பகுதி

இது போன்று சிறிய அளவில் உருவாக்கப்பட்ட பரிட்சார்த்த முயற்சிகள், மனித உரிமை, சமத்துவம், ஜனநாயகம் போன்ற விசயங்களில் பெரிய தாக்கத்தை அன்றைக்கு ஏற்படுத்தின. இவை அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் பிரஞ்சு புரட்சி நடந்த காலகட்டமாகும்.

இப்படியாக மனிதகுல வரலாறு முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் ஒரு நேர்மையான, நியாயமான, துன்பமும், துயரமும், ஏமாற்றுதலும், ஏற்றதாழ்வுகளும் இல்லாத உலகை கண்டங்கள் தோறும் கனவு கண்டு கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இந்தக் கனவுகள், அந்தந்த காலகட்ட சமூக நிலைமைகளின் முரண்பாடுகளிலிருந்தும், ஏற்றதாழ்வுகளிலிருந்துமே வடிவம் பெற்றுள்ளன. இவை அதன் எல்லைகளுக்கும், வரம்புகளுக்கும் ஓர் அர்த்தத்தில் உட்பட்டவையாகவும் மற்றொருபுறம் அதற்கான கற்பனையான மாற்றுகளையும் கொண்டதாகவே இருந்துள்ளன.

நவீன காலத்தின் துவக்கத்தில் அவை ஐரோப்பா கண்டத்தில் தாமஸ் மூரின் கற்பனைகளில் துவங்கி, 18ம் நுாற்றாண்டுகளில் நடைமுறையை மாற்ற முயற்சித்து, 19ம் நுாற்றாண்டுகளில் தொழிற்புரட்சி காலத்தில் அது தொழிலாளி வர்க்கத்தோடு இணைக்கப்பட்டு உணரத் துவங்கியது.

ராபர்ட் ஓவன், டைடுல்ஸ் சால்ட் போன்ற நல்ல மனம் படைத்த முதலாளிகளின் தொழிலாளர்களுக்கான நலன் விரும்பும் சிறு குடியிருப்புகளாக பரிட்சித்து பார்க்கப்பட்டு, பாரிஸ் கம்யூனில் தொழிலாளர் வர்க்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எல்லைகளைத் தொட்டு, சோவியத் யூனியனில் பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி உலகின் முதல் சோசலிச குடியரசை உருவாக்கி, உலகின் மூன்றில் ஒரு பாகத்தை சோசலிச முகாமிற்குள் கொண்டு வந்த மாபெரும் முயற்சியாக வளர்ந்தது.

இப்படியாக உடோபியன் சோசலிசம் என்பது அறிவியல்பூர்வ சோசலிசமாக தத்துவார்த்த ரீதியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் துவங்கி லெனின், மாசேதுங் வரை வளர்த்தெடுக்கப்பட்டது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

பால் லபார்க் – சிறு குறிப்பு

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 1, 2020

220px-Lafargue_1871

பிரெட்ரிக் எங்கெல்சிற்கும் பால் லபார்க்கிற்கும், லாரா லபார்க்கிற்கும் இடையிலான கடிதத் தொடர்புகளை தனித் தொகுப்புகளாக ஆங்கிலத்தில் மாஸ்கோ பிற மொழி பதிப்பகம் சார்பாக 1960களில் கொண்டு வந்தது. அக்கடிதங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போது, பால் லபார்க் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் விக்கிபீடியாவை புரட்டிய பொழுது படித்த தகவல்கள்.

காரல் மார்க்சின் மிகப் பிரபலமான மேற்கோள் “என்னைப் பொறுத்தவரை [அவர்கள் மார்க்சியவாதிகள் என்றால்] நான் மார்க்சியவாதி அல்ல” என்பதை பாலின் நடவடிக்கைகளை வைத்துச் சொன்னதுதானாம். மார்க்ஸ் 1883ல் மரணமடைவதற்கு முன்பு லபார்க்கிற்கும், பிரெஞ்சு தொழிலாளர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜீல்ஸ் குயிஸ்டேவிற்கும் எழுதிய கடிதத்தில், மார்க்ஸ் அவர்களை “புரட்சிகர மேற்கோள் வியாபாரிகள்” என்பதாக குற்றம்சாட்டினாராம்.

