எனது நாட்குறிப்புகள்

கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 24, 2022

இத்தாலியைச் சேர்ந்த மார்செல்லோ முஸ்ட்டோ என்பவர் எழுதிய “The Last Marx (1881-1883): An Intellectual Biography” என்கிற நுாலை தமிழில் எஸ்.வீ.ஆர் “கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)” என்கிற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இத்தாலி மொழியில் 2016ல் வெளியிடப்பட்ட இந்நுால் தமிழில் 2018லேயே வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் வெளிவராத நிலையிலும். உலக மொழிகளில் மிகச் சில மொழிகளில் மட்டுமே (சீன, ஜப்பானிய, ஜெர்மன், கொரிய, போர்ச்சுகீசிய) வந்திருந்த அதே நேரத்தில் தமிழிலும் வெளி வந்திருப்பது, உண்மையிலேயே சிறப்புக்குரியது.

இந்நுால் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் ரஷ்ய வழிப்பட்ட மார்க்ஸ் குறித்த புரிதல்களின் போதாமையை வெளிப்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டிருப்பதாகப் புரிகிறது. அவருடைய வெளியிடப்படாத பல எழுத்துக்கள், குறிப்புகள், இறுதிக்கால வாழ்க்கை ஆகியவற்றை முன்வைத்து மார்க்ஸ் குறித்த புதிய பார்வைகளை உருவாக்க நினைக்கிறது.

ஆங்கிலத்தில் “Last Marx” என்று குறிப்பிடுவதற்கு பின்னுள்ள வரலாற்று பின்புலத்தை தன்னுடைய மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில் குறிப்பிடும் எஸ்வீஆர், தான் ஏன் ஆங்கிலத் தலைப்பிற்கு மாறாக வேறு ஒரு தலைப்பை பயன்படுத்தி இருக்கிறேன் என தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடவில்லை.

நுாலை படித்ததில் இருந்து புரிந்து கொண்டதன் படி, இந்நுால் இரண்டு முக்கிய விசயங்களை குறிப்பிடுகிறது. ஆனால் தான் சொல்ல வரும் கருத்தை நேரடியாக குறிப்பிடாமல் குறிப்பால் உணர்த்த முனைகிறதோ என்கிற எண்ணம் ஏற்பட்டது.

முதல் விசயம், இது காறும் மார்க்சின் பிரதான கருத்தாக கருதப்படும். உலகத்தில் உள்ள பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளும் முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு வந்த பிறகே சோசலிசத்தை நோக்கி முன்னேற முடியும். சோசலிசத்திற்கான முன்நிபந்தனை முதலாளித்துவப் புரட்சி. இதற்கு அடிப்படையாக மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் உட்பட பல எழுத்துக்களும் ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன, அவற்றில் பெரிய அளவில் உண்மையும் உள்ளது என இந்நுால் குறிப்பிடுகிறது. இந்நுாலில் அவருடைய பிற்காலத்திய பல கடிதங்கள், குறிப்புகள், வெளியிடப்படாத பல முன் வரைவுகள் ஆகியவற்றை முன்வைத்து இக்கருத்து மறுத்தெழுதப்படுகிறது. சோசலிசத்திற்கான வழி இதுான் என்பதோ, சோசலிசம் இப்படித்தான் இருக்கும் என்றோ மார்க்ஸ் எங்கும் குறிப்பிடவில்லை. அவருடைய முந்தைய ஆய்வுகள் பலவும் மேற்கு ஐரோப்பாவை முன்வைத்தே செய்யப்பட்டவை, அவை அனைத்துக் கண்டங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை அவருடைய பிந்தைய புரிதலாக இருந்தது என்கிற கருத்தை இந்நுால் ஏற்படுத்துகிறது. இந்த விவாதம் பெரும்பாலும் ரசியாவின் ஓபிசீனாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது விசயம், மார்க்ஸ் மேற்கு ஐரோப்பாவிற்குமே முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்று மட்டுமே கூறிவந்ததாகக் கருதப்பட்டு வந்தது. மாற்றாக அவர் தன் இறுதிக் காலத்தில் தன் மருமகனுடனும், பிரான்ஸ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி கூட்டமைப்பைச் சேர்ந்த ஜுல் குஸ்ட் என்பவருடனும் இணைந்து எழுதிய அரசியல் செயல்திட்டத்தை விரிவாக இந்நுால் முன்வைக்கிறது. முதலாளித்துவத்திற்குள்ளேயே தேர்தலில் பங்கு பெறுவது, முதலாளித்துவ கட்சிகளுக்கு சமமாக தொழிலாளர் கட்சியை உருவாக்குவது, முலாளித்துவ சமூகத்திற்குள் தொழிலாளரின் பேரம் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது என்கிற காரியசாத்தியமான வழிமுறைகளை நோக்கி அவர் முன்னகர்ந்தான ஒரு கருத்தும் கிடைக்கிறது.

நவீன மொழிநடையிலும், நவீன உரையாடும் பாணியிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்நுால் அவருடைய கடைசி கால 1881லிருந்து 1883 வரையான அன்றாட வாழ்வையும், வாசிப்பையும், எழுத்துக்களையும், சிந்தனைப் போக்கையும் படம் பிடித்துக் காட்ட நினைக்கிறது. அவருடைய முந்தைய இளம் வயது வேகம் குறைந்து எதார்த்தத்தை முதியவருக்கேயான முதிர்ச்சியோடும். தன் பலங்களையும், பலஹீனங்களையும் நன்கு உணர்ந்தவராகவும், அவருக்கே உரித்தான ஆய்வு முறையியல்களையும், அணுகுமுறைகளையும் கைவிடாதவராகவும், மேலும் மேலும் அதனை வளர்த்து மேம்படுத்தி உறுதியாக பின்பற்றியவராகவும் இந்நுாலில் குறிப்பிடப்படுகிறார்.

MEGA2 என்று சொல்லப்படுகிற மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை அனைத்தையும் (இது காறும் வெளியிடப்படாத அவருடைய கடிதங்கள், குறிப்புகள், முன்வரைவுகள் அனைத்தும் அடங்கியதாக) தொகுக்கும் பணி இத்தகைய நுாலை எழுதுவதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக