எனது நாட்குறிப்புகள்

பரியேறும் பெருமாள்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 11, 2018

தமிழ்ச் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை பார்வையாளர்களின் இதயத்திற்கு நெருக்கமாக, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பேசிய முதல் வெகுசனப் படம் இது எனக் கருதுகிறேன்.

சின்னக் கவுன்டர், தேவர்மகன், கிழக்குச் சீமையிலே, பசும்பொன், பாரதி கண்ணம்மா என பல ஆதிக்க சாதி பெருமை பேசிய படங்களால் நிரப்பபட்டிருந்த தமிழ்ச் சினிமாவின் நீண்ட பட்டியலில் மிகமிக அபூர்வமானவை இத்தகைய படங்கள்.

எப்படியிருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை வெகுசன சினிமா தளத்தில் கையாள்வதாகவே இருந்தாலும், அவை ஆதிக்கசாதிகளின் திரை மொழியை கைகொள்ள முடியாது என்பதை இப்படம் புரிய வைக்கிறது.

இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வலியும், வேதனையும், வாழ்வில் முன்னேற படும்பாடுகளும், விலகினாலும் விடாது துரத்தும் சாதிய மனநிலைகளும் ஒரு வெகுசன சினிமாவின் வரம்புக்குள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளும், அதை அவர்கள் எதிர் கொள்ளும் முறைகளும், அதற்கான விடுதலை வழிகளும் தேர்ந்து கொண்ட அரசியல் வழிமுறைகளிலிருந்து விலகாமல் முன்வைக்கப்படுகிறது.

இந்த அரசியல் வழிமுறைளின் சிக்கல்களையும், போதாமைகளையும், அவை சாதிய சிக்கல்களின் பன்முகத்தன்மையை எந்தளவிற்கு உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறித்தும் உரையாடல்களுக்கான வெளியினை முற்போக்கு சிந்தனை கொண்ட சகல மக்களின் முன்பும் திறந்து விடுகிறது.

தொடர்ந்து வெகுசன சினிமா வெறும் பொழுது போக்குக்கானது. இதையெல்லாம் யாரும் கவனம் கொள்ளப் போவதில்லை. வெகுசன சினிமாவில் முன்வைக்கப்படும் எந்த சீரியசான விசயங்களும் மக்களிடம் எந்த கவனயீர்ப்பும் முக்கியத்துவமும் பெறாது என்றும் ஒருபுறம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் தமிழ்ச்சினிமாவிற்குள் இத்தகைய படங்கள் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணவே செய்யும் என்றே புரிகிறது.

ஆதிக்க சாதிகளின் பெருமைகளை பேசிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா, இடித்துரைப்பார் இன்றி இருந்த நிலை மாறியுள்ளது. கோளோச்சும் கலை மாற்றுத் தரப்பாரின் கலையால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய முன்னகர்வு.

இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகைமை உருவாகி இருக்கிறது. உலகளவில் கறுப்பின சினிமா என்ற வகைமை உள்ளதாம். சமீபத்தில் தமிழ்ச்சினிமாவில் இப்படி ஒரு வகைமை உருவாகி வருகிறது. இது நல்ல ஆரோக்கியமான நகர்வுதான்.

காலந்தோறும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டங்கள் அன்றன்றைய சொத்துடமை வர்க்கங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டேதான் இருந்திருக்கின்றன. அவை காலந்தோறும் மிக்க கொடூரமாக ஒடுக்கப்பட்டிருந்தாலும், கனிசமான வெற்றிகளையும் ஈட்டுவதில் தவறவில்லை.

இந்திய, தமிழக அளவில் அரச, மத, சமூக தளங்களில் ஏற்பட்ட பலதொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கும், கலகங்களுக்கும், மாற்றங்களுக்கும் பின்னே இத்தகைய போராட்டங்கள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்பதை நாம் இனம் காண வேண்டியுள்ளது.

நம் காலத்தில் நாம் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கடும் தாக்குதலையும் அதற்கு எதிரான அவர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களையும் கண்டு வருகிறோம். அதற்கு தமிழகம் துவங்கி இந்தியா முழுதும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

குறிப்பாக உலகமயமாக்கலின் பின்னணியில் இந்திய கிராமச் சமூகங்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள், அங்குள்ள சொத்துடமை வர்க்கங்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளின் பின்னணியில் இவற்றை காண வேண்டியுள்ளது.

ரியல் எஸ்டேட், நகர்ப்புற வேலையை நோக்கி உழைக்கும் பிரிவின் நகர்வு, இன்னும் பல இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் இந்திய கிராமப்புற பொருளாதாரத்தை தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது.

பிரதானமாக பாதிக்கப்பட்ட கிராமப்புற சொத்துடமை வர்க்கத்தின் கோபம் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்க சாதி மக்களின் மீது திருப்பப்பட்டு சாதி ஒடுக்குமுறைகளாக மாற்றப்படுகின்றன.

தமிழகத்தில் சமீபமாக நடைபெற்ற சாதிய தாக்குதல்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றில் சாதியக் கட்சிகளின் மிக முக்கியமான பங்கு தெளிவாக வெளிப்பட்டன.

இவை சாதிய சமூகங்களின் நலனை, அதன் பின்னாலுள்ள சொத்துடமை வர்க்கங்களின் நலனை முன்பைப் போல தனிப்பட்ட பண்ணையார்கள், ஜமீன்தார்கள் அல்லாமல் கட்சிகள்தான் அதிகாரவர்க்கங்கள், காவல்துறை,போன்ற அரச நிறுவனங்களின் துணையோடு நிர்வகிக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது.

சிலகாலம் முன்புவரை ஆதிக்கசாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் இளைஞர்களுக்கு இடையிலான காதல் இன்றைய அளவிற்கு மிகப்பெரிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட சர்வசாதாரனமானவையாக இருந்தன. அவற்றிற்கான எதிர்ப்பு குடும்ப அளவில்தான் இருந்தன. அவை இந்திய சட்டங்களின் துணை கொண்டு எளிதாக எதிர் கொள்ளப்பட்டன. ஆனால் இளவரசன் கொலை என்பது இத்தகைய காதல் எதிர்ப்பு பண்புரீதியான மாற்றம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியது. இதில் சம்பந்தபட்ட குடும்பத்தினரும், காதலர்களுமே பகடைகளாக பயன்படுத்தப்பட்டனர். இவை வட்டார அளவில் உள்ள கட்சிகள் குலைந்து வரும் சாதி ஆதிக்கங்களைை தடுத்து தற்காத்துக் கொள்ள களமிறங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய போராட்டங்களில் ஆதிக்கசாதி பிரிவைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் காதலித்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்களோடு சேர்ந்து வாழ காட்டிய வீரம் ஈடு இணையற்றது. இது சங்கப்பெருமை பேசும் தமிழ்ச்சமூகத்தின் ஈராயிரமாண்டுகால வீரத்திற்கும், காதலுக்கும் சான்று. இது இப்படத்தில் சரியாக கவனத்தில் கொள்ளப்படவில்லையா அல்லது பொது சமூகம் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக அர்த்தம் கொண்டு அந்தப் பெண்களை “பாவம் அந்த பசங்க, இதுகளுக்கு எத்தனை நெஞ்சழுத்தம், அப்படி என்ன ஆம்பள கேட்குது, பெத்து வளர்த்தவங்க மேல கொஞ்மாவது பாசம் வேண்டாம்” என ஏசும் என தயங்கி விட்டார்களா தெரியவில்லை.

இறுதிக் காட்சிகள் எதார்த்த தளத்திலிருந்து எதிர்பார்ப்பு தளத்திற்கு நகர்ந்துவிட்டது. இந்த எதிர்பார்ப்புகள் இப்பிரச்னைகளுக்கு பின்புள்ள சொத்துடமை, அரசியல் நலன்கள் ஆகியவற்றை கவனமாக கணக்கிலெடுக்காமல், எதிர்தரப்பின் வெறும் தவறான புரிதல்கள்தான் என குறைத்து மதிப்பிடுவதால் வருவதோ எனத் தோன்றுகிறது.

இத்தகைய படங்கள் எடுக்கும் இயக்குநர்கள் சொத்துறவுகள் குறித்தும், சமகாலத்தில் அவற்றில் ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும், கல்வி, காதல், நகர்ப்புற பிரச்னைகள் தாண்டி கிராம்ப்புற வாழ்வின் சிக்கல்கள், கட்சிகளின் இயங்குமுறை போன்றவை அன்றாட வாழ்வில் வெளிப்படும் துல்லியமான இடங்களை இனங்கண்டு கதைகளை அமைப்பார்களேயானால் கதை வாழ்வை இன்னும் நெருக்கமாக அணுகி பெரிய திறப்புகளை உண்டாக்கியதாக அமையும்.

Posted in சினிமா விமர்சனம் | Leave a Comment »

அபிராமிகள் ஏன் உருவாகிறார்கள்?

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 17, 2018

டாக்டர் ஷாலினியின் விகடன் நேர்காணல் பிரச்னையின் மையத்தை தொடவில்லை. இன்னும் பெரிய ஏரியல் வீயுவில் பார்க்க வேண்டிய பிரச்னை. சமூகமும் அதன் பண்பாடும் என்றென்றைக்கும் மாறாத ஒன்றோ, அனைத்து இதர விசயங்களிலிருந்தும் துண்டித்துக் கொண்ட, அனைத்துக்கும் அப்பாற்பட்ட சுயேச்சையான ஒன்றோ அல்ல.

காலமாற்றத்தில், சமூக பொருளாதார அம்சங்களில் ஏற்படுகின்ற தீவிரமான வளர்ச்சி மாற்றங்களில் அதில் உள்ள அனைத்தும், அவற்றின் மதிப்பிடுகள் அனைத்தும் தொர்ச்சியாக மாறுகின்றன. இதற்கு குடும்ப உறவுகள், மனித உறவுகள், இரத்த உறவுகள், மனிதர்களின் அக மதிப்பிடுகள், ஒழுக்கம், பண்பாடு என எதுவும் விதிவிலக்கல்ல.

பெண்கள் தியாகமே உருவானவர்கள், குடும்பத்திற்காக, கணவன், பிள்ளைகளுக்காக ஒரு பெண் தன் வாழ்க்கையையே, தன் ஆசாபாசங்களையே முற்றிலுமாக தியாகம் செய்வாள்/ செய்ய வேண்டும் என்கிற பழைய வாழ்க்கைமுறையும், கட்டுப்பாடுகளும், கலாச்சாரமும், தீவிரமான எதிர்பார்ப்புகளும் இன்றைய உலகமயமாக்கல், கார்ப்பரேட் மயமாக்கல் காலகட்டத்தில் ஆட்டம் காண்கின்றன.

நண்பரோடு ஒரு முறை பெர்லின் வீதிகளில் பேசிக் கொண்டே போனபோது சட்டென்று எங்கள் உரையாடலில் வந்து விழுந்த ஒரு அம்சம். நீங்கள் உலகமயமாக்கல், நவீனமயமாக்கல், கார்ப்ரேட்மயமாக்கல் என்கிற விசயங்களை பிரித்து அதன் பொருளாதார அம்சங்கள் மட்டும் எங்களுக்கு போதும், அதன் உணவு, உடை, வாழ்க்கைமுறை, சிந்தனைமுறை, பண்பாடு போன்ற விசயங்கள் வேண்டாம் என்றெல்லாம் கூற முடியாது. அவை எப்பொழுதும் முழு பேக்கேஜாகத்தான் கொடுக்கபடும் என்றேன்.

இத்தகைய அம்சங்கள், நாம் சற்று ஆழமாக சிந்திக்கவும், உரையாடவும் வேண்டிய விசயங்கள். இன்றைய தொழில்நுட்ப மற்றும் தகவல் பரிமாற்ற புரட்சிகள், கார்ப்ரேட் உற்பத்திமுறையின் நுகர்வு வெறி கலாச்சாரத்தால் வழிநடத்தப்படுகிறது. இதன் மிக ஆபத்தான நேரடி விளைவுகளாகத்தான் இத்தகைய வழக்குகளை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

மனித சமூகத்தின் உற்பத்தி தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சிக்கும் அதனோடும் அதற்கு முன்பாகவும் வளர வேண்டிய நவீன பண்பாட்டு கலாச்சார வளர்ச்சிக்கும் இடையிலான முரணை தீர்க்கமுடியாத்தாக எதிர்எதிர் துருவங்களாக முதலாளித்துவமானது தனது லாப நோக்கிலான உற்பத்திமுறைக்காக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த முரணே நம் சமகால வாழ்வின் சகலமுனைகளிலும் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் சகிக்கமுடியாத கொடூரத்துடன் எங்கும் வெடித்து வெளிக் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.

Posted in Uncategorized | Leave a Comment »

காந்தியை புரிந்து கொள்வதை நோக்கி

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 16, 2018

நேற்றிரவு என் மகள் என்னிடம் கேட்டாள்.

“அப்பா காந்தி நல்லவரா கெட்டவரா?”

நான் சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்தேன். எதையோ அவளிடம் கேட்க நினைத்தவன், மறந்தவனாக பதிலளிக்கத் துவங்கினேன்.

“நல்லவர், கெட்டவர் என்ற முடிவுகள் எப்பொழுதும் எங்கேயும் எல்லோருக்கும் பொதுவானவையல்ல. இப்படி வேண்டுமானால் கூறலாம். அவர் தான் கொண்டிருந்த உலகப் பார்வைக்கும், கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எப்பொழுதும் உண்மையாக இருந்தார். அதையே அவர் உலகிற்கு போதித்தார். அந்த வழியிலேயே தொடர்ந்து பயணித்தால் உலகம் தன் சகல துன்பங்களிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும் என்று நம்பினார். அந்த நம்பிக்கைகளும், அதற்கான அவரது செயல்பாடுகளும் நிறைந்த அவர் வாழ்வே அவருடைய செய்தி என்றார்.” என்றேன்.

நான் அவளை ரொம்பவும் குழப்புவதாக தன் முகபாவத்தால் வெளிப்படுத்தினாள். எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அவளுக்கு புரியும் வகையில் இந்த உரையாடலை நிகழத்திச் செல்ல என் அனுபவங்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு தயாரானேன்.

“ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, கோட்பாடு, தத்துவம் இருக்கிறது. இந்த உலகை அந்த கொள்கை, கோட்பாடு, தத்துவங்களின் வழியிலேயே நாம் விளங்கிக் கொள்கிறோம். நாம் விளங்கிக் கொண்டே வழியிலேயே அதற்கான தீர்வுகளை கண்டடைகிறோம். இதில் நம்மோடு உடன்பாடு கொள்கிறவர்களுக்கு நாம் நல்லவர்கள். நமது கொள்கை, கோட்பாடு, தத்துவம் ஆகியவற்றிலிருந்து முரண்படுகிறவர்களுக்கு நமது செயல்கள் அனைத்தும் தவறானதாகவும், அதன் மீதான நமது உறுதி நம்மை கெட்டவர்களாகவும் அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறது.” என்றேன்.

புரிதலையும் புரிதலின்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ஒரு கசப்பான சிரிப்பை வெளிப்படுத்தினாள்.

“இந்த உலகை விளங்கிக் கொள்வதும், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதும், அதற்கான விடைகளை கண்டடைவதும், அதை நடைமுறையில் சாதிக்க முயற்சிப்பதும் அத்தனை இலகுவான விசயங்கள் அல்ல. அதை நாம் நம்மோடும், நமக்கு ஒத்த சிந்தனை உடையவர்களுடனும், இன்னும் கூடுதலாக நமக்கு எதிரான சிந்தனை உடையவர்களுடனும் உரையாடுவதன் வழியாக, வாசிப்பதன் வழியாக மேலும் மேலும் துலக்கமாக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.”

“காந்தியின் கண்ணோட்டங்களை, கொள்கைகளை புரிந்து கொள்வதுதான் காந்தியின் செயல்களை புரிந்து கொள்வதற்கான முதல்படி. காந்தியும் பேராசையே சகல துன்பங்களுக்கும் காரணம் என்றார். காந்தியும் வன்முறை வழிமுறைகள் எந்த நிரந்தர தீர்வையும் தராது என்றார். காந்தியும் சட்டங்களும், தண்டனைகளும் சமூகத் தீமைகளை முழுமையாக நீக்கிவிடாது, ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டிய மனமாற்றமே நிரந்தரத் தீர்வை தரும் என்றார். தேவைகளை குறைத்துக் கொள்வதும், தேவைக்கான குறைந்த உற்பத்தியை செய்யும் கைத்தொழில் முறையே போதுமென்றார். மனிதர்கள் அனைவரும் சமமே, சமூக அளவில் மனிதர்களுக்குள் எந்த பாகுபாடும், நிரந்தர பிரிவுகளும் இல்லை. மனிதர்களுக்குள் இருக்கும் தவறான புரிதல்களும், அர்த்தமாக்கிக் கொள்ளலும்தான் பிரச்சினைகளுக்கான காரணம் என்றார். சுருக்கமாக சொல்வது என்றால், அஹிம்சை, மனமாற்றம், எளிமை, சத்யாகிரகம், போன்றவையே காந்தியின் கோட்பாடுகள், சிந்தனைகளாக இருந்தன.”

“நல்ல விசயம்தானே அப்பா, அப்படியானால் அவர் நல்லவர்தானே” என்றாள்.

“காந்தியை முழுமையாக புரிந்து கொள்ள அவருடைய வாழ்வை, எழுத்துக்களை, அவருடன் உரையாடியவர்கள், அவருடைய செயல்பாடுகளை, கருத்துக்களை விமர்சித்தவர்களை, அவரை அன்றும், இன்றும் ஆதரிப்பவர்களை, அவருக்கு முன்பான மற்றும் பின்பான இந்தியாவையும், உலகையும் ஆழமாக வாசித்தறிய வேண்டும்.”

“இந்தியாவையும், அதன் சாதியப் பிரச்சினைகளையும் விளங்கிக் கொள்ள அம்பேத்கரையும், காந்தியுடனான அவருடைய உரையாடல்களையும் நீ அவசியம் வாசிக்க வேண்டும்”

“காந்தியின் சிந்தனைகள், கருத்துக்கள் குறித்த கம்யூனிஸ்ட்களின் விமர்சனங்களை வாசிக்க வேண்டும்”

“காந்தி மீதும், காங்கிரஸ் மீதும் நம்பிக்கை இழந்த முசுலீம் லீக் மற்றும் ஜின்னா குறித்தெல்லாம் வாசிக்க வேண்டும்”

“காந்தியின் பல்வேறு பிரச்சினைகளை பேசிய பாரதியார், பெரியார் போன்றவர்களுடைய கட்டுரைகளை வாசிக்க வேண்டும்”

“பகத்சிங்கை வாசிக்க வேண்டும், பகத்சிங் துாக்கு தண்டனை விசயத்தில் காந்தியின் நிலைப்பாடுகளை வாசிக்க வேண்டும், சௌரிசௌரா சம்பவம் குறித்தும் அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தை அவர் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்த வரலாற்றை கூர்ந்து வாசிக்க வேண்டும்,”

“இப்படியாக காந்தியை விளங்கிக் கொள்வது என்கிற போக்கில் நீ இந்திய வரலாற்றையே வாசித்துத் தீரவேண்டும். ஏன் இதனுாடாகவே நீ உலக வரலாற்றை, பல்வேறு தத்துவங்களை வாசித்தாக வேண்டும்.”