பால் லபார்க் காரல் மார்க்சின் இரண்டாவது மகளை திருமணம் செய்து கொண்டவர். 1842 ஜனவரி 15 அன்று பிறந்த அவர் 1911 நவம்பர் 25 அன்று கணவனும் மனைவியுமாக பால் லபார்க்கும் லாரா லபார்க்கும் கூட்டாக தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்கள்.
பிரான்சை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு கூயூபாவில் பிறந்தவர் பால். தன் பெரும்பாலான வாழ்க்கை காலத்தை பிரான்சிலேயே கழித்தவர். பிரான்சில் மருத்துவம் படித்த அவர், பிரவுதானைப் பின்பற்றுபவராகத்தான் தன் அரசியல் வாழ்வை துவங்கியுள்ளார்.

முதலாம் அகிலத்தில் பிரான்சின் பிரதிநிதியாக இருந்த பொழுதுதான் அவருக்கு மார்க்ஸ் மற்றும் எங்கெல்சுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிறகு அவர்களுடன் தன் அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, அவர்களை பின்பற்றுபவராக மாறுகிறார். பிரெஞ்சு தொழிலாளர் கட்சிக்குள், மாரக்சின் அணியை உருவாக்கியவர்களுள் லபார்க்கும் ஒருவர். பாரிஸ் கம்யூன் புரட்சியின் போது பாரிஸ் மற்றும் போர்டியோஸ் பகுதிகளில் புரட்சிப் பணியில் ஈடுபட்டு, கம்யூன் வீழ்ச்சியை ஒட்டி ஸ்பெயினுக்கு தப்பிச் சென்று, அங்கு புரட்சிகர வேலைகளில் ஈடுபட்டவர். பல ஆண்டுகளை சிறைகளில் கழித்தவர்.
மார்க்சை மட்டுமல்ல, பால் லபார்க் மற்றும் லாராவையும் பொருளாதார ரீதியாக பாதுகாத்தவராக பிரெட்ரிக் எங்கெல்சே இருந்துள்ளார்.

பால் மற்றும் லாராவின் கல்லறை இன்றும் பாரிசில் பீரே லக்காயிசே கல்லறைத் தோட்டத்தில் உள்ளது.

220px-Père-Lachaise_-_Division_76_-_Lafargue_01

Paul and Laura Lafargue were buried at division 76 (near the Communards’ Wall) of the Père Lachaise Cemetery in Paris.

பால் லபார்க்கும், லாராவும் கூட்டாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில், இவ்வாறு எழுதியிருந்தார்களாம்.

“உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் பொழுதே, ஈவிரக்கமற்ற வயோதிகம் வந்து எனது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, அவை என்னுடைய உடல் மற்று மன வலிமையை சீர்குலைக்கும் முன்பாக, எனத ஆற்றல்களை இழக்கச் செய்து, எனது உறுதியைக் குலைத்து, என்னை எனக்கும் மற்றவர்களுக்கும் பெரும் சுமையாக மாற்றிவிடுவதற்கு முன்பு.

சில ஆண்டுகளாகவே நான் எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டிருந்தேன் 70 வயதிற்கு மேல் வாழக் கூடாது என; அதே போல என்றைக்கு நான் என் உயிரை விட வேண்டும் என்பதையும் தீர்மானித்திருந்தேன். அது தோலுக்கடியில் செலுத்தப்படும் சைனைட் அமிலம், மூலமாக என, தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வழியையும் திட்டமிட்டிருந்தேன்.

நான் என்ன காரணத்திற்காக என்னுடைய 45 வருட கால வாழ்க்கைய அர்ப்பணித்திருந்தேனோ அந்தக் காலம் மிக விரைவில் வரவிருக்கிறது என்ற எல்லையற்ற ஆனந்தத்துடன் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்.

பொதுவுடைமை நீடுழி வாழட்டும்! சர்வதேச சோசலிசம் நீடுழி வாழட்டும்!”

அவர்களுடைய இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிலரில் ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்ட விளாதிமீர் லெனினும் ஒருவர், பின்னால் அவருடைய துணைவியரான நடாஷா ரூப்ஸ்கயாவிடம் இவ்வாறு கூறினாராம்:

ஒருவரால் இனியும் கட்சிக்காக வேலை செய்ய முடியாவிட்டால், உண்மையை முகத்திற்கு முன்பாக எதிர்கொண்டு, லபார்க்கை போல் சாவைத் தழுவ வேண்டும்

Posted in கட்டு​ரை | Leave a Comment »