எனது நாட்குறிப்புகள்

மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கைத்தொலைபேசி பயன்படுத்தாதீர்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 11, 2012

ஜீஎன்யூ/லீனக்ஸ் மற்றும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தினை தோற்றுவித்தவரும், கணினித்துறை கோட்பாட்டாளரும், தனிச்சொத்து மென்பொருளுக்கு எதிரான கடுமையான போராளியுமான

ரிச்சர்ட் ஸ்டால்மென் நேர்காணல்

சுதந்திர மென்பொருள் (Free Software) குறித்து முன்னெடுக்கும் விசயத்தில் ஆர்எம்எஸ்ற்கு (Richard M Stallman) இணையானவர்கள் யாருமில்லை. தனிச்சொத்து மென்பொருளோ  (Proprietary Software) அல்லது வேறேதேனும் ஒன்றோ அது எதுவாக இருந்தாலும் சுதந்திரத்திற்கு ஊறு செய்யும் எந்தவொன்றும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நாம் அவரைச் சந்திப்பதற்கு முன்பாக, அவர் திடமாக நம்பும் அனைத்து குறித்தும் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நாம் அவரிடம் மாட்டிக் கொள்வோம்.  அவருக்கு முன்பாக லீனக்ஸ் அல்லது திறந்த மூலநிரல் (open source) என்ற வார்த்தைகளை உச்சரிக்காதீர்கள் – ஆர்எம்எஸ் அவற்றை நம்புவதில்லை. அவர் ஜீஎன்யூ/லீனக்ஸ் (GNU/Linux) மற்றும் சுதந்திர மென்பொருள் என்னும் வழியில் செல்பவர்.

அவர் தன் சமீபத்திய இந்திய வருகையின் போது லீனக்ஸ் பார் யூ (Linux For You) இதழுக்காக தீக்ஷா பீ குப்தா என்பவருக்கு சுதந்திரம், ஆன்டராய்ட், ஸ்டீவ் ஜாப்ஸ், பேஸ்புக் மற்றும் இந்திய சுந்திர மென்பொருள் சமூகம் ஆகியவை பற்றிய தன் கருத்துக்களை பிரத்தியேகமான பேட்டியில் கூறினார்.

தனிச்சொத்து மென்பொருட்கள், லீனக்ஸ் மற்றும் திறந்த மூலநிரல் ஆகியவற்றிற்கு எதிராக ரிச்சர்ட் ஸ்டால்மென்

கே. உங்களுடைய சுதந்திர மற்றும் திறந்த மூலநிரல் (Open Source) ஆகியவற்றுடனான பயணத்தை பற்றிக் கூறுங்கள்
நல்லது. உண்மையில் அது திறந்த மூலநிரல் அல்ல – தயவு செய்து என்னை அதனுடன் தொடர்புபடுத்தாதீர்கள். நான் அதனுடன் முரண்படுகிறேன். உண்மையில், திறந்த மூலநிரல் என்பது குறிப்பாக நான் எந்த கருத்துக்களுக்கு சார்பாக நிற்கிறேனோ அவற்றை நிராகரிப்பதற்காகவே துவங்கப்பட்டது. எனது பயணம் என்பது சுதந்திர, சுவதந்திரா மற்றும் முக்தி மென்பொருட்களுக்கானவை. நான் சுதந்திர மென்பொருள் இயக்கத்தை துவங்குவதற்கு முன்பு, சுதந்திர மென்பொருள் சமூகத்தில் வாழ்ந்தவன், எனக்கு சுதந்திர மென்பொருளே சிறந்த வாழ்க்கை முறை என்பது அனுபவரீதியாகத் தெரியும் – வெறும் கற்பனையில் கண்டவை அல்ல. அது எம்ஐடி ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் லேபில் (MIT Artificial Intelligence Lab) 1970களில் நான் வேலைசெய்து கொண்டிருந்த பொழுது ஏற்பட்டது. அந்தக் கூடம் பெரியளவில சுதந்திர மென்பொருள் சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாங்கள் அனைத்து மென்பொருட்களையும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் பயன்படுத்திய மென்பொருட்கள் அனைத்தும், சில அரிதான விதிவிலக்குகள் தவிர, சுதந்திர மென்பொருட்களே. அதில் பலவும் எங்களால் எழுதப்பட்டவையே. நான் நினைக்கிறேன் அதுவே சிறந்தது. அது தங்களுக்கு பாதகமானவற்றை சரிசெய்து கொள்ளலாம் என்பதுமாகும்.

1971களில் அந்தக் கூடம் என்னை ஒப்பந்தம் செய்து கொண்ட ஆரம்பக் கட்டங்களில் சுதந்திர மென்பொருள் என்பது வழக்கமற்ற ஒன்றல்ல. பல இயங்கு தளங்கள் இலவசம் (Free). ஆனால் 1970களின் இறுதியில் சுதந்திர மென்பொருள் என்பது அரிதானதாகி விட்டது. தனிச்சொத்து மென்பொருட்களே எங்கெனும் வழக்கமாகிவிட்டது – 1980களின் ஆரம்பங்களில் எங்கள் சமூகம் அழிந்துவிட்டது, நான் தனிச்சொத்து உலகில் தள்ளிவிடப்பட்டேன். சுதந்திர மென்பொருள் வழிப்பட்ட வாழ்க்கைக்கு நேர்மாறாக அது அசிங்கமானதெனக் கருதினேன்… ஒழுக்கரீதியாக அசிங்கமானது. அது நிரந்தரமாக பிற மக்களை தவறாக நடத்தக்கூடியதாகும். நான் எந்த வழியில் வாழக்கூடாதென மறுத்தொதுக்குகிறேனா அதை நான் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன். நான் என் எல்லா முயற்சிகளையும் அற்பணித்து எனக்காகவும், உங்களுக்காகவும் அந்த வழியில் வாழக்கூடாதென்பதை சாத்தியமாக்க முடியுமென நம்புகிறேன்.

ஆக 1983ல், சுதந்திரத்துடன் கணினியை பயன்படுத்துவது என்பதை இலக்காகக்கொண்டு சுதந்திர மென்பொருள் இயக்கத்தைத் துவங்கினேன். எப்படியானாலும், அதை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு, ஒரு இயங்குதளம் வேண்டும், அதுவும் சுதந்திர மென்பொருளாக இருக்க வேண்டும். 1970களில் எங்களிடம் ஒன்று இருந்தது, அது பிடிபி 10, ஆனால் அது 1980களின் துவக்கத்தில் காலாவதியானது; அதனால் எங்களிடமிருந்த அதன்மீது இயங்கக்கூடிய அனைத்து மென்பொருட்களும் காலாவதியாகிவிட்டது.  நவீன மென்பொருட்களுடன் கூடிய அனைத்து கணினிகளும் தனிச்சொத்தானது.

சுதந்திர மென்பொருள் என்பதை எதார்த்த சாத்தியமாக்க வேண்டுமானால், நமக்கு அது சுதந்திரமாக வேண்டும் – ஆகவே, அதை உருவாக்குவது என் வேலையானது. நான் முற்றிலும் சுதந்திரமான மென்பொருளால் ஆன யூனிக்ஸ் போன்ற இயங்குதளத்தை (UNIX-like OS) உருவாக்குவதற்கான திட்டத்தை அறிவித்தேன். நான் அதற்கு GNU எனப் பெயரிட்டேன், அதற்கு ‘GNU’s Not UNIX’ என்று பொருள். அந்த பெயர் வேண்டுமானால் ஒரு வகையில் சிரிப்பாக இருக்கலாம் – ஆனால் அந்தத் திட்டம் (project) மிகவும் தீவிரமான ஒன்று, சுதந்திரத்திற்காக போராடக்கூடியது…நாம் முழுமையாக இழந்தவிட்ட சுதந்திரத்திற்கானது.

கே. GNU/Linuxயை உருவாக்குவதற்கான பயணம் என்ன?
நாங்கள் துவங்க வேண்டிய புள்ளி சுழியத்தைவிட சற்று முன்னேறியதாக இருந்தது. 1983ல் நான் GNUவை துவங்கியபொழுது மிகச் சொற்பமான சுதந்திர மென்பொருட்களே இருந்தன, ஆனால் அவை ஒரு முழுமையான இயங்குதளத்திற்கு எந்தவிதத்திலும் அருகில் கூட இல்லை. அதனால் மிக அதிகமான வேலைகள் செய்ய இருந்தன, 1980களில் நாங்கள் அதனை செய்து முடித்தோம். யூனிக்ஸ் போன்ற இயங்குதளத்தை உருவாக்க, மிக அடிப்படையான நிலைக்கே, நூற்றுக்கணக்கான பாகங்கள் தேவை. சில பாகங்கள் வேறு பல காரணங்களுக்காக பிறர் எழுதியிருந்தார்கள், அவை சுதந்திர மென்பொருட்கள். ஆனால் மற்ற பாகங்களை நாங்கள் உருவாக்க வேண்டியிருந்தது. ஆக நான் சில எழுதினேன், வேறு பிறவற்றை எழுத சிலரை நியமித்தோம், சில விசயங்களுக்கு சுதந்திர மென்பொருளை உருவாக்க சிலரை சம்மதிக்க வைத்தோம் – உதாரணத்திற்கு பெர்க்லியில் உள்ள CSRG (Computer Systems Research Group). அவர்கள் நிறைய நிரல்களை (codes) எழுதினார்கள், ஆனால் அவை AT&Tயின் நிரல்களுடன் கலந்துவிட்டன, அதனால் அவை தனிச்சொத்தாகிவிட்டன. அதனால் நான் அவர்களை 1984ல் சந்தித்து, அவர்களுடைய மென்பொருளை பிரித்து சுதந்திர மென்பொருளாக வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தேன், அவர்களும் அதற்குச் சம்மதித்து அதன்படி செய்தார்கள். நான் அந்த நிரல்களை GNU அமைப்பில் பயன்படுத்த எண்ணினேன்.

1992ல், நாங்கள் கிட்டத்தட்ட GNU அமைப்பை முழுமைசெய்துவிட்டோம், ஆனால் ஒரு முக்கிய பாகம் இல்லாதிருந்தது, அதுதான் கெர்னல் (kernel). நாங்கள் 1990ல் ஒன்றை உருவாக்கத் துவங்கியிருந்தோம். நான் ஒரு நவீன (advanced) வடிவத்தை(Design) தேர்வு செய்திருந்தேன், அது கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சித் திட்ட வடிவத்தை எட்டியிருந்தது, தரச்சோதனைக்கான வடிவத்தை (Tested Version) அடைய ஆறு வருடங்களை எடுத்துக் கொண்டது. துரதிர்ஷ்டவசமாக யாராலும் அதுவரை வெற்றிகரமாக உருவாக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் அதற்காக காத்திருக்க முடியாது, ஏனென்றால் பிப்ரவரி 1992ல் லீனஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) தன்னுடைய லீனக்ஸ் என்னும் தனிச்சொத்து கெர்னலை இலவசமாக்க முடிவு செய்திருந்தார். ஜீஎன்யூ அமைப்புடன் கூடிய லீனக்ஸ் கெர்னல் ஒரு முழுமையான இயங்குதளம் ஆனது, அது அடிப்படையில் ஜீஎன்யூ, ஆனால் அது லீனக்ஸை உள்ளடக்கியிருந்தது. ஆகவே அதை லீனக்ஸ் இயங்குதளம் என்று குறிப்பிடுவது தவறாகும்; அது ஒரு ஜீஎன்யூ/லீனக்ஸ் இயங்குதளமாகும்.

கே. சுதந்திர மென்பொருள் என்னும் கருத்தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் விலையுடன் சம்பந்தமுடையதா?
என்னைப் பொறுத்தவரை சுதந்திர மென்பொருள் என்பது சுதந்திரப் பிரச்சினை, விலை பிரச்சினையல்ல, அது இரண்டாம்பட்ச பிரச்சினை.  நீங்கள் மென்பொருளின் இலவசப் பிரதியைப் பெறலாம், அல்லது அதற்காக நீங்கள் விலை கொடுக்கலாம்; இரண்டுமே சரிதான். அதில் உள்ள முக்கிய விசயம் என்பது சுதந்திர மென்பொருள் என்பது உங்களுடைய மற்றும் சமூகத்தினுடைய சுதந்திரத்தை மதிக்க வேண்டும். ஒரு சுதந்திரமற்ற நிரல் ஒரு டிஜிட்டல் காலனிய அமைப்பை உருவாக்குகிறது. காலனிய அதிகாரம் தனிச்சொத்து மென்பொருளால் உருவாகிறது, காலனி படுத்தப்பட்ட மக்கள் அதன் பயனாளர்கள் ஆகிறார்கள். எந்தவொரு காலனிய அமைப்பைப் போலவும், தனிச்சொத்து மென்பொருள் மக்களை பிரித்தாளுகிறது. அவர்களிடம் மூலநிரல் (source) இல்லாததால் அவர்கள் உதவியற்றவர்களாகிறார்கள். அவர்களால் அதனை மாற்ற முடியாது, அது உண்மையில் என்ன செய்கிறது என்பதைக் கூட அவர்களால் சொல்ல முடியாது. சில மோசமான வேலைகளைச் செய்வதற்காகக் கூட பல நேரங்களில் தனிச்சொத்து மென்பொருள் வடிவமைக்கப்படுகிறது.

பொதுவாகக் குறிப்பிடும் பொழுது, சுதந்திர மென்பொருள் என்பது சமூகத்தின் சுதந்திரத்திற்கு முக்கியமானது. ஆனால் குறிப்பான விசயங்களைப் பார்ப்போம். நீங்கள் ஒரு நிரலுக்கு நான்கு முக்கிய சுதந்திரம் பெற்றிருந்தால் அந்தப்  பிரதி உங்களுக்கு முழுமையான சுதந்திரமுடையதாகும். உங்கள் விருப்பம் போல் ஒரு மென்பொருளை இயக்குவது சுதந்திரம் ‘0’ ஆகும். மூலநிரலை படிப்பதற்கும், மாற்றுவதற்குமான சுதந்திரம் – அதாவது நீங்கள் விரும்புவது போல கணினி பயன்பாட்டை மேற்கொள்வது, சுதந்திரம் ‘1’ ஆகும். அந்த மென்பொருளின் பிரதியை பிறர் பிரதி எடுத்துக் கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் உதவுகின்ற சுதந்திரம், சுதந்திரம் ‘2’ ஆகும். உங்களுடைய சமூகத்திற்கு உங்களுடைய பங்களிப்பைச் செய்வதற்கும்,  உங்களுடைய மாற்றப்பட்ட பதிப்பின் பிரதிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் உள்ள சுதந்திரம், சுதந்திரம் ‘3’ ஆகும். ஆகவே ஒரு மென்பொருள் இந்த நான்கு சுதந்திரத்தோடும் வழங்குவது சுதந்திர மென்பொருளாகும், ஏனென்றால் இந்த சமூக விநியோகமுறை அமைப்பும், நியாயமான பயன்பாட்டு அமைப்பும் சமூக சுதந்திரத்தை மதிக்கிறது.

இதில் ஒரு சுதந்திரம் குறைந்தாலோ போதுமானதாக இல்லையென்றாலோ அது தனிச்சொத்து மென்பொருளாகும், ஏனென்றால் அது அநியாயமான சமூக அமைப்பை பயனாளர்களின் மீது திணிக்கிறது. ஆகவே சுதந்திர மற்றும் தனிச்சொத்து மென்பொருட்களுக்கிடையேயான வித்தியாசம் என்பது தொழில்நுட்ப வித்தியாசமல்ல. ஆனால் இது ஒரு சமூக, அறம் மற்றும் அரசியல் வித்தியாசமாகும், அதனால்தான் அது முக்கியத்துவமுடையதாகிறது… எந்தவொரு தொழில்நுட்ப வித்தியாசங்களைக் காட்டிலும் இந்தப் பொதுவான விசயங்களே அதிக முக்கியத்துவமுடையவை ஆகின்றன.

தனிச்சொத்து மென்பொருளை பயன்படுத்துவது என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சியாகாது; அதைச் சார்ந்திருப்பதாகும். தனிச்சொத்து மென்பொருளை பயன்படுத்துவது என்பது ஒரு சமூகப் பிரச்சினை. நாம் அதைக் குறிவைத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுதந்திர மென்பொருட்களை எழுதுவது என்பது சமூகத்திற்கு பங்களிப்பதாகும். ஆகவே உங்களுக்கு தனிச்சொத்து மென்பொருள் தயாரிப்பதா அல்லது எந்தவொன்றும் செய்யாதிருப்பதா எனத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால், நீங்கள் எதையும் செய்யாதிருங்கள் – ஏனென்றால் அந்த வழியில் நீங்கள் எந்தக் கேடும் செய்யாதிருக்கிறீர்கள். இப்படியாக, சுதந்திர மென்பொருள் இயக்கத்தின் நோக்கமானது அனைத்து மென்பொருட்களையும் சுதந்திரமாக்குவது, அதன் மூலமாக அதன் பயனாளர்களை சுதந்திரமாக்க முடியும். நீங்கள் இந்த பிரச்சினையை புரிந்து கொண்டு விட்டீர்களானால், இதற்குள் நுழையக்கூடாதென முடிவு செய்து விடுவீர்கள். இந்த ஒத்துழைப்பைச் சீர்குழைக்க தனிச்சொத்து மென்பொருள் உருவாக்குபவர்கள் செய்யும் பிரச்சாரங்களை நாம் நிராகரிக்க வேண்டும். நான் ‘pirates’ என்னும் பதத்தைக் குறிப்பிடுகிறேன். அவர்கள் ‘pirates’என்று அழைப்பதன் மூலமாக, பிறருக்கு உதவுபவர்களை (மென்பொருட்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக) கப்பல்களை தாக்குபவர்களுடன் ஒப்பிடுகிறார்கள்.

பல தனிச்சொத்து மென்பொருட்கள் தீய அம்சங்களை (malicious features) கொண்டுள்ளது. இத்தகைய அம்சங்கள் பயனாளர்களை உளவு பார்க்கிறது, அவர்களின் தரவுகளை வேறெங்கோ அனுப்புகிறது…அல்லது சில அம்சங்கள் பயனாளர்களை அவர்களுடைய கணினியில் உள்ள தரவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் DRM – டிஜிட்டல் கட்டுப்பாட்டு மேலாண்மை (Digital Restriction Management) அல்லது டிஜிட்டல் கைவிலங்கு (digital handcuffs) என்கிறார்கள். யாரோ சிலரின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு பயனாளர்களிடம் இவற்றைச் செய்வதற்காகவே கணினி மென்பொருட்களில் புறவாசல்கள் உள்ளன. இது அரிதான வழக்கமல்ல. பெரும்பான்மையான மக்கள் தீய தனிச்சொத்து மென்பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். நான் சில உதாரணங்களைத் தருகிறேன். இந்த மூன்று வகை தீய அம்சங்களும் கொண்ட ஒரு தனிச்சொத்து மென்பொருள் கட்டைப் (package) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், அதுதான் மைக்ரோசாப்ட் வின்டோஸ். அது பிரத்தியேகமான அனைவரும் அறிந்த வேவுபார்க்கும் அம்சங்களையும், பிரத்தியேகமான அனைவரும் அறிந்த டிஜிட்டல் கைவிலங்கையும்,  அனைவரும் அறிந்த புற வாசல்களையும் வைத்துள்ளது.  எனவே வின்டோஸ் ஒரூ தீயநிரல் (malware). அதற்கும் மேலாக, கருத்தியல்ரீதியான அக்கணினியின் ‘உரிமையாளருடைய’ ஒப்புதல் பெறாமலேயே தொலைவில் இருந்தவண்ணம் வலுக்கட்டாயமாக மாற்றங்களை பதிவேற்றும் ஒரு புறவாசல் மைக்ரோசாப்டை அனுமதிக்கிறது. நான் கருத்தியல்ரீதியாக என்று சொன்னதன் அர்த்தம், ஒரு முறை மைக்ரோசாப்டைஒரு கணினியில் வின்டோசை பதிவு செய்ய அனுமதித்துவிட்டால்,  மைக்ரோசாப்ட் அந்தக் கணினியை உரிமையாக்கிக் கொண்டுவிடும். இதன் அர்த்தம் இன்று வின்டோசில் இல்லாத எந்தவொரு தீய அம்சத்தையும் நாளை மைக்ரோசாப்ட் தொலைவிலிருந்தே பதிவு செய்துவிடலாம். ஆகவே வின்டோஸ் ஒரு சாதாரண தீயநிரல் அல்ல, அது ஒரு பேரண்ட தீயநிரலாகும் (universal malware).  அதே போல மேக் இயங்குதளம் (Mac OS). அதில் டிஜிட்டல் கைவிலங்குகள் உள்ளன. ‘i’ பொருட்கள் எனப்படும் ஆப்பிள் தயாரிப்புகள் அதைவிட மோசம். அதில் உள்ள உளவு அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகறிந்து, ஒரு வருடங்கூட ஆகவில்லை.  அதில்தான் பொதுவான தேவைகளுக்கான கணினிகளிலேயே மிக இறுக்கமான டிஜிட்டல் கைவிலங்குகள் உள்ளன. ஆப்பிள் தான் தனது வாடிக்கையாளர்களின் சுதந்திரத்தை தாக்குவதில் முன்னணியில் உள்ளது, ஏனென்றால் ஆப்பிள் மென்பொருட்களை பதிவு செய்வதற்கு முன்பே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிடுகிறது. பயனாளர்கள் தாங்கள் விரும்பிய நிரல்களை பதிவு செய்ய முடியாது; அவர்கள் ஆப்பிள் மென்பொருட்கள் பிரிவிலிருந்துதான் (Apple’s App Store) பதிவு செய்ய முடியும். இது ஒரு தணிக்கைமுறை!

கே. ஏன் இந்த ஜீஎன்யூ/லீனக்ஸ் விவாதம்?
லீனக்ஸ் சுதந்திர மென்பொருளாக கிடைக்கத்துவங்கியவுடன், லீனக்ஸ் மற்றும் ஏறக்குறைய முழுமையான ஜீஎன்யூ அமைப்பும் சேர்ந்தே ஒரு முழுமையான சுதந்திர அமைப்பை உருவாக்கின, அது அடிப்படையில் ஜீஎன்யூ, ஆனால் அது லீனக்ஸையும் உள்ளடக்கியது. ஆகவே அர்த்தப்பூர்வமாக நியாயமான வழியில் அதைப் பற்றி பேசுவதென்றால் அது ஜீஎன்யூ+லீனக்ஸ் அல்லது ஜீஎன்யூ/லீனக்ஸ் அமைப்பு என்றுதான் கூறவேண்டும். எப்படியோ நாங்கள் ஜீஎன்யூவை ஒரு அமைப்பாக வெளியிட்டிருந்த போதிலும் (இதுவரை எங்களிடம் எல்ல பாகங்களும் இல்லாத போதிலும்), மக்கள் லீனக்ஸூடன் ஜீஎன்யூவின் சிறிதும் பெரிதுமான பல பாகங்களை இணைத்துக் கொண்டு, அவற்றை லீனக்சின் சேர்க்கைகள் என்பதாக அவர்களாக நினைத்துக் கொண்டு ‘லீனக்ஸ்’ என்னும் ஒரு பாகத்தை மட்டும் வெளிச்சப்படுத்துகிறார்கள். அந்த முழுத்தொகுப்பையும் லீனக்ஸ் அமைப்பு என்று பேசுகிறார்கள், இப்படியாக பலரும் ஜீஎன்யூ அமைப்பின் ஒரு பகுதியைக் கொண்டு அதன் முழு அமைப்பையும் அழைக்கிறார்கள். அவர்கள் இது 1991ல் டோர்வால்ட்சால் ஆரம்பிக்கப்பட்டதெனக் கருதுகிறார்கள், அது உண்மையல்ல. இது எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தயவுசெய்து, நாங்கள் உருவாக்கிய படைப்பைப் பற்றிப் பேசும் பொழுது, நாங்கள் அதற்கு கொடுத்த பெயரை பயன்படுத்துங்கள், அதனை ஜீஎன்யூ என்று அழையுங்கள். நீங்கள் திரு. டோர்வால்ட்சுக்கும் மரியாதை கொடுக்க விரும்பினால், அதில் எந்தத் தவறும் இல்லை. அதை ஜீஎன்யூ/லீனக்ஸ் என்று அழையுங்கள்.

ஆனால் இங்கே உள்ள முக்கிய விசயம் நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதைவிட – உங்கள் சுதந்திரத்தை (கண்டிப்பாக அதுதான்) என்பதுதான். நேரடியாக, உங்கள் விருப்பப் பெயர்கள் பொருளின் உள்ளடக்கத்தை மாற்றப்போவதில்லை. ஆனால் நீங்கள் தேர்வுசெய்யும் வார்த்தைகள்தான் நீங்கள் பிறருக்கு சொல்லும் செய்திகளைத் தீர்மானிக்கிறது, அவை அவர்களின் சிந்தனைகளில் தாக்கம் செலுத்துகிறது, அவர்களின் நடவடிக்கைகளை வழி நடத்துகிறது. எனவே நீங்கள் என்ன பெயரை பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

1983 லிருந்து, ஜீஎன்யூ என்னும் பெயர் கணினித்துறையில் எங்களுடைய நீதி மற்றும் சுதந்திரத்திற்கான தத்துவத்தோடு இணைந்திருக்கிறது, ஆனால் லீனக்ஸ் என்னும் பெயர் திரு. டோர்வால்ட்சின் வேறு வகையான சிந்தனைகளுடன் இணைந்திருக்கிறது – அவை முற்றிலும் வேறான சிந்தனைகள். டோர்வால்ட்ஸ் எப்பொழுதும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தை ஏற்றுக் கொண்டதில்லை. அவர் நீங்கள் – கணினி பயனாளர்களை – சுதந்திரத்திற்கான தகுதியுடையவர் என்பதை நம்புவதில்லை. அவர் எப்பொழுதும் அந்த வழியில் சிந்தித்ததில்லை. அவருடைய மதிப்பீடுகள் என்பவை வலிமையுடைய மற்றும் நம்பகத்தன்மையுடைய மென்பொருட்கள், அவர் கூறுகிறார் வலிமையுடையதாகவும் நமபகத்தன்மையுடையதாகவும் இருக்கும் வரை நான் தனிச்சொத்து மென்பொருட்களை பயன்படுத்துவேன். ஆகவே அடிப்படையான மதிப்பீடுகள் என்னும் நிலையிலேயே, இத்தகையத் தத்துவங்களின் வேர்கள் வேறானவை. நல்லது அவருடைய பார்வைகளை முன்வைக்கும் உரிமை அவருக்குண்டு; பிரச்சினை என்னவென்றால் மக்கள் லீன்க்ஸ் என்பதாக அந்த அமைப்பை கருதும் பொழுது, அவர்களாகவே கருதிக் கொள்கிறார்கள் 1991ல் திரு. டோர்வால்ட்சால் இது துவங்கப்பட்டதென்று, இந்த முழுமையான அமைப்பை உருவாக்கியதற்காக அவரை வானளாவப் புகழ்கிறார்கள் – அதன் பிறகு அவர்கள் முற்போக்கானது தீவிரமானது எனக் கருதும் எங்களை கவனத்தில் கொள்ளாமல், அவருடைய கருத்துக்களை அடிக்கடி சுவிகரித்துக் கொள்கிறார்கள். இந்த வகையில், அவர்கள் தங்கள் சொந்த சுதந்திரத்தைக் கூட மதிக்கக் கற்றுக் கொள்வதில்லை.

அவர்கள் சுதந்திரத்தைக் கோரவில்லை என்பது மோசமான விசயம், அதைவிட மோசமானது நாங்கள் நமக்காக சுதந்திரம் கோரி போராடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் எங்கள் பக்கம் இல்லை, மேலும் அவர்களுக்கு போராடுவதற்கு அப்படி ஒரு விசயம் இருக்கிறது என்பதே தெரியவில்லை. இதனாலும் கூட நாங்கள் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் கருத்துக்கள் குறித்து ஜீஎன்யூ அமைப்பை பயன்படுத்தும் பயனாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் இரண்டு தடைகளை எதிர்கொள்கிறோம். முதலாவது, ஜீஎன்யூ அமைப்பை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு தாங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான் ஜீஎன்யூ அமைப்பு என்று தெரியவில்லை. அவர்கள் இது டோர்வால்ட்சால் உருவாக்கப்பட்ட லீனக்ஸ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்கள் தத்துவங்களைத் தாங்கி வரும் கட்டுரைகளை பார்க்கும் பொழுது, நாங்கள் ஏன் இந்த “ஜீஎன்யூ தீவிரவாதிகளுடைய தத்துவங்களை” படிக்கவேண்டும் என ஆச்சரியமடைகிறார்கள். அவர்கள் தங்களை ‘லீனக்ஸ் பயனாளர்கள்’ என அடையாளப்படுத்திக் கொண்டு திரு. டோர்வால்ட்ஸின் நடைமுறைவாத தத்துவங்களை பின்பற்றுகிறார்கள். நீங்கள் ஜீஎன்யூ/லீனக்ஸ் என்ற சொற்றொடரை பயன்படுத்துவீர்களானால், எங்களுடைய பிரச்சாரத்திற்கு பயன் உடையதாக இருக்கும், அது இம்மக்களுக்கு தங்களை ஜீஎன்யூ/லீனக்ஸ் பயனாளர்கள் என புரியவைக்கும், அதன்பிறகு அவர்கள் நாங்கள் சொல்வதை செவிமடுப்பார்கள்.

அடுத்த தடை, மக்கள் சுதந்திர மென்பொருள் குறித்து பேசும் பொழுது, அதனை திறந்த மூலநிரல் மென்பொருள் என்றே அழைக்கிறார்கள். அவர்கள் இந்தச் சொற்றொடரை 1998ல் உருவாக்கினார்கள். அதற்கு முன்பாக இரண்டு அரசியல் முகாம்கள் இருந்தன: ஒன்று அனைத்து பயனாளர்களின் சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்யும் சுதந்திர மென்பொருள் இயக்கம், மற்றொரு முகாம், திரு. டோர்வால்ட்ஸ் போன்றவர்களைக் கொண்டது, இதில் உள்ள அறப்பிரச்சினை பற்றி பேசாமல், நடைமுறை பலன் தரும் அதிகாரம்,  நம்பகத்தன்மை, செயல்திறன், தகுதி, போன்றவைகளை மட்டும் பேச விரும்பியவர்கள். 1998ல், அந்த முகாமினர் ‘திறந்த மூலநிரல்’ என்னும் சொற்றொடரை உருவாக்கினார்கள், அதன்மூலம் அவர்கள் ‘சுதந்திரம்’ என்ற பதத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்தார்கள். இந்த புதிய பதத்துடன், அவர்கள் எந்தக் கருத்துக்களை வைத்துக் கொள்வது எவற்றை விட்டுவிடுவது என முடிவெடுத்தார்கள். அவர்கள் அறப் பிரச்சினைகளை எழுப்பவில்லை. அவர்கள் மென்பொருள் வெளியீட்டில் கடைபிடிக்க வேண்டிய அற வழிகள், மற்றும் அறமற்ற வழிமுறைகளை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டங்களை முன்வைக்கவில்லை. அவர்கள் தனிச்சொத்து மென்பொருள்களை அநீதியானவை எனச் சொல்லவில்லை. அவர்கள் சொல்கிறார்கள், நீங்கள் வெளியிட்ட மென்பொருட்களை பயனாளர்கள் மாற்றி வெளியிடட்டுமே, அவர்கள் நிரல்களின் தரத்தை உயர்த்துவார்கள். இதனுடன் நான் முரண்படுகிறேன்.

கே. சுதந்திர மென்பொருளுக்கு எதற்கு உரிமம் (license)? மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு தனிச்சொத்து மென்பொருட்களுக்குத்தானே உரிம முறை தேவைப்படுகிறது?
எங்களைப் பொறுத்தவரை, இது நேர்மாறானது. சுதந்திர மென்பொருள் உரிமத்தைப் பொறுத்தவரை பயனாளர்களுக்கு நான்கு சுதந்திரத்திற்கான அனுமதி வழங்கும் சாசனம். இப்படித்தான் அனுமதிச் சான்றிதழை காப்புரிமை பக்கத்தில் போடுவதன் மூலமாகவே, ஒரு நிரலோ அல்லது வேறு எந்த மாதிரி படைப்பையோ சுதந்திரமாக்க முடியும், இது ஏனென்றால் இன்றைய காப்புரிமை சட்டங்களின்படி, எந்தவொரு படைப்பும் காப்புரிமையின் கீழ்தான் செய்ய வேண்டும். வழக்கமாக, பயனாளர்கள் மென்பொருட்களை பிரதியெடுத்தல், மாற்றுதல், விநியோகித்தல் – ஏன் சில நாடுகள் மென்பொருட்கள் நிரந்தர நினைவகத்தில் பதிந்துவிடுவதால் அவற்றை பயன்படுத்தலையே காப்புரிமை சட்டங்களின் கீழ் தடை செய்கிறது. ஆகவே காப்புரிமை பிரிவின்கீழ் பயனாளர்களுக்கு நான்கு சுதந்திரங்களை கொடுத்துவிடுவதே நிரலை சுதந்திரமாக்குவதற்கான ஒரே வழி. நாங்கள் அந்த பிரகடனத்தை சுதந்திர மென்பொருள் உரிமம் என அழைக்கிறோம். ஒரு படைப்பில் இந்த உரிமம் இல்லையென்றால் அது சுதந்திரமானதல்ல. சிலர் இவை சுதந்திரமானவை எனக்கூறி வெளியிடுகிறார்கள், ஆனால் அவை அந்த உரிமத்தில் குறிப்பிடப்படுவதில்லை, ஆகவே அவர்கள் கூறுவது தவறாகும். நீங்கள் அப்படிப்பட்டவற்றை பார்த்தால், சம்பந்தப்பட்டவர்களிடம், “நீங்கள் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியே, ஆனால் அதனை நீங்கள் சட்டப்பூர்வமாக சுதந்திரமாக்க வேண்டும்” எனப் புகார் தெரிவித்துக் கூறுங்கள்.

நான்கு சுதந்திரங்களை மக்களுக்கு கொடுப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன, அதனால் தான் பல்வேறு வகையான சுதந்திர மென்பொருள் உரிமங்கள் உள்ளன. சுதந்திர மென்பொருள் உரிமங்களில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்பது காப்பிலெப்ட் (copyleft) உரிமத்திற்கும் நான்-காப்பிலெப்ட் (non-copyleft) உரிமத்திற்கும் இடையிலான வித்தியாசமே.

ஜீஎன்யூ பொது மக்கள் உரிமம் (GNU General Public License) ஒரு காப்பிலெப்ட் உரிமமாகும். இதன் அர்த்தம் என்பது இதன் மறுவிநியோகங்களும் (மாற்றங்களோடோ அல்லது மாற்றங்களில்லாமலோ) இதே உரிமத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான். சாராம்சத்தில் அது கூறுவது, நீ இந்த நிரலை பிறருக்கு விநியோகிக்கலாம், ஆனால் பிறரின் சுதந்திரத்தை நீ மதிக்க வேண்டும், எப்படி உன் சுதந்திரத்தை நாங்கள் மதித்தோமோ அது போல. இதே விசயத்தை வேறொரு கோணத்தில் பார்க்கலாம், உனக்கு ஒரு மென்பொருளைத் தரும் மனிதன் உன்னுடைய சுதந்திரத்தை மதிக்க வேண்டும், எப்படி அவனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரத்தின் பலனை அவன் எடுத்துக் கொண்டானோ அதே போல. இந்த காப்பிலெப்ட் உரிமம் இல்லாமல் வழங்கப்படும் மென்பொருளை ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ சுதந்திர மென்பொருள் பிரதியாகப் பெற்றுக்கொண்டு அதனை தனிச்சொத்து மென்பொருளாக கட்டுப்பாடுகளுடன் உனக்கே விநியோகித்துவிடலாம். அதன் பிறகு, இந்த உரிமத்தின் நோக்கமான, சுதந்திரம் உன்னை எட்டாமலே போய்விடும். சுதந்திர மென்பொருள் இயக்கத்தைப் பொறுத்தவரை, அது ஜீஎன்யூ அமைப்பின் தோல்வியாகிவிடும், ஏனெனில் ஜீஎன்யூ அமைப்பை உருவாக்கியதன் நோக்கமே உங்கள் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதுதான். இந்த சுதந்திரம் நடுவில் ஒருவனால் எடுத்துக் கொள்ளப்பட்டதென்றால், நாம் தோல்வியடைந்துவிடுவோம். ஆகவே அந்தத் தோல்வியைத் தவிர்ப்பதற்காக நான் இந்த காப்பிலெப்ட் கருத்தைக் கண்டுபிடித்தேன். மென்பொருட்களை வெளியிடுவதற்காக நான் ஜீஎன்யூ பொது மக்கள் உரிமத்தை எழுதினேன் – நான் எழுதிய பிறகு தங்கள் மென்பொருட்களை வெளியிடும் பலரும் அதே முறையைக் கடைபிடிக்கிறார்கள்.

அதனால், 1992ல் டோர்வால்ட்ஸ் லீனக்சை சுதந்திர மென்பொருளாக வெளியிட முடிவு செய்தபொழுது, அதைச் செய்வதற்கு ஜீஎன்யூ பொது மக்கள் உரிமத்தை பயன்படுத்தினார். ஜீஎன்யூ பொது மக்கள் உரிமம் மட்டுமே சுதந்திர மென்பொருள் உரிமம் அல்ல; இது அல்லாத வேறு சுதந்திர மென்பொருள் உரிமங்களும் உள்ளன. ஆனால் ஜீஎன்யூ பொது மக்கள் உரிமம் ஒரு காப்பிலெப்ட் உரிமம், அதுவே மேலானது, ஏனென்றால் எதற்காக யாரோ ஒருவர் உங்கள் பிரதியை வைத்திருக்கும் பயனாளருக்கான சுதந்திரத்தை தடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்?

கே. நீங்கள் நினைக்கவில்லையா நீங்கள் அதிகமான மென்பொருட்களை எழுதி சுதந்திர மென்பொருள் இயக்கத்தை நடத்தலாம் என்று?
இல்லை. அது உண்மையில்லை. அது ஆரம்பக் கட்டங்களில் 1980களில் உண்மை, அப்பொழுது நான் எழுதிய சுதந்திர மென்பொருட்கள் சுதந்திர மென்பொருள் இயக்கத்தின் முக்கியமான பகுதியாக இருந்தது. ஆனால் தற்பொழுது, சுதந்திர மென்பொருள் சமூகம் என்பது மிகப் பெரியது, நிறைய மென்பாருட்கள் உள்ளன, என்னுடையவை என்பது மிக்ச் சிறிய பகுதியாகவே இருக்கும். அதையும் தவிர, எனக்கு வயதாகிவிட்டது. என்னால் முன்பு போல செய்யமுடியாது. இவற்றிற்கிடையே, சுதந்திரத்தை மதிப்பதில் மிக ஆபத்தான இடைவெளி இருப்பதைக் காண்கிறேன், அது குறித்து அதிகமாக மக்களால் கவலைப்படப்படுவதாகத் தெரியவில்லை – ஆகவே அங்கேதான் என்னுடைய பங்களிப்பு தேவைப்படுகிறது.

இந்திய மென்பொருளாளர்கள் குறித்து ஆர்எம்எஸ்

கே. இந்தியாவில் உள்ளவர்களுடனான உங்களுடைய தொடர்புகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள சுதந்திர மென்பொருள் இயக்கம் பற்றிய உங்கள் அவதானிப்பு?
நல்லது, சில செயல்வீரர்கள் சுதந்திர மென்பொருளுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள், அதனால் சில வெற்றிகளும் வந்துள்ளன. கேரளாவில் உள்ள சில பள்ளிகள் சுதந்திர மென்பொருளுக்கு மாறியுள்ளன – ஆனால் பெரும்பான்மையான சுதந்திர மென்பொருள் இயக்கத்தினர் சுதந்திரம் குறித்து உணரவில்லை, மேலும் அரசாங்கத்தின் பக்கமிருந்தும் பல தடைகள் உள்ளன. பள்ளிகள் தனிச்சொத்து மென்பொருட்களை கற்றுக் கொடுக்கச் செய்யப்படுகின்றன (குறைந்த பட்சம், சில பள்ளிகளாவது. ஏனென்றால் அவை பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவை அவ்வாறு செய்கின்றன, அவை அதே போல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ன, அவை அவ்வாறு செய்கின்றன). இது தவறானது, மக்களிடம் தனிச்சொத்து மென்பொருட்களை கற்றுக் கொடுக்கச் சொல்லும் எந்தவொரு அரசாங்கமும் அந்த நாட்டை அந்த கம்பெனிகளின் கைகளில் அளிக்கிறது என்பதே சாராம்சம். தமிழ்நாடு அரசாங்கம் குழந்தைகளுக்கு வின்டோசுடன் கூடிய மடிக்கணினிகளை வழங்கியுள்ளது. நல்லது, அந்த மாநிலத்தின் எதிர்காலத்தை அந்தக் கம்பெனியிடம் ஒப்படைக்கிறது. அது தவறாகும். நான் இப்பொழுது கேள்விப்படுகிறேன் அவர்கள் இரண்டு இயங்குதளத்துடன் வழங்க சம்மதித்திருக்கிறார்கள். இரண்டு இயங்குதளம் என்றால் சில அறவயப்பட்ட மென்பொருட்கள் சில அறப்புறம்பான மென்பொருட்கள். இது எப்படி இருக்கிறதென்றால், மதிய உணவின் போது பள்ளியில், “நாங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரும் விஸ்கியும் வழங்குவோம், ஆகவே அவர்கள் இரண்டு குறித்தும் அறிந்து கொள்வார்கள்” என்று சொல்வதைப் போல இருக்கிறது. இரு இயங்குதள கணினிக்கு மாறியிருப்பது ஒரு படி முன்னேற்றம், ஆனால் அவர்கள் வின்டோஸ் வழங்குவதை நிறுத்த வேண்டும். எப்பொழுதும் சுதந்திரமற்ற மென்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவது தவறாகும் – அதிலும் அதை குழந்தைகளுக்கு வழங்குவது மிகவும் மோசமாகும்.

கே.  சுதந்திர மென்பொருளுக்கு இந்திய மென்பொருளாளர்களின் பங்களிப்பு குறித்த உங்கள் பார்வை என்ன?
நல்லது, அது குறித்து எனக்குத் தெரியாது. நீங்கள் பார்த்தீர்களானால், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சுதந்திர மென்பொருள்கள் உள்ளன, அவற்றில் பெரும்பான்மையானவை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் யார்யார் என்னென்ன பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என தெரிந்துவைத்துக் கொண்டிருக்க முடியாது, அது சாத்தியமுமில்லை. எனக்கு வேறு வேலைகள் உள்ளன. ஆகவே, எந்த நாட்டிலிருந்து எந்தமாதிரியான பங்களிப்புகள் வருகின்றன என பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நான் இல்லை. எப்படி இருந்தாலும், ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்த ஒரு இந்திய மென்பொருளாளரை எனக்குத் தெரியும். அவருடைய பெயர் கிருஷ்ண காந்த். ஒருமுறை என்னுடைய பேச்சைக் கேட்க அவர் வந்திருந்தார். என்னிடம் திரையில் தெரிவதை வாசித்துக் காட்டும் சுதந்திர மென்பொருள் எதுவும் இல்லையே, அதற்கு நான் என்ன செய்யலாம் என்று கேட்டார். “நீங்கள் எழுதுங்களேன்” என்று கூறினேன். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் என் பேச்சைக் கேட்க வந்திருந்த பொழுது, பழைய சம்பவத்தை எனக்கு ஞாபகப்படுத்தி “சில எழுதியிருக்கிறேன்” என்று கூறினார். இப்பொழுது அவர் திரையில் தெரிவதை வாசிக்கும் மென்பொருளில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார், அதனை அவரும் ஆயிரக்கணக்கானோரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்எம்எஸ்ஸும் அவருடைய பங்களிப்புகளும் . . .

கே. சுதந்திர மென்பொருளுக்கு உங்களுடைய சிறந்த பங்களிப்பு என்று எதைக் கருதுவீர்கள்?
அப்படி ஒன்று இல்லை. ஆனால் நீங்கள் என்னுடைய பங்களிப்பு எது என்று கேட்டால், சுருக்கமாக நடைமுறை அர்த்தத்தில் நான் சொல்ல வேண்டுமானால், ஜீஎன்யூ ஈமேக்ஸ் தான். நான் எப்பொழுதும் அந்த மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனால் நீங்கள் நான் செய்த எல்லாவற்றிலும் எனக் கேட்பீர்களேயானால், நான் சுதந்திர மென்பொருள் இயக்கத்தை தோற்றுவித்ததும், ஜீஎன்யூ அமைப்பின் வளர்ச்சியை முன்னுடுத்ததும் தான் மிக முக்கியமானவை.

கே.  எது உங்களுக்கு விருப்பமான இயங்குதளம்?
நான் ஜீநியூ சென்ஸ் (gNewSense) பயன்படுத்துகிறேன். ஆனால் எனக்கு சுதந்திர இயங்குதளங்களுக்கிடையே எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் சமீபகாலம்வரை, என்னுடைய கணினியில் இயங்கும் இயங்குதளம் இதுவே. ஆனால் பேரபோலாவும் (Parabola) அதில் இயங்கும், அதையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

சுதந்திர மென்பொருள் குறித்த வாதங்கள்

கே. சுதந்திர மென்பொருள் பாதுகாப்பானதல்ல என்று வாதிக்கும் வணிக நிறுவனங்களை (Enterprises) சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவதற்கு நீங்கள் எவ்வாறு சம்மதிக்க வைப்பீர்கள்?
சுதந்திர மென்பொருட்கள் பாதுகாப்பானவை அல்ல என்று நினைப்பதே முட்டாள்தனமானது. தனிச்சொத்து மென்பொருட்கள்தான் மிக ஆபத்தானவகையில் பாதுகாப்பற்றவை. ஆனால் நான் வணிக நிறுவனங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன்.  என்னுடைய நோக்கம் மக்களை சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவதற்கு கெஞ்சிக் கொண்டிருப்பதல்ல. என்னுடைய நோக்கம் அவர்களுடைய சுதந்திரத்திற்கு சுதந்திர மென்பொருட்களின் அவசியத்தை வலியுறுத்துவதே. மற்றவர்கள் பல வழிகளிலும் சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துமாறு சம்மதிக்க வைக்க முயற்சிக்கின்றனர் — ஆனால் நான் அது இரண்டாம்பட்ச வேலை என்றே நினைக்கிறேன்.

கே. சுதந்திர மென்பொருள் உலகத்திற்கு வரும் பெரும்பாலான புதியவர்கள் சுதந்திர மென்பொருள் அந்தளவிற்கு வளர்ச்சியடைந்தவை எனக் கருதவில்லை – உதாரணத்திற்கு, GIMP vs Photoshop. LibreOffice vs MS Office, போன்றவை. இத்தகைய வாதங்களை ஒருவர் எவ்வாறு எதிர்கொள்வது?


நீங்கள் சுதந்திரம் குறித்து கவனம் செலுத்தவில்லையானால், உங்கள் சுதந்திரத்திற்கு தனிச்சொத்து மென்பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து சிந்திக்கவில்லையானால், நீங்கள் உங்களுக்கு உகந்த மென்பொருள் எது என்பது குறித்து நடைமுறை பயன்பாட்டு அடிப்படையில் தேர்வு மேற்கொள்ளலாம். தனிச்சொத்து மென்பொருள்  மென்பொருளாளர்கள் ஒன்றும் எப்பொழுதும் திறமையில்லாதவர்கள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் ஒன்றும் மோசமான வேலைகளையே செய்து கொண்டிருப்பதில்லை. ஆகவே எப்பொழுதும் ஒன்றுக்கொன்று சிறந்தவை இருக்கவே செய்யும். ஆனால் நீங்கள் தனிச்சொத்து மென்பொருள் உங்கள் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்பதை உணர்வீர்களேயானால், அது ஒரு வகையான டிஜிட்டல் காலனித்துவம் என்பதை உணர்வீர்களேயானால், நீங்கள் வேறுவகையான வழிகளில் உங்கள் தேர்வுகளை செய்வீர்கள். உங்களுக்கு தனிச்சொத்து மென்பொருள் சகிக்க முடியாததாக மாறும், அதற்கு மாற்றாக சுதந்திர மென்பொருளை எப்படி அடைவது எனத் தெரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள். எனவே உங்களுக்கான வேலையைச் செய்யும் ஒரு சுதந்திர மென்பொருளை, நீங்கள் மேலானதென ஏற்றுக்கொள்வீர்கள். மோசமான எந்தவொன்றையும் விட நல்ல எந்தவொன்றும் மேலானது. ஒருமுறை நீங்கள் தனிச்சொத்து மென்பொருளை மோசமானதென உணர்ந்து கொண்டுவிட்டீர்களானால், நீங்கள் தவிர்க்கமுடியாமல் மேலான மென்பொருளை தேர்ந்தெடுப்பீர்கள் (பார்க்க: சுதந்திர மென்பொருள்). நான் தனிச்சொத்து மென்பொருளை பயன்படுத்துவதைவிட சும்மா இருப்பதையே தேர்ந்தெடுப்பேன். தனிச்சொத்து மென்பொருளை பயன்படுத்தித்தான் நான் ஒன்றை செய்யவேண்டும் என்று ஏற்பட்டால், நான் அதைச் செய்யாமல் இருக்கவே செய்வேன்.

கே. என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்கிற விசயங்களில் மென்பொருள் உருவாக்குபவர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு உங்கள் ஆலோசனை என்னவாக இருக்கும்?
சுதந்திர மென்பொருள் வளர்ச்சியில் பங்கெடுக்க கற்றுக்கொள்வதென்பது அவற்றைச் செய்வதுதான். நீங்கள் பயன்படுத்தும் சுதந்திர மென்பொருளில் ஒரு தேவையான அம்சம் இல்லை என்பதையோ அல்லது ஒரு பிழை (bug) உள்ளதையோ நீங்கள் அறிய நேர்ந்தால், அந்த அம்சத்தை சேர்த்தோ அல்லது அந்தப் பிழையை நீக்கியோ அந்த மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு அனுப்பி வையுங்கள்; அவர்களுடன் இணைந்து மாற்றங்களுடன் அந்த மென்பொருள் வெளிவருவதற்கு வேலை செய்யுங்கள். இப்படித்தான் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

கே. முற்றிலும் சுதந்திரமற்ற சூழலுடன், கணினித்துறை வேகமாக டேப்லட்டிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. சுதந்திர மென்பொருள் அமைப்பு டேப்லட்களுக்கான சுதந்திர மென்பொருள் உருவாக்க என்ன செய்யப் போகிறது?
மைக்ரோசாப்டின் அதிகாரச் சதிகளுக்கு எதிராக போராடுவதற்கான வழிவகைகளை மென்பொருள் சுதந்திரச் சட்டங்களுக்கான மையம் (Software Freedom Law Centre) ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சுதந்திர மென்பொருளுடன் கூடிய கணினிகளை வடிவமைத்து விற்பனை செய்வதற்கான, வளர்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வோம். ஆன்ட்ராய்ட் ஒரு சுதந்திர மென்பொருளாகத்தான் வெளியிடப்பட்டது, ஆனால் அது ஒரு முழுமையான அமைப்பு இல்லை. அதில் ஏற்கனவே பல சுதந்திரமற்ற மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ரெப்லிகான்ட் (Replicant) என்றொரு பதிப்பு உள்ளது, அது சில தொலைபேசிகளிலிருந்து அனைத்து சுதந்திரமற்ற மென்பொருள்களையும் வெளியெடுத்திருக்கிறது. பல ஆன்ட்ராய்ட் சாதனங்கள் (devices) பயனாளர்கள் மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிப்பதில்லை. அத்தகைய ஆன்ட்ராய்ட் பாகங்கள் சுதந்திர மென்பொருட்கள் கிடையாது, அவை ASF (Apache Software Foundation) உரிமமுறைக்குக் கீழ் உரிமம் பெற்றவை. ஆன்ட்ராய்ட் ஒரு சுதந்திர மென்பொருள் இல்லை, ஆனால் அது மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொலைபேசிகளையும், ஆப்பிளின் ஐஒஸுயும் விட மேலானது. லீனக்ஸ் பகுதிகளை பொறுத்தவரை கூகுள் ஜீஎன்யூ பொது மக்கள் உரிமத்தின் தேவைகளை இணைத்துள்ளது, ஆனால் ஆன்ட்ராய்டின் பிற பாகங்களைப் பொறுத்தவரை அது மூலநிரலை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தாத அபாச்சி (Apache) உரிமம் உடையது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வடிவில் (executable) வெளியிட்ட பின்னரும், ஆன்ட்ராய்ட் 3.0 க்கான மூலநிரலை (லீனக்சைத் தவிர பிறவற்றை) நாங்கள் எப்பொழுதும் வெளியிடப் போவதில்லை என கூகுள் அறிவித்துவிட்டது.
ஆன்ட்ராய்ட் 3.1 மூலநிரலும் கூட இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆன்ட்ராய்ட் 3யும், அதன் லீனக்ஸ் பகுதிகளைத்தவிர, சுதந்திரமற்ற மென்பொருள் தான் என்பது எளிமையானதும் தெளிவான உண்மையுமாகும்.

பேஸ்புக், அமேசான், மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து ஆர்எம்எஸ் பேசியவை . . .

கே. நீங்கள் பேஸ்புக்கை நிராகரிப்பதாக வெளிப்படுத்தியிருக்கிறீர்களே ஏன்?
பேஸ்புக் உங்கள் நண்பன் இல்லை, நிச்சயமாக அது என் நண்பனும் இல்லை. பேஸ்புக் யார் எங்கே எப்பொழுது இருந்தார்கள் என்ற தகவல்களை தன்னுடைய பயனாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களைக் குறித்து திரட்டுகிறது. நீங்கள் என்னுடைய புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றினீர்களேயானால், மக்கள் அதனை ரிச்சர்ட் ஸ்டால்மென் என லேபிள் இடுவதற்கு அழைக்கப்படுவார்கள் –  இதன் மூலமாக என்னைக் குறித்த மேலதிகமான தகவல்கள் அவர்களுடைய தகவலகத்தில் (Database) சேரும். அவர்களுடைய தகவலகத்தில் யாரைக் குறித்தும் தகவல்கள் இருப்பதை நான் விரும்பவில்லை.

கே. நீங்கள் ஏன் உங்களைப் பின்பற்றுபவர்களிடம் stallman.org மூலமாக அமேசானுடன் எந்த வர்த்தகமும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டீர்கள்?
அமேசானின் ஸ்வின்டில் (Swindle) ஒரு தீயநிரல். அது உண்மையில் அதனுடைய அதிகாரப்பூர்வ பெயர்கூட இல்லை. நான் பாரம்பரியமான வாசிப்புச் சுதந்திரத்திற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஸ்வின்டில் வாசிப்பான்கள் (swindle readers) என்னும் மென்புத்தக வாசிப்பான் (e-book reader) குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். புத்தகங்களை நான் யார் என்ற விபரங்களைத தராமலேயே பணம் செலுத்தி வாங்குவதற்கான சுதந்திரம் உள்ளது, அந்த ஒரே வழியின் மூலமாகத்தான் நான் புத்தகங்கள் வாங்குகிறேன். நான் வாங்கிய புத்தகங்களுடன் எந்தவொரு தகவலகத்திலும் என் பெயர் இடம்பெற நான் தருவதில்லை; எனக்கு எந்தவொரு தகவலகத்திலும் அத்தகைய தகவல்கள் இடம்பெறுவதில் விருப்பமில்லை. அமேசான் ஸ்வின்டிலை வைத்துக் கொண்டு தங்களைக் குறித்தும் அவர்கள் வாங்கிய புத்தகங்கள் குறித்தும் வெளிப்படுத்திக் கொள்ள தங்கள் பயனாளர்களை வற்புறுத்துகிறது. அமேசான் அனைத்து புத்தகங்கள் குறித்தும் அதனைப் படிக்கும அனைத்து பயனாளர்கள் குறித்தும் தன்னுடைய மிகப் பெரிய தகவலகத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறது – அத்தகைய தகவலகங்கள், அவை யாரிடமிருந்தாலும், அவை மனித உரிமைகளுக்கு எதிரானவையே.

அது போக ஒரு புத்தகத்தை படித்துவிட்டு வேறொருவருக்கு கொடுப்பதற்கோ, வாடகைக்கு விடுவதற்கோ, விற்பதற்கோ சுதந்திரம் உள்ளது. அமேசான் இத்தகைய சுதந்திரத்தை பயனாளர் உரிம ஒப்பந்தத்தின் மூலமாக நீக்கி டிஜிட்டல் விலங்கிடுகிறது. அமேசான் தனிச்சொத்துடமை கருத்துக்களை அனைவரையும் தாண்டி முன்னெடுத்து தன் வெறுப்பை வெளிப்படுத்துகிறது. பயனாளர்கள் புத்தகங்களை உரிமையாக்கிக் கொள்ள முடியாது.
அதே போல ஒரு புத்தகத்தை நீங்கள் விரும்பும் காலம் வரை வைத்துக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குத் தந்துவிட்டு போவதற்கான சுதந்திரம் உள்ளது. அமேசான் இந்தச் சுதந்திரத்தையும் புறவாசல் வழியாக மறுக்கிறது. நாம் இந்த புறவாசல்களை கண்காணிப்பின் மூலமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். 2009ல் அமேசான் புறவாசல் வழியாக குறிப்பிட்ட புத்தகத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகளை தொலைவிலிருந்த வண்ணமே அழித்தது. அமேசான் இவற்றை இல்லாதொழிக்கும் வரை இவை அதிகாரப்பூர்வமான பிரதிகளே. அப்புத்தகம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 ஆகும். அந்த சாதனத்தின் அதிகாரப்பூர்வ பெயர் கிண்டில்(kindle). கிண்டில் என்றால் தீயை பரப்பு என்று அர்த்தம். தெளிவாக, இந்தச் சாதனத்தை வடிவமைத்ததன் நோக்கமே நமது புத்தகங்களை எரிப்பதற்குத்தான்-ஆகவே அதைச் செய்ய அனுமதிக்காதீர்கள்! அந்தச் சாதனத்தை பயன்படுத்தாதீர்கள், அது போன்ற எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தாதீர்கள்.

கே. “ஜாப்ஸ் போய்விட்டார் நான் சந்தோசப்படுகிறேன்” என்று நீங்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் மக்கள் நீங்கள் என்ன அர்த்தத்தில் கூறினீர்கள் என்று சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதுகுறித்து விளக்க முடியுமா?
நான் சொன்னதை மக்கள் குழப்பிவிட்டார்கள். நான் என்ன சொன்னேனென்றால் அவர் இறந்துவிட்டார் என்பது நல்லதல்ல, ஆனால் அவர் போய்விட்டார் என்பது நல்லது. அப்படிச் சொன்னதற்கான காரணம் அவர் இந்த உலகிற்கு தீங்கு விளைவித்த, ஒரு தீய மேதை. அவர் எவ்வாறு கணினிகளை பயனாளர்களுக்கான சிறைக்கூடமாக மாற்ற முடியும் என செய்துகாட்டியவர், அதனை அவர் கவர்ச்சிகரமாக உருவாக்கினார், அதன் மூலமாக அதன் கவர்ச்சிக்கு மயங்கிய பல பயனாளர்கள், விலங்கிடப்பட்டனர். அவர் இதைச் செய்த பிறகு மைக்ரோசாப்டும் அதையே செய்யத் துவங்கியது. ஆகவே அவர் இந்த உலகை மிக மோசமாக்கிவிட்டார், அவர் செய்த தீமைக்கு எதிராக இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதுவே நான் சொன்னதற்கான காரணம். ஜாப்ஸ் செய்த பல்வேறு விசயங்களில், அது ஒன்றே மிக முக்கியமானது, அவர் இந்த உலகிற்கு மிகப் பெரும் தீங்கு விளைவித்துவிட்டார். நான் சந்தோசப்படுகிறேன் இனி அவரால் அது போல வேறெதுவும் செய்ய முடியாது. அவரைப் பின்பற்றுபவர்கள் அவர் அளவிற்கு வெற்றி பெறமுடியாது என்று நான் நம்புகிறேன்.

கே. நீங்கள் ஏன் கைத்தொலைபேசி பயன்படுத்துவதில்லை?
ஏனென்றால் கைத்தொலைபேசியின் மூலம் என் இருப்பிடத்தை அடையாளங்காணமுடியும் அல்லது நான் யாரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறியமுடியும். பெரும்பாலான கைத்தொலைபேசிகள் அவை ஸமார்ட்போன்களாக இல்லாவிட்டாலும், அவற்றில் உள்ள பிராசசர்களை இயங்க வைக்கும் மென்பொருட்கள் ஒரு தீயநிரல்களே. அவை பயனாளர்களின் இடத்தை தொலைவிலிருந்தே அறிவதற்குத் தேவையான தகவல்களை அனுப்பும் – அதன் புறவாசல்கள் வழியாக அவற்றை கேட்பதற்கான சாதனங்களாக தொலைவிலிருந்த வண்ணமே மாற்றமுடியும். ஏறக்குறைய அனைத்து மென்பொருட்களிலும் பிழைகள் இருக்கும் – ஆனால் இந்த மென்பொருளே ஒரு பிழையானது.

நன்றி: Linux For You (March 2012)
மொழிபெயர்ப்பு: மகேஷ்

14 பதில்கள் to “மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கைத்தொலைபேசி பயன்படுத்தாதீர்”

  1. சிவக்குமார் said

    சிறந்த மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் இருந்திருந்தால் இதைப் படித்திருக்கவே மாட்டேன்.

  2. Kamal said

    great. Thanks for sharing

  3. Natarajan Krishnan said

    நல்ல விசயம். இது பற்றி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும். பல விசயங்கள் புரிய வில்லை

  4. nilavan said

    Reblogged this on ilainjan.

  5. jalaldeen said

    ennthu ellame puthusa irukku? naam kasai koduthu adimai aakiroma???

    • இந்த ​நேர்காண​லை Linux For You இதழில் படிக்கும் ​பொழு​தே இ​தை ​மொழி​பெயர்க்க ​வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இது என் உலகக் கண்​ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் ஏற்பட்ட ஆர்வம், இந்த ​மொழி​பெயர்ப்​பை ​செய்வதற்கு ஒரு வாரமானது. இரு ஞாயிற்றுக் கிழ​மைகளில் முழு​மையாக அமர்ந்தும் ​வே​லைநாட்களில் இரவு ஒரு மணி​நேர​மோ அ​ரை மணி​நேர​மோ ஒதுக்கியும் இ​தைச் ​செய்​தேன், பல ​தொழிலநுட்ப ஆங்கிலச் ​சொற்க​ளை ​மொழி​பெயர்ப்பதற்கு மிகுந்த அக்க​றை எடுத்துக் ​கொண்​டேன், இருந்தும் பல நுட்பமான ​​வேறுபாடுகள் ​கொண்ட ​சொற்க​ளை தமிழில் எழுதுவதற்கு சிரமப்பட்​டேன், குறிப்பாக ஆங்கிலத்தில் “free” என்ற ​சொல் சுதந்திரம் மற்றும் இலவசம் என்ற இரண்டு ​தமிழ்ச் சொற்களின் அர்த்தமும் ​பெற்று இடத்திற்கு ஏற்ப ​பொருள் மாறுபட்டு வருகிறது, இச் ​சொல்லின் இத்தன்​மை​யே ஆங்கிலக் ​நேர்காணலின் பல சு​வையான வாதமு​றைகளுக்கும். வாக்கிய அ​மைப்புகளுக்கும் காரணமாக அ​மைகிறது, இது​வே ஆங்கிலத்தில் “free software” குறித்த குழப்பங்களுக்கும் காரணமாகிறது, இ​தை புரிய​வைப்ப​தே ஸ்டால்​மெனின் ஒரு விவாத ​நோக்கமும் ஆகிறது, இப்பகுதிகள் தமிழில் அதன் அர்த்தத்​தை இழக்கின்றன,

      ​பொதுவாக நான் இ​ணையத்தில் என் வ​லைப்பூ​வை பலரும் படிக்க ​வேண்டும். அதிக வாசகர்கள் பார்​வையிட்ட பகுதி என்ற பதிவு ​பெற ​வேண்டும் என்ற ​நோக்கங்களுக்காக எ​தையும் ​செய்வதில்​லை, நமக்கு உடண்பாடான கருத்துக்க​ளை அவற்றின் சாரமும் முக்கியத்துவமும் இழந்துவிடாத ந​டையில் எழுத​வேண்டும், ஆழமான விசயங்க​ளை படிக்க ​வேண்டும், விவாதிக்க ​வேண்டும் என்ற விருப்பமு​டையவர்கள் படிக்கட்டும் என்ற அடிப்ப​டையி​லே​யே எழுதி வருகி​றேன்,

      எந்த அங்கீகாரத்திற்காகவும் எ​தையும் ​செய்வதில் விருப்பமில்​லை, அந்த அடிப்ப​டையி​லே​யே இந்த ​மொழி​பெயர்ப்பும் ​செய்​தேன், ஆனால் நம்மு​டைய உ​ழைப்பிற்கு ஒரு சரியான தளத்தில் அங்கீகாரம் கி​டைப்பதில் எப்​பொழுது​மே நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, அப்படித்தான் இத​னை பலரும் படித்து படித்ததாக பின்னூட்டம் இடும் ​பொழுது மகிழ்ச்சி ஏற்படுகிறது, இத​னை “http://ubuntuintamil.blogspot.in/” “http://gnutamil.blogspot.in/2012/04/linuxexpert-systems.html” ​போன்ற பல வ​லைப்பூக்களில் சிலர் படிக்க பரிந்து​ரைத்ததில் இது ​மொழி​பெயர்ப்பிற்கான ஒரு சிறு அங்கீகாரமாக எடுத்துக் ​கொண்டு, மிகவும் மகிழ்ந்​தேன், அ​னைவருக்கும் நன்றி

  6. சந்திரன் said

    அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி

  7. சிறந்த கருத்தாக்கம். என் அடிப்படை பணிகளை இனி க்னூ/லினக்சுக்கு மாற்றணும்.தொடரட்டும் உங்கள் பணி.ஆவலுடன் அடுத்தக்கட்டுரைக்கு காத்திருப்பேன்.

  8. Shall we publish the same article in kaniyam.com?

  9. pon.kanthasamy said

    thanks.
    linux -thamilil ezhutha enna seyya vendum.tamil font download eppadi seyya vendum

  10. Preetyplayer said

    மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது, நன்றி அன்புள்ள மகேஷ், gnu/linux இல் ஆரம்பிப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,உங்களின் வரவிருக்கும் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.இணையத்தில் நிறைய தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன, அந்த வலைப்பதிவுகளை கண்டுபிடிக்க உங்களுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா? நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஏதேனும் யோசனை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

பின்னூட்டமொன்றை இடுக