சாதிப் பிரச்சினைகளுக்கு காந்தி தன் வழியில் தீர்வு சொன்னார், ஆதிக்க சாதியினரிடம் மனமாற்றம் ஏற்பட தொடர்ந்து பாடுபட வேண்டும். அவர்கள் மனமாற்றம் அடையும் வரை நாம் அவர்களிடம் விட்டுக் கொடுத்துத்தான் போக வேண்டும் என்றார். அதே போல வெள்ளையர் பிரச்சினையிலும் அதே போன்ற தீர்வுகளை அவர் முன் வைத்தார். அஹிம்சையை போதித்த காந்தி, இந்தியர்களை வெள்ளையரின் இராணுவத்தில் சேர்ந்து உலக யுத்தங்களில் வெள்ளையருக்காக போரிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அணுகுண்டை தாங்கிச் செல்லும் போர்விமானத்தின் விமானிக்கு ஒரு இதயம் இருக்கத்தானே செய்கிறது. அவரின் மனதோடு நான் பேசுவேன். அவரின் மனமாற்றத்தின் வழியே அந்த அணுகுண்டை வெடிக்கச் செய்யாமல் தடுப்பேன் என்றார்.

அம்பேத்கர் தலித்களுக்கான தனித் தொகுதி கேட்ட பொழுது காந்தி அதை திட்டவட்டமாக மறுத்தார். இது போன்ற செயல்பாடுகள் இந்துக்கள் மத்தியில் நிரந்தர பிரிவை ஏற்படுத்தும் என்று நம்பினார். ஒவ்வொரு மனிதனும் ஒரு சாதியை பிரதிநிதித்துவ படுத்துகிறான். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் சாதியின் சமூகத்தின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவபடுத்துவார்கள். தலித்கள் பிரச்சினைகளில் அவர்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்படும். அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து பேச அவர்களின் பிரதிநிதிகள் அவசியம் என்றார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மேலவளவில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆதிக்க சாதிகள் அவரை கொலை செய்ததை பார்த்தோம். அம்பேத்கர் போன்றவர்கள் வலியுறுத்திய பிரச்சினையின் தீவிரத்தை இவை இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

அம்பேத்கர் போன்றவர்கள் நாங்கள் எங்கள் உரிமையை யாரிடமும் யாசித்துப் பெற விரும்பவில்லை. உங்களுக்கு என்றைக்கு மனமாற்றம் ஏற்படும் என்று நாங்கள் காத்திருக்க விரும்பவில்லை. அதுவரையும் சகல ஒடுக்குமுறைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நவீன சமூக ஒப்பந்தங்களை போடுங்கள், நீதியான சமூக ஒப்பந்தங்கள், சட்டங்கள், அரசியல் சாசனங்கள் வழியே எங்களுக்கான வாழ்வையும், பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்துங்கள் என்றனர்.

காந்தி அவை மேலும் பிரச்சினைகளை பெரிதுபடுத்தவே செய்யும், அவை நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தராது என்ற முடிவுகளில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.

அவளுக்கு தடுமாற்றம் அதிகமானது. இரண்டு பக்கமும் நியாயம் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது. இப்பொழுதும் அவளிடமிருந்து ஒரு கசப்பான புன்னகைதான் வந்தது. அவள் தான் திசையற்ற வழியில் நிறுத்தி வைக்கப்பட்டதாக உணர்ந்தாள்.

“நீங்க என்னப்பா சொல்றீங்க” என்றாள்.

“அன்பு, சமாதானம், சகவாழ்வு, அஹிம்சை, ஒற்றுமை, எளிமை, போன்றவற்றை இந்த உலகில் விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள். இவற்றை காந்தி மட்டும் கூறவில்லை. ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக மனித நாகரீகம் தோன்றிய காலம் முதல் மனித குலத்தில் தோன்றிய மிகச் சிறந்த மனிதர்கள் எல்லோரும் எல்லா கன்டங்களிலும் சொல்லியவைதான் இவை.”

“நமது விருப்பங்கள் எத்தனை உயர்வானதாக, சிறந்ததாக இருந்தாலும் ஏன் நம் சமூகங்கள் எப்பொழுதுமே அவற்றை ஏற்றுக் கொள்ளவே முடியாததாக இருக்கிறது என்கிற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகள் நாம் செய்தே ஆக வேண்டும். மனித சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் பல்வேறு கட்டங்கள், ஒவ்வொரு கட்டத்தின் தனித்தன்மைகள், அவற்றின் வளர்ச்சி, அதைச் சாத்தியப்படுத்துகிற முக்கிய அம்சங்கள் போன்றவற்றை நாம் விஞ்ஞானப்பூர்வமான வழிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.”

“உயிரியல் விஞ்ஞானிகளும், அண்டவியல் விஞ்ஞானிகளும், இயற்பியல் விஞ்ஞானிகளும், தங்கள் துறைசார்ந்த ஆய்வுகளை எப்படி கிடைத்த தரவுகள் அனைத்தையும் வைத்து அக நிலைப்பாடுகளுக்கு, விருப்பங்களுக்கு இடம் தராமல் செய்து அவற்றை ஆளும் விதிகளையும், அதன் இயக்க போக்குகளையும், கண்டுபிடிக்கிறார்களோ அது போல கண்டுபிடிக்க வேண்டும்.”

“அதன் வளர்ச்சிப் போக்கை இனம் கண்டு, அதற்கு இயந்தவகையில் செயல்பட்டு அதன் சிக்கல்களை தீர்க்க வேண்டும். இவை மிக கடினமான பணிதான். இருந்தாலும் வேறு வழியில்லை”

“நீ பத்தாம் வகுப்பு படிக்கிறே. நீ பத்துக்குள் ரேங்க் எடுக்குறே. எனக்கு ஆசை நீ முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்று. நல்ல படித்து முதல்மதிப்பெண் எடுப்பது என்பது ஒன்றும் கெட்ட விருப்பம் இல்லைதானே. நல்ல விருப்பம்தானே. ஆனாலும் உன்னால் எனது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. உதாரணத்திற்கு நான் என்ன செய்கிறேன். உனக்கு என் விருப்பத்தை தெரிவிக்கிறேன். உன்னை படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துகிறேன். உனக்கு அறிவுரை வழங்குகிறேன். ஆனாலும் உன்னால் உன் காலாண்டுத் தேர்விலோ, அரையாண்டுத் தேர்விலோ எடுக்க முடியவில்லை. நான் அடுத்து என்ன செய்கிறேன். உன்னைத் திட்டுகிறேன். உன்னை கட்டாயப்படுத்தத் துவங்குகிறேன். நீ என்ன செய்கிறாய். டீச்சர் பாடம் சரியாக எடுக்கலை. நான் எழுதிய பேப்பரை தொலைத்துவிட்டாங்க, வயிற்றை வலிக்கிறது என சூழலுக்குத் தக்க பொய்கள் சொல்லவும், ஏமாற்றவும், என் மீது ஆத்திரம் கொள்ளவும், கோபம் கொள்ளவும் செய்கிறாய்.”

“இப்படியாக நான் என் விருப்பத்தை – உன் சூழலை, இயல்பை, விருப்பங்களை, சிக்கல்களை, நம் கல்விமுறையில் உள்ள பிரச்சினைகளை, வாழ்க்கை பற்றிய நம் சமூகங்களுக்கு உள்ள தவறான புரிதல்களை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல் – உன் மீது திணிக்க முயற்சிப்பதன் வழியாக முதல் மதிப்பென் மட்டுமே எடுக்க முடியாதிருந்த உன்னை மேலும் மேலும் தவறான வழிகளுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன். இது நிலைமையை மேலும் மேலும் மோசமானதாக மாற்றுகிறது”

இப்படித்தான் சமூகம் பற்றிய நமது அரைகுறை புரிதல்களும், அதன்மீதான நம்முடைய நல்லெண்ண நடவடிக்கைகளும் நிலைமைகளை மேலும் மேலும் மோசமாக்குகின்றன. காந்தி தன் இறுதிநாட்களிலேயே தன்னுடைய விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும், சிந்தனைகளும் தோல்வியடைந்துவருவதை கண்கூடாகக் கண்டார். அது வெறும் இந்து இசுலாம் மதப் பிரச்சினையில் மட்டுமல்ல. அனைத்துத் விசயங்களிலுமேதான்.

காந்தி தன்னுடைய சீடராக அரசியல் வாரிசாக நேருவை முன்மொழிந்தார். நேருவே முக்கிய விசயங்களில் பலவற்றிலும் அவர் காந்தியக் கொள்கைகளுக்கு நேர்எதிரானவராக இருந்தார். பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றினார். கனரக தொழிற்சாலைகளை கட்டினார். நவீன நகரங்கள் உருவாவதற்கான அடிக்கல் நாட்டினார். பிரம்மாண்டமான அணைகளை நாடு முழுவதும் கட்டினார். நவீனத் தொழிற்சாலைகளை உருவாக்கினார், தேசிய வங்கிகளை உருவாக்கினார். உலகின் மிகப்பெரும் ஐந்தாவது இராணுவத்தை கட்டியமைத்தார். நாடு முழுவதும் ஜமீனதார், மன்னர்களின் அதிகாரங்களை பறித்து நவீன அரசை குக்கிராமங்கள் வரை நீட்டித்தார். இப்படியாக நவீன இந்தியா காந்தியின் கனவுக்கு நேர் எதிரான வழியில் முன்னகர்ந்தது. அது திட்டமிட்டதோ, வேண்டுமென்றே நேருவால் கெட்ட நோக்கத்தோடு செய்யப்பட்டதோ அல்ல. வரலாறு அனுமதிக்கும் வழிமுறைகளில்தான் எத்தனை சக்திவாய்ந்த தனிமனிதர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்திச் செல்ல முடியும்.

ஆரம்பத்தில் கேட்க மறந்த கேள்வி கடைசியில் ஞாபத்திற்கு வந்தது. எதற்காக திடீரென்று காந்தி குறித்த இந்த சந்தேகம் அவளுக்கு வந்தது?

இன்னும் வர்க்கங்கள் குறித்தும், வர்க்க சமூகங்கள் குறித்தும், அரசு குறித்தும், தனியுடமை குறித்தும், தத்துவங்கள் குறித்தும் எல்லாம் நாம் நிறைய உரையாட வேண்டியிருக்கிறது. தொடர்ந்து பேசுவோம் என்று கூறி அவளை துாங்கச் செல்ல சொன்ன போது மணி இரவு 12 ஆகியிருந்தது.

– 23 Oct 2017

Posted in கட்டு​ரை | Leave a Comment »

மயக்கும் மாலை

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 28, 2018

மாலை மயங்கி
அந்தி சாய்கிறது.

தாமரைக்குளம்,
பச்சை வயல்,
ஏரியும் கரைகளும்,
தூரத்து பனைமரங்கள்,
அவற்றுக்கும் பின்னே
கருநீல மலைத்தொடர்கள்
ஒவ்வொன்றாய்
மறைந்து கொண்டிருக்கின்றன.

ஒரு சாலையோர
புத்தக வியாபாரியைப் போல
கருப்பு பாலிதீன் கவரால்
எல்லாவற்றையும்
பக்குவமாய் பதிவிசாய்
கட்டி வைத்துவிட்டு
கிளம்பிக் கொண்டிருக்கிறான்
கதிரவன்
நம்மீதான நம்பிக்கையோடு.

Posted in கவிதைகள் | Leave a Comment